கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்


“நியோ ஹிந்து” அல்லது “நியோ ஹிந்துத்துவவாதி” போன்ற பதங்களை இப்போது அடிக்கடி சமூக வலைதளங்களில் கேட்க முடிகிறது. இதனை எதிர்ப்பக்கம் இருப்பவரைவிட அதிகமாக நம்மவர் உபயோகிக்கிறார்கள்.

Philology and Confrontation: Paul Hacker on Traditional and Modern Vedanta என்ற புத்தகத்தில் தான் ‘நியோ ஹிந்துமதம்’ என்ற இந்த வார்த்தை முதன்முதலில் வந்தது. இவர் ஒரு ஜெர்மானிய அறிஞர். “இன்று ஹிந்துமதம் கூறும் ‘அனைத்தும் ஒன்று’ எனும் கொள்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டிலும் உருவானவை. விவேகானந்தர், அரவிந்தர் போன்றோர் மேலைநாட்டு தத்துவங்களைப் பார்த்து, உருவாக்கிய புதிய ஹிந்துமதம் இது” என்கிற ரீதியில் இந்த வார்த்தையை ஹேக்கர் உருவாக்கினார்.

அதாவது, “பாரம்பரியமான ஹிந்துமதம் விசாலமான சிந்தனை கொண்டது கிடையாது. மேற்கத்தியக் கலாசாரத்தின் சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற அறிஞர்கள்தான் உலகின் முதல் மற்றும் ஒரே விசாலமான சிந்தனை கொண்ட மனிதர்கள். பின்னாளில் ஹிந்துமதம் இவர்களிடம் இருந்து கடன்வாங்கிய சிந்தனைகளை, ஏற்கனவே தன்னிடம் இருந்ததாகப் புளுகியது. அப்படிப் புளுகுவோர் நியோ ஹிந்து” என்பதே இதன் மூலம் அவர் கூற வருவது.

இதன் அடுத்த படிநிலைதான், “ஹிந்துமதமே பிரிட்டிஷ் காலத்தில் உருவானதுதான். இந்தியா எனும் நாடே அதற்கு முன் கிடையாது!”

ராஜீவ் மல்ஹோத்ரா தனது Indra’s Net: Defending Hinduism’s Philosophical Unity என்ற தனது நூலில், இந்த வார்த்தையின் உருவாக்கம், இது எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்கிறார். அதன் அடிப்படையில் சில கருத்துகளைப் பார்க்கலாம்.

சுவாமி விவேகானந்தர், நமது உபநிஷதங்களின் சாரத்தை மேலைநாடுகளில் முழங்கினார். அதுவரை “மதம் என்றாலே நம்பிக்கை சார்ந்தது; அனுபவ ரீதியான மெய்யியல் சிந்தனை வேண்டும் என்றால், அதனை தத்துவார்த்தத்தில் தேட வேண்டும். மத நம்பிக்கைகள் இந்த தத்துவார்த்தத் தேடலுக்கு உதவாது” என்று மேலைநாட்டவர்கள் எண்ணியிருந்தனர். முதன்முறையாக, மிஷனரிக் கலப்பு இல்லாத ஒரு ஹிந்து இளைஞர் வாயிலாக, ஹிந்து மதம் முழுவதுமே தத்துவார்த்த சிந்தனையால் அமைந்தது. அது நமது அறிவுக்கு மட்டுமின்றி, மெய்யியல் ஆய்வுக்கும் உகந்தது என்று உணர்ந்தனர்.

“ஹிந்துமதமும் எங்கள் மதம் போலத்தான். இன்னமும் சொல்லப்போனால் உருவ வழிபாடு செய்வதால் எங்களை விடக் கீழான மதம்” என்று மிஷனரிகள் ஜல்லியடித்து வந்தனர். இதையும் தனது ஞானத்தாலும் தீரத்தாலும் தகர்த்தார் சுவாமிஜி. இதைத் தாங்கொணாத மிஷனரிகள் “இவர் சொல்வது பாரம்பரிய ஹிந்துமதம் இல்லை. இந்தியாவில் இருக்கும் உண்மையான ஹிந்துமதம் பற்றி இவர் பேசவில்லை. மேலைநாட்டு தத்துவங்களைப் படித்துவிட்டு, அதையொட்டி, இவை ஏற்கனவே ஹிந்துமதத்தில் உள்ளன என்று நம்மை ஏமாற்றுகிறார்.” என்று பிரசாரம் செய்தனர்.

மேலும் சேவை, கர்மயோகம், போன்ற கருத்தகளை மகாத்மா காந்தி, அரவிந்தர், விவேகானந்தர் ஆகியோர் முன்வைத்தனர். இவை அனைத்தும் நமது சனாதன தர்மத்தின் அடிப்படையில் என்றும் இருக்கும் அங்கங்கள். ஆனால் இவற்றை நாம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து கடன் வாங்கினோம். அதனால் தான் பழைய ஹிந்து மதத்தை விட்டுவிட்டு, நியோ-ஹிந்துமதம் எனும் பொய் உருவானது என்பது பல மிஷனரிகளின் வாதம். இதுதான் நியோ-ஹிந்து எனும் கருத்து உருவான இடம்.

ஆனால் இப்போது, சில ஆசாரவாதிகள் காலத்துக்கு ஏற்ப சிந்தனை செய்யும் அனைத்து ஹிந்துத்துவவாதிகளையும் ‘நியோ’ என்று பட்டம் கொடுத்து ஏசுகிறார்கள்.

நம்மவர்களுக்கு இந்த விபரீதப்பொருள் தெரியுமா என்று எனக்குச் சந்தேகம்தான். ஆனால் ஒன்று நிச்சயம். இவர்கள் சொல்வதுபோல் இன்றைய உலகியலுக்கு ஏற்ப ஹிந்து தர்மத்தைப் புரிந்துகொள்வதும், பின்பற்றுவதும் தவறான போக்கு கிடையாது. காரணம், ஹிந்து தர்மத்தின் சிறப்பே அது எப்போதும் மாற்றத்தைக் கண்டு பயந்ததில்லை என்பதுதான். எவ்வளவு மாற்றங்கள் வந்தபோதும், எத்தனை புதிய கலாச்சாரங்கள் அதனுடன் கலந்தபோதும்; அவற்றால் இன்னமும் வலுவடைந்தது. வலிமை இழந்து அழிந்துவிடவில்லை.

“பழையதை மாற்றவே கூடாது” என்று சொல்வது நமது தர்மத்தின் அடிப்படை இயல்புக்கே எதிரானது. “2000/1000 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரே புத்தகம். அதை மீறினால், மரணம், நரகம்!” என்று சொல்வது பாலைவன மதங்களின் இயல்பு. இது இல்லாத மேன்மைதான் நம்மை உயர்த்திக் காட்டும் தனித்தன்மை. ஆனால், எங்கே தர்மமே அழிந்துவிடுமோ என்கிற பயத்தில் “எதையும் மாற்றாதே!” என்று இவர்கள் கூவுகிறார்கள்.

வேதமதங்களுடன் மாறுபட்டு உருவானது பௌத்தம். பௌத்தத்துக்கும் வேதத்தின் கர்மகாண்டத்துக்கும் சமன்பாட்டை உருவாக்கியது சங்கரரின் அத்வைதம். அதனுடன் பக்திச்சுவை சேர்த்தது விசிஷ்டாத்வைதம். துவைதம் அதற்கு இன்னமும் ஆழமான நியாயக் கட்டுமானத்தை உருவாக்கியது. இவையனைத்தும் காலத்தின் தேவைக்கேற்ப உருவான மாற்றங்கள். ஒரு மாற்றம் முந்தைய மாற்றத்தை அழிக்கவும் இல்லை. இன்று இவை அனைத்துமே சனாதன விருட்சத்தின் கிளைகளாக நிற்கின்றன.

இந்தப் பரிணாம வளர்ச்சியின் அடுத்த படிநிலை, மகர்ஷி தயானந்தர், சுவாமி விவேகானந்தர், பாரதி, அரவிந்தர் போன்றோர் உருவாக்கிய கோட்பாடுகள். த்வைதாத்வைதங்கள் தனித்தனி சித்தாந்தங்களாக மாறின. ஆனால், பின்னாளில் வந்த இவர்களது கொள்கைகள் மேற்கண்ட சித்தாந்தங்களில் ஏதோ ஒன்றை ஒட்டி நின்றன. சமுதாயத்துக்கு மட்டும் புதிய அணுகுமுறைகளை உருவாக்கிக் கொடுத்தனர் இந்த மகான்கள்.

“ஒரே ஒரு மகான்தான் வருவார். அவர்தான் இறைதூதர் அல்லது இறைவனின் குமாரர். அவர் சொன்னதுதான் கடைசிவரை” எனும் வாதம் ஹிந்து மதத்தில் கிடையாது. பாரதம் ஒவ்வொரு தலைமுறையிலும், ஒவ்வொரு இடத்திலும், மொழியிலும் மகான்களைத் தொடர்ந்து உருவாக்கும் ஞானமெய்ப்பூமி! இங்கே “அந்தக் காலாலத்தில், இந்தப் புத்தகத்தில் இப்படி உள்ளது. அதனால் கடைசிவரை அதுதான்” என்று சொல்வது நகைப்புக்கு உரியது.

கடந்த நூற்றாண்டில் பாரதியும், விவேகானந்தரும் சொன்னதை ஏற்க ஆசாரவாதிகள் தயாராக இல்லை. “அவர்கள் எல்லாம் வேத ரிஷிகளுக்கு ஈடா?” என்று ஒரு அபத்தமான கேள்வியைக் கேட்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் அல்லது பாரதி பற்றி முழுமையாக உணர முடியுமா? அல்லது ‘வேத ரிஷிகளின் மகத்துவத்தின் அளவை இதுதான்” என்று சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்கிறதா? சென்ற நூற்றாண்டின் ஆளுமைகள் குறித்து விமர்சனம் செய்வதற்கு முன், இந்த அடிப்படைக் கேள்வியை, சுயவிமர்சனத்தை ஆசாரவாதிகள் செய்துபார்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

எனது குருநாதரிடம் “அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றில் எது சரி? ஒன்று சரியானதாக இருந்தால், மிச்ச இரண்டும் தவறுதானே?” என்பன போன்ற கேள்விகளை நான் சிறுவயதில் குழந்தைத்தனமாகக் கேட்பேன். அதற்கு அவர் மூன்று அடிப்படைகள் கூறினார்:

  1. இந்நாளில் இருக்கும் எந்த த்வைதியும், அத்வைதியும் ஆதிசங்கரரை விடப் பெரிய ஞானி இல்லை.
  2. இந்நாளில் இருக்கும் எந்த த்வைதியும், அத்வைதியும் ராமானுஜரைவிடப் பெரிய ஞானி இல்லை.
  3. இந்நாளில் இருக்கும் எந்த அத்வைதியும், விசிஷ்டாத்வைதியும் மத்வாசாரியாரைவிடப் பெரிய ஞானி இல்லை.

இதையே நாம் சென்ற நூற்றாண்டின் ஞானிகள் விஷயத்திலும் கையாள வேண்டும்.

“சரி, அப்படி மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டால், எதை வைத்துகொள்வது எதை விடுவது என்று யார் முடிவு செய்வது? நீயா?” எனும் கேள்வியும் ஆசாரவாதிகள் வழக்கமாக முன்வைக்கிறார்கள். ஒரு முழு சமுதாய மாற்றத்தை உருவாக்க என்னாலோ, வேறு யாராலோ முடியாது. ஆனால் அந்த மாற்றத்துக்கான இடத்தை, அங்கீகாரத்தை சமுதாயம் ஏற்கும் எனும் கருத்து உருவாக்கலாம். இந்தக் கருத்தை சமுதாயத்தின் முன் வைக்க வேண்டும். அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் சமுதாயத்தின் விருப்பம்.

“அப்படி ஒரு கருத்தையே முன்வைக்கக் கூடாது, ஏனென்றால் அது நமது பழைய ஆசாரத்துக்கு எதிராக உள்ளது” எனும் பிடிவாதம்தான் சிக்கல். இத்தகைய பிடிவாதம், ஹிந்துமதத்தின் மீது வைக்கப்படும் அத்தனைக் குற்றச்சாட்டுகளுக்கும் நிரூபணமாக மாறிவிடும்.

“பழமையை விடமுடியாமல், அதற்காக நிதர்சனத்தைத் தியாகம் செய்யும் அடிப்படைவாதிகள்” என்ற தோற்றம் ஹிந்து தர்மத்துக்குப் பொருந்தாத ஒன்று. அதனைப் பொருந்துமாறு செய்யும் வேலையை ஆசாரவதிகள் பார்கின்றனர். காலத்தாலும், வளர்ச்சியாலும் பாதிக்கப்படாத தனித்தீவாக ஹிந்துமதத்தைக் கையாள முடியாது. இந்தக் கால மாற்றங்களை எதிர்கொள்ளும் கருவிகளும், அதற்கான பரந்த சிந்தனைகளும் நமது பண்டைய நூல்களிலே உள்ளன. அவற்றின் மூலம் நமது சமுதாயக் கட்டமைப்பைக் கையாள வேண்டும். அப்படிக் கையாண்டால், “யதா இச்சஸி ததா குரு” என்று கண்ணன் சொன்ன கட்டளையற்ற கட்டளையைப் பின்பற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *