புதிய பொற்காலத்தை நோக்கி – 9

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

நமது பின்னடைவுக்கு பிரிட்டிஷாரும் ஐரோப்பியர்களும் செய்தவை மட்டுமே காரணமா? அவர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறி  70 ஆண்டுகள், கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் ஆகிவிட்டனவே. 

பிரிட்டிஷார் நமது பாரம்பரிய அறிவுக் கோவிலை இடித்துத் தள்ளிவிட்டு அவர்களுடைய நவீன கதீட்ரலைக் கட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், நாம் நம் கோவிலைப் புனரமைக்காமல் அவர்களுடைய கதீட்ரலிலேயே தொழுதுவருகிறோம். அவர்கள் செய்தது தவறென்றால், நாம் செய்துவருவது அதைவிடப் பெரும் தவறு.

இதற்கு எது முக்கியமான காரணம்?

நம்முடைய கடந்த கால உண்மைகளைத் தெரிந்துகொண்டிருக்கும் சொற்ப நபர்களுமே கூட அதன் பின்னால் இருந்த காரணத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. அதாவது நமது கடந்த காலப் பெருமைகளின் உடல் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. அதன் ஆன்மா / உயிர் நமக்குத் தெரியவில்லை. அல்லது அந்த ஆன்மாவை நாம் ஏற்கத் தயாராக இல்லை.

தரம்பாலுமே இந்துஸ்தானின் கடந்த கால உன்னத நிலையை பிரிட்டிஷ் ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டியதோடு நின்றுவிட்டார். அந்த சாதனைக்கு எது காரணம் என்று கண்டுசொல்லவில்லை. அல்லது அதுபற்றிச் சொல்ல போதுமான தரவுகள் இல்லை என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்.

ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற வகையில் கல்வெட்டுகள், ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்  இவற்றை நேர்மையாக முன்வைப்பது மட்டுமே அவர்களுடைய இலக்காக இருக்கும். பிற தீர்மானங்கள், சமூகப் பார்வைகள், அரசியல் முடிவுகள் இவற்றை முன்வைப்பது அவர்களுடைய இலக்காக இருக்காது. எனினும் தாம் சேகரித்த தரவுகள் என்ன உண்மையைச் சொல்கின்றன என்பதை எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்லும் தைரியம் இருக்கவேண்டும்.

நமது கடந்த காலம் பற்றி நாம் பெருமையாக எதைச் சொன்னாலும் எதிர்த் தரப்பினர் மட்டுமல்ல நம் தரப்பினரும் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லியே நம்மை மடக்குவார்கள். அதுதான் ஜாதி சமூகம் தொடர்பான மிகையான அவதூறு.

நமது கடந்த காலப் பெருமைகளை முற்றாக மறைத்த பிரிட்டிஷார் கூடவே வெறொன்றும் செய்தார்கள். அவர்கள் நமது கடந்த காலத் தவறுகளை மிகைப்படுத்தவும் செய்தார்கள். இந்த இரட்டைத் தூக்கு தண்டனையில் இருந்து நம்மால் இதுவரையும் மீளவே முடியவில்லை.

மொழி, மதம், நிறம், இனம் போன்ற உலகெங்கும் நிலவிய குழு அடையாளம் போன்றதுதான் ஜாதி. பிற அடையாளங்கள் பெருமளவுக்குப் பெற்றோரிடமிருந்து கைமாறித் தரப்பட்டது போலவேதான் ஜாதியும் கைமாற்றித் தரப்பட்டிருக்கிறது. தொழில் புரட்சி நடப்பதற்கு முன்பு வரை உலகம் முழுவதுமே ஒருவரின் தொழில் என்பது பெற்றோரின் தொழிலாகவே அதாவது குலத் தொழிலாகவே இருந்திருக்கிறது. மன்னரின் மகனே மன்னரானார். நில உடமையாளரின் மகனே நில உடமையாளரானார். வியாபாரியின் மகனே வியாபாரத்தில் ஈடுபட்டார். கூலித் தொழிலாளரின் மகன் கூலித் தொழிலிலேயே ஈடுபட்டார். இந்திய ஜாதி அமைப்பிலும் அப்படியேதான் இருந்தது.

தொழில் புரட்சி ஏற்பட்டதன் முலமும் உலகைக் காலனியாக்கியதன் மூலமும் பெரும் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளின் குறிப்பாக ஆங்கிலேயர்களில் கடைநிலையில் இருந்தவர்களுக்கு சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை மேம்பட வழி பிறந்திருக்கிறது. தொழில் புரட்சி ஏற்பட்டு நவீன வேலை வாய்ப்புகள் பெருகியதைத் தொடர்ந்து மேலை நாடுகளின் கடைநிலைப் பணியாளர்களுக்குக் கல்வியும் நல்ல வேலைகளும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

பிளாஸி போரில் ராபர்ட் க்ளைவ் வெற்றி பெற்ற அதே 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில்தான் தொழில் புரட்சி தோன்ற ஆரம்பித்திருக்கிறது. பிளாஸி போரில் வென்ற க்ளைவுக்கு 75 படகுகளில் ஒவ்வொன்றிலும் அன்றைய மதிப்பில் லட்ச ரூபாய் பெருமானமுள்ள செல்வம் கிடைத்து அதை முழுவதுமாக இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இந்தியாவில் இருந்து தங்கம், வெள்ளி போன்ற செல்வம் மட்டுமல்ல அறிவியல், தொழில்நுட்ப அறிவுச் செல்வமும் சுரண்டப்பட்டிருக்கிறது. உலக வரலாற்றில் இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள் வீழத் தொடங்கியதும் பிரிட்டனில் அவை மேலோங்கத் தொடங்கியதும் வெறும் தற்செயல் நிகழ்வல்ல.

இந்தியா போன்ற நாடுகள் காலனிய வெறியுடன்  சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்புகளில் ஆர்வம் காட்டியிருக்கவில்லையென்பதால் இந்த நவீனக் கட்டமைப்புகள் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கின்றன. இந்தியா தன் போக்கில் விடப்பட்டிருந்தால் இந்த தொழில் புரட்சியும் இன்ன பிற சாதனைகளும் இந்தியாவிலேயே நடந்திருக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தன. இந்தியாவில் நிலவிய குலத் தொழில் மரபானது அப்படியான செய் நேர்த்தியை அதுவரை அனைத்துத்துறைகளிலும் கொண்டுவந்து சேர்ந்த்திருந்தது. ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவின் ஜாதி அமைப்புதான் உலகிலேயே மிக மோசமானது என்று எழுதிவைத்தார்கள். நம்மவர்களிலும் பெரும்பாலானவர்கள் அதையே ஏற்றுக்கொண்டும் விட்டார்கள்.

ஆனால், தரம்பால் முன்வைத்த நமது கடந்த கால சாதனைகள் அனைத்துமே அந்த ஜாதி அமைப்பு வலுவாக இருந்தபோது செய்யப்பட்டவை. அந்தத் தொழில்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள் எல்லாமே குலத் தொழிலாக, குலக் கல்வி மூலம் கற்றுக் கொள்ளப்பட்டவையே. அந்த சாதனைகள் போற்றத் தகுந்தவை. ஆனால், அதற்குக் காரணமான ஜாதி அமைப்பு மட்டும் தவறா?

நம்முடைய கடந்த காலமாக பிரிட்டிஷார் காட்டிய பொய்யான சித்திரத்தையே முன்வைத்துவரும் மெக்காலே புத்திரர்களும் ஜாதியையே பெரிய இழுக்காகச் சொல்கிறார்கள். கடந்த காலத்தில் சிறந்து விளங்கியிருக்கிறோம் என்று சொல்லும் பாரதத் தாயின் தவப் புதல்வர்களும் குலக் கல்வி, குலத் தொழில், ஜாதிய சமூகம் இவையெல்லாம் தவறு. இழிவானவை என்றே சொல்லிவரு கிறார்கள். கம்ப ராமாயணம் உன்னதமான படைப்பு. ஆனால், கம்பர் இழிவானவர் என்று சொல்லமுடியுமா என்ன?

காந்தியடிகளின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ்காரர்களும் ஹெட்கேவார்ஜியின் கீழ் செயல்பட்ட இந்துத்துவர்களும் இந்துக்களின் கடந்த காலம் குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர்களே. ஆனால், ஜாதி சமூகம் குறித்து மிகவும் தவறான மிகையான புரிதலுடனே இருந்தார்கள். நம் தேசத்தில் இந்த இரண்டு தரப்பினர்தான் அரசியல் கட்சிகள் முதல் அதிகார வர்க்கம் வரை ஊடங்கள் வரை அனைத்திலும் இருக்கிறார்கள்.

மெக்காலே புத்திரர்களின் தலையும் காலும் ஒரே திசையிலேயே இருக்கின்றன. அழிவுச் செயல் தான் என்றாலும் சொல்லும் செயலும் ஒரேவிதமாகவே இருக்கின்றன. வலதுசாரிகள் தான் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய தலை ஒரு பக்கமாகவும்  உடம்பு வேறொரு பக்கமாகவும் கால் இன்னொரு பக்கமாகவும் திரும்பி நிற்கின்றன. தலையின் திசையில் நடக்க முற்பட்டால் உடம்பு ஒத்துழைக்காது. உடம்பின் திசையில் நகர கால் ஒத்துழைக்காது. நின்ற இடத்திலேயே தடுமாறி நின்று கொண்டிருக்கிறோம்.

பாரம்பரியப் பெருமை நோக்கி தேசத்தை வழி நடத்த வேண்டிய அவர்கள் உறைந்து நிற்பதால் தேசமானது மெக்காலே புத்திரர்களின் இழுப்புக்கு ஏற்பவே நகர்ந்து செல்கிறது. ஒருவகையில் ஜாதி தொடர்பான இழிவான பார்வையே இருப்பதால் அரை மெக்காலே புத்திரர்களாகவே தேசத்தின் புதல்வர்களும் ஆகிவிட்டார்கள்.

நாம் சரி செய்ய வேண்டியது இதைத்தான்.

*

நமது கடந்த கால சாதனைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு நமது ஜாதி சார்ந்த மிகைக் குற்ற உணர்ச்சி போக்கப்படவும் வேண்டும். ஜாதி சமூகத்தில் தவறுகள் உண்டு. ஜாதி சமூகமே தவறென்று சொல்ல முடியாது.

இன்று உலகில் குலக் கல்வி வழக்கொழிந்துவிட்டது என்பது உண்மையே. அனைவருக்கும் கல்வி தரப்பட்டு திறமைக்கு ஏற்ப வேலை தரப்படவேண்டும் என்பதும் சரியே. அர்ச்சக குலம், ஆயுர்வேத மருத்துவர் குலம், பாரம்பரியக் கலைகள் போன்றவற்றுக்கு மட்டும் குலக் கல்வி தொடரலாம். மற்றவற்றை பொதுக் கல்வி மூலமே பெற்றுக்கொள்ளலாம். அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்ற உண்மை மீண்டும் புரியும் வரை இந்த நிலையே தொடர்ந்துகொள்ளட்டும்.

ஆனால், கடந்த காலத்தில் நாம் பல துறைகளில் முன்னேறி இருந்ததற்குக் காரணமான குலக் கல்வி தொடர்பாக நமக்குக் குற்ற உணர்ச்சி தேவையில்லை. இந்தக் குற்ற உணர்ச்சியே நம்மைக் குறுக்கிப் போடுகிறது. முழுத் திறமையுடன் முழு நம்பிக்கையுடன் கூட்டுறவுடன் செயல்படவிடாமல் தடுக்கிறது. பிரிட்டிஷார் நம்மை அடக்கி ஆண்டதற்கு இந்தக் குற்ற உணர்ச்சியை நம் மனதில் உருவாக்கியதும் அது சார்ந்து ஒரு தார்மிக வலுவை, நியாயத்தை அவர்களுக்கு உருவாக்கிக் கொண்டதும்தான் காரணம்.

எனவே, காலனிய அடிமைத்தனத்தில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நமது ஜாதி சமூகம் என்பது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவரவர் பணியை அவரவர் திறம்படச் செய்துவந்ததுதான் என்ற புரிதல் நமக்கு வேண்டும். நமது கடந்த கால சாதனையில் கடைநிலை ஜாதியினரின் பங்கு என்ன, நிலை என்ன என்ற கேள்வியானது ராக்கெட் விட்டால் என்ன பிரயோஜனம்… ஏழையின் பசிக்கு இட்லி கொடு என்று கேட்பதற்கு இணையானது.

சாக்கடை அள்ளியவரின் மகன் சாக்கடையே அள்ளவேண்டும்; மலம் அள்ளியவரின் மகன் மலத்தையே அள்ளவேண்டும் என்று சொன்ன ஜாதி சமூகம் எப்படி நியாயமானதாக இருக்கமுடியும் என்று ஆவேசப்படுவதற்கு முன்பாக, அந்த கேவலமான பணிகள் எல்லாம் மிக சமீபத்திய இழிவுகளே. அதற்கும் பாரதத்தின் வர்ண-ஜாதி சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். நம் தேசத்தில் வேத காலத்திலோ மனுவின் காலத்திலோ சாக்கடைகளும் மனித மலத்தை மனிதரே அள்ளவேண்டும் என்ற நிலையும் இருந்திருக்கவில்லை. இஸ்லாமியப் படையெடுப்பால் இடம் பெயர்ந்தவர்கள், பிரிட்டிஷ் நவீனத் தொழில்களின் அறிமுகத்தால் பாரம்பரியத் தொழில் நசிந்தவர்கள்தான் அதில் ஈடுபட நேர்ந்திருக்கிறது..

இதுமட்டுமா… உலகம் முழுவதையும் வென்ற காலனிய சமுதாயங்களிலும் மனித மலத்தை மனிதர்களேதான் அள்ளினார்கள். உலகம் முழுவதுமே ஏழைகளின் பரம்பரைகள் ஏழைகளாகவேதான் இருந்தார்கள். உலகின் பிற சமூகங்கள் எந்த அளவுக்குத் தமது உறுப்பினர்களைக் கீழாக நடத்தியதோ அந்த அளவுக்கு நாம் நமது கடைநிலைப் பிரிவினரை நடத்தவில்லை; அவரவர் பிரிவில் அவரவர் ஆளுமையுடன் இருந்தனர் என்ற உண்மை தெரியவேண்டும்.

அதோடு கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்த உலகில் செய்திருக்கும் கொடுமைகளில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் செய்திருக்கவில்லை. அவர்கள் தமது படு மோசமான, அராஜகமான கடந்த காலம் பற்றி எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்வதில்லை. நாம் மட்டும் செய்த தவறுக்கு மேலாக ஏன் வருந்தவேண்டும்? அளவுக்கு மிஞ்சிய அறவுணர்வென்பது அசட்டுத்தனமே.

எனவே, ஜாதி சமூகம் பற்றிய உண்மையை நாம் புரிந்து கொண்டாலொழிய நமக்கு மீட்சி சாத்தியமில்லை. ஜாதிய மோதல்கள் பற்றிய பிரிட்டிஷ் கால வரலாறு மட்டுமே நம்மிடம் இருக்கிறது. ஜாதி சமூகம் பரஸ்பரம் நட்புறவுடன் இருந்தது பற்றிய தரவுகளே இல்லை. அவை பதிவு செய்யப்படவும் இல்லை.

பிரிட்டிஷ் காலத்துக்கு முந்தைய நம் சமூகத்தின் சாதனைகள் என்பது ஜாதி சமூகத்தில் நிலவிய அமைதியையும் மன நிறைவையும் மறைமுகமாக எடுத்துக்காட்டும் கண்ணாடிகளே. சமூகம் முரண்பட்டு, ஏற்றத் தாழ்வுகளால் மோதிக் கொண்டிருந்தால் இந்த சாதனை சாத்தியமே இல்லை.

ஜாதி சமூகம் என்பது ஊர் கூடி இழுத்த தேர் போன்றது; அதோடு அது ஒய்யாரமாக பேரழகுடன் திகழ்ந்ததும் கூட. மேற்குலகின் பீரங்கி வண்டி போல் அது சென்ற இடமெல்லாம் ரத்தக் களறியை, கண்ணீர்க் குமுறலையெல்லாம் ஏற்படுத்தியிருக்கவில்லை. 

முந்தைய காலத்தில் கடைநிலை ஜாதியினர் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்கள். மீட்சிக்கான வழி எதுவும் தெரியாமல் தவித்து வந்தனர். பிரிட்டிஷார்தான் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்கள். அதைப் பிடித்துக்கொண்டு கடைநிலை ஜாதியினர் மேலேறியிருக்கிறார்கள். முந்தைய கால அமைதி என்பது இயல்பான அமைதி அல்ல. அடக்குமுறையினால் அழுகை வெளியே தெரியாதவண்ணம் அடக்கப்பட்டு உருவான அமைதி. எப்போது அவர்கள் உரிமைக் குரல் எழுப்பினார்களோ அப்போது வெளிப்பட்ட ஜாதி இந்துக்களின் வெறித்தனமே அவர்களுடைய உண்மையான சொரூபம் என்று சொல்வார்கள்.

இது சரியல்ல. உண்மையில் பிரிட்டிஷாருக்கு முந்தைய ஜாதி சமூகம் நிம்மதியாகத்தான் இருந்தது. எப்போது அனைவரும் சமம் என்பது அதிரடியாக முன்னெடுக்கப்பட்டதோ அப்போதுதான் பிரச்னை ஆரம்பித்தது. அவரவருக்கான இடங்களில் அவரவருக்கான தொழில்களில் அவரவர் ராஜாவே.

பூமிக்குள் வேரைச் செலுத்தி சூரியனை நோக்கி கிளைகளை விரித்து தேடலில் ஈடுபடும் ஒரு செடியானது ஒரு குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சிக்கு மேல் அதே மலர்களை, அதே காய்களை, அதே கனிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடுகின்றனவோ அதுபோலவே ஒவ்வொரு சமூகமும் பழங்குடி காலத்தில் தொடங்கி பல்வேறு இடப்பெயர்வுகள், பல்வேறு வேலைகள், வாழ்க்கைப் பார்வைகள், மதிப்பீடுகள் இவற்றை முன்னெடுத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தமக்கான வாழிடம், தொழில், தமதான சடங்கு சம்பிரதாயங்கள் என்று நிலைபெற்று அதன் பின் அதே திசையில் வாழத் தொடங்கியிருக்கின்றன. எதுவும் யாராலும் திணிக்கப் பட்டிருக்கவில்லை. மலை ஜாதியினரின் வாழிடம் அவர்களாலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வனவாசி, கடல்வாசி, வயல்வாசி என ஒவ்வொரு சமூகத்தின் வாழிடமும் அங்கு அவற்றின் தொழில்களும் அவர்களாலேயே அவர்களுடைய முன்னோர்களாலேயே தீர்மானமாகியிருக்கின்றன.

ஒரு மீனவருக்கு (மீனவ குலத்துக்கு) தச்சு வேலை மேல் ஆர்வம் இருந்திருக்கவில்லை. ஒரு விவசாயிக்கு இன்றும் கூட வணிகத்தில் விருப்பம் கிடையாது. எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை.

(தொடரும்)

One Reply to “புதிய பொற்காலத்தை நோக்கி – 9”

  1. மிக அதீதமாக இருக்கிறது. விட்டால் அன்றைய அடிமைகள் கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள் என்று வாதிடுவீர்களா? எல்லா நாட்டிலும் பெண்கள் இரண்டாம் நிலை மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், எந்த நாட்டிலும் அவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள் என்று வாதங்களைப் பார்ப்பதில்லை. ஏன் நம்மூரில் மட்டும் இப்படி சப்பைக்கட்டு கட்ட வேண்டி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆமாம், தவறுதான், திருத்திக் கொள்வோம் என்று மேலே போகாமல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *