புதிய பொற்காலத்தை நோக்கி – 11

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

முந்தைய பதிவுகளை படிக்க

உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஒரு தொழிலைக் கற்பதென்றால் அந்தத் தொழில் நிபுணர்களிடம் உதவியாளராக இருந்துமட்டுமே கற்க முடிந்தது. ஒரு தொழிலை சமூகத்தின் பிறர் கற்றுக்கொள்வதைவிட அந்தத் தொழில் நிபுணரின் குழந்தைகளும் நெருங்கிய உறவினர்களும்  கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் வசதியும் மிகுதியாக இருந்ததால் தொழில் கல்விகள் மெதுவாக பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகப் பரிணமித்தன. அதுவே காலப்போக்கில் குலக் கல்வியாகப் பரிணமித்தது.

அதோடு, இந்தக் காலகட்டத்தில் தெய்வ நம்பிக்கையும் பக்தியும் மிகுதியாக இருந்ததால் எந்தவொரு தொழிலைத் தொடங்கும் முன்பும் ஒரு தொழில் நிபுணர் தனது குலதெய்வத்தை வணங்கிய பிறகே தொடங்கும் நிலை இருந்தது. வண்ணார் தன் குல தெய்வத்தை வணங்கித் தொடங்கும் வேலையை தச்சர் குலத்தில் பிறந்த ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர் தனது தச்சர் குல தெய்வத்துக்கு பதிலாக வண்ணார் குல தெய்வத்தை வணங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஒவ்வொருவரும் தத்தமது குல தெய்வத்துடன் கொண்டிருந்த நெருக்கமானது மிக மிக வலுவானது. தாய் தந்தையரைப் போன்ற நெருக்கம், மதிப்பு, பாசம், பக்தி கொண்டதாக இருந்தது. சில நேரங்களில் பெற்றோரைவிட குலதெய்வத்துடனான பந்தம் மிக வலுவானதாக இருந்திருக்கிறது. எனவே, ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வதற்காக இன்னொரு குலத்தினரின் தெய்வத்தை வணங்க யாரும் அன்று தயாராக இருந்திருக்கவில்லை. தனது குலதெய்வத்தை பக்திபூர்வமாக வணங்குபவர்களுக்கு மட்டுமே தன்னுடைய குலத் தொழிலை ஒருவர் கற்றுக்கொடுக்க தயாராகவும் இருந்தார் இவற்றிலெல்லாம் எந்த ஒடுக்குமுறையோ சதியோ இருந்திருக்கவில்லை.

இந்து மதம் எல்லாத் தொழில்களைச் செய்பவர்களும் வணங்கும் தெய்வமாக விநாயகரை பிராமணர் மூலம் நிலைநிறுத்திய பின்னரே பல தொழில் செய்பவர்கள் தொழில் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் கூடிக் கலக்க வழி பிறந்தது. அப்படியான இணைப்பு தெய்வம் உருவாகியிராத காலகட்டத்தில் ஒவ்வொரு தொழிலும் பிறப்பு, ரத்த உறவு, ஒரே குல தெய்வத்தைத் தொழுபவர்களுக்கு மட்டுமே என்பதாக நிலைபெற்றது. இதில் எந்த சதித்திட்டமும் கிடையாது. ஆதிக்க சாதி நலன் என்பதெல்லாம் இருந்திருக்கவே இல்லை. ஆதிக்க சாதிகளான பிராமண, சத்ரிய, வைசிய சாதிகளின் நலனுக்காக இது உருவாக்கப்பட்டிருந்ததென்றால், பிற தொழில்களிலாவது அந்தக் கலப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். சுடுகாடு காக்கும் ஒருவர் தோல் தொழில் செய்யும் சக்கிலியருடன் தொழில் பரிமாற்றம் வைத்துக்கொள்ளாததில் ஆதிக்க ஜாதி  நலன் எங்கே இருக்கிறது. நிபுணர்களிடம் பொறுப்பை ஒப்படை (லீவ் இட் டு எக்ஸ்பர்ட்ஸ்) என்ற இன்றைய தாரக மந்திரமே அன்று குலக் கல்வியை உருவாக்கி நிலை நிறுத்தியிருக்கிறது. அதில் தொழில் நேர்த்திக்குத்தான் முன்னுரிமை தரப்பட்டதே தவிர யாரையும் யாரும் ஒடுக்கும் எண்ணமெல்லாம் இருந்திருக்கவில்லை.

இன்றும்கூட ஒரு விஷயத்தைச் சொல்லவோ செய்யவோ அனுபவமும் நிபுணத்துவமும் தேவை என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பத்திரிகையில் பொருளாதாரம் பற்றி எழுத வேண்டுமென்றால் எழுதுபவருக்கு அது சார்ந்த கல்வி, அனுபவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எந்தப் பல்கலையில் பொருளாதாரப் பட்டம் பெற்றவர், எந்த உயர் நிறுவனத்தில், எந்த உயர் பதவியை வகித்தவர், எந்தக் கட்சியின் பொருளாதாரப் பிரிவுக்கு ஆலோசகராக இருப்பவர் என்பதையெல்லாம் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் நிபுணத்துவமானது அந்தத் தொழில் குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று நம்பினார்கள். அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. உண்மையும் அதுவே. ஒருவர் தன் வீட்டுக்கு ஒரு நாற்காலி செய்யவேண்டுமென்றால் தச்சர் குலத்தில் பிறந்தவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பார். வண்ணார் குலத்தில் பிறந்தவர் உளியைத் தூக்கிக்கொண்டு வந்தால் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று அனுப்பிவிடுவார்கள். இதில் வண்ணார் மேலான இழிவான பார்வையோஒடுக்குதலோ எதுவுமே கிடையாது.

இப்போது ஒரு வண்ணாரை தச்சர் வேலையைப் படிக்க விடாமல் தடுத்தது யார் என்ற கேள்விக்கும் ஏன் அப்படியான ஸ்பெஷலைஸ்ட் தொழில் பிரிவு உருவானது என்பதற்குமேலே சொன்ன காரணங்களை நிதானமாக யோசித்துப் பார்க்கவேண்டும். 

ஏட்டுக்கல்வி, ஏடு சாரா கல்வி என்ற இரண்டுவகைக் கல்வியின் வழிமுறையும் இலக்கும் வேறு வேறு என்பதால் ஒவ்வொரு சமூகமும் தமக்கு உகந்த வழிகளில் தமது கல்வி அறிவைக் கைமாற்றித் தந்துள்ளன. ஆன்மிக, மதக் கல்விகள் ஏட்டில் எழுதப்பட்டன. பிற தொழில்களின் கல்வியானது செய்முறை மூலமே கைமாற்றித் தரப்பட்டுள்ளன. எனவே வாழ்க்கை குறித்த லௌகீகப் பார்வையை, லௌகீக ஆதாயங்களை இலக்காகக் கொண்டவருக்கு ஆன்மிகக் கல்வி ஏன் தரப்படவில்லை என்ற கேள்வி அடிப்படையிலேயே அர்த்தமற்றது. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உயரிய வாழ்க்கை மதிப்பீடுகளே இருவகைக் கல்வியின் அடிப்படை அம்சமாகவும் இருந்திருக்கின்றன.

ஏட்டுக்கல்வியில் பிரதானமாக இருந்த வேத வேதாந்தப் பாடங்களே ஏட்டுக் கல்வி சாராத புராண, நாடக,கூத்து வகைக் கல்வியிலும் அடிநாதமாக இருந்திருக்கின்றன. சாதி சார்ந்த பிரிவுகளுக்கு எல்லாம் தாண்டிச் செயல்பட்ட வர்ணப் பார்வையே வேதங்களில் பிரதானமாக இருந்ததுபோலவே புராணங்களிலும் சாதி கடந்த பார்வையே இருந்திருக்கின்றன. வேடர் குலத்தைச் சேர்ந்த குகனைச் சகோதரராகவும், வன மூதாட்டி சபரி ருசி பார்த்துக் கொடுத்த  மாங்கனியை விரும்பி ஏற்றுக்கொண்டதும், கண்ணப்ப நாயனாருக்கு காட்சியளித்ததும் என புராண கதைகளில் எல்லாம் சாதி கடந்த சமத்துவமே பிரதிபலிக்கின்றன. சம்புகவதம், ஏகலைவன் விரல் துண்டிப்பு போன்றவை விதிவிலக்குகளே. இல்லையென்றால் தேசம் முழுவதும் ராமர் பாதங்களும், சீதா குன்றுகளும் நதியெல்லாம் கங்கையெனவும் மலையெல்லாம் கயிலை எனவும் எப்படி இருந்திருக்க முடியும்?

குல்லக்கல்வி என்பது பிராமணர்களால் உருவாக்கப்பட்டதல்ல. ஒவ்வொரு தொழிலும் அந்தந்த ஜாதியினருக்கு மட்டுமே கற்றுத் தரப்பட்டதுபோல் பிராமணர்களின் தொழில் சார்ந்த கல்வியும் பிராமணர்களுக்கு மட்டுமே தரப்பட்டது. வேத வேதாந்தங்கள் மட்டுமேயா கல்வி… வேத வேதாந்தங்கள் மட்டுமா அனைவருக்கும் கற்றுத் தரப்படவில்லை… தச்சு வேலையும் அனைவருக்கும் கற்றுத் தரப்படவில்லை… வணிகமும் அனைவருக்கும் கற்றுத் தரப்படவில்லை… ஆட்சி நிர்வாகமும் அனைவருக்கும் தரப்பட்டிருக்கவில்லை… போர்க்கலையும் அனைவருக்கும் கற்றுத் தரப்படவில்லை… துணி துவைக்கும் தொழிலும் அனைவருக்கும் கற்றுத் தரப்படவில்லை…  தோல் தொழிலும் அனைவருக்கும் கற்றுத் தரப்பட்டிருக்கவில்லை. எனவே, யாருக்கும் எதுவும் மறுக்கப்பட்டிருக்கவில்லை. இன்னொரு வகையில் பார்த்தால் எல்லாமே எல்லாருக்கும் மறுக்கவும் பட்டிருந்தது.

அடுத்ததாக, ஜாதி  சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே நன்மை பயப்பதாக எதுவும் இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் முன்னெடுத்த யாகங்கள் என்பவை தட்சணையை இடுப்பில் முடியும் பிராமணர்களுக்கு மட்டுமல்ல; யாக குண்டத்தின் செங்கல்களைச் செய்யும் ஜாதியில் ஆரம்பித்து யாகத்துக்கான நெய் தயாரித்துக் கொடுக்கும் ஜாதி, யாக கால  உடைகள், துணிகள் நெய்யும் ஜாதி, யாக தானியங்கள் விளைவிக்கும் ஜாதிகள், பூ, இலை, காய் பயிரிடும் ஜாதிகள், யாக பாத்திரங்கள், கமண்டலங்கள், மர அகப்பைகள் செய்யும் ஜாதிகள், யாக சாலைக்கு மக்களைக் கொண்டு சேர்க்கும் வாகனங்களை/பரிசல்களை ஓட்டும் சாதிகள் என அனைத்து ஜாதிகளின் பங்களிப்புகளோடு அனைத்து ஜாதி உற்பத்தியின் நுகர்வுக்கான வாழ்வாதாரத்துக்கான பெரு நிகழ்வாகவே நடந்தேறியிருக்கின்றன.

ஒரு பிராமண ஜோதிடர் தன்னிடம் ஜாதகத்துடன் வரும் ஒருவரிடம் இன்ன தோஷத்துக்கு இன்ன கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வரவேண்டும் என்று பரிகாரம் சொல்கிறரென்றால் அந்த கோவில் அமைந்திருக்கும் ஊரின் புனித யாத்திரை வருமானம், குதிரை வண்டி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம், வழிகாட்டிகளின் வாழ்வாதாரம், கோவில் வாசலில் பூஜைப் பொருட்கள் விற்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம், உணவு விடுதிகளின் வாழ்வாதாரம் என பல்வேறு தொழில்களைச் செய்யும் நபர்களின் அதாவது பல்வேறு சாதியினரின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் ஒட்டு மொத்த சமூக நலன் சார்ந்த செயலாகவே ஆகிறது.

ஒரு ஜோதிடர் என்பவர் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கான தீர்வு தேடித் தன்னை அணுகுபவர்களுக்கு தேர்ந்த மன நல மருத்துவர் போல் நம்பிக்கையூட்டி அனுப்புகிறார். தொழில் தொடங்க வருபவருக்கு தேர்ந்தவர்த்தக நிபுணர் தரும் நம்பிக்கையைவிட வலுவான நம்பிக்கையைக் கொடுத்து வெற்றிக்கு வழிவகுக்கிறார். நல்ல நேரத்தில், இறைவனை வணங்கிவிட்டுத் தொடங்கும் வேலை நிச்சயம் வெற்றிபெறும் என்று ஜோதிடர் சொல்லும் உறுதிமொழியே அந்த தொழில்முனைவரைத் துணிந்து வேலையில் ஈடுபட வைத்து வெற்றிக்கு வழிவகுக்கிறது.

கருவறைக்குள் பிராமணர்கள் மட்டுமே நுழைந்து பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதற்கு பிராமண நலனோ பிற ஜாதி வெறுப்போ காரணம் அல்ல; நிபுணர்களிடம் பொறுப்பை ஒப்படை  என்ற செய் நேர்த்தி அணுகுமுறையே நிறைந்திருக்கிறது. ஏனென்றால், பிராமணர்களிலும் எல்லாரும் கருவறைக்குள் நுழைந்துவிட முடியாது; பிராமணரல்லாத பூசாரிகள் இருந்த கோவில்களில் அந்த நிபுணர்களே அங்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, ஜாதி இங்கு இரண்டாம் பட்சம் தான். செய் நேர்த்திதான் முக்கியம். இந்தப் புரிதல் ஜாதி சமூக மக்களுக்கு இருந்ததால்தான் கருவறைக்குள் ஏன் எல்லாரையும் நுழைய விடவில்லை என்ற அசட்டு சமத்துவ முழக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதுபோல் கடந்த கால மன்னர்கள் (இவர்களில் பெரும்பாலானோர் இன்று சூத்திரர் என்று அடையாளப்படுத்தப்படும் வகுப்பைச் சேர்ந்தவர்களே) பிராமணர்களுக்கு மட்டுமே தான தர்மங்கள் கொடுக்கவில்லை. வெற்றிலை மடித்துக் கொடுப்பவர், தோல் கருவிகள் செய்து கொடுப்பவர், படை வீரர்கள், நடன மங்கைகள் என பல்வேறு ஜாதியினருக்கும் கொடுத்திருக்கிறார்கள். நீர்ப்பாசன வசதிகளில் உச்சத்தை எட்டிய சோழ சாம்ராஜ்ஜிய மன்னர்கள் பிராமணர்களுக்காக அதைச் செய்து தந்திருக்கவில்லை. பிராமணர்களிடம் நிலம் இருந்தது உண்மைதான். ஆனால், 70- 80% நிலம் இடைநிலை சாதிகள் வசம் தான் இருந்தன. எனவே விவசாயம் பிரதானமாக இருந்த காலகட்டத்தில் விவசாய நிலங்கள் பெருமளவுக்கு பிராமணரல்லாத ஜாதிகளிடம் இருந்த நிலையில் ஒரு மன்னர்  வெட்டிய குளங்களும் ஏரிகளும் அணைகளும் அனைத்து சமூகத்துக்குமானதாகவே இருந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொரு ஜாதியும் தமக்கான தெய்வம், தமக்கான வழிபாடு, தமது முன்னோர் குறித்த பெருமிதம், தமது ஜாதி குறித்த பெருமிதம், தமக்கான தொழில் என்றே வாழ்ந்திருக்கிறார்கள். எப்போது இந்தப் பரஸ்பர புரிதலுடன் உருவான வாழ்க்கை முறையை அடக்குமுறை என்றும் சொல்லி சமத்துவத்தைக் கொண்டுவருகிறேன் என்றும்  வம்படியாகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ அன்றிலிருந்துதான் மோதல்கள் வெடித்தன. அந்த வரலாறுதான் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு முந்தைய காலங்களிலும் அப்படியான வன்முறை இருந்ததாகவே ஒரு பொய் சித்திரம் உருவாக்கப்பட்டுவிட்டது.

ஜாதிய ஒடுக்குமுறை சார்ந்து நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்று மஹர் போராட்டம். பொதுக்குளத்தில் நீர் அள்ளிக் குடித்த நிகழ்வு. அது இந்திய ஜாதி சமூகத்தின் கொடூரத்துக்குக் குறியீட்டு வடிவமாக இருக்கக்கூடிய போராட்டம். அது தொடர்பாக நாம் கவனிக்கத் தவறிய உண்மைகள் மூன்று. முதலாவதாக, அந்தக் குளம் மஹர்களின் குடியிருப்பில் இருந்து தொலைவில் இருந்தது. அன்றாடம் அவர்கள் சென்றுவரும் பகுதியாக இருந்திருக்கவில்லை (அந்தப் போராட்டத்துக்குப் பின்னரும் யாரும் அங்கு நீர் அள்ளச் அதிகம் செல்லவும் இல்லை).

இரண்டாவதாக, மஹர்களுக்கு அவர்களுடைய வாழிடத்துக்கு அருகில் அவர்களுக்கான நீர்நிலைகள் இருந்தன.

மூன்றாவதாக, பொதுக் குளத்து நீரை எடுத்து யாரும் குடிக்க, சமைக்கப் பயன்படுத்துவதில்லை.

மஹர்களுக்கு குடிக்கவே நீர் இல்லை. ஜாதி இந்துக்கள் தமது குளத்தில் நீர் அள்ளவே விடவில்லை என்று ஏதோ மஹர்கள் தாகத்தால் தவித்துக்கொண்டே இருந்தது போலவும் மழை பெய்தால் மட்டுமே அவர்களுக்கு தன்ணீர் கிடைக்கும் என்பதுபோலவும் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆக, ஜாதி சமூகத்தில் என்ன விதமான நெருக்கடிகள் இருந்தன என்பதை மிகையாக எடுத்துக்கொண்டதால் மிகையான போராட்ட வடிவங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். அமெரிக்க கறுப்பின உரிமைப் போராட்டம் போல் இந்திய ஜாதி அமைப்பையும் நினைத்துவிட்டார்கள். நிற வெறி, இன வெறி, மத வெறி போல் நாம்-பிறர் என்று இரு துருவ எதிர் நிலை ஜாதி சமூகத்தில் இருந்திருக்கவில்லை. ஏற்றத் தாழ்வானது பல அடுக்குகளாகப் பிரிந்திருந்தது. ஒருவரிடம் எல்லாமே குவிந்திருந்தது. இன்னொருவரிடம் எதுவுமே இல்லை என்பதுபோலவோ இரண்டு பேரில் ஒருவருக்கு இன்னொருவர் மீது தாங்க முடியாத வெறுப்பு என்ற இருண்மை நிலையோ இருந்திருக்கவில்லை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *