புதிய பொற்காலத்தை நோக்கி – 10

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை.

அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது.

இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன.

மூவேந்தர்களின் காலம், பௌத்தர்களின் காலம், சமணர்களின் காலம், இஸ்லாமியர்களின் காலம், கிறிஸ்தவர்களின் காலம் என பல அதிகார மையங்கள் இந்த 2000 ஆண்டுகளில் ஆட்சி செய்துவந்திருக்கின்றன. கடைநிலை ஜாதியினருடைய வாழ்க்கை பிரிட்டிஷார் சொன்னதுபோல் இழிவானதாக கடினமாகதாகவே இருந்திருந்தால் அதற்கு அவர்களில் யாராவது ஏதேனும் வழி கண்டுபிடித்துச் சொல்லியிருப்பார்கள். கடைநிலை ஜாதியினரும் அவர்களுடன் இணைந்து முயற்சிகள் எடுத்திருப்பார்கள். இப்படி எதுவும் நடந்திருக்கவில்லை என்பதால் கடைநிலை ஜாதியினருடைய வாழ்க்கையில் நிம்மதியான அம்சங்கள் வேறு பல இருந்திருக்கும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கும்.

அப்படியெல்லாம் இல்லை. கடைநிலை ஜாதியினர் காலகாலமாக வேதனையில் உழன்றுதான் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த வேதனைக்கு மூவேந்தர்கள் தொடங்கி, பௌத்தர்கள், சமணர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து ஆதிக்க சக்திகள் மட்டுமல்ல அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு மேலேறி வந்திருக்காத கடைநிலை ஜாதி மக்களுமேதான் காரணம் என்று ஆகும். ஆனால் நிலைமை அவ்வளவு மோசமாக இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

பிராமணர்களுடைய தெருவுக்குள் நுழையவிடவில்லை என்று உரிமைக் குரல் எழுப்பியவர்கள், பிராமணர்களுடைய தெருவுக்குள் பிராமணரல்லாதவர்கள் எதற்காக நுழைய வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கவே இல்லை. இன்றும் நீதிபதிகள் குடியிருப்பு, காவலர் குடியிருப்பு என்றெல்லாம் இருக்கின்றன. எத்தனையோ கேட்டட் கம்யூனிட்டிகள், ஃப்ளாட்கள் இருக்கின்றன. தபால் கொடுக்க, தண்ணீர் கொடுக்க, சமையல் எரிவாயு உருளை கொடுக்க என பணி சார்ந்து தேவை உள்ளவர்கள் மட்டுமே அங்கு சென்று வருகிறார்கள்.

பல கேட்டட் கம்யூனிட்டிகளில் வாசலில் செக்யூரிட்டிகள் இருப்பார்கள். சி.சிடி.வி. கேமரா கண்காணிக்கும். எல்லாரும் இந்தியர்கள். எல்லாரும் தமிழர்கள். எங்கு வேண்டுமானாலும் வருவேன் போவேன் என்று சொல்லமுடியுமா? இப்படியான நடைமுறை சார்ந்து உருவான ஒரு விதிமுறையானது அன்றைய காலத்திலும் இருந்தது. இரு தரப்பினரும் அதைப் புரிந்துகொண்டு வாழ்ந்தனர்.

சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் என்றொரு பரிதாபமான சித்திரத்தை உருவாக்குபவர்கள் புரிந்துகொள்ள அல்லது திட்டமிட்டு மறைக்கும் விஷயம் என்னவென்றால் அந்தத் தெருவில் வசித்தவர்களுக்கு அவர்களுக்கான ஸ்வாமியும் சப்பரமும் இருந்தன. ஒரு ஜாதியின் தெய்வம் இன்னொரு ஜாதியினரின் தெருவுக்குள் செல்லவில்லை. அவ்வளவுதான். ஏன் செல்லவில்லை… ஒரு ஜாதியின் தெய்வத்தின் வழிபாட்டு முறைகளும் பக்தர்களின் சடங்குகளும் இன்னொரு ஜாதியினரிடமிருந்து மாறுபட்டது. எனவே இரு தரப்பும் பரஸ்பரப் புரிதலுடன் அவரவர் இடத்தில் அவரவருடைய ஸ்வாமியை வணங்கி நிம்மதியாக வாழ்ந்தனர்.

அனைவரையும் அர்ச்சகராக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள் அனைத்து ஜாதியினருமே காலகாலமாகவே அர்சகர்களாக இருந்து வருகிறார்கள் என்ற உண்மையை மறைத்தே பேசுகிறார்கள்.  அவர்களைப் பொறுத்தவரையில் பிராமணர்களின் அக்ரகாரம் தான் ஒரே தெரு. அவர்களுடைய தெய்வம் தான் ஒரே தெய்வம். அவர்களுடைய அர்ச்சகத் தொழில்தான் ஒரே தொழில். அவர்களுடைய தொழில் கல்வியான வேத கல்விதான் ஒரே கல்வி. இவையெல்லாம் அனைவருக்கும் பகிரப்படவில்லை என்றதும் மற்றவர்களிடம் எதுவுமே இருந்திருக்கவில்லை என்று போராட ஆரம்பித்துவிட்டார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் பிராமணர்கள் சம பந்தியில் அமர வைத்து சாப்பாடு தரவில்லை. எனவே மற்றவர்கள் எல்லாம் பட்டினியாகவே இருந்தார்கள் என்று சொல்வது போன்றது. அவரவருக்கான தொழில், கலை, இயற்கை வளம், இடம், உரிமை, அதிகாரம் எல்லாம் இருக்கவே செய்தன.

கொல்லர்களுடைய பட்டறைப் பகுதியானது அவர்களுடைய ஆளுகைக்குட்பட்டதாகவே இருந்தது. மீனவக் குடியிருப்புகள் மீனவர்களின் செல்வாக்கு நிறைந்ததாக இருந்தது. குயவர்களின் பூமி அவர்களுடையதாகவே இருந்தது. ஒவ்வொரு கிராமத்துக்கும் சேவைப்பணி செய்யும் வண்ணார், வெட்டியார், தோல் கருவி செய்பவர், முடி திருத்துபவர் போன்றவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். எனவே அரசியல் செல்வாக்கு, சமூக அந்தஸ்து தொடர்பாக சற்று பின்தங்கிய நிலையில் இருந்திருக்கிறார்கள். இது மிகவும் இயல்பான விஷயம் தான்.

இன்று தலித்கள்-பட்டியல் ஜாதியினர் என்று வெளியில் இருந்து ஒரு செயற்கையான அடையாளம் உருவாக்கப்பட்டிருப்பதுபோல் தமக்குள் ஒரு கூட்டுறவை முற்காலத்தில் வலிந்து உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. தமது தொழில் சார்ந்து, தமது முன்னோர்களின் பாரம்பரியம் சார்ந்து தம்மைத் தனித் தனியாகவே அடையாளப்படுத்திக்கொண்டு தமக்கான அகமண முறை, குல விருந்து முறை என்று இருந்து வந்திருக்கிறார்கள். இன்று உலகின் வல்லாதிக்க மதவாத சக்திகளாக இஸ்லாமும் கிறிஸ்தவமும் அப்படி ஒரு போலியான ஒற்றுமையை உருவாக்கி ஜாதி இந்துக்கள் தனி என்று ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். அதற்குத் தோதாகவே கடந்த கால இடவெளிகளைப் பெரிதுபடுத்தியும் வேதனைகளை மிகைப்படுத்தியும் பேசிவருகிறார்கள்.  

நில உடமை சமூகத்தில் பட்டியல் ஜாதியினருக்கு நிலம் இருந்திருக்கவில்லை என்பது மிகவும் தவறான குற்றச்சாட்டு. இந்தியாவில் இருந்த அனைத்து ஜாதியினருக்குமே நில உடமை இருந்திருக்கிறது. அப்படியே நில உடமை என்பது பெரிய அளவில் இல்லையென்று சொன்னாலும் குத்தகைதாரர் என பயிர் செய்யும் வாய்ப்பு இருந்திருக்கிறது. அது பாதி உடமையாளர் என்று சொல்லும் அளவுக்கு கௌரவமானது. பொருளாதார லாபம் கொண்டது. அறுவடைக்காலத்தில் அனைத்து ஜாதியினருமே அதுசார்ந்த வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவையெல்லாம் இவர்களுடைய குலத் தொழில் அல்லாமல் கூடுதல் வருமானத்துக்கான வழியாக இருந்திருக்கின்றன. குலத் தொழில் என்பது நிரந்தர வருமானத்துக்கான வழியாக இருந்துவந்திருக்கிறது.

நம் தேசத்தில் நிலத்தின் மீதான வரி என்பது பிரிட்டிஷார் விதித்ததுபோல் ஐம்பது சதவிகித வரி என்பது ஒரு காலத்திலும் இருந்திருக்கவில்லை. பத்தில் இருந்து இருபதுவரையே வரி விதிக்கப்பட்டுள்ளன. வறட்சி, வெள்ளம் போன்ற காலங்களில் வரி விலக்கும் தரப்பட்டுள்ளது. இவையெல்லாம் நிலம் இருந்தவர்களுக்கும் நிலம் இல்லாதவர்களுக்கும் போதிய தானியங்கள் கிடைக்க வழி செய்திருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் பதிவாகியிருக்கும் பஞ்சங்கள் எல்லாமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கினால் நடந்தவை என்பதற்கான ஆதாரங்களை பிரிட்டிஷாரே பதிவுசெய்தும் வைத்திருக்கிறார்கள்.    

வேதங்களைப் படிக்கவிடவில்லை என்பதை கல்வி கற்கவே விடவில்லை என்று திரித்தார்கள். பிராமணர்களின் தொழிலுக்கான கல்வி வேத கல்வி. எப்படி தச்சர் தனது வேலையைப் பிற ஜாதியினருக்குக் கற்றுத் தரவில்லையோ எப்படி வணிகர் வியாபார நுணுக்கங்களைப் பிற ஜாதியினருடன் பகிர்ந்துகொண்டிருக்க வில்லையோ எப்படி ஒரு மீனவர் தனது தொழில் வெளியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவில்லையோ அதுபோலவே பிராமணர்களும் தமது தொழிலுக்கு ஆதாரமானவற்றைப் பிறருக்குக் கற்றுத் தரவில்லை. இந்துக்களுக்கு ஏதோ வேதம் ஓதும் தொழில்/கல்வி மட்டுமே தெரிந்திருந்த்துபோல் எடுத்துக்கொண்டு அதைக் கற்றுத் தராத்தால் கல்வியே தரப்படவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொரு ஜாதியும் தத்தமது தொழிலில், கலையில் உன்னதத்தை எட்டியிருந்த விவரம் புரிந்துகொள்ளப் படாமலேயே போயிற்று.

2000 ஆண்டுகளாக எங்களைப் படிக்கவிடவில்லை என்று திராவிட இயக்கத்தினர் கூக்குரலிட்டபோது தமிழகம் முழுவதிலும் இருக்கும் கோவில்களை எடுத்துக்காட்டி இவற்றையெல்லாம் பிராமணர்களா கட்டினார்கள். கல்வி மற்றவர்களுக்குத் தரப்பட்டிருக்கவில்லை யென்றால் இந்த கலைப் பொக்கிஷங்களை, கோவில்களை எப்படிக் கட்டியிருக்கமுடியும் என்று ஒருவருமே கேட்கவே இல்லை. கடல் கடந்து வாணிபத்தில் கோலோச்சியது எப்படி என்று ஒருவரும் யோசித்து பார்க்கவில்லை. சிலம்பக் கலையில் போர்க்கலையில் எப்படிச் சிறந்து விளங்கினார்கள் என்பதை யோசித்துப் பார்க்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் வேதங்களில் என்ன விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தனவோ அவையே இதிகாசங்களில் இடம்பெற்றிருந்தன. இதிகாசங்கள் எல்லாம் எல்லா ஜாதியினரையும் இசை, பாடல், நாடகம், நடனம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு என எண்ணற்ற வடிவங்களில் சென்று சேர்ந்திருந்தன. வேதத்தைப் படிப்பதென்பது கரும்பை அப்படியே கடித்துச் சாப்பிடுவதுபோன்றது. கலை வடிவங்களின் மூலம் அந்த கருத்துகளைப் புரிந்துகொள்வதென்பது கரும்புச் சாறை அருந்துவதைப் போன்றது. கரும்புச் சாறை அருந்திய குழந்தை எனக்கு முழுக் கரும்பைக்  கடிக்கக் கொடுக்கவே இல்லை என்ன கொடுமை என்று தரையில் விழுந்து புரண்டு அழுதால் எப்படி இருக்குமோ அப்படித்தான் வேதங்களைப் படிக்கவிடவில்லை என்று புலம்புவதும் இருக்கிறது.

(தொடரும்)

5 Replies to “புதிய பொற்காலத்தை நோக்கி – 10”

  1. இந்தக் கட்டுரையில் இரண்டு பாரா படிப்பதற்குள் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்ஹிந்து தளத்தின் ஆசிரியர்களாக ஹரன் பிரசன்னா, ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் எல்லாரும் பணியாற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வரிகளை தமிழ் ஹிந்து தளம் ஏற்கிறதா?

    // கடைநிலை ஜாதியினருடைய வாழ்க்கை பிரிட்டிஷார் சொன்னதுபோல் இழிவானதாக கடினமாகதாகவே இருந்திருந்தால் அதற்கு அவர்களில் யாராவது ஏதேனும் வழி கண்டுபிடித்துச் சொல்லியிருப்பார்கள். கடைநிலை ஜாதியினரும் அவர்களுடன் இணைந்து முயற்சிகள் எடுத்திருப்பார்கள். இப்படி எதுவும் நடந்திருக்கவில்லை என்பதால் கடைநிலை ஜாதியினருடைய வாழ்க்கையில் நிம்மதியான அம்சங்கள் வேறு பல இருந்திருக்கும் … //

    // பிராமணர்களுடைய தெருவுக்குள் பிராமணரல்லாதவர்கள் எதற்காக நுழைய வேண்டும்… //

    அடுத்தது என்ன? விதவைகள் வாழ்க்கை கடினமாக இருந்திருந்தால் – இந்த …ஆல் விகுதி மிக முக்கியம் – அதற்கு விதவைகள் ஏதாவது முயற்சி எடுத்திருப்பார்கள். அப்படி எதுவும் எடுக்கவில்லை, அதனால் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியோ நிம்மதி! ஏழெட்டு வயதிலேயே திருமணம் செய்வதால் கஷ்டம் ஏற்பட்டிருந்தால் அந்த ஏழெட்டு வயது சிறுவர் சிறுமியர் அதைத் தடுக்க முயற்சி எடுத்திருப்பார்கள். அப்படி எதுவும் இல்லை, அதனால் நிம்மதியோ நிம்மதி!

    உண்மையிலேயே தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாசிரியர்கள் இப்படித்தான் நினைக்கிறீர்கள் என்றால் இந்தத் தளத்துக்கு ஒரேயடியாக கும்பிடு போட்டுவிடலாம். தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்!

  2. அன்புள்ள ஆர்.வி. அவர்களுக்கு,

    இத்தொடரின் ஆசிரியர் B.R.மகாதேவன் இந்த இணையதளத்தில் பல பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவருபவர். இத்தொடரின் ஒட்டுமொத்த கருத்தாக்கமும் இணையதளத்தின் ஆதர்சங்களுக்கு இயைந்தபடியே உள்ளது. மற்றபடி சில குறிபிட்ட வாக்கியங்களை எடுத்துப் போட்டு இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பொருளில்லை என்று கருதுகிறோம். அவை கட்டுரையாசிரியர் தனது ஒட்டுமொத்த விவாதத்தின் போக்கில் உருவாக்கிச் செல்லும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே. அவை இந்த இணையதளத்தின் “கொள்கைகள்” அல்ல.

    “தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் அனைத்துப் படைப்புக்களுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தமிழ்ஹிந்து தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது. கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிமுகம் பகுதியில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.

    தங்கள் கருத்துக்கு நன்றி.

  3. தமிழ் ஹிந்து தளம் ஃபேஸ்புக் அல்ல. கட்டுரைகள் ஆசிரியர் குழுவினரின் ஒப்புதலுக்கு பின்பே பதிக்கப்படுகின்றன. பதிவில் உள்ள வாக்கியங்களுக்கு உங்கள் ஒப்புதல் உள்ளதா என்று நான் கேட்பதே சம்பிரதாயத்துக்குத்தான், ஒரு வேளை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்களோ என்ற நப்பாசையில்தான். “கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்கிறீர்கள். அவர்கள் பொறுப்பறியாமல் எழுதினால் என்ன செய்வதாக உத்தேசம்? எங்கள் பிரச்சினை அல்ல என்று கை கழுவிவிடுவது மட்டுமேவா?

    பிராமணர் தெருவில் அபிராமணர் ஏன் வர வேண்டும் போன்ற எண்ணங்களில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், இந்த் மாதிரி கருத்துக்களைக் கண்டு உங்களுக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை என்றால், இதைப் பற்றி கேட்கப்படும் கேள்விகளில் உங்களைப் பொறுத்த வரை பொருளே இல்லை என்றால் – வளர்த்துவானேன், தீண்டாமையில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதுதான் உங்கள் நிலை என்றால் அதை வெளிப்படையாக சொல்லும் தைரியத்தையாவது எதிர்பார்க்கிறேன்.

  4. கடந்த கால துயரங்கள் குறித்து அதை அனுபவித்த ஒருவர் வந்து கேள்விகேட்டால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அதை அவரிடம் நியாயப்படுத்திப் பேசவே முடியாது. செய்யவும் மாட்டேன் (என் தரப்பு என்ற வகையில் சொல்கிறேன்].
    அதே நேரம் அரசியல்ரீதியாக அதை எடுத்துகொண்டு விவாதிக்கவரும் ஒருவரிடம் நிச்சயம் தர்க்க ரீதியாக பதில் கேள்விகள் கேட்பதும் நம் தரப்பு நியாயத்தை-எதிர் தரப்பு பிழைகளைச் சொல்லிக் காட்டத்தான் வேண்டும்.
    என்னை ஏன் மலம் அள்ள வைத்தீர்கள் என்று என்று மலம் அள்ளிய வாளியுடன் ஒருவர் வந்து நின்று கேட்டால் அவரிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
    ஒரு அரசியல் போராளி இந்துமதம் மலம் அள்ளவைத்தது என்று பழிக்கும்போது உலகம் முழுவதும் அந்த விஷயம் எப்படி இருந்ததுஎன்பது தொடங்கி சம்பந்தப்பட்டவர்கள் அதை ஏன் மாற்ற முயற்சி செய்யவில்லை என்பதுவரை கேட்கத்தான் வேண்டும்.
    அது போலிப் போராளிக்கான பதில் மட்டுமே. பாதிக்கப்பட்டவருக்கான பதில் அல்ல.

  5. அன்புள்ள மஹாதேவன்,

    இது தவறு என்று நீங்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்வதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அப்படி நீங்கள் உணரும்பட்சத்தில் எனது வார்த்தைகள் எல்லைகளை மீறிவிட்டனவோ என்று சந்தேகமாக இருக்கிறது – குறிப்பாக தீண்டாமை பற்றி. அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.

    முன்னோர் செய்த தவறுக்கு நானும் நீங்களும் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டோம். நாம் செய்யும் தவறுகளுக்கு நம் சந்ததியினரும் பொறுப்பில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா. அப்படி இருக்கும்போது நீங்கள் இப்படி வலிந்து சமாதானங்கள் சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? தீண்டாமை மதக் கோட்பாடு அல்ல, சமூக நடைமுறை என்று வாதிடுங்கள். சமூக நடைமுறையாகவே இருந்தாலும் ஹிந்து மதம் தன்னை மீண்டும் மீண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்பது வரலாறு, அப்படி புதுப்பித்துக் கொள்வதின் ஒரு பகுதியாக தீண்டாமை என்ற சமூக நடைமுறைக்கு மத அங்கீகாரம் இருந்தால் அதையும் நிராகரிக்கிறது என்று சொல்லுங்கள், நியாயம். தாமஸ் ஜெஃபர்ஸன் “All men are created equal” என்றுதான் எழுதினார். யாரும் ஜெஃபர்ஸன் பெண்களை கண்டு கொள்ளாததை நியாயப்படுத்துவதில்லை. ஆம் அன்று அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்றுதான் மேலே போகிறார்கள். பல நூறு ஆண்டுகள் முன்னால் நடந்த அநீதிகளை இன்றும் ஒத்துக் கொள்ள மறுக்கும் ஸ்தாபனம் – எனக்குத் தெரிந்த வரையில் – வாடிகன் ஒன்றுதான். வாடிகனைத்தான் உங்கள் முன்மாதிரியாகக் கொள்ள விரும்புகிறீர்களா?

    அதிலும் “எதிர்தரப்பினருக்கு” ஒரு வாதம், பாதிக்கப்பட்டவருக்கு அது பொருந்தாது என்கிறீர்கள். கேட்பவரைப் பொறுத்தா உண்மை நிர்ணயிக்கப்படுகிறது? தீண்டாமை வரலாற்று உண்மை. திராவிட இயக்கத்தினர் அசட்டுத்தனமாக நீட்டி முழக்குவதாலும், கிறிஸ்துவ பாதிரிகள் மதமாற்றப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதாலும் அந்த உண்மை எப்படி மாறும்? ஆம், தவறுதான், திருத்திக் கொண்டே இருக்கிறோம் என்று சொல்வதல்லவா நேர்மை (integrity)? அதிலும் தமிழ் ஹிந்து தளத்தில் இப்படி எல்லாம் spin செய்வது உங்கள் “எதிர்தரப்பினரை” சென்றடையப் போவதில்லை, கிறிஸ்துவ பாதிரிகள் தமிழ் ஹிந்து தளத்தைப் படிக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா என்ன?

    அதிலும் “பிராமணர் தெருவில் அபிராமணர் ஏன் போக வேண்டும்” மாதிரி கேள்விகளின் அபாயத்தை, இந்த மாதிரி கருத்துக்கள் தீண்டாமையை ஆதரிக்கின்றன என்று பொருள் கொள்ள முடியும் என்பதை நீங்கள் உணரவில்லையா? அபிராமணர் தெருவில் பிராமணர் போவது தடை செய்யப்படவில்லையே, தண்டனைகள் அபிராமணருக்கு மட்டும்தானா என்று உங்கள் “எதிர்தரப்பினர்” கேள்வி கேட்க மாட்டார்களா என்ன? நீங்களே எடுத்துக் கொடுப்பதில் என்ன பயன்?

    வளர்த்துவானேன்? உண்மை எதிரில் இருப்பவரைப் பொறுத்து மாறுவதில்லை. அப்படி மாற்ற நினைக்கும்போதுதான் இந்த மாதிரி அபாயமான கேள்விகள் வந்து விழுந்துவிடுகின்றன என்று தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *