மமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக!

மேற்கு வங்கம் என்றாலே கம்யூனிஸ்டுகளின் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்த காலம் (1967- 2011) இருந்தது. குறிப்பாக 1977ஆம் ஆண்டு முதல் 2006 வரையிலும்  நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று, 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மேற்கு வங்கம் விளங்கியது.

ஆனால், மார்க்சிஸ்ட்களின் வெற்றி என்பது எதிர்க்கட்சிகளை மிரட்டியும், வாக்குச்சாவடிகளை பலவந்தமாகக் கைப்பற்றியும் நடத்திவந்த அதீத முறைகேடுகளின் விளைவு என்பதை, மக்கள் உணரத் துவங்கியபோது அங்கு அதிருப்தி வெடித்தது. கம்யூனிஸ்ட்களின் வன்முறையையும், அவர்களின் அடாவடி அரசியலையும் பொறுக்க முடியாமல் தவித்த மக்களுக்கு, வாராது வந்த மாமணியானார் மமதா தீதி (அக்கா).

மேற்கு வங்க மாநிலம், மிதுனப்பூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டம்.

மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்டுகளை எதிர்க்கத் திறனற்றதாக உள்ளது என்று கூறி அக்கட்சியிலிருந்து வெளியேறி, 1997-இல் அவர் அமைத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றதால் பிரபலமானது. வாஜ்பாய் அரசில் ரயில்வே, எரிசக்தி துறைகளில் மத்திய அமைச்சராகவும் அவர் சிலகாலம் பணியாற்றினார். பிற்பாடு தே.ஜ.கூட்டணியிலிருந்து அவர் விலகினார்.

மார்க்சிஸ்டுகளின் ரௌடித் தனத்துக்கு எதிராக சீறும் சிங்கமாக அவர் தொடர்ந்து போராடியதன் பலன், வங்க மக்களிடையே பிரதானத் தலைவி ஆனார். அவரை ‘தீதி’ என்று அழைத்து மகிழ்ந்தனர் மேற்கு வக்க மக்கள். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்தது.

அதைத் தொடர்ந்து 2016-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 211 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வென்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.  இதற்கு மமதாவின் அரசியல் தலைமை மட்டுமல்ல, மார்சிஸ்ட்களின் அடக்குமுறைகளும் காரணமாக இருந்தன.

ஆனால், இந்தப் பத்தாண்டுகளில் தனது அடாவடித்தனச் செயல்பாடுகளால், மார்க்சிஸ்டுகளின் முந்தைய ஆட்சியே பரவாயில்லை என்ற எண்ணத்தை மமதா உருவாக்கிவிட்டார். தனது அகங்கார அரசியல் செயல்பாடுகளால், மக்களின் அதிருப்தியை வெகுவாகச் சம்பாதித்துள்ள மமதா, இம்முறை நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சியைக் காக்கப் போராடுகிறார். அவருக்கு புதிய சவாலாக மாபெரும் எழுச்சியுடன் களம் காண்கிறது பாஜக. இத்தேர்தலில் தோல்வி அடைவது தனது கட்சிக்கு இறுதி அத்தியாயம் எழுதிவிடும் என்பதை அவரும் உணர்ந்திருக்கிறார்.

2021 பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவுடன் (இக்கட்சி சென்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது) கூட்டணி அமைத்து 291 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்துக்கு (ஏஜேஎஸ்யூ) ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 293 தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். 

ஐ.எஸ்.எஃப். என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அப்பாஸ் சித்திக்குடன்
கைகோர்த்து நிற்கும் இடதுசாரி, காங்கிரஸ் தலைவர்கள்.

மூன்றாம் அணியாக ’மஹா ஜோட்’ கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி 91 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 137 தொகுதிகளிலும், பிற இடதுசாரிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும், இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்.) 26 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், தீவிர மதவெறி கொண்ட இஸ்லாமிய மதகுருவான அப்பாஸ் சித்திக் நிறுவிய கட்சியின் பெயர்தான் இந்திய மதச்சார்பற்ற முன்னணி என்பது! அதாவது சூடான ஐஸ்கிரீம் போல! அதனுடன் தான் மதச்சார்பின்மையைக் காப்பதாக முழங்கும் காங்கிரஸும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்திருக்கின்றன.

ஒரு காலத்தில் எதிரெதிர்த் துருவங்களில் அரசியல் நடத்தி, மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இம்முறை பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தேர்தல் யுத்தத்தை வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களிலேனும் வென்றாக வேண்டும் என்பதற்காக அவை பழைய பகையை மறந்து கைகோர்த்துள்ளன. தேர்தலில் வைப்புத்தொகையையேனும் பெற வேண்டும் என்பதற்காகவே அவை ஐ.எஸ்.எஃப். கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆனால், இந்த மஹா ஜோட் கூட்டணியை மேற்கு வங்க மக்கள் கண்டுகொள்வதே இல்லை.

இந்த மூன்று அணிகள் தவிர, இந்திய ஒருங்கிணைந்த சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 193 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி 12 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 40 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 294 தொகுதிகளிலும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 13 தொகுதிகளிலும்  தனித்தனியே களம் காண்கின்றன. இவை வாக்குகளை சில தொகுதிகளில் பிரிக்க முடியும், அவ்வளவே.

கடந்த 2016 தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மொத்தம் 44.91 சதவீதம் வாக்குகளுடன் 211 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 12.25 சதவீதம் வாக்குகளுடன் 44 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி 19.75 சதவீத வாக்குகளுடன் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன (அப்போதும் காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன). அந்தத் தேர்தலில் பாஜக 10.16 சதவீதம் வாக்குகளுடன் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தின் மீட்பராக மாறி வரும் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த பேரவைத் தேர்தலில் 10.16 சதவீதம் மட்டுமே வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த பாஜக, 2019 மக்களவைத் தேர்தலின்போது மாபெரும் எழுச்சியைக் கண்டது.  மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 18 மக்களவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் 40.25 சதவீதம். அதன்மூலம், மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதான எதிரியாக பாஜக தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

2019 மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக்கட்சிகள்- காங்கிரஸ் கூட்டணி ஓரிடத்திலும்கூட வெல்லவில்லை. திரிணமூல் காங்கிரஸ் 24 தொகுதிகளில் வென்றது. அந்தத் தேர்தலின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னணி நிலவரத்தின்படி, திரிணமூல் காங்கிரஸ் 164 தொகுதிகளிலும், பாஜக 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முதன்மை பெற்றிருந்தன. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை. அக்கட்சியினர் நடத்திய 33 ஆண்டுகால ஆட்சியின்போது மக்கள் அடைந்த வேதனைகளின் வடுக்களை அவர்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதை, தேர்தல் முடிவுகள் தொடர்ந்து காட்டி வருகின்றன. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகு, இரண்டாமிடத்தை வெகு விரைவில் கைப்பற்றிய பாஜக, தற்போது மமதாவை வீட்டுக்கு அனுப்பும் பணியில் தீவிரமாகப் பாடுபட்டு வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்ற பாஜகவின் வாக்கு வங்கி, தற்போது பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றுள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

காலில் கட்டுடன், இருசக்கர நாற்காலியில் வலம் வரும் மமதா பானர்ஜி.

இம்முறை மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் (டி.எம்.சி.), பாஜகவுக்கும் இடையேதான் நேரடி மோதல் என்பதை மமதாவே ஒப்புக்கொண்டு விட்டார். அவரது தேர்தல் பிரசாரங்களில் பாஜகவை மட்டுமே வசை பாடுகிறார். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவது போல மேற்கு வங்கத்திலும், இந்தப் பேரவைத் தேர்தலை மத்திய அரசின் அதிகார பலத்துக்கும் மாநிலத்தின் சுயமரியாதைக்கும் இடையிலானதாக அவர் கட்டமைக்க முயன்றார். ஆனால், மேற்கு வங்க மக்கள் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

அதேசமயம், மமதாவின் எதேச்சதிகார நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரை விட்டு விலகி பாஜகவில் ஐக்கியமாகும் டி.எம்.சி. கட்சியினரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டதுடன், மம்தாவுக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். சுவேந்து அதிகாரியும் மமதா பானர்ஜியும் நந்திகிராம் தொகுதியில் நேருக்குநேர் மோதுகின்றனர். அங்கு மிகுந்த பின்னடைவில் இருக்கிறார் மாநில முதல்வர் மமதா.

கடந்த 2011-இல் நந்திகிராம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான சிபிஎம் அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல 2008-இல் சிங்கூரில் டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக  பெரும் போராட்டம் வெடித்தது. இந்தக் காலகட்டங்களில் சுவேந்து அதிகாரியுடன் இணைந்து களம் இறங்கி மமதா பானர்ஜி நடத்திய போராட்டங்கள் காரணமாகவே 2011-இல் மேற்கு வங்கத்தில் சிபிஎம் கூட்டணி ஆட்சியைப் பறிகொடுத்தது. அதுவே முதன்முறையாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கும் காரணமாக அமைந்தது.

2016-இல் சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மமதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றதுடன், கட்சியில் மமதாவுக்கு இணையான தலைவராக உருவெடுத்தார். காலப்போக்கில், சுவேந்து அதிகாரியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அவரைப் புறக்கணிக்கத் தொடங்கினார் மமதா. அதன் விளைவாக, அதிருப்தி அடைந்த சுவேந்து அதிகாரி, தேர்தல் நெருங்குகையில் (டிசம்பர் 2020) அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்ததுடன், மேற்கு வங்க பாஜகவின் வெற்றிமுகமாக முன்னிறுத்தப்படுகிறார். இவருக்கு மேற்கு வங்கத்தின் முக்கிய மண்டலமான ஜங்கிள் மஹால் பகுதியில் அதீத செல்வாக்கு உள்ளது.

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இனைந்த டி.எம்.சி.யைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி. உடன் (இடது) கைலாஷ் விஜய் வர்கியா

ஏற்கனவே, மாநிலத் தலைவர்கள் திலீப் கோஷ், முகுல் ராய் போன்றோர் பாஜகவை நன்கு வளர்த்துள்ள சூழலில், கட்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்பவராக சுவேந்து அதிகாரியின் வருகை அமைந்திருக்கிறது. அவருடன் மேலும் பல அமைச்சர்களும் பேரவை உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது மமதாவுக்குப் பேரிடியாக அமைந்திருக்கிறது.

”திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றும்” என்கிறார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா. இவர்தான் மேற்கு வங்கத்தின் பாஜக மேலிடப் பார்வையாளர். அவர் கூறுகையில், ”கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 45 எம்.பி. தொகுதிகளில் 23 தொகுதிகளைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்து உழைத்ததன் பலனாக 18 எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றினோம். அதேபோல, இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் 250 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

முதல்வர் மமதா பானர்ஜியோ, “மத்திய அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமைச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் மீதான பலரது அதிருப்தி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவை காரணமாக மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்கிறார்.

எனினும் அவருக்கு அவர் மீதே நம்பிக்கை இல்லை. எனவேதான்,  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாஜக தொண்டர்களால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி, இடது காலில் கட்டுப் போட்டுக் கொண்டு நாடகம் ஆடுகிறார் மமதா.  இதுதொடர்பாக பாஜக மீதான அவரது புகாரை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு அனுதாப அலையைக் கிளப்ப முயன்றார் மமதா. ஆனால், அவரது இந்த நாடகம், அவல நகைச்சுவைக் காட்சியாக மாறிப்போனது. இந்நிலையில், பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பாஜக இணைப்பு மமதாவுக்கு மேலும் வயிற்றெரிச்சலைக் கிளப்பி இருக்கிறது.

பாஜகவில் ஐக்கியமான பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி.

மேற்கு வங்க முதல்வரின் மேடைப் பேச்சுகளிலும், தமிழகத்தில் திமுகவினரின் பேச்சுகள் போலவே இங்கிதம் இருப்பதில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மிக மோசமாக வசை பாடுவதே மமதாவின் தேர்தல் பிரசாரமாக உள்ளது. தனது ஆட்சிக்காலத்தில் செய்த பணிகளைக் கூறி வாக்கு கேட்க அவரால் முடியவில்லை. எனவேதான், நந்திகிராமில் தனது வெற்றிக்கு  உதவுமாறு பாஜகவைச் சேர்ந்த மாவட்ட பாஜக பொறுப்பாளர்களிடம் மம்தா மன்றாடி இருக்கிறார். அந்தப் பேச்சு அடங்கிய ஒலிப்பதிவு வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல்வர் மமதா தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மோதல் போக்கைக் கடைபிடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், பாஜக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் (கிஸான் சம்மான்) மேற்கு வங்க விவசாயிகளை பயனாளிகளாகச் சேர்க்க விடாமல் மாநில அரசே  முட்டுக்கட்டை போட்டது, கரோனா தொற்றுப் பரவல் சூழலை மோசமாகக் கையாண்டது, அதிகரிக்கும் அரசியல் வன்முறை நிகழ்வுகள் (இதுவரை மேற்கு வங்கத்தில் மட்டும் பாஜக ஆதரவாளர்கள் 140-க்கு மேற்பட்டோர் டி.எம்.சி. குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர்) , சிறுபான்மையினரைத் தாஜா செய்யும் அரசியல் ஆகியவற்றை விமர்சித்து, பாஜக பிரசாரம்  மேற்கொண்டு வருகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரின் கொலைவெறி அரசியலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் சேர்வோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது.இதனால்,பல இடங்களில் பாஜகவிலும் உள்கட்சிச் சிக்கல்கள் தோன்றியுள்ளன. ஏற்கனவே பாஜகவில் உள்ளோருக்கும் புதிய அலையில் கட்சியில் சேர்வோருக்கும் இடையே சில இடங்களில் சுமுகமான சூழல் இல்லை. வேட்பாளர் தேர்வின் போது அந்தச் சிக்கல்கள் சில இடங்களில் எதிரொலித்தன. எனினும், மமதாவின் மமதைக்கு ஒரே தீர்வு, பாஜவின் தலைமை தான் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளதால், இப்போதைக்கு அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர். அதனால், மமதா ஆட்சிக்கு எதிரான அலை வலுவாகவே காணப்படுகிறது.

“தேர்தலில் வென்ற பிறகு மேற்கு வங்க முதல்வர் யார் என்பதை தீர்மானிப்போம்” என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார். அநேகமாக உ.பி, கர்நாடக மாநில மாதிரிகளில் முதல்வருடன் இரு துணை முதல்வர்களை நியமிக்க பாஜக திட்டமிடலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சென்ற தேர்தலில் 211 தொகுதிகளில் வென்ற திரிணமூல் காங்கிரஸ் இம்முறை 50 தொகுதிகளில் வெல்வதே சிரமம் என்கிறார்கள் தேர்தல் அனுபவஸ்தர்கள். எனவேதான் வெளிப்படையான சிறுபான்மையின ஆதரவுப் போக்கை மமதா முன்னிலைப்படுத்தி வருகிறார். ஆனால், அதுவே அவருக்கு மேலும் பாதகமாகி வருகிறது.

மக்களோடு மக்களாக…. மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்

அனைவருக்குமான வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாடு, மத்திய அரசுடன் இணக்கமான போக்கு, நாகரிக அரசியல், வங்க கலாசார மேன்மை ஆகிவற்றை முன்னிலைப்படுத்தும் பாஜகவின் பிரசாரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், அரவிந்த கோஷ், சியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் பிறந்த மண்ணில் நல்ல பலனைத் தரத் துவங்கிவிட்டது.

தேர்தல் காற்று திசை திரும்புவதைப் புரிந்துகொண்ட முதல்வர் மமதா பானர்ஜி, இப்போது பாஜகவை வீழ்த்த மார்க்சிஸ்டுகளும் காங்கிரஸ் கட்சியினரும் தனக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார். இது ஒருவகையில், தேர்தலுக்கு முன்னாகவே தனது தோல்வியை அவர் ஒப்புக் கொண்டதன் அடையாளமே.

ஆனால், மார்க்சிஸ்டுகள், காங்கிரஸ் கட்சியினரில் பலர் ஏற்கனவே பாஜகவில் இணையத் துவங்கி விட்டனர். மமதாவின் மமதை மிகுந்த செயல்களுக்கு ஒரே தடுப்பணை பாஜக என்பதை மேற்கு வங்க மக்களும் உணரத் துவங்கிவிட்டனர். அவரது அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மேற்கு வங்க பாஜக தயாராகி விட்டது.

ஒன்றுபட்ட பாரதத்தின் கலச்சாரச் செழுமை மிக்க மாநிலம் மேற்கு வங்கம் என்பதை நிலைநாட்ட அம்மாநில மக்கள் தயாராகி விட்டதையே, நரேந்திர மோடி, அமித் ஷா, சுவேந்து அதிகாரி, திலீப் கோஷ் ஆகியோருக்கு கூடும் பெருவாரியான மக்கள் கூட்டம் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *