சிவமாக்கும் தெய்வம்

சைவதத்துவங்களை விளக்கும் நூல்கள் பல உண்டு. அந்நூல்களை முறையாகப் பயின்று, அவற்றையே தமது வாழ்வியல் முறையாகக் கொண்ட சான்றோருள் ஒருவரே ‘பேராசிரியர் ஐயா’, என நான் பெருமதிப்புக் கொண்டிருந்தவரும் சமீபத்தில் சிவபிரானின் திருவடி நீழலையடைந்துவிட்ட பெரியவருமான உயர்திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள். அன்னாருடனான தொடர்பு எனக்கு இந்த தமிழ் ஹிந்து இணையதளம் மூலமாகவே கிடைத்தது. ஆகவே எனது அனுபவங்களையும், பேராசிரியர் ஐயாவிடமிருந்து நான் கற்றவற்றின் பயன்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

2013-ம் ஆண்டு. பிள்ளைத்தமிழிலான எனது தமிழிலக்கிய ஆய்வை எங்கே, எவ்வாறு தொடர்வது என நான் வழிதேடித் தவித்த காலம். ஏனெனில் நான் ஒரு பணி ஒய்வு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர். 60 வயதுக்கு மேலும் ஒருவர் படிக்க / கற்க விழைவதனை ஒப்புக்கொள்ளாத சில பல்கலைக் கழகங்களும் இருந்தன. செய்வதறியாது தவித்தேன். தமிழன்னையாம் மீனாட்சியையே வேண்டினேன்.

எனது நீண்டகாலக் கனவு பிள்ளைத்தமிழ் பற்றிய ஆய்வு. தமிழ் இணையதளங்களை அக்காலத்தில்தான் நான் பரிச்சயப்படுத்திக்கொண்டு ஓரிரு கட்டுரைகளை எழுதத் துவங்கியிருந்த தருணம். அருமையான ஆன்மீக இலக்கியங்களை வெளியிட்டு வந்த (இன்னும் வெளியிட்டு வரும்) தமிழ்ஹிந்து இணையதளத்தில் ‘குழவி மருங்கினும் கிழவதாகும்….’ எனும் அருமையான தலைப்பில் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் எழுதிக் கொண்டிருந்த தொடரின் ஒரு பாகம் என் கண்ணில் பட்டது. உடனே முந்தியவைகளையும், பின் தொடர்ந்தவைகளையும் படித்துச் சிலிர்த்தேன். இணையதளத்தைத் தொடர்பு கொண்டு அன்னாரின் மின்னஞ்சலை வேண்டிப் பெற்றேன். ஐயாவைத் தொடர்புகொண்டு நீண்டதொரு மின்னஞ்சலை அவருக்கு அனுப்பிவைத்தேன்.

500க்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன என்று அறிந்திருந்தும் எனக்குக் கிடைத்தவை என்னவோ மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (குமரகுருபரர் இயற்றியது), திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (பகழிக்கூத்தர்), திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல பாரதியார்) ஆகியனவே!’தங்களுக்குச் சில பிள்ளைத்தமிழ் நூல்களை அனுப்பி வைக்கிறேன்’ என மறுமொழியளித்தவர் அனுப்பியும் வைத்தார். பெரும் புதையல் கிடைத்தது. அவரது தந்தையார் கோவை கவியரசு நடேச கவுண்டரால் இயற்றப்பெற்றனவும், பேராசிரியர் ஐயாவால் வெளியிடப்பட்டனவுமாகிய ஆறு நூல்கள்:

  1. சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்,
  2. திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
  3. எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
  4. திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ்
  5. மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ்

ஆகியனவே அவை. உடன் ஒரு பிரதி நெல்லைக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழும்- அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றியது.

என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எனது பிள்ளைத்தமிழ் மீதான ஆர்வத்திற்கு ஐயா அவர்களின் அருட்பரிசு அவை!

அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே நானும் என் கணவரும் வேறொரு வேலை நிமித்தம் கோயமுத்தூர் செல்ல வேண்டி வந்தது. ஐயா அவர்களைச் சந்திக்கவும் ஒரு தினத்தை இதில் சேர்த்துக் கொண்டோம்.


கோவைபுதூரில் ஐயாவின் இல்லத்தையடையப் புறப்பட்டோம். வண்டி ஓட்டுனர் கோவைபுதூரை விடாமல் வலம் வந்தார். ஐயாவின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. பெரும் தயக்கத்துடன் திரும்பத்திரும்ப நான்கைந்துமுறை கைபேசியில் அழைத்து வழிகேட்டேன். ஐந்தாம் முறை எங்களை இருந்தவிடத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு, ஐயாவே ஒரு இரு சக்கர வாகனத்தில் (ஸ்கூட்டர்) அங்கு வந்து எங்களை வழி நடத்திச் சென்றார். அன்பாக, நிதானமாக எங்களுடன் உரையாடினார். என்னைப் பாடத் தெரியுமா எனக்கேட்டார். சிறுபிராயத்திலிருந்து நான் கேள்வியுற்றுக் கற்றிருந்த சில மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை ஆனந்தபைரவி, மோகனம் ஆகிய ராகங்களில் பாடினேன். மிகவும் ரசித்துக்கேட்ட ஐயா மகிழ்ந்தார்.

பற்பல செய்திகளைப் பற்றி உரையாடினோம். குறிப்பாகச் சில செய்திகளை மட்டும் விளக்கமாகப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

குருதட்சிணை:

ஐயாவின் தந்தை கோவை கவியரசு நடேச கவுண்டரின் பிள்ளைத்தமிழ் நூல்கள் கருத்துச் செறிவு, சந்தநயம், கற்பனைவளம், ஆன்மீகச் செய்திகள் இன்னும் பல நயங்களில் மிகச்சிறந்து விளங்குவன என்று அவற்றை ஆழ்ந்து படித்தவர்களுக்கே புரியும். எனக்கு அப்பேறு வாய்த்தது. ஐயாவும் பல தருணங்களில் எனக்கு இந்த நயங்களைச் சுட்டிக்காட்டத் தவறவேயில்லை. அப்படிப்பட்ட ஒரு பொழுதில் தன் தந்தையாரின் நூல்கள் இவ்வாறு சிறப்பாக இருந்தும் அவை ஏனோ தமிழ்கூறும் உலகத்தரால் அறியப்படாமலும், போற்றப்படாமலும் உள்ளன என வருத்தம் மேலிடக் கூறினார். எனது ஆய்வேட்டில் அவைபற்றிய கருத்துக்களைக் கட்டாயம் எடுத்துக்காட்டி எழுதவேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டு, அதையே அவரிடமும் கூறினேன். பின்பு நான் எழுதிவந்த பிள்ளைத்தமிழ் தொடர்பான கட்டுரைகளில் அப்பாடல்களையும் எடுத்துக்கொண்டு எழுதலானேன்.

எனது நண்பர்கள் வட்டத்தில் பிள்ளைத்தமிழ் தொடர்பான செய்திகள் வேண்டுமெனில் என்னைத்தொடர்பு கொள்வது வழக்கம். இசை நிகழ்ச்சிகளில் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை யாருமே பாடுவதில்லை எனும் குறை எனக்கு இருந்து வந்தது. பிரபல இசைப்பாடகியான எனது நண்பர் திருமதி காயத்ரி வெங்கடராகவன் அவர்கள் தன்னுடைய இசைக்கச்சேரிகளில் இவற்றைப் பாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். சென்னை டிசம்பர் சங்கீத சீஸனில் மார்கழி மஹா உத்சவம் எனும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. பல பிரபல பாடகர்களும் பாடகிகளும் தங்களுக்குப் பிடித்தமானதொரு தலைப்பில் பலபெரியோர்களின், வாக்கேயகாரர்களின், தமிழ் மூவரின் பாடல்களையும், தேவாரம், திருவாசகம், ஸ்லோகங்கள் எனப் பலவற்றையும் தொகுத்துப் பாடுவார்கள். இசையன்பர்களுக்கு மிகவும் விருப்பமானதொரு நிகழ்ச்சி இது.

சில ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி, ‘தெய்வீக நதி தீரங்கள்,’ எனும் தலைப்பில் பாடியபோது மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து நான் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பாடலை இசையமைத்துப் பாடினார். வாசந்தி, அமிர்தவர்ஷணி ராகங்களில் அற்புதமாக அமைந்த அப்பாடலை ரசிகர்கள் மிகவும் சுவைத்தனர். பின், ஈராண்டுகளுக்கு முன்பு ‘குழந்தையும் தெய்வமும்’ எனும் தலைப்பில் தமது நிகழ்ச்சியை அவர் அமைத்துக்கொண்டபோது, சில பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், பழனிப்பிள்ளைத்தமிழ், சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் இவற்றிலிருந்து பாடல்கள். அனைத்தும் அவரால் அருமையாக இசையமைக்கப்பட்டு பாடப்பட்டன.

இவற்றுள் கோவை கவியரசு நடேச கவுண்டர் இயற்றிய திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்ப்பாடல் தாலப் பருவத்திலிருந்து…. குழந்தையான பார்வதியை உறங்க வைக்கத் தாய் மேனை மிகுந்த பிரயாசைப்படுகிறாள். கற்பனை வளம் செறிந்த கருத்துக்கள்- எந்தப் புலவருமே இதுவரை கையாளாத சுவாரசியமான கருத்துக்கள் நிரம்பிய பாடல்கள். விரைவில் பாடலையும் பொருளையும் காணலாம். நான் சொல்லவந்ததை முதலில் கூறிவிடுகிறேன்.

நளினகாந்தி ராகத்தில் இப்பாடலை இசையமைத்தார் பாடகி. கேட்க மிக இனிமையாக இருந்தது. ஐயாவுக்கும் யூ-ட்யூப் தொடர்பை அனுப்பி வைத்தேன். கேட்டு ரசித்தார். கவியரசு அவர்களின் பிள்ளைத்தமிழ் பாடல்கள் கோவையைத் தாண்டி சென்னையிலும், யூ- ட்யூப் மூலம் உலகெங்கும் ஒலித்தது பரவசத்தைத் தந்தது.

இதெல்லாம் நடந்து, சமீபத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு (நவராத்திரி சமயம் என எண்ணுகிறேன்) திருமதி திவ்யா ரவி எனும் நாட்டியக் கலைஞர் லண்டனிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார். காயத்ரியின் பாடலைக் கேட்டு மெய்மறந்ததாகவும், அதனை நடன அமைப்பாக்க விருப்பம் உண்டென்றும் கூறி, பாடலின் பொருளை நுணுக்கமாகக் கேட்டுக் கொண்டார். அதே சமயம் அமெரிக்கா, பாஸ்டனிலிருந்து ஒரு சித்திரக்கலைஞர், திருமதி உபாஸனா கோவிந்தராஜன் என்பவரும் என்னுடன் தொடர்பு கொண்டார். காயத்ரி அவர்கள் பாடிய பிள்ளைத்தமிழ் பாடலைக் கேட்டு உள்ளம் உருகிப் பேச்சற்றுப் போனதாகவும், பல மாதங்கள் சிந்தித்துப் பின் அதனை நவராத்திரியில் அம்பிகைக்குக் காணிக்கையாக அழகிய சித்திரமாக வரைந்து தனது முகநூலில் வெளியிட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.

அற்புதமான சித்திரம்! சிறு குழந்தை பார்வதி, பக்கத்தில் அவளை உறங்கவைக்க முயலும் மேனாதேவி. உணர்ச்சிவயப்பட்டுக் கண்ணீர் பெருகியது. நீங்களே இணைப்பில் கண்டு ரசியுங்கள்.

உடனேயே அதனை ஐயாவுக்கு அனுப்பி வைத்தேன். ‘தங்கள் தந்தையாரின் பிள்ளைத்தமிழ் நூல்கள் உலகெங்கணும் உலாவருகின்றன. இறையருளால் நானும் அதற்கு ஒரு கருவியானேன்,’ என மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். ஐயாவுடன் ஸ்கைப்பில் தான் தொடர்பு கொள்வது வழக்கம். அடுத்தமுறை அவருடன் தொடர்பு கொண்டபோது அந்தக் கருணைமுகத்தில் இச்செய்தியால் கண்ட புன்னகை உள்ளத்தை நிறைத்தது. அவர் திருவடிகளில் மானசீகமாக விழுந்து பணிந்து ஆசிகளை வேண்டினேன். உபாசனா அவர்கள் இப்படத்தை அனுப்பித் தருவதாகவும் அதனைச் சட்டமிட்டு, அப்பாடலையும் எழுதி அடுத்தமுறை (இந்தக் கொரோனா எல்லாம் ஒருவழியாக முடிந்தபின்) கோவை செல்லும்போது ஐயாவிடம் கொடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டோம். இறைவனின் எண்ணம் வேறாகவன்றோ இருந்தது!

இதுவே ஐயாவிற்கு நான் கொடுக்கக்கூடிய பொருள்நிறைந்த குருதட்சிணை என எண்ணி அவர் திருவடிகளை வணங்குகிறேன்.

திவ்யா ரவி அவர்களும் அதனை நடன அமைப்பாக்கி, தமது கணவர் டாக்டர் (குழந்தை நல மருத்துவர்) சரண் சுப்ரமணியன் பாட, பதிவுசெய்து முகநூலில் வெளியிட்டார். அந்த இணைப்பையும் கீழே கொடுத்துள்ளேன். அதனையும் ஐயாவால் பார்த்து ரசிக்க இயன்றது. இதுவே உள்ளத்திற்கு இன்றும் பெரும் நிறைவைத் தருகின்றது.


இனி பாடலைக் காண்போம்:

குழந்தை உமை உறங்கவில்லை; வாய் ஓயாது என்னவெல்லாமோ பேசிக்கொண்டும், கேள்விகளைக் கேட்டுக் கொண்டும், கண்மூடாது கிடக்கிறாள். தாய் சலிப்பு (பொய்யானது தான்! எந்தத் தாய் குழந்தையை உண்மையாகச் சினந்து கொள்வாள்?) மீதூரக் கூறுகிறாள்:

“அம்மா குழந்தாய்! உன்னை வாகீசுவரி- வாக்குசாதுரியம் மிக்கவள்- எனப் பெருமைப் பட்டுக் கொண்டோம். அதற்கேற்ப நீயும் இடைவிடாது பேசுகின்றாய்; மூகேசுவரி எனவும் ஏத்தினோம் (மூகாம்பிகை என ஒரு பிரபலமான அம்பிகை கோவில் உண்டு) அதற்கேற்பவும் நீ சில பொழுதுகள் வாய்பேசாது மௌனமாக இருக்க வேண்டும்; தற்சமயம் சிறிதே கண் துயிலாயோ? நீரில் குதித்து நீந்தி விளையாடும் கயல்மீன் போன்ற கண்கள் கொண்ட மீனாட்சி எனப் பெருமைப்பட்டோம். நீயும் அதற்கேற்ப இரவும் பகலும் உறங்காது விழித்திருக்கிறாய்! (தாய்மீன் தனது குஞ்சுகளைக் காக்க வேண்டிக் கண்ணிமைகளை மூடாது இருக்குமாம்; அதுபோன்று அன்னை மீனாட்சியும் குழந்தைகளாகிய நம்மை அனவரதமும் காக்க வேண்டிக் கண்களை மூடுவதில்லையாம்!). பதும (தாமரை) விழியாள் என்றோம்- அதற்கேற்ப (தாமரை மலர் இரவில் குவிந்து மூடுவது போல) நீயும் கண்மூடி உறங்க வேண்டாமோ? பாவை போன்ற பெண்ணே! வாய் திறந்து பேசிக் கொண்டே இராது, பட்டால் கட்டிய இந்த ஏணையில் உறங்குவாயாக! சண்பை நகர்த் தலைவியே! திருஞான சம்பந்தருக்குப் பாலமுதம் அளித்த தாயல்லவோ நீ! தாலோ தாலேலோ!” என உறங்க வைக்கிறாள் அன்னை.

திருமாளிகையில் ஓர் அறையில் நிகழும் இந்தச் சிறு வாக்குவாதத்தை நாமும் மனக்கண்ணில் கண்டு களிக்க, குழந்தையின் குறும்பை எண்ணி நம் இதழ்களில் நம்மையறியாமலே புன்னகை மலர்கின்றது.

மதுர வாகீ சுவரியென்றோம்
மலர்வாய் மழலை யொழியாயால்
மாமூ கேசு வரியாகி
மணியே சிறிதே துயிலாயோ
குதிகொள் கயற்கண்ணாளென்று
குறித்தே மிரவு பகலுறங்காய்
குவளைக் கண்ணா யென்றாலும்
கூடாய் துயிலிவ் விரவெல்லாம்
பதும விழியா யென்றின்னே
பகர்ந்தோ மிரவு விழிமூடிப்
பாவாய்! தூவாய் திறவாமல்
பட்டே ணையினி லுறங்குகவே
சதுர மறைசேர் சண்பைநகர்த்
தலைவீ தாலோ தாலேலோ!
சம்பந்தர்க்குப் பாலளித்த
தாயே தாலோ தாலேலோ!

(சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- கவியரசு நடேச கவுண்டர்)

இப்போது உபாஸனா அவர்களின் சித்திரத்தையும், திவ்யாவின் நடன அபிநயத்தையும் கண்டு களியுங்கள்.

இது குறித்து உபாஸனாவின் ஃபேஸ்புக் பதிவு.

(மற்றவை அடுத்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *