புதிய பொற்காலத்தை நோக்கி – 7

முந்தைய பகுதிகளை படிக்க

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

பிரிட்டிஷாருடைய வருகைக்கு முன்பாக இந்துஸ்தானில் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி கிடைத்திருக்கவில்லை என்ற பொய்யுரைக்கு தரம்பால் தொகுத்துத் தந்திருக்கும் ஆவணங்கள்தான் அவருடைய மகத்தான சாதனை என்று சொல்லலாம்.

இந்தியப் பாரம்பரியக் கல்வி குறித்துத் தெரிந்துகொள்வதற்காக கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டர்கள் தமது பணியாளர்களைக் கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை லண்டனில் இருந்த தலைமையகத்துக்கு அனுப்பிவைத்திருக் கிறார்கள். அதில் ஒவ்வொரு பிரஸிடென்ஸியிலும் தானாவிலும் கிராமத்திலும் இருக்கும் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்? அவர்கள் என்னென்ன ஜாதி என்ற விவரத்தைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கலெக்டரும் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்த பள்ளிகள் தொடர்பான தகவல்களை நேரில் சென்றோ கல்வியாளர்களைக் கொண்டோ வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டோ சேகரித்து லண்டனுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த ஆவணங்களில் இருந்து கிடக்கும் கீழ்க்கண்ட தகவல் தரம்பால் செய்த ஆய்வின் தங்க கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரம்போல் மின்னுகிறது. அதில் சொல்லப்பட்டிருப்பவை இதுதான்:

மலையாளம் பேசப்படும் மலபாரில் பள்ளியில் படிக்கும் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை 20%க்கும் கீழ் மட்டுமே. அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 27% வரை இருக்கிறது. பள்ளி மாணவர்களில் சூத்திரர் மற்றும் பிற ஜாதியினரின் சதவிகிதம் சுமார் 54 ஆக இருக்கிறது

கன்னடம் அதிகமாகப் பேசப்படும் பெல்லாரியில் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை (பிராமணர்கள், வைசியர்கள் சேர்த்து) 33% ஆக இருக்கிறது. சூத்திரர்கள் மற்றும் பிற ஜாதி மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 63%.

ஒரிய மொழி பேசப்படும் கஞ்சம் பகுதியிலும் நிலைமை இது போன்றதுதான். கல்வி பெற்ற மாணவர்களில் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை 35.6%. சூத்திர, பிற ஜாதியினரின் எண்ணிக்கை 63.5%.

தெலுங்கு பேசப்படும் பகுதிகளில்தான் இரு பிறப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பிராமண மாணவர்களின் எண்ணிக்கை கடப்பாவில் 24%. விசாகப்பட்டனத்தில் 46%. வைசியர்களின் எண்ணிக்கை விசாகப்பட்டனத்தில் 10.5. கடப்பாவில் 29%. முஸ்லிம்களின் எண்ணிக்கை விசாகப்பட்டனத்தில் 1%. நெல்லூரில் 8%. சூத்திரர்கள் மற்றும் பிற ஜாதியினரின் எண்ணிக்கை குண்டூரில் 35%. கடப்பா மற்றும் விசாகப்பட்டனத்தில் 41%.

நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இன்னபிற திராவிடக் கட்சிகள், இயக்கங்கள் அனைத்துமே பதில் சொல்லியாகவேண்டிய சொல்ல பயப்படும் ஆவணம் இது. இதை அவர்களிடம் காண்பித்தால் முதலில் இவை பொய் என்று மறுக்கப் பார்ப்பார்கள். கிறிஸ்தவ பிரிட்டிஷாரே தொகுத்த அதிகாரபூர்வ ஆவணம் என்றதும் கொஞ்சம் பின்வாங்குவார்கள். உடனேயே அங்கு ராமாயணமும் மகாபாரதமும் மட்டும்தானே சொல்லிக் கொடுத்தார்கள். பிராமணர்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள். அப்படிப் பெரிதாக எத்தனை மணி நேரம் கற்றுத் தந்திருப்பார்கள். எத்தனை ஆண்டுகள் கற்றுத் தந்திருப்பார்கள் என்றெல்லாம் வரிசையாகக் கேள்விகளை அடுக்குவார்கள். இதுதெரிந்ததனாலோ என்னவோ தரம்பால் அவை பற்றிய புள்ளிவிவரங்களையும் அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.

ஆசிரியர்கள் எல்லாம் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காயஸ்தர்கள், பிராமணர்கள், சதகோப், அகுரி பிரிவினர் அதிகமாக இருக்கிறார்கள். எனினும் 30 பிற ஜாதிகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையினர் இருந்திருக்கிறார்கள். சந்தால் ஜாதியைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள்.

இந்தியப் பாரம்பரியக் கல்வியில் வெறும் எழுதப் படிக்கவும் சொற்ப கணிதப் பாடங்களும் ராமாயணம், மஹாபாரதம் போன்றவை மட்டுமே கற்றுத் தரப்பட்டது என்பது உண்மையல்ல. அதே காலகட்டத்தில் இங்கிலாந்திலும் மதம் சார்ந்த கல்வி நீங்கலாக பிற பள்ளிகளில் இதே பாடங்கள்தான் இன்னும் சொல்லப்போனால் இதைவிடக் குறைவான கல்வியே தரப்பட்டிருந்தது. 1835ல் இங்கிலாந்தில் பள்ளிப் பருவம் என்பது வெறும் ஒரு வருடமாக மட்டுமே இருந்திருக்கிறது. 1851-ல் அது இரண்டு வருடமாக ஆகியிருக்கிறது அவ்வளவுதான். இந்தியாவிலோ ஏழு வயதுக்குள் பள்ளியில் சேரும் ஒரு மாணவர் சுமார் 13-14 வயது வரையிலும் கல்வி பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அதையும்விட அதிகம் படிக்க விரும்பினால் அதற்கும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன.

இறையியல், சட்டம், வான சாஸ்திரம் ஆகியவற்றைக் கற்றுத் தரக் கல்லூரிகள் இல்லை’ என்றாலும் அவை மாணவர்களுக்குத் தனியாகக் கற்றுத்தரப்பட்டிருக்கின்றன என்று குண்டூர் கலெக்டர் தெரிவித்திருக்கிறார்  :

இந்த சாஸ்திரங்கள் எல்லாம் அதைக் கற்றுத் தேர்ந்த பிராமணர்களால் தனிப்பட்ட முறையில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. இந்தக் கல்விக்கு அவர்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஜமீந்தார்கள் மற்றும் முந்தைய மன்னர்கள் மூலமாக இந்த ஆசிரியர்களின் முன்னோர்களுக்கு வேறு பல காரணங்களுக்காக நிலங்கள் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இலவசமாக மற்றவர்களுக்குக் கல்வி வழங்கியிருக்கிறார்கள்.

 என்று அந்த கலெக்டர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய அறிக்கையில் ஏழைகளுக்கு கல்வி கிடைப்பதைப் பற்றி விவரித்திருக்கிறார்.

தனது சொந்த கிராமத்தில் கல்வி பெற முடியாமல் வறுமையில் வாடும் இந்தச் சிறுவர்கள் முற்றிலும் அந்நிய கிராமம் ஒன்றில் எப்படிப் போய் தங்கிப் படிக்க முடிகிறது. அதுவும் பல வருடங்கள் சொந்த வீட்டுக்குத் திரும்பாமலேயே பத்திலிருந்து நூறு கி.மீ தொலைவுக்குச் சென்று எப்படித் தங்கிப் படிக்க முடிகிறது என்ற கேள்வி வருவாய்த்துறைக்கு நிச்சயம் இருக்கும். அந்தச் சிறுவர் களுடைய தினசரித் தேவைகள் முழுவதுமே தானம் மூலமாகவே சமாளிக்கப்படுகிறது. மேலே சொல்லியிருக்கும் காரணங்களினால் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரிடமிருந்து அல்ல; பொதுவாக அவருடைய கிராமத்தில் இருக்கும் நபர்களின் உதவியின் மூலமாக நடந்தேறுகிறது. தொலை தூர கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு பிராமணரின் வீட்டு வாசலுக்குச் சென்று உணவை யாசகம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு தானம் கொடுப்பது மிகுந்த மரியாதையுடனும் கவுரவத்துடனும் பரிவுடனும் செய்யப்படுகிறது. எந்தவித படோடோபமும் இன்றி மிக எளிய முறையில் இந்த தானங்கள் தரப்படுகின்றன. அது அதன் மதிப்பை மேலும் உயர்த்து கிறது. இந்த ஏழைகளுக்கு இப்படியான பரோபகார உதவி மட்டும் கிடைக்காதிருந்தால் அவர்கள் கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேறவே முடிந்திருக்காது.

பிரிட்டனில் தினமும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் மட்டுமே பள்ளிகள் நடந்துவந்த 18-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த பள்ளி நேரம் பற்றி இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாகக் காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்துவிடுகிறது. உணவு போன்றவற்றுக்கு ஓரிரு இடைவேளைகள் இருந்திருக்கின்றன. மாலை சூரிய அஸ்தமனம் வரை அல்லது அதைத் தாண்டியும் வகுப்புகள் நடந்திருக்கின்றன.

பம்பாய் பிரஸிடென்ஸி குறித்த தரவுகளுக்கு பம்பாய் பிரஸிடென்ஸியின் கௌன்சில் உறுப்பினராக இருந்த ப்ரெண்டர்கெஸ்ட் அனுப்பிய ஆவணங்கள் ஆதாரமாகத் திகழ்கின்றன. ஏப்ரல் 1821-ல் அவர் சொன்னது:

நான் சொல்லத் தேவையே இல்லை. இந்த போர்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு நன்கு தெரிந்த உண்மைதான். இந்தப் பிராந்தியத்தில் உள்ள கிராமங்களில் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அங்கு ஒரு பள்ளியாவது இல்லாமல் இல்லை. பெரிய கிராமங்களில் ஒன்றுக்கு மேலான பள்ளிகள் இருக்கின்றன. சிறுநகரங்களிலும் பெரிய நகரங்களில் ஒவ்வொரு டிவிஷனிலும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. அங்கு உள்ளூர் சிறுவர்களுக்கு எழுதப் படிக்கவும் கணிதமும் கற்றுத் தரப்படுகின்றன.

இந்தக் கல்விஅமைப்பு பொருளாதாரரீதியாக மிகவும் சிக்கனமானதாக இருக்கிறது. ஒரு கைப்பிடி தானியம் அல்லது மாதத்துக்கு ஒரு ரூபாய் ஆசிரியருக்குச் சம்பளமாக பெற்றோரின் வசதிக்கு ஏற்பத் தரப்படுகிறது. அதே நேரம் இந்தக் கல்வி மிகவும் எளிமையானதாகவும் திறன் மிகுந்ததாகவும் இருக்கிறது. அனைத்து விவசாயிகளும் சிறிய தொழிலாளிகளும் தமக்கான கணக்குவழக்குகளைத் துல்லியமாகப் பார்த்துக்கொள்ள முடிகிறது. நமது தேசத்தில் கடைநிலையில் இருப்பவர்களிடம் இப்படியான அறிவுத் திறமையைப் பார்க்கவே முடியாது. பெரு வணிகர்களும் வங்கியாளர்களும் தமது கணக்குப் புத்தகங்களை பிரிட்டிஷ் வர்த்தகர்களைப் போலவே மிகவும் லாகவமாகவும் துல்லியமாகவும் நிர்வகிக்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் – பிரிட்டிஷார்தான் பட்டியல் ஜாதியினருக்குக் கல்வி தந்தார்கள் என்ற பொதுவாக நம்பப்படும் கருத்துக்கு மாறாக நிலைமை இருந்திருப்பதையும் பிரிட்டிஷாரின் ஆவணங்களில் இருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. ஆடம் அனுப்பியிருக்கும் அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பர்த்வானில் 13 கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகள் இருந்திருக்கின்றன. ஆனால் அதில் சந்தால், தாம் ஜாதி மாணவர்கள் வெறும் நான்கு பேரே இருந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 16 தாழ்ந்த ஜாதிகளைச் சேர்ந்த 86 மாணவர்கள் மட்டுமே மிஷனரி பள்ளிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஜாதிகளைச் சேர்ந்த 674 பேர் இந்திய பாரம்பரியப் பள்ளிகளில் கல்வி பயின்றிருக்கிறார்கள்.

பரந்து விரிந்து கிடக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து ஓர் உண்மை தெரியவருகிறது. இந்திய கிராமப்புறங்களின் வருமானத்தில் உள்ளூர் காவல், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றைப் போலவே கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இந்த வருமானமே உயர் கல்விக்கு மட்டுமல்லாமல் ஆரம்பக் கல்விக்கும் செலவிடப்பட்டு இருப்பதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏற்பாடு நீங்கலாக குழந்தைகளின் பெற்றோரும் காப்பாளர்களும் தங்களால் முடிந்த அளவில் நன்கொடைகள், தானங்கள், வசதி இல்லாத மாணவர்களுக்கு உணவும் உறையுளும் தருதல் என உதவிகள் செய்து இந்தக் கல்வி அமைப்பை நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.

முந்தைய அரசுகள் கொடுத்த உதவிகள் எந்தவித வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்படாதவையாக இருந்திருக்கின்றன. சில துறவிகள் அல்லது பண்டிதர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள அல்லது அவர்களுடைய ஆசியைப் பெறும் நோக்கில் இந்த நல்கைகள் மிகவும் தாராளமாகத் தரப்பட்டன. அப்படி நல்கைகள் பெற்ற அனைவருமே ஏதாவது கல்வித் துறைகளுக்கான பள்ளிகளை நடத்தி வந்திருக்கிறார்கள். அங்கு இலவசமாகவே கல்வி தரப்பட்டிருக்கிறது. நல்கைகள் வழங்கும்போது கல்விக்கு என்று தனித்துக் கூறப்பட்டிருக்க வில்லையே தவிர இந்த இலவசக் கல்வியைத் தரும் கடமை உள்ளடங்கியதாகவே இருந்திருக்கிறது.

அக்ரஹாரங்களுக்கு, வங்காளத்திலும் தென் இந்தியாவிலும் அழைக்கப்படுவதுபோல் பிரம்மதேயம் என்ற பெயரில் ஒரு பகுதி ஒதுக்கப்படும். எனினும் இந்த ஒதுக்கீடுகள் பல தரப்பட்டவர் களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. பண்டிதர்கள், புலவர்கள், ஜோதிடர்கள், மருத்துவர்கள், நாவிதர்கள், விதூஷகர்கள், உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதி நீரைத் திருவிழாக்காலங்களில் குறிப்பிட்ட கோவில்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கு இப்படியாக நிலங்கள் தானமாகத் தரப்பட்டதுண்டு.

பிரிட்டிஷாரின் எல்லையற்ற வருமான (வரி) ஆசையே (கேம்பல் இதை அழுத்தமாக விவரித்திருக்கிறார்) இந்தியப் பாரம்பரிய பொருளாதார அமைப்பை அழிய வைத்தது. அந்தப் பாரம்பரிய அமைப்புத்தான் அதன் கலாசார, மத, கல்வி அமைப்புகளை நிலை நிறுத்தியிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நெருக்கடி இல்லாமல் வேரூன்றவும் தொடர்ந்து வளரவும் இந்தியப் பாரம்பரிய அமைப்புகளை அழிப்பது மிகவும் அவசியமாகவே இருந்திருக்கிறது. அந்த எண்ணம்தான் மெக்காலே, பெனட்டிக் போன்றவர்கள் இந்தியாவில் ஆங்கிலமயமாக்கப்பட்ட உயர்கல்வி வலுவாக வேரூன்றும்வரை இந்தியாவின் விரிவான பாரம்பரிய ஆரம்பக் கல்வி அமைப்பை முற்றாகப் புறக்கணிக்க வைத்திருக்கிறது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *