இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

மன்னர்களின் பெயர்ப்பட்டியல், போர்களின் கால வரிசை, ஊர் பெயர்கள், தலைநகரங்கள் என பெரிதும் தகவல்களால் மட்டுமே நிரம்பி வழியும் வரலாற்றுப் பாடத்தை (புத்தகத்தை) ஓர் இலக்கியப் படைப்புபோல் அதி சுவாரசியமாக எழுதமுடியும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு நான் சமீபத்தில் மொழியாக்கம் செய்த இந்தப் புத்தகம்.

இந்தியாவில் பிரிட்டிஷார் மேற்கொண்ட, அதே நேரம் உலக வரலாற்று ஆய்வாளர்கள் முற்றாகப் புறக்கணித்த மாபெரும் சுரண்டலின் வரலாறை உப்பு வேலி (The Great Hedge – தமிழில் சிறில் அலெக்ஸ்) என்ற மகத்தான படைப்பாக வழங்கிய ராய் மாக்ஸமின் இன்னொரு சாதனைப் படைப்பு.

1498-1765 காலகட்டத்தில் அதாவது வாஸ்கோ ட காமா இந்துஸ்தானில் காலடி எடுத்துவைத்த நாள் தொடங்கி ராபர்ட் க்ளைவ் ப்ளாஸி போரில் வெற்றி பெற்றது வரையான காலகட்டத்தில் நம் தேசத்தில் என்னவெல்லாம் எப்படியெல்லாம் நடந்தன என்பதை மிகவும் அருமையான முறையில் தொகுத்திருக்கிறார்.

மிகப் பெரிய தரவுக் களஞ்சியமாக இருக்கும் அதே நேரம் இவ்வளவு சுவாரசியமாகவும் அவற்றை முன்வைக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறார் நூலாசிரியர்.

சுமார் 280 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் சுவாரசியமான பத்திகளை எடுத்துக்காட்டலாம் என்றுதான் முதலில் ஆரம்பித்தேன். கடைசியில் பார்த்தால் அதுவே ஒரு புத்தகம் அளவுக்கு நீண்டுவிட்டிருந்தது. எனவே, முடிந்தவரை நாலைந்து பாகங்களில் சுருக்கமாக அறிமுகம் செய்கிறேன்.

ஆங்கில மூலம்: The Theft of India - 1498-1765 
ஆசிரியர்: ராய் மாக்ஸம் 
தமிழில் : இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு - 1498-1765 
மொழியாக்கம்: B.R.மகாதேவன் 
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

புத்தகத்தை இணையம் மூலம் இங்கு வாங்கலாம். 

தொலைபேசி மூலம் 044-49595818, +91 94459 01234, +91 9445 97 97 97 ஆகிய எண்களில் அழைத்தும் ஆர்டர் செய்யலாம்.

(1)

வாஸ்கோட காமாவை கீழைத்தேய நாடுகளுக்கு அவருடைய மன்னர் அந்த நாடுகளில் கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியம் ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டுபிடித்து அந்த மன்னருக்கு நட்புச் செய்தியைத் தெரிவிக்கவும்தான் அனுப்பியிருக்கிறார்.

பொ.யு.மு. 4004-ல் கர்த்தர்தானே அந்தரத்தில் மிதந்துகொண்டு உலகைப் படைத்திருக்கிறார். அப்படியானால் கீழைத்தேய நாடுகளிலும் கிறிஸ்தவ ராஜாதானே இருந்தாகவேண்டும் என்று புத்திசாலித்தனமாக யோசித்து, வாஸ்கோ ட காமாவை கப்பலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார் போர்ச்சுகல் மன்னர்.

கீழைத்தேய நாட்டில் அப்படியான கிறிஸ்தவ ராஜாவைச் சந்திக்காமல் ஊர் திரும்பினால் உடம்பில் கை இருக்கும், கால் இருக்கும், தலை இருக்கும் உயிர் இருக்காது என்று செல்லமாக விடைகொடுத்தும் அனுப்பியிருக்கிறார்.

ஆனால் வாஸ்கோடகாமா நம் தேசத்தில் கால் பதித்ததோ இந்து சமஸ்தான மன்னர்கள் ஆட்சி புரிந்த கேரளக் கடற்கரையில். கிறிஸ்தவ ராஜாவைச் சந்திக்கவில்லை என்று போய்ச் சொன்னால் உயிர் போய்விடும் என்பதால் வாஸ்கோ ட காமா மன்னரைவிட புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார். வேறொன்றுமில்லை தாம் பார்த்த இந்து மன்னரை கிறிஸ்தவ மன்னர் என்றும் அந்த மக்களை கிறிஸ்தவர்கள் என்றும் அவர்களுடைய கோவிலை சர்ச் தான் என்றும் போர்ச்சுகல் திரும்பியதும் மெழுகுவர்த்தியை அணைத்து சத்தியம் செய்துவிட்டார்.

‘இந்த தேசத்தின் கிறிஸ்தவர்கள் நெற்றி, மார்பு, கழுத்து, முழங்கைகள் என பல இடங்களில் வெண்மை நிறத்திலான துகள்களைப் பூசிக் கொண்டிருக்கிறார்கள். சர்ச்சில் இருப்பவர்கள் மேலாடை இல்லாமல் தோளில் ஒரு நூல் அணிந்துகொண்டிருக்கிறார்கள். மற்றபடி இவர்கள் கிறிஸ்தவர்கள்தான் என்று சொல்லிவிட்டார்.

அடுத்த பயணம் போகிறோமோ இல்லையோ… உயிர் தப்பியாகவேண்டுமே.

கேரளத்தில் மிளகு போன்ற நறுமணப் பொருட்கள், நெல், தென்னை என செழிப்பான நிலங்கள், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் என குவிந்து கிடந்த செல்வங்கள் இவற்றைப் பார்த்து வாஸ்கோ ட காமா மலைத்துப்போயிருக்கிறார்.

அவர் கேரள மன்னருக்குப் பரிசாகக் கொடுத்த கை அலம்பு கலன்கள், தொப்பிகள், எண்ணெய் பீப்பாய்கள், தேன், துணிகள் போன்ற போர்ச்சுகலில் இருந்து கொண்டுவரப்பட்டவற்றைப் பார்த்து அமைச்சர்கள் பெரிதாகச் சிரித்திருக்கிறார்கள். இதை எடுத்துக்கொண்டா இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறீர்கள்? போய் தங்கம், வெள்ளி இருந்தால் எடுத்துவாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது இதைத்தான் கொண்டுவந்திருக்கிறோம். இவற்றை முடிந்தவரை விற்க அனுமதிக்கவேண்டும் என்று வாஸ்கோ ட காமா பணிவுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார். மன்னரும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

கேரளக் கடற்கரையில் ஏற்கெனவே அரேபிய முஸ்லிம்கள் தமது வணிகத்தையும் குடியிருப்பையும் நன்கு நிலைநிறுத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

வாஸ்கோ ட காமாவின் குழுவைச் சேர்ந்த ஒருவர் சொன்னது: ‘எங்களில் ஒருவர் கரை இறங்கியபோது அந்த இஸ்லாமியர்கள் போர்ச்சுகல், போர்ச்சுகல் என்று சொல்லியபடியே நிலத்தில் காறித் துப்பினார்கள். எங்களைப் பார்த்த நொடியில் இருந்து எங்களுடன் மோதவும் கொல்லவும் துடித்தனர்’.

வாஸ்கோடகாமா கொண்டுவந்த பொருட்களை யாரும் விரும்பி வாங்கியிருக்கவில்லை. இருந்தும் மிளகு, கிராம்பு என சில முக்கியமான பொருட்களை வாங்கிக் கொண்டு நாடு திரும்பத் தேவையான பணம் கிடைத்திருந்தது.

முதல் பயணத்திலேயே கோழிக்கோடு மன்னருடன் வாஸ்கோ ட காமா சண்டையிட ஆரம்பித்திருந்தார். திரும்பிச் செல்லும் போது நடந்த அந்த சண்டையில் புயல், மழை பெய்ய ஆரம்பித்ததால் தப்பித்து ஓடியிருக்கிறார்.

இரண்டாம் முறை வந்த வாஸ்கோ ட காமா அப்போதும் தன்னுடைய மோதல் போக்கைக் கைவிட்டிருக்கவில்லை. மெக்காவிலிருந்து புனிதப் பயணம் முடித்துவிட்டு ஒரு கப்பல் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறது. வாஸ்கோ ட காமா அந்தக் கப்பகைத் தாக்க உத்தரவிட்டார். “பச்சிளம் குழந்தைகளைக் கைகளில் ஏந்தியபடி, நாங்கள் அப்பாவியான அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்று கெஞ்சினர்’ என்று அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த போர்ச்சுகீசியர் ஒருவர் எழுதியிருக்கிறார்.

இன்னொரு போர்ச்சுகீசியர் மிகவும் வெளிப்படையாகவே நடந்தவற்றைப் பதிவு செய்திருக்கிறார்.

‘மெக்காவிலிருந்து வந்த கப்பலை நாங்கள் சிறைப்பிடித்தோம். அதில் 380 ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். அவர்களிடமிருந்து 12000 ட்யூக்கட்களைக் கவர்ந்தோம். மேலும் 10000 மதிப்புள்ள பொருட்களையும் கவர்ந்தோம். அதன்பின் எங்களிடம் இருந்த வெடிமருந்தை கொண்டு அந்தக் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்’.

இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் இது போன்ற தாக்குதல்களைப் பார்த்தால் ஐரோப்பிய குழுவினர் வியாபாரிகளாக கடல் பயணம் செய்திருக்கவில்லை. கடல் கொள்ளையர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு எதிரில் வரும் எல்லா படகுகள், கப்பல்களையும் தாக்கி அழித்திருக்கிறார்கள்.

(2)

இரண்டாவது பயணத்தில் வாஸ்கோ ட காமாவுடன் வந்த பாதிரிகளுக்குத்தான் இந்துஸ்தானில் இருப்பது கிறிஸ்தவ ராஜ்ஜியம் அல்ல என்பது புரிந்திருக்கிறது. அல்லது தைரியமாக அதைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவில் போர்ச்சுகீசியர்கள் வலுவாக கால் ஊன்றக் காரணமாக இருந்தது அல்பெகர்க்யூ தான்.

14, 15-ம் நூற்றாண்டுகளில் கோவா தீவானது இந்து மற்றும் முஸ்லிம் மன்னர்களால் மாறி மாறி ஆளப்பட்டு வந்துள்ளது. 1470க்குப்பின் இஸ்லாமியர்களின் கட்டுப்-பாட்டுக்கு வந்தது. 1510-ல் அது பீஜப்பூர் சுல்தான் யூசுஃப் அடில் ஷாவின் ஆளுகையின் கீழ் இருந்தது.

அல்பெகர்க்யூ கோவாவுக்கு வந்ததும் அங்கிருந்த இஸ்லாமியர்களுடன் எடுத்த எடுப்பில் சண்டையை ஆரம்பித்திருக்கிறார். 1510 பிப்ரவரி வாக்கில் பழைய கோவா கோட்டையை அல்பெகர்க்யூ கைப்பற்றினார்.

அடில் ஷா இரண்டு மாதங்கள் கழித்து போர்ச்சுகீசியர்களை முற்றுகையிட வந்தார். சுமார் 60,000 வீர்ர்கள் அவருடைய படையில் இருந்தனர்.

எனவே தன்னால் அடில் ஷாவுடன் போரிட்டு வெல்ல முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட அல்பெகர்க்யூ ”முதலில் பழைய கோவாவில் இருந்த இஸ்லாமியர்கள் அனைவரையும் படுகொலை செய்தார். சில குழந்தைகளை மட்டும் மதம் மாற்றுவதற்காகக் கொண்டு சென்றார். சில செல்வந்தர்களைப் பணயமாக வைத்துக்கொண்டார். சில இஸ்லாமியப் பெண்களை மனைவிகளாக ஆக்கிக்கொள்ள உடன் அழைத்துச் சென்றார். எஞ்சிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் படுகொலை செய்தார். சிறைப்பிடித்தவர்களுடன் போர்ச்சுகீசியர்கள் தமது கப்பல்களுக்குத் தப்பிச் சென்றனர்”.

முதல் முறை தப்பி ஓடிய அல்பெகர்க்யூ சில மாதங்களிலேயே கடலில் சந்தித்த வேறு சில போர்ச்சுகீசிய கப்பல்களை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி அவற்றை வைத்து கோவா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினார். இதனிடையில் அடில் ஷா மரணமடைந்திருக்கவே அவருடைய இள வயது மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார். வலுவான தலைமை இல்லாததால் போரிடத் தயங்கி கோவாவை விட்டு துருக்கிக்குத் திரும்பிவிட்டார். இருந்தும் அங்கு தனது படையினரை விட்டுவிட்டுச் சென்றிருந்தார்.

”அல்பெகர்க்யூ கோவாவுக்கு வந்த்தும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டார். முதலில் அந்த்த் தீவில் கத்தோலிக்க ‘தேங்க்ஸ் கிவ்விங்’ விழாவை போர்ச்சுகீசியர்கள் கொண்டாடினர். அந்த விழா முடிந்ததும் எஞ்சிய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்கும்படி அல்பெகர்க்யூ உத்தரவிட்டார். நகரில் இருந்த அனைவரையும் தேடிப் பிடித்துக் கொல்ல மூன்று நாட்கள் ஆனது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மசூதியில் தஞ்சமடைந்து தொழுகை செய்துவந்த நிலையில் அனைவரையும் எரித்துக் கொன்றார். போரின் முடிவில் நாற்பது போர்ச்சுகீசியர்கள் இறந்திருந்தனர். 6,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டிருந்தனர்’.

இந்து தர்மம் தனது க்ஷத்ரியர்களுக்கு போர் தொடர்பாக சில விதிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறது. இரு மன்னர்கள் போரிட முடிவுசெய்தால் முதலில் ஜோதிடர்களை அழைத்து போருக்கான நாள் நட்சத்திரம் குறிக்கவேண்டும். போருக்கான களத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படைகள் வந்துபோக வசதிகள் இருக்கிறதா, மண் எப்படிப்பட்டது என்று பார்க்கவேண்டும். மழைக்காலமென்றால் இந்தப் படைகளை நகர்த்துவது கடினம். எனவே கோடைகாலமே போருக்குத் தேர்ந்தெடுக்கப்படும்.

போர் என்பது ஊருக்கு வெளியே மக்கள் யாரும் இல்லாத பகுதிகளில் நடக்கவேண்டும். ஆயுதம் தாங்கியவர்கள் மட்டுமே போரினால் பாதிக்கப்படலாம். அதுவும் ஆயுதங்களைக் கீழே போட்டவரை மன்னித்துவிட்டுவிடவேண்டும். வில் வைத்திருப்பவர் வில் வைத்திருக்கும் எதிரியுடன் மட்டுமே போரிடவேண்டும். அருகில் வாளுடன் இருப்பவர் மீது எய்யக்கூடாது.

காலையில் சூரிய உதயத்தை ஒட்டி சங்கொலி முழங்கப்பட்டு போர் ஆரம்பிக்கப்படும். மாலையில் அதுபோலவே சூரிய அஸ்தமிக்கும் முன் சங்கொலி முழங்கி போர் நிறுத்தப்படும். தோற்ற நாட்டின் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எல்லாம் கண்ணியமாக நடத்தப்படுவார்கள். வழிபாட்டு மையங்கள் தொடர்ந்து போஷிக்கப்படும்.

இதனுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய போர் முறையானது கேவலமானது. கொடூரமானது. காட்டுமிராண்டிகள் கூட இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள் என்று சொல்லும்வகையில் வன்முறை மிகுந்தது.

நிச்சயம் ஓர் ஐரோப்பிய அரசு முன்னெடுத்த போர் என்று இதைச் சொல்லமுடியாதுதான். ஆனால், வணிகத்துக்கு வந்தவர்கள் செய்யும் வேலையும் அல்ல இது.

இதுபற்றிப் பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்வார்களென்றால் காலனி நாடுகளை ஆக்கிரமித்தது ஐரோப்பிய மேட்டுக்குடிகள் அல்ல. அவர்கள் கண்ணியமானவர்கள். அந்த நாடுகளின் கடைநிலை வர்க்கத்தினர், நல்ல வேலை எதுவும் கிடைக்காதவர்கள், சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஆகியோர்தான் இப்படியான அராஜகங்களைச் செய்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.

இந்த அராஜகங்களைத் தொடர்ந்து அந்த கண்ணியமான மேட்டுக்குடி ஐரோப்பியர்கள் அந்த நாடுகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு ஜனநாயகம், கருத்து சுதந்தரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, நீதி மன்றம், பள்ளி, மருத்துவமனை இவற்றையெல்லாம் அமைத்து காலனிய மக்களை மேம்படுத்தியதாக வரலாறுகள் சமைக்கப்படும்.

முந்தைய அராஜகங்கள் வெகு எளிதில் மறக்கவும் மறைக்கவும்படும். கூடவே காலனிய நாடுகளில் இருந்த மன்னர்கள், மக்கள் இதைவிட மோசமாக நடந்துகொள்பவர்கள்தான் என்றொரு ”இணை வரலாறும்’ உருவாக்கப்படும்.

இந்தப் புத்தகமும் இப்படியான ஒரு சில அரசியல் வார்த்தைகளைக் கொண்டதுதானென்றாலும் காலனிய சக்திகளின் முந்தைய அராஜகங்களை மிகவும் வெளிப்படையாக, நேர்மையாக, விரிவாகப் பதிவும் செய்கிறது.

(3)

கோவாவில் கால்பதித்து அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் போர்ச்சுகீசியர்கள் முதல் வேலையாக அங்கிருந்த கோவில்கள் அனைத்தையும் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று மிரட்டி மாஸ் கன்வர்ஷன் செய்திருக்கிறார்கள் (முனைவர் திருமாவளவனார் கட்டாயம் படிக்கவேண்டிய ஆய்வு இது).

மதம் மாற்ற அவர்கள் பின்பற்றிய வழிகள் ஒன்று மிகவும் எளிதானது. பசு மாமிசத்தை ஒரு இந்துவின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார்கள். அவருடைய ஜாதியினர் அவரை சாதி நீக்கம் செய்துவிடுகிறார்கள். அதன் பிறகு அவர் வேறு வழியின்றி கிறிஸ்தவராக ஆகியே தீரவேண்டிவந்துவிட்டிருக்கிறது. பூர்வ ஜாதியினர் பசுவின் மீது கொண்டிருந்த மரியாதையே அதைத் தின்றவர்களை (வலுக்கட்டாயமாகவெனினும்) விலக்கிவைக்கவும் காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது. இது மிகவும் வேதனைக்குரிய விஷயமே.

அப்பறம் கிறிஸ்தவராக மாறியவரின் சொத்துக்கள் கிறிஸ்தவராக மாறிய வாரிசுகளுக்கு மட்டுமே உண்டு என்பதுபோன்ற அரச சட்டங்கள்கொண்டுவந்து வெகு விரைவிலேயே கோவாவை ரட்சித்துவிட்டிருக்கிறார்கள். ஒரு கோவிலை மூடவைக்கவேண்டுமென்றால், ஒரு புனிதத் திருக்குளத்தை, நீராடலை முடக்கவேண்டுமென்றால் அவற்றில் பசுவின் ரத்தத்தைத் தெளித்து அதைச் சாதித்துவிட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் எப்படியான மத மாற்றங்களில் ஈடுபட்டனர் என்பது பற்றிய குறிப்புகளும் வெளிப்படையாகவே இடம்பெற்றுள்ளன.

1667-ல் சூரத்தில் இருந்த கம்பெனி பிரதிநிதி லண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஔரங்கஜீப்பின் மத வெறியானது ஒட்டுமொத்த தேசத்தையே வெகுவாக அழித்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘முழு வீச்சில் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார். உருவ வழிபாட்டுமையங்களை இடித்துத்தள்ளி அந்த இடத்தில் மசூதிகளைக் கட்டுகிறார்.

இந்துவிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பித் தரும்படி ஒரு முஸ்லீமிடம் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால், அந்த இந்து, முகம்மது நபியைத் தரக்குறைவாகப் பேசியதாக பொய்ப் புகார் கொடுத்துவிடுவார். அடுத்த நிமிடமே அந்த இந்துவை வலுக்கட்டாயமாக சுன்னத் செய்து முஸ்லீமாக மாற்றிவிடுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

ஆளூர் ஷா நவாஸ் போன்றவர்கள் தமது முன்னோர்கள் எப்படியெல்லாம் மதம் மாறியிருக்கக்கூடும் என்று ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவரக்கூடும்.
***

கோவாவில் கிறிஸ்தவத்துக்கு மாறிய பலர் பழைய பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றினர். இஸ்லாமுக்கும் யூத மதத்துக்கும் மாறியவர்கள் இருந்தனர். புனித அநீதி விசாரணை (இன்க்யிசிஷன்) மூலம் புறச்சமய வழிபாடு மட்டும் தடைசெய்யப்படவில்லை. கிறிஸ்தவம் சாராத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதும் தடை செய்யப்பட்டது.

உப்பு போடாமல் அரிசியை வேகவைப்பது, நீத்தார் விழாவில் விருந்து ஏற்பாடு செய்வது, திருமண விழாக்களில் மலர் மாலை அணிவது போன்றவை எல்லாமே தடை செய்யப்பட்டன. பன்றி இறைச்சி சாப்பிட மறுத்தால் தண்டனை தரப்பட்டது.

டாக்டர் டெலன் கோவாவில் நடந்தவற்றை மிக விரிவாக எழுதி வைத்திருக்கிறார்:

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தினமும் அதிகாலையில் சித்ரவதைக்கு உள்ளானவர்களின் கூக்குரல்களைக் கேட்டு-வருகிறேன். தண்டனைகள் மிகக் கொடூரமாக இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாக கை கால் உடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி என்னிடம் வைக்கப்பட்டனர்.

புனித அநீதி விசாரணையில் ஒருவர் ஆணா பெண்ணா, அவருடைய வயது என்ன, அவருடைய அந்தஸ்து என்ற எதுவும் கணக்கில் கொள்ளப்படவில்லை. அனைவருமே மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டனர். பல நேரங்களில் அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்.
***

இந்துஸ்தானுக்கு வந்த ஐரோப்பியர்கள் தமது சொந்தக் கண்டத்தில் செய்துவந்த சண்டையை இங்குவந்தும் தொடர்ந்திருக்கிறார்கள். போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள் என இங்குவந்த அனைவருமே தமக்குள் போரிட்டு மடிந்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் பெரியண்ணன் போப் கோடுபோட்டு இந்த தேசமெல்லாம் உனது வேட்டைக்காடு… அந்த தேசமெல்லாம் அவனது வேட்டைக்காடு என்று பங்கு பிரித்துக்கொடுத்த பின்னரும் தமக்குள் மோதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் இடையிலான ஒற்றுமை என்பது இந்துஸ்தானை அழிப்பதில் இருந்திருக்கிறது.

அப்படியாக நமக்கு நேர்ந்தவற்றை வைத்துப் பார்த்தால், உடனடியாக அழிக்கும் போர்ச்சுகீசியர்கள் போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டு மெள்ள மெள்ள அழிக்கும் பிரிட்டிஷார் முன்னுக்கு வந்ததென்பது இந்துஸ்தானுக்கு நேர்ந்த பெரும் அதிர்ஷ்டம் என்று எண்ணும் அளவுக்கு நமது நிலைமை மோசமாக இருந்திருக்கிறது.

(4)

போர்சுகீசியர்கள் நம் நாட்டில் முன்னெடுத்த வன்முறைச் செயல்களை எல்லாம் ஒளிவுமறைவு இல்லாமல் விவரித்ததுபோலவே இந்துஸ்தான் வந்து சேரும் ஐரோப்பியர்களுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கை பற்றியும் ராய் மாக்ஸம் தெளிவாக விவரித்திருக்கிறார்.

”இந்தியாவில் வசிக்கும் பெண்கள் அணியும் சிக்கலான உடை போலல்லாமல் இங்கு போர்ச்சுகீசியப் பெண்கள் அணியும் உடை மிகவும் சல்லாத்துணிபோல் மெல்லியதாக இருக்கும். உடை எதுவும் அணிந்திருக்கவே இல்லை என்று தோன்றும் அளவுக்கு உடல் பாகங்கள் துல்லியமாகத் தெரியும். அதிலும் மார்பகங்கள் அப்படியே அப்பட்டமாகத் தெரியும்படியாகவே அந்த உடைகள் இருக்கும். கோவாவில் இருக்கும் போர்ச்சுகீசியப் பெண்கள் கற்பொழுக்கம் துளியும் இல்லாதவர்கள். காம உணர்ச்சி மிகுந்தவர்கள். கிடைத்த சிறு வாய்ப்பைக்கூட பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டார்கள். தமது பணியாளர்கள், அடிமைகளையும் காமத்துக்கு வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். கணவருக்கு அதிக மதுவை ஊற்றிக் கொடுத்துவிட்டு தமது காம இச்சைகளைப் பிரச்னையின்றி அனுபவித்துக்-கொள்வார்கள்.

எந்தவொரு அழகான பெண்ணையும் வைஸ்ராய்கள் விருப்பம்போல் துய்ப்பார்கள். தேவையென்றால் அந்தப் பெண்களின் கணவருக்கு ஏதேனும் வேலை கொடுத்து வெளியூருக்கு அனுப்பியும் வைப்பார்கள்’.
***

ஒழுக்கக்கேடுகளில் பிரிட்டிஷாரும் சளைத்தவர்கள் அல்ல.

நியூ ஹவுஸில் இருந்த படைவீரர்கள் பெரும் குடிகாரர்களாக இருந்தனர். அனைவருமே விலைமகளை அழைத்துவரத் தமக்கென வேலைக்காரர்களை வைத்திருந்தனர். பத்து வயதேயான அந்த சிறுவன் அவர்களுடைய அந்தரங்கக் காரியதரிசிபோல் இருந்தான். 1676-ல் கம்பெனி மதபோதகர் லண்டனுக்கு எழுதியது:

‘மன்னர் பெருமானே… உங்களுடைய பணியாளர்களால் கர்த்தர் எப்படியெல்லாம் அவமதிக்கப்படுகிறார், அவருடைய நாமம் எப்படியெல்லாம் அவதூறு செய்யப்படுகிறது, அவர் காட்டிய வழி எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால் கண்களில் ஆறாக நீர் பெருகி ஓடும். திருமணம் செய்து கொள்ளாமலும் இங்கிலாந்தில் மனைவிகளை விட்டுவிட்டும் வந்திருக்கும் அனைவரும் இங்கு பாவச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். திருமணம் செய்து மனைவியை அழைத்து வந்திருப்பவர்களைப் பார்த்தால் அவர்களுக்குத் திருமணம் நடந்ததா என்றே சந்தேகம் வரும்படியாக இருக்கிறது. சுய நினைவு இழப்பதுவரை குடிப்பதென்பது பெருமைக்குரிய செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆடைகள் அவிழ்ந்த நிலையில் அவர்களை வீடுகளுக்குத் தூக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது’.
***

போர்ச்சுகீசியர்களின் செல்வச் செழிப்பு, மதமாற்றம், சர்வாதிக்கம், வன்முறைகள், பின்னாளில் வீழ்ச்சியடைந்த விவரங்கள் என அனைத்தையும் ஒரு நாவல் பாணியில் அருமையாக விவரித்திருக்கிறார்.

”நான் முதல் தடவை கோவாவுக்குச் சென்றிருந்தபோது 2000 எகஸ் வருமானம் வந்த பலரைப் பார்த்திருக்கிறேன். அடுத்த தடவை நான் போயிருந்தபோது அவர்கள் ரகசியமாக என்னை வந்து சந்தித்து பண உதவி கேட்டார்கள். தமது படோடோபத்தை சற்றும் குறைத்துக்கொள்ளாமல்தான் வந்தனர். அதிலும் பெண்கள் பல்லக்குகளில் வந்து நம் வீட்டு வாசலில் நிற்பார்கள். ஒரு வேலைக்காரச் சிறுவன் வந்து நம்மைப் புகழ்ந்து சில வார்த்தைகள் பேசுவான். அவனிடம் ஏதேனும் கொடுத்து அனுப்பலாம். அல்லது பல்லக்கில் வந்திருக்கும் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் அதைக் கொடுக்க நீங்களே சொல்லலாம்.

ஆனால், அவர்கள் தமது தலைமுதல் கால் வரை அனைத்தையும் திரைச்சீலை கொண்டு மூடி மறைத்துக்-கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் நன்கொடை கொடுக்க நீங்கள் சென்றால், எப்படியான செல்வச் செழிப்பில் முன்பு இருந்தார்; இப்போது எப்படி சிரம நிலைக்குவந்துவிட்டார் என்று மத போதகர் யாரேனும் எழுதிய கடிதத்தை அந்தப் பல்லக்கில் இருக்கும் பெண் உங்களிடம் நீட்டுவார். அந்த அழகான பெண்ணிடம் நீங்கள் சிறிது பேச ஆரம்பிப்பீர்கள். வீட்டுக்குள் மரியாதை நிமித்தமாக அழைத்து பானம் ஏதேனும் கொடுத்து உபசரிப்பீர்கள். சில நேரங்களில் அந்த உபசாரம் மறு நாள் காலை வரையிலும்கூட நீடிக்கக்கூடும்.’
***

இந்துஸ்தானில் இருந்தவர்களும் இப்படியாகவே நடந்துகொண்டனர் என்ற சமப்படுத்தும் வரலாறும் நூலில் இடம்பெறுகிறது.

‘அயல் நாட்டு வணிகர்கள் கோழிக்கோட்டில் இருந்த விடுதிகளில் தங்கினர். விடுதியின் உரிமையாளரான பெண்மணி அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்ததோடு படுக்கை வசதிகளைச் செய்து தருகிறார். அந்நியர்களுடன் இரவைக் கழிப்பதும் உண்டு. வெள்ளைக்காரர்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அந்தப் பெண்கள் அவர்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப நடந்துகொண்டனர்’.
***

அலெக்சாண்டர் ஹாமில்டன் மலபாருக்கு 1703-ல் வந்தார். இந்த வணிகக் கிடங்குகளில் இருந்து ராணிக்கு ஆண்டுதோறும் தந்த பரிசுகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘1685-ல் ஓர் அழகிய ஆங்கிலேய கனவான் இந்தப் பரிசுகளைக் கறுப்பு ராணிக்குக் கொடுக்கச் சென்றார். அவருடைய அழகில் மயங்கிய ராணி அந்த நிமிடமே காதலில் விழுந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மறு நாளே கேட்டுக்கொண்டார். ஆங்கிலேயக் கனவான் அதை இதமாக மறுத்துவிட்டார். ஆனால், ராணியின் மனதைத் திருப்திப்படுத்த அவருடைய அரசபையிலேயே ஓரிரு மாதங்கள் தங்க சம்மதம் தெரிவித்தார். எத்தியோப்பிய ராணியை சாலமன் நடத்தியது போலவும் அமேஸானிய ராணியை அலெக்சாண்டர் நடத்தியதுபோலவும் ராணியை முழுமையாகத் திருப்திப்படுத்தினார். அவர் விடை பெற்றுச் சென்றபோது ராணியார் பல சன்மானங்கள் கொடுத்து அனுப்பினார்’.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், அந்த ராணி ஆங்கிலேயரிடம் மிகுந்த நட்புடன் நடந்துகொண்டார். அஞ்சுதெங்கு மணல் திட்டை ஆங்கிலேயருக்குக் கொடுத்ததோடு கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதித்தார். ஆனால் டச்சுக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் கொடுத்த அனுமதியை ராணி ரத்து செய்தார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு இந்துஸ்தான மன்னர் ஐரோப்பியருடன் நட்புடன் நடந்துகொண்டால் அது வேறுவகையாகவும் ராணி நட்புடன் நடந்துகொண்டால் அதற்கு வேறு காரணமும் கற்பிப்பதென்பதில் ஐரோப்பிய புத்தி எப்படியாகவே இருக்கிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. 1703-ல் வந்தவர் 1685-ல் நடந்ததாகக் கேள்விப்பட்டதை அல்லது கேள்விப்பட்டதாகச் சொல்லி “விஞ்ஞானபூர்வ வரலாறு’ ஒன்றை உருவாக்குகிறார்.

(5)

காலனிய ஆட்சியைப் பற்றிச் சொல்லும்போது அதன் மிகப் பெரிய கொடூரங்களில் ஒன்றாக அவர்கள் கொண்டுவந்த நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பஞ்சங்களைச் சொல்வதுண்டு. பிரிட்டிஷாருக்குத் தேவையான பணப்பயிர்களை விளைவிக்கும்படிக் கட்டாயப்படுத்துதல், அதிகப்படியான வரி, விளை பொருட்களை முற்றாக ஏற்றுமதி செய்தல் என முழுக்கவும் இந்துஸ்தானில் இருந்தவர்களுடைய நலன் மற்றும் தேவைகள் எதையுமே கருத்தில் கொள்ளாமல் சுரண்டி அழித்ததென்பது ஹிட்லருடைய வதை முகாம் கொடுமைகளைவிட மோசமானது.

இந்தப் புத்தகம் ராபர் க்ளைவ் ப்ளாஸி போரில் வெற்றிபெற்றதோடு முடிந்துவிட்டிருக்கிறது. உண்மையில் தி தெஃப்ட் ஆஃப் இந்தியா என்பது பிளாஸிப் போருக்குப் பின்பாகத்தான் உச்சத்தை எட்டுகிறது. இந்தப் புத்தகத்தின் அந்த இரண்டாம் பாகம் கட்டாயம் எழுதப்பட்டாகவேண்டும்.

புத்தகத்தின் கடைசி அத்தியாயமாக 1768-ல் பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட பஞ்சம் பற்றிச் சுருக்கமாக அதேநேரம் அழுத்தமாக ராய் மாக்ஸம் விவரித்திருக்கிறார்.

இந்தியாவிலேயே மிகவும் வளமான மாநிலம் வங்காளம். மூன்று போகங்கள் விளையக்கூடிய பகுதி. மழைப் பொழிவு குறையும்போதும் விளைச்சல் குறையும்போது முற்காலங்களில் வரியானது குறைவாக வசூலிக்கப்படும். தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு பட்டினிச் சாவுகள் தடுக்கப்படும். அப்போதைய அரசும் போதிய நிவாரணப்பணிகளை முன்னெடுக்கும்.

ஆனால், பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் வங்காளம் 1765-ல் வந்ததைத் தொடர்ந்து இந்த முந்தைய கால பாதுகாப்பு அம்சங்கள் அனைத்துமே தகர்த்தெறியப்பட்டன.

‘’ பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் 13 ஆண்டுகளில் பிரிட்டிஷாரால் செய்யப்பட்ட கெடுதலானது முந்தைய நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் செய்த ஒட்டு மொத்த கொடுமைகளையும்விட மிக மிக அதிகம்’.

1768-ல் விளைச்சல் குறைந்ததும் உணவுத் தட்டுப்பாடு மிக மிக அதிக அளவுக்கு ஏற்பட்டது. கம்பெனி பணியாளர்கள் உணவுப் பொருட்களை வெகுவாகப் பதுக்கி விலையைத் தாறுமாறாக ஏற்றினர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ வரியைச் சற்றும் குறைத்துக்கொள்ளாமல் அடித்துப் பிடுங்கிச் சென்றனர்.

பட்டினிச் சாவுகள் பெருகத் தொடங்கும் என்பது தெரிந்தும் போதிய நிவாரணப் பணிகள் எதையும் முன்னெடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட இப்படியான ஒரு பஞ்சம் ஏற்படவேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டார்கள்; பயிர் அறுவடை பொய்ப்பதென்பது ஆன்ம அறுவடைக்குத் தோதானது என்று கை கட்டி நின்றது போலவே நடந்துகொண்டிருக்கிறார்கள்.

‘விரைவில் நிலைமை மோசமாகப் போகிறது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பேரிழப்பையே ஏற்படுத்தும். பாட்னாவில் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது உள் நாட்டில் நிலைமை மேலும் மோசமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கடந்த பத்து நாட்களில் தெருக்களில் நாளொன்றுக்கு அறுபதுக்கு மேற்பட்டவர்கள் கொலைப் பட்டினியினால் இறந்துவிட்டிருக்கிறார்கள்’ என்று பிஹாரின் அதிகாரியாக இருந்த அலெக்சாண்டர் எச்சரித்திருந்த போதிலும் வங்காள கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதோடு நிற்காமல் வரியை பத்து சதவிகிதம் அதிகரித்துமிருக்கிறார்.

‘குறைந்தது முப்பது நாற்பது பேர் தினமும் இறக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பட்டினியினால் இறக்கிறார்கள். விதை நெல்லை உணவாக விற்கும் நிலை ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கால்நடைகள், பாத்திரம், பண்டங்கள் எல்லாம் விற்கப்படுகின்றன. குழந்தைகளை விற்றாலும் வாங்க ஆளில்லை’.

‘பக்கத்துக் காடுகளில் இருந்து இலைகளைப் பறித்துக்கொண்டுவந்து கொடுத்து உணவு கேட்கிறார்கள். தமது மகன்கள் மகள்களை விலைக்குக் கொடுக்கிறார்கள். பல குத்தகைதாரர்கள் வயலை விட்டு ஓடிவிட்டார்கள்’.

‘கோரக் காட்சிகள் நீள்கின்றன. மனித குலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்தக் கொடூரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. இறந்தவர்களை உண்டு தின்னும் நிலைக்குப் போய்விட்டார்கள் சில இடங்களில். இந்தச் சில மாதங்களுக்குள் அந்தப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை பதினாறில் ஆறு பேர் என்பதாக ஆகிவிட்டது’.

-என்பதாக பல அதிகாரிகள், நீதிபதிகள் தொடர்ந்து அறிக்கை அனுப்பிய நிலையிலும் வங்காள கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பாதிரியார்கள் அனுப்பிய அறிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் முழு உண்மை தெரியவரக்கூடும்.

நினைவின் கண்களில்
இன்றும் அந்தக் காட்சி தெரிகிறது
சூம்பிய கால்கள்,
இடுங்கிய கண்கள்,
உயிரற்ற உடல்
இப்போதும் கேட்கின்றன
தாய்மார்களின் கேவல்கள்
பச்சிளம் குழந்தைகளின் முனகல்கள்
நிராதரவின் கதறல்கள்
வலியின் முனகல்கள்
இறந்தவர்களின் உடல்களும்
இறந்துகொண்டிருப்பவர்களின் உடல்களும்
கலந்து கிடக்கும் தெருக்கள்
நரியின் கூக்குரல்
கழுகின் அலறல்
நாய்கள் நண்பகலில் ஊளையிடுகின்றன
எந்த எதிர்ப்பும் இல்லா இரையைப் பாய்ந்து தின்கின்றன
கோரத்தின் வன்காட்சிகள்
எந்த எழுதுகோலாலும் எழுதிவிடமுடியாதது

என்று 1793-ல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆன ஜான் ஷோர் வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்தக் கொடும் பட்டினிக் கொலைகளுக்கு நடுவே மழை பெய்திருக்கிறது.

”புதிய அறுவடைக்கு யாரேனும் எஞ்சியிருந்தால் நிலைமை சற்று மேம்படக்கூடும். ஆனால் எனக்குத் தெரிந்து அதற்குள்ளேயே அனைவரும் இறந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. என்னைச் சுற்றிலும் இறந்து விழுபவர்களைப் பார்க்கும்போது ஒரு மனிதனாக மிக மிக அதிகமாக வேதனைப்படுகிறேன். கம்பெனியின் பணியாளர் என்ற வகையில் அதன் வருவாய்க்கு ஏற்படும் பேரிழப்பு குறித்து எனக்கு நன்கு புரியவும் செய்கிறது’.

என்று கம்பெனியின் வருவாய் இழப்பு குறித்த கவலையோடு சேர்த்தே பஞ்சப் பட்டினிக் கொலை தொடர்பான கவலையை வெளிப்படுத்தும் குரலும் ஒலித்திருக்கிறது. அந்தக் குரலாலும் அன்று கொல்லப்பட்ட நம் நாட்டு எளிய மக்களுக்கு ஒரு பருக்கை உணவோ ஒரு சொட்டு நீரோ கிடைக்கவைக்கவும் முடிந்திருக்கவில்லை என்பது தான் சோகம்.

புத்தகத்தை இணையம் மூலம் இங்கு வாங்கலாம்.  

தொலைபேசி மூலம் 044-49595818, +91 94459 01234, +91 9445 97 97 97 ஆகிய எண்களில் அழைத்தும் ஆர்டர் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *