புதிய பொற்காலத்தை நோக்கி – 5

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

முந்தைய பகுதிகள்

தொழில்நுட்பத் துறையை எடுத்துக்கொண்டால் நாம் உற்பத்தி செய்த எஃகானது ஷெஃபீல்ட் எஃகைவிட உயர்தரத்தில் இருந்தது. சாயங்கள், கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொருட்கள் என நாம் பலவற்றை உருவாக்கி இருக்கிறோம்.

1790களில் பிரிட்டிஷாரைப் பெரிதும் கவர்ந்த பொருள் ஊட்ஸ் ஸ்டீல்! டாக்டர் ஸ்காட் பிரிட்டிஷ் ராயல் சொசைட்டியின் தலைவரான சர் ஜே பேங்க்ஸுக்கு அந்த எஃகின் சிறு துண்டு ஒன்றை அனுப்பிவைத்திருந்தார். பல நிபுணர்கள் அதைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். பிரிட்டனில் அப்போது தயாரிக்கப்பட்ட அதி உயர்ந்த எஃகின் தரத்துக்கு இணையாக அது இருந்தது. லண்டனில் பிரிட்டிஷ் இரும்புகொண்டு மருத்துவக் கருவிகள் உற்பத்தி செய்தவர் இந்திய எஃகு பற்றிச் சொன்னது:

‘பிரிட்டனில் இரும்புப் பொருள் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, அறுவைசிகிச்சை போன்றவற்றுக்குப் பயன்படும் நுட்பமான கூர்மையான எஃகுப் பொருட்கள் தயாரிக்க இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எஃகு பெரிதும் உதவிகரமாக இருக்கும்’

1794-ல் மாதிரி இரும்புத் துண்டு அனுப்பப்பட்டு அதே ஆண்டின் கடைசிப்பகுதியிலும் 1795-லும் அதை வைத்து பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்ட பிறகு அந்த எஃகின் கிராக்கி பிரிட்டனில் அதிகரிக்கத் தொடங்கியது. முன்பு கூறிய அந்த மருத்துவக் கருவி உற்பத்தியாளர், 18 ஆண்டுகள் கழித்து சொன்னது:

‘இப்போது எனக்கு இந்திய எஃகு மிகவும் தாராளமாகக் கிடைக்கிறது. நான் அதை வைத்துப் பல பொருட்கள் தயாரித்து வருகிறேன். இதைவிடச் சிறந்த எஃகு கிடைத்தால் நான் நிச்சயம் அதைப் பயன்படுத்தத் தொடங்குவேன். ஆனால், இதுவரையில் நான் பார்த்தவற்றிலேயே இந்திய எஃகுதான் மிகவும் சிறந்தாக இருக்கிறது’.

ஆனால், இந்தியாவில் இரும்புத் தாதுவில் இருந்து எஃகு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இருந்திருக்கும் என்பதை லண்டனில் இருந்த பிரிட்டிஷாரால் நம்ப முடிந்திருக்கவில்லை. அதற்கு மிக அதிக வெப்பத்தில் இரும்புத் தாதுக்களை உருக்கவேண்டியிருக்கும். அதற்கான உலைகள் தயாரிப்பதெல்லாம்  இந்தியர்களுக்குத் தெரிந்திருக்காது என்று அவர்கள் நினைத்தனர். இந்திய எஃகை ஆராய்ந்து பார்த்தபோது என்ன முடிவுக்கு வந்தார்களென்றால் ‘அந்தத் தரமான எஃகு நேரடியாக சுரங்கத்தில் இருந்து கிடைத்ததாகவே நினைத்தார்கள். அது தேனிரும்பு நிலையில் இருந்திருக்கவே இல்லை’ என்றே நினைத்தனர். அப்படியாக இந்திய எஃகின் உயர் தரத்துக்கான காரணத்தை கனிமச் சுரங்கத்துக்குக் கொடுத்துவிட்டனர். இந்திய எஃகு உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட தொழில்நுட்பங் களுக்கு எந்தவித அங்கீகாரமும் தந்திருக்கவில்லை.

ஆனால், உண்மை நிலையோ வேறாகவே இருந்திருக்கிறது.

18-ம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் சில மாவட்டங்கள், தாலுக்காக்களில் பயன்பாட்டில் இருந்த உலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பகுதியிலும் சில நூறுகளில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. எனவே 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த இரும்பு-எஃகு உலைகளின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரமாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு உலையிலும் வாரத்துக்கு அரை டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வருடத்துக்கு ஓர் உலை சுமார் 35-40 வாரங்கள் செயல்பாட்டில் இருந்ததாக எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு ஒவ்வொரு உலையும் சுமார் 20 டன் இரும்பை உற்பத்தி செய்திருக்கும்.

இந்த உலைகளில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், பொருட்கள் எல்லாம் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொருவிதமாக இருந்திருக் கின்றன. இரும்புத் தாதுவை நொறுக்கிப் பிரிக்கும் பணிக்கு குமாவோன் மற்றும் கர்வால் பகுதியில் பஞ்சகி (நீர் – சுழற்சி சக்கரம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜே.டி.ஹெர்பர், ஜே மான்சன் ஆகியோர், இதுபற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றனர்:

‘கனிமத் தாதுவைப் பிரிக்க தன்பூர் சுரங்கப் பணியாளர்கள் பஞ்சகி – நீர் சுழற்சி எந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். நீர் தாராளமாகக் கிடைக்கும்போது இரும்புத் தாதுவைப் பிரிக்க அதைவிட சிறந்த வழி இல்லை’. 

18-ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் காகிதம் தயாரிக்கப்பட்டிருக் கிறது. அது கிட்டத்தட்ட இயந்திரமின்றித் தயாரிக்கப்படும் இன்றைய கைவினைக் காகித தயாரிப்பு போலவே இருந்திருக்கிறது.

பழங்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை இவற்றையெல்லாம்விட மிகவும் ஆர்வமூட்டக்கூடியது. 1775-ல் லண்டனில் வெளியான கட்டுரையில் அது விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயமும் இந்தியாவில் பனிக்கட்டி தயாரிக்கப்படும் இந்த வழிமுறையும் பல்வேறு பிரிட்டிஷார்களால் அதற்கு முன்பேயும் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்திய விஞ்ஞானம் குறித்த ஆர்வத்தை இங்கிலாந்தில் அது தூண்டியிருந்தது என்பதும் தெரியவருகிறது. அதுவரையில் பிரிட்டிஷாருக்கு செயற்கை முறையில் பனிக்கட்டிகள் தயாரிக்கப்படுவது பற்றித் தெரிந்திருக்கவில்லை (பிற ஐரோப்பியர்களுக்கும் தெரிந்திருக்க வில்லை  என்றே தோன்றுகிறது).

செயற்கைப் பனிக்கட்டி தயாரிப்பில் நீரைக் கொதிக்கவைப்பது அதை உறைய வைக்க மிகவும் அவசியம் என்ற இந்தியர்களின் புரிதல் சர் ராபர்ட் பார்க்கரிடம் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியது. இப்படிச் சூடாக்குவது பற்றிக் குறிப்பிட்டு, இது எந்த அளவுக்கு விஞ்ஞானபூர்வமாக சரியானது என்று சந்தேகமாக இருந்திருக்கிறது என்று முதலில் குறிப்பிட்டிருக் கிறார். எடின்பர்க் பல்கலையில் வேதியியல் பேராசிரியரான அவர் பல்வேறு பரிசோதனைகள் செய்துபார்த்துவிட்டுக் கீழ்க்கண்ட விளக்கத்தைத் தந்திருக்கிறார் :

‘சுட வைக்கப்பட்ட நீரும் சாதாரண பச்சைத் தண்ணீரும் வெவ்வேறானவை. சாதாரண நீரை உறை நிலைக்கு சில டிகிரிகள் குறைவான வெப்பநிலையில் இருக்கும் காற்றுபடத் திறந்து வைத்தால் காற்றின் அந்த வெப்பநிலைக்கு அந்த நீரைக் குளிரவைத்துவிடமுடியும். எனினும் நீர்மமாகவே இருக்கும். ஆனால், சூடாக்கப்பட்ட நீரானது இப்படியான சூழலில் நீர்மமாகத் தொடர்ந்து இருக்காது. குளிரவைக்கப்படும்போது அந்த நீரின் ஒரு பகுதி பனிக்கட்டியாக மாறிவிடும். தொடர்ந்து குளிர்ந்த காற்றை அதன் மீது பட வைக்கும்போது மொத்த நீரும் பனிக்கட்டியாகிவிடும். இதிலிருந்து பனிக்கட்டி தயாரிக்க நீரை ஏன் சூடாக்குகிறார்கள் என்பதை ஒருவர்  நன்கு புரிந்துகொள்ளமுடியும்’.

அலெக்ஸாண்டர் பார்க்கர் இது தொடர்பாக 1775-ல் எழுதியிருக்கும் அறிக்கை மிகவும் சுவாரசியமானதும் கூட.

கிழக்கு இந்தியாவில் பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை  பயன்பாட்டில் இருப்பது குறித்து போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை.  வட தீர்க்கரேகை 25 1/2 மற்றும் 23 1/2க்கு இடையில் அமைந்திருக்கும் அலஹாபாத், மோதகில், கல்கத்தா ஆகிய பகுதிகளில் ஐஸ் தயாரிக்கப்படுவது பற்றிய தகவல்களை இங்கு தருகிறேன். கல்கத்தாவில் நீர் நிலைகள், சாலையில் தேங்கிய நீர் என எதிலுமே இயற்கையான பனிக்கட்டி இருந்ததாக யாரும் சொல்லி இதுவரை நான் கேட்டதில்லை. இங்கு தட்பவெப்பமானது உறைநிலைக்கு ஒருபோதும் வந்ததும் இல்லை. அலஹாபாத் பகுதியில் ஒரு சிலர் இயற்கையான பனிப்படலத்தைப் பார்த்திருக்-கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகளில் ஐஸ்கட்டிகள் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. தினமும் அதிகாலையில் (சில குறிப்பிட்ட தட்பவெப்பநிலைகளில் மட்டும் விதிவிலக்காக. அதுபற்றிப் பின்னர் விவரிக்கிறேன்) ஆண்டின் மூன்று மாதங்கள் அதாவது டிசம்பர் முதல் பிப்ரவரிவரை பனித்துளிகளைச் சேகரித்து பனிக்கட்டியாக்கு-கிறார்கள்.

நான் அலகாபாத் பகுதியில் ஐஸ் தயாரிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தேன். கோடைக்காலத்தில் நமக்குத்  தேவைப்-படும் அளவுக்கு பனிக்கட்டிகளை பனிக்காலத்தில் உருவாக்கித் தந்தார்கள். அவர்கள் பின்பற்றிய வழிமுறை:

பரந்து விரிந்த திறந்தவெளியில் மூன்று நான்கு குழிகள் வெட்டினார்கள். ஒவ்வொன்றும் முப்பது அடி சதுரமும் இரண்டடி ஆழமும் கொண்டிருந்தன. அந்தக் குழிகளின் அடிப்பாகத்தில் எட்டு அங்குல அளவுக்கு காய்ந்த கரும்பு அல்லது இந்திய மக்காச்சோளத்-தட்டைகள் அடுக்கப்பட்டன. இவற்றின் மேலே சிறிய களிமண் பானைகள் வரிசையாக அடுக்கப்பட்டன. அவற்றில் பனிக்கட்டியாக ஆக்கப்படவேண்டிய குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டிருந்தன.  இந்தப் பானைகள் நான்கில் ஒரு பங்கு அங்குல கனத்தில் ஒன்றே கால் அங்குல ஆழம் கொண்டவை. மாலை  நேரத்தில் அஸ்தமனத்துக்குப் பின் மேலே சொல்லப்பட்ட கலங்களில் வெந்நீர் ஊற்றப்பட்டன.

மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக வந்து உறைந்த பனிக்கட்டிகளை ஒரு கூடையில் கவிழ்த்து சேகரித்துக்-கொள்ளப்-பட்டன. அதன் பிறகு அவை அங்கிருந்து அரண்மனைக்குக்-கொண்டு-செல்லப்பட்டு பாதுகாத்துவைக்கப்படும். 14-15 அடி ஆழக் குழி தோண்டி அதில் முதலில் கீழே வைக்கோல் பரத்தப்படும். அதன் பிறகு இன்னொரு அடுக்கு நார்கொண்டு போர்வை போல் போர்த்தப்படும். இதன் மூலம் கிடைக்கும் மாறா வெப்ப-நிலையானது பனிக்கட்டிகளை அப்படியே உறைநிலையிலேயே தொடர்ந்து இருக்கவைக்கும். அந்தக் குழியின் வாய்ப்பாகமானது காற்று எதுவும் புக முடியாதவகையில் வைக்கோல், தென்னை நார்கள் போன்றவற்றால் நன்கு மூடப்படும். இவை அனைத்துக்கும் மேலாக  தென்னங்கீற்றினால் முடையப்பட்ட கூரை போட்டு மூடப்படும்.

பனிக்கட்டியின் குளுமையானது பருவ நிலையின் குளிரைப் பொறுத்தது. சில நேரங்களில் பனிக்கட்டி உருவாகாமலேயே போய்விடுவதும் உண்டு. வேறு சில நேரங்களில் பாதியளவு நீர் மட்டுமே உறைந்திருக்கும். நான் பார்த்தபோதெல்லாம் பனிக்கட்டி-கள் முழுமையாக உருவாகியிருந்தன. தட்பவெப்பம் இதமாக, தூய்மையானதாக இருந்தால் உறைநிலையை எட்டுவது எளிதாக இருக்கும். காற்று திசை மாறி மாறி வீசினாலோ மேகங்கள் இருந்தாலோ நீர் உறைவது தடுக்கப்படும். 

நான் பார்த்தவரையில் எந்த இரவுகளில் குளிர் அதிகமாக, உடம்பு நடுங்கும் அளவுக்கு இருக்கின்றனவோ அப்போதெல்லாம் பனிக்கட்டி உருவாவதே இல்லை. இரவுகள் மிக அமைதியாக, இதமான வெப்பத்துடன் இருக்கும் நாட்களில் பானைகள் எல்லாம் பனிக்கட்டியால் நிரம்பி வழியும். தட்ப வெப்பம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழியில் இருக்கும் பானைகளில் பனிக்கட்டி அருமையாக உருவாகியிருக்கும். ஒரு மைல் அல்லது அதைவிட சற்று தொலைவில் இருக்கும் குழிகளில் இதே பக்குவத்தில் பானைகளில் ஊற்றிய நீரில் பனிக்கட்டி எதுவுமே உருவாகியிருக்காது.

ஒரு வெப்பமானியை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிற எந்தப் பொருட்களின் தொடர்பும் இல்லாமல் இரவு நேரங்களில் அந்தரத்தில் தொங்கவிட்டு எந்தக் குறிப்பிட்ட இடத்தில் பாதரசம் உறைநிலைக்குச் செல்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அந்த இடங்களில் துளைகள் கொண்ட பானைகளை பூமியில் இருந்து கொஞ்சம்போல வெப்பம் கிடைக்கும்படியாக குழிகளுக்குள் இதுபோல் வைத்துவிட்டால் நிச்சயம் அதிகாலையில் ஐஸ்கட்டிகள் கிடைத்துவிடும். இப்படிச் செய்வது சாத்தியம் என்று சொல்லும் அதே நேரம் இந்த நாட்டில் நான் வசித்த காலகட்டத்தில் இயல்பாக பனிக்கட்டி உருவானதைப் பார்த்ததே இல்லை என்பதையும் சொல்லக்-கடமைப்பட்டிருக்கிறேன்.

இரவு நேரத்தில் வெப்பமானி உறைநிலைக்குக் கீழே போனதே இல்லை என்று நான் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இது தொடர்பாக எந்த ஆராய்ச்சியும் நான் செய்து பார்த்ததில்லை. ஆனால், இப்படிக் குழிக்குள் வைக்கப்பட்ட நீர் அல்லாமல் வேறு எங்குமே பனிக்கட்டிகளை நான் பார்த்ததில்லை. சுற்றுப்புறத் தட்பவெப்ப-நிலையானது, நீர் உறைய உதவி செய்கிறது. அதிக பனிக்கட்டிகள் உருவான நாட்களில் நான் முன்பே சொன்னதுபோல் வானமானது மிகவும் தூய்மையாகவும் நடு இரவுக்குப் பின் சிறிதளவு பனித்துளி வீழும் வகையிலும் இருந்தது. என்னுடன் இந்த ஐஸ் கட்டி தயாரிக்கும் குழிகளை வந்து பார்வையிட்ட ஆங்கிலேயர்கள் பலரும் இதையே சொன்னார்கள். பானைகளுக்குக் கீழே பரத்தும் கரும்புத்தோகை, சோளத்தட்டைகள் எல்லாம் குளிர்ந்த காற்று வந்துபோக உதவுவதாக இருக்கின்றன. கலங்களின் வெளிப்புறத்தில் இருக்கும் அவை வெப்பத்தை உறிஞ்சி எடுத்துவிடுகின்றன. பானைகளில் இருக்கும் நுண் துளைகள் குளிர்ந்த காற்று உள்ளும் புறமும் போய்வர வழி செய்கிறது. அந்தப் பானைகளை பூமிக்குள் புதைத்து வைப்பதால் மேலே வீசும் காற்றினால் நீர்த்துளிகள் பனிக்கட்டியாகாமல் கலைக்கப்படுவதும் தடுக்கப்பட்டுவிடுகிறது. நீரை முதலில் கொதிக்கவைப்பது மிகவும் அவசியம் என்று சொல்கிறார்கள். இதன் காரணம் எனக்கு சரியாகப் புரியவில்லை.

பிற பொருட்களில் இருந்து வெப்பம் எதுவும் கடத்தப்படாத வகையில் வைக்கப்படும் நீரானது, காற்றோட்டத்தில் இருந்தும் பாதுகாக்கப்படுவதன் மூலம் ஃபாரன்ஹீட் வெப்பமானியில் உறைநிலைக்கு சிறிதளவு மேலான குளிரில் இருக்கும்போதே பனிக்கட்டி உருவாக வழி செய்யப்பட்டுவிடுகிறது. இப்படிச் சேகரிக்கப்படும் பனிக்கட்டிகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு பெரிய கட்டிகளாக ஆக்கப்பட்டு அவையும் காற்றுப் புகாமல் பாதுக்காக்கப்-படுகின்றன.

கோடைக்காலங்களில் பிற திரவங்களைக் குளிர்விக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. சர்பத்கள், ஐஸ்க்ரீம்கள் என எவற்றை-யெல்லாம் குளிர்விக்கவேண்டுமோ அவை உருளை வடிவ வெள்ளிக் கோப்பைகளில் ஊற்றப்பட்டு அவற்றின் மேல் பாகம் நன்கு மூடப்பட்டு  பனிக்கட்டிகள் நிரம்பிய பெரிய கலனில் வைக்கப்படும்.  அந்தக் கலனில் வெடியுப்பு, சாதா உப்பு இரண்டும் சம அளவில் கலக்கப்பட்டு கொஞ்சம் நீர் ஊற்றப்பட்டு இந்தக் கலவையில் வைக்கப்படும். இப்படி வைப்பதன் மூலம் வெள்ளிக் கோப்பையில் இருக்கும் திரவமானது நம் நாட்டு மற்றும் ஐரோப்பிய ஐஸ்க்ரீம்கள் போலவே ஆகிவிடும். சாதா நீரை இந்தக் கிண்ணங்களில் வைத்தால் அது மிகவும் இறுகிவிடும். கத்தி அல்லது ஏதேனும் கடினமான பொருள் கொண்டு உடைக்கவேண்டியிருக்கும்.  இந்த ஐஸ்கட்டி-களில் வெப்பமானியை வைத்துப் பார்த்தால் உறைநிலைக்கு இரண்டு மூன்று டிகிரி வெப்பம் கீழே சென்றிருப்பது தெரியவரும்.

இயற்கையான பனிக்கட்டி உருவாக வாய்ப்பு இல்லாத சுற்றுச் சூழலும் தட்பவெப்பமும் இருக்கும் இடத்தில் பனிக்கட்டிகள் இப்படியாக உருவாக்கப்பட்டு, பெரிய பனிக்கட்டிகளாக ஆக்கப்-பட்டு பாதுகாக்கவும்படுகிறது. வெப்பமானியில் உறைநிலைக்குக் கீழே வரும் அளவுக்கு உறையவைக்கவும் முடிகிறது. இதன் மூலம் கோடைக்காலங்களைக்கூட குளிர் பானங்கள் அருந்தி ஓரளவுக்கு சமாளிக்க முடியும். வெப்பமானது 112ஃபாரன்ஹீட்டாக இருந்த-போதும் நான் இந்தப் பனிக்கட்டிகளை உபயோகித்து குளிர்ந்த பானங்களை அருந்திவந்திருக்கிறேன். வெகு குறைவான குளிர் காலத்தை மட்டுமே கொண்ட இந்தியாவில் அந்தக் குறைவான குளிரைவைத்து இப்படி அருமையாக பனிக்கட்டிகளைத் தயாரிக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது மற்றும் இப்படி-யான பிற கண்டுபிடிப்புகளின் மூலம் இந்தியாவின் கடுமையான கோடைகாலத்தின் தாக்கத்தை (சில பிராந்தியங்களில் இது மிக மிகக் கடுமையாக இருக்கும்) ஓரளவுக்குத் தணித்து, சர்பத், ஐஸ்க்ரீம் போன்ற மிக இதமான குளிர் பானங்களை அருந்தி நிம்மதியாக வாழ வழி கிடைத்திருக்கிறது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *