சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1

எரியும் பிணங்கள், மிதக்கும் சடலங்கள், மருத்துவமனையில் இடமின்றி ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடும் நோயாளிகள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருந்துக்கான நீண்ட காத்திருப்பு, தடுப்பூசிப் பற்றாக்குறை என உணர்ச்சிபூர்வமான மற்றும் பேரிடர் நிர்வாக விஷயங்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டுப் பார்ப்போம். உயிரை இழந்தவர்களிடம் புள்ளிவிவரங்கள் பேசுவதால் எந்த பலனும் இல்லை. ஆனால், இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு போர். உலகப் போர். பல்கிப் பெருகும் எதிரியுடனான பயங்கரமான போர். கொத்துக் கொத்தாகக் கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் குதிப்பவர்களைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம்.

உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலாகச் சொல்ல ஒரு வார்த்தைகூட நம்மிடம் இல்லை. எரியும் சிதைகளில் எது நம் அன்புக்குரியவருடையது என்று தெரியாமல் கதறி அழும் கொடூரம் யாருக்கும் வரக்கூடாது. அவர்கள் உரிய பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடிக்காமல் இருந்திருந்தாலும் உலகமே செய்யும் தவறுக்கு அவர்கள் கொடுக்க நேர்ந்த விலை மிக அதிகம் என்பதால் அவர்கள் முன்னால் தலை குனிந்து நிற்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

ஆனால், உலகில் வேறு நபர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் பலவற்றைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. சிலவற்றைக் கேட்டாக வேண்டியிருக்கிறது. எனவே, சீன வைரஸ் பரவியது எப்படி, முதல் அலையில் என்னென்ன நடந்தன, இரண்டாம் அலை எப்படி வந்திருக்கிறது, மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைகளை அரசு புறமொதுக்கியதா, தடுப்பூசி விவகாரம், ஆக்ஸ்ஸிஜன் விவகாரம், ரெம்டிசிவர் தட்டுப்பாடு என ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் சீன வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் இருந்து விவாதத்தை ஆரம்பிப்போம்.

மன்னிக்கவும். அது சீன வைரஸ் அல்ல.

ஏன், எப்படிச் சொல்கிறீர்கள்?

சீன வைரஸ் என்று சொல்லும்போது சீனாவில் வெளிப்பட்ட வைரஸ் என்ற பொருளோடு கூடவே சீனா திட்டமிட்டு உருவாக்கிய வைரஸ் என்றொரு அர்த்தமும் வருகிறது.

அதுவும் உண்மைதானே.

விஞ்ஞானிகள் அப்படிச் சொல்லவில்லையே. உலக சுகாதார நிறுவனம் அப்படிச் சொல்லவில்லையே.

எந்த விஞ்ஞானிகள் குழு அந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கவில்லை என்று சொன்னார்களோ அந்த அறிக்கைக்கான பணிகளை ஒருங்கிணைத்த தலைமை விஞ்ஞானி பீட்டர் தஸ்ஸாக்தான் அந்த வைரஸின் ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளித்தவர் என்பது தெரியுமா உங்களுக்கு.

அதனால் என்ன?

அதனால் என்னவா… சீன வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் அந்த வைரஸ் வெளிவந்திருக்கிறது என்பது நிரூபணமானால் அதனால் முதலில் தண்டிக்கப்படுபவர் அவராகத்தான் இருப்பார். அப்படியானால் அவர் ஒருங்கிணைத்த விஞ்ஞானிகள் குழு எப்படி அவரைக் காட்டிக் கொடுக்கும்.

ஆனால், அவர்கள் முன்வைத்த காரணங்கள் விஞ்ஞானபூர்வமானவைதானே.

பிரச்னையே அதில்தானே இருக்கிறது. அவர்கள் அந்த வைரஸை சீன விஞ்ஞானிகள் அல்லது மனிதர்கள் யாரேனும் தயாரித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு வழிமுறையைச் சொல்லி இந்த வைரஸ் அப்படி இல்லை என்பதால் மனிதரால் உருவாக்கப்பட்டிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது மனிதர்கள் உருவாக்குவதென்றால் ஒரு குறிப்பிட்ட வகையில்தான் இருக்கும் என்ற முன் அனுமானத்தினால் வரும் வாதம் இது. சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சிசிடிவியில் வீட்டுக்குள் யாரும் நுழைந்ததாகத் தடயம் இல்லை. அதை வைத்துக்கொண்டு வீட்டில் திருடன் நுழையவே இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா. பொருட்கள் களவு போயிருக்கும் நிலையில் திருடன் வேறு வழியாக நுழைந்திருப்பான் என்றுதானே துப்புத் துலக்க ஆரம்பிக்கவேண்டும். சிசிடிவியில் யாரும் நுழைந்ததாகப் பதிவாகவில்லை. எனவே திருட்டே நடக்கவில்லை என்று சொல்வதுபோலிருக்கிறது விஞ்ஞானிகளின் அறிக்கை. அதோடு அவர்கள் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்படவில்லை; வௌவாலில் இருந்து மனிதருக்குத் தொற்றியது என்று ஒரு வாதத்தை வைத்தார்கள். ஆனால், அதற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை அவர்களால் தரமுடியவில்லை.

யுனான் பிரதேசத்து வெளவால்கள் மூலம் நோய் பரவியிருக்கும் என்று சொன்னார்களே.

அது பொய். ஏனென்றால் யூனான் குகைகளில் வசிக்கும் வெளவால்களின் மூலம் நோய் பரவியிருந்தால் முதலில் அந்த ஊருக்கு அருகில்தானே நோய் மனிதர்களைத் தாக்கியிருக்கவேண்டும். 1500 கி.மீ. தொலைவில் இருக்கும் வூஹான் பகுதியில்தானே முதல் கொரானா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

ஏன் வெளவால் பறந்து வந்து அதன் மூலம் நோய் வந்திருக்காதா.

இல்லை. வெள்வால்கள் பொதுவாக ஐம்பது கி.மீ சுற்றளவில்தான் சென்று திரும்பும். அதோடு முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட செப்டம்பர் என்பது வெளவால்கள் நீண்ட தூக்கத்தில் அமிழும் பருவம்.

ஒருவேளை யுனான் பிரதேசத்தில் ஒரு நபரை அந்த வெளவால் பாதித்திருக்கலாம். அவர் 1500 கி.மீ. பயணம் செய்து வந்திருக்கலாமே. அதன் பின் வூஹானில் அவருக்கு நோய் பெரிதாகியிருக்கலாம்.

இது உண்மையாகவேண்டுமென்றால் 1500 கி.மீ. பயணத்தில் அவர் யாரையுமே தொட்டிருக்கவே மாட்டாரா. எந்தப் பொருளையும் தொட்டிருக்கவே மாட்டாரா. அந்த வழித்தடத்தில் யாருக்கேனும் அது தொற்றியிருக்கும். அப்படி இல்லை என்பதால் யுனான் வெளவால் மூலம் நோய் பரவியிருக்க வாய்ப்பே இல்லை.

வூஹான் பிராந்தியத்தில் அந்த வெளவால் இல்லவே இல்லையா.

இல்லை. அது ஒரு நகர்ப்புறம். அங்கு அந்த வெளவால் இல்லை. ஆனால், ஒரு ஆய்வகம் இருக்கிறது. அங்கு வெளவாலில் இருந்து வைரஸை உருவாக்கி எலிக்கும் குரங்குக்கும், மனிதர்களுக்கும் செலுத்தி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. போதிய பயோசேஃப்டி லெவல் எதுவும் இல்லாமல் அந்த ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. முதல் கொரானா நோயாளி க்ளஸ்டர் அதே வூஹான் தான். இந்த இரண்டு தரவுகளையும் சொன்னால் பச்சைக் குழந்தைகூட வூஹானில் ஆய்வகத்தில் இருந்துதான் சீன வைரஸ் வெளியேறியிருக்கிறது என்று சொல்லிவிடுமே.

வெள்வால்களை வைத்து ஆராய்ச்சி செய்பவரும் வெளவால் புத்ரி என்று அழைக்கப்படுபவருமான ஷி ஜெங் லி அந்த யுனான் பகுதிக்குச் சென்று பல வெள்வால்களைப் பிடித்து வந்துதான் ஆய்வு செய்துவருகிறார். அதோடு 2012 வாக்கிலேயே யுனான் பகுதியில் சுரங்கங்களில் வேலை செய்த சிலருக்கு இந்த கொரோனா வைரஸ் மூலமான சளிக் காய்ச்சல் போலவே ஒரு நோய் தாக்கி ஐந்தாறு பேர் இறந்திருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது வெளவாலில் இருந்து இயற்கையாகவே உருவான நோயாக இது இருந்திருக்கலாம் அல்லவா?.

அப்படியில்லை என்றுதான் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதாவது வெளவால் போன்ற ஒரு உயிரிடமிருந்து நோய்க்கிருமி பரவ்வேண்டுமென்றால் அது எடுத்த எடுப்பிலேயே மனிதர்களைத் தாக்கிவிடமுடியாது. அது ஏதேனும் வேறொரு சின்ன உயிரியைத் தாக்கி அதன் உடம்பில் இருந்து புரதச் சத்துக்களை எடுத்துக்கொண்டு சில காலம் வளர்ந்து அங்கிருந்து இன்னொரு வடிவம் பெற்றுத்தான் மனிதரைத் தாக்கும் அளவுக்கு வலு பெற முடியும். கிட்டத்தட்ட 10 உருமாற்றங்கள் அடைந்த பின்னரே மனிதரைத் தாக்கும் வலிமையைப் பெற முடியும். மனிதர்களிலும் நான்கு உருமாற்றங்கள் நடந்த பின்னரே உலகப் பேரிடர் ஏற்படுத்தும் அளவுக்கு மோசமான கிருமியாக உருமாற முடியும். இவையெல்லாம் நடந்திருந்தால் அதற்கான விஞ்ஞான, மருத்துவ சான்றுகள் கிடைத்திருக்கும். நோய்த் தொற்று பரவிய நாளில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகளை பரிசோதித்துவிட்டார்கள். அதைவிட அதிக அளவுக்கு மனிதர்களின் மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துவிட்டார்கள். எதிலுமே வெளவால் வைரஸ் தாக்கி நோய் ஏற்பட்டதன் தடயமே இல்லை. ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கும் வெளவால் வைரஸ்தான் இப்படி நேரடியாக மனிதர்களைத் தாக்கும் பலம் பெறமுடியும். அங்குமே கூட எலிகள், குரங்குகள் இவற்றுக்குக் கொடுத்து படிப்படியாக அந்த வைரஸை கொடூரமானதாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.

ஆனால், உலக சுகாதாரத்துறை சீனாவுக்குச் சென்று ஆய்வு செய்து அவர்கள் மேல் தவறில்லை என்று தீர்ப்பு சொல்லிவிட்டதே.

அது எப்படிப் பட்ட ஆய்வு. அந்த ஆய்வுக் குழுவில் யாரெல்லாம் இருக்கவேண்டும், எங்கெல்லாம் ஆய்வு செய்யவேண்டும் என்பதெல்லாம் முழுக்கவும் சீனா அரசாலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சீன ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ் வெளிவரவில்லை என்று முதலில் ஒரு ஆய்வறிக்கை விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டதே அதை ஒருங்கிணைத்த பீட்டர் தஸ்ஸாக் இந்த ஆய்வுக் குழுவிலும் இடம்பெற்றார். அவர்கள் தரும் அறிக்கை பின் எப்படி இருக்கும். சீனா உலகின் மீது இதுபோன்ற வைரஸை அனுப்பி உலக நாடுகளின் மக்களை அழித்து அந்த நாட்டுத் தலைவர்கள் மேல் மக்களுக்கு அதிருப்தியை வெறுப்பை வரவைக்கவேண்டும். தனது கையாட்களைக் கொண்டு அந்த நாடுகளின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும். அந்த நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கிப்போடவேண்டும். முதலீடு இல்லாமல் தவிக்கும் அந்த நாட்டு நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தன்னுடைய பினாமிகள் மூலம் வாங்கிக் குவிக்கவேண்டும். உலகம் முழுவதையும் அப்படியாக தனது ஆளுகையின் கீழ் கொண்டுவரவேண்டும் எனற இந்தத் திட்டமானது சீன விஞ்ஞானிகள் சிலரால் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் சொன்ன சில விஞ்ஞானிகள் மர்ம முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இப்போது நடப்பது போர். மூன்றாம் உலகப் போர். இதில் கொடுமையான வேதனை என்னவென்றால் உண்மையான எதிரியை விட்டுவிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களும் தமக்குள்ளாகவே கட்சி பிரிந்து அடித்துக்கொண்டு மடியப்போகிறார்கள்.

ஒரு அரசாங்கம் அல்லது ராணுவத்துக்கு வேண்டுமானால் உலகை அழிக்கவும் அடக்கி ஆளவும் விருப்பங்கள் இருக்கலாம். விஞ்ஞானிகளுக்கு அப்படியான எண்ணம் நிச்சயம் இருக்காது. அது பல நாட்டு நிபுணர்கள் ஒன்று கூடிச் செய்யும் ஆராய்ச்சிகள். அவர்கள் இப்படியான அழிவுச் செயல்களுக்கு துணைபோகமாட்டார்கள்.

விஞ்ஞானிகள் நல்லவர்கள் என்பது ஒரளவுக்கு உண்மைதான். ஆனால், விஞ்ஞான ஆய்வுகள் எல்லாம் தர்ம நியாயங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கும் என்று சொல்லமுடியாது. இயற்கையை எதிர்த்துச் செயல்படுவதென்பதில் அவர்களுக்கு ஒருவகையான அறிவுத் திமிர் இருக்கும். இந்த ஆய்வக செயற்கை வைரஸ் தொடர்பான ஆய்வுகள் கூட அப்படியானவைதான். அதாவது எதிர்காலத்தில் ஏதேனும் பறவை அல்லது விலங்கில் இருந்து ஒரு வைரஸ் உருவாகி மனித இனத்துக்குப் பெரும் தீங்கை விளைவிக்கக்கூடும். அப்படி ஒன்று நடந்த பின் மருந்து தேடி அலைவதைவிட அப்படியான ஒரு வைரஸை நாமே ஆய்வகத்தில் உருவாக்கி எலிக்கும் குரங்குக்கும் மனிதர்களுக்கும் கொடுத்து நோயை உருவாக்கி அதற்கான தடுப்பு மருந்தையும் தயாரித்து வைத்துக்கொள்வோம். பின்னாளில் இயற்கையான அந்த வைரஸும் நோயும் தாக்கும்போது நாம் அந்த மருந்தைப் பயன்படுத்தி மக்களை குணப்படுத்துவோம் என்று திட்டமிட்டு நிறைய ஆய்வுகள் செய்கிறார்கள். வெளவாலில் இருந்து வந்ததாகச் சொல்லப்படும் இந்த சீன வைரஸும் அப்படியாக உருவாக்கப்பட்டதுதான். இதை ஷி ஜிங் லி தலைமையிலான வெளவால் வைரஸ் விஞ்ஞானிகள் வெளிப்படையாகச் சொல்லியே நடத்திவந்திருக்கிறார்கள். ஆனால், என்ன நடந்திருக்கிறதென்றால் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே வைரஸ் வெளியேறிவிட்டது. சீனா இதைத் திட்டமிட்டுச் செய்ததா இல்லையா என்று வேண்டுமானால் நம்மிடையே கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கலாம். ஆனால், அங்கிருந்துதான் வெளியேறியது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.

இவையெல்லாம் ஆதாரமில்லாத சதிக் கோட்பாடுகள்.

நிச்சயமாக இல்லை. நடக்கும் விஷயங்களில் இருந்துதான் இந்த சதியைப் புரிந்துகொள்ளவேண்டும். முதன் முதலில் வூஹான் பிராந்தியத்தில் திடீரென்று அதிகரித்த சளிக் காய்ச்சல்… மருத்துவமனைகளில் குவிந்த வாகனங்கள் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள். பெரும் உயிரிழப்பு… சீனா உடனே அந்தப் பிராந்தியத்தை லாக் டவுன் செய்த செயல். வைரஸ் பற்றிய புரிதல் இருந்ததால் தான் இதைச் செய்யவே முடிந்தது. தனது நாட்டுக்குள் அந்த வைரஸ் பரவாமல் தடுத்த அதே கையோடு உலகம் முழுவதும் அதைப் பரப்பிய கொடூரம் என அருகருகே இருக்கும் புள்ளிகளை இணைத்தால் தெரியவரும் கோலம் அலங்கோலமாகவே இருக்கிறது.

அப்படி எல்லாம் அவர்களுடைய திட்டமிடல் என்றால் சொந்த நாட்டில் அந்த வைரஸை எதற்காக வெளிவிடவேண்டும். நேராக வேறு நாட்டில் சென்று அழிவைத் தொடங்கியிருக்கலாமே. இப்படி சொந்த நாட்டுக்குள் அதை செலுத்தி அது தொடர்பான சந்தேகங்கள் உலகுக்கு ஏற்பட அவர்களே வழி செய்வார்களா என்ன.

நீங்கள் சொல்வதில் ஓர் உண்மை இருக்கிறது. இப்படியான அழிவு வைரஸை அவர்கள் தயாரித்ததில் அவர்களுடைய ராணுவமும் விஞ்ஞானிகளும் கூட்டாகவே செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களையும் மீறி அது வெளியேறிவிட்டது. என்ன காரணம் என்பது தெரிந்ததால் உடனே லாக் டவுன் செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். அதுவரையில் அவர்கள் செய்தவற்றை மிகுந்த தயக்கத்துடன் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும்கூட முடியும். ஆனால், அதன் பிறகு உலகம் முழுவதும் உடனேயே பரப்பியும்விட்டார்கள். அதுதான் அவர்களை மனித குல விரோதி என்றாக்கிவிட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றக்கூடியது என்ற உண்மையைக்கூட அவர்கள் சில காலம் செல்லவே இல்லை.

ஒரு விஞ்ஞானி தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத வைரஸை வைத்து எப்படி ஆராய்ச்சி செய்வார். ஏனென்றால் முதலில் தாக்கப்படுவது அவராகத்தானே இருப்பார்.

சீன கொரானா வைரஸ் பற்றிய ஆய்வுகள் பற்றி பல நிபுணர்கள் சொல்வது அதைத்தான். வூஹானில் இருந்த அந்த ஆய்வகத்தில் போதிய பயோசேஃப்டி வழிமுறைகள் இருந்திருக்கவே இல்லை. விண்வெளிக்குச் செல்பவர்கள்போல் உடை அணிந்துகொண்டு, தனியான சிறை போன்ற மூடப்பட்ட இடத்துக்குள் ஒவ்வொருவராக இருந்துகொண்டுதான் அந்த ஆய்வைச் செய்திருக்கவேண்டும். ஆனால், வூஹான் ஆய்வகத்தில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை சாதாரணமான மருத்துவமனையில் இருப்பதுபோன்ற எளிய அடிப்படையான ஸ்டெர்லைஸ்ட் மேலாடை, கிளவுஸ் என மட்டுமே இருந்திருக்கின்றன. உண்மையில் அப்படியான ஒரு வௌவால் வைரஸை உருவாக்கி மனித உடம்பில் நோய் ஏற்படுத்துவது, அதன் பின் தடுப்பூசி கண்டுபிடிப்பது என்ற ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கவே கூடாது. அதற்கு நிதி தந்திருக்கவே கூடாது என்றுதான் பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அமெரிக்க அதிபரும் செனட்டும் அந்த பரிந்துரைகளைத் தொடர்ந்துதான் பீட்டர் தஸ்ஸாக்கின்ன் நிறுவனத்துக்கான நிதி உதவிகளை முடக்கி உத்தரவிட்டிருந்தது. சட்டத்தில் இருந்த சில ஓட்டைகளைப் பயன்படுத்தியே அமெரிக்க அரசின் நிதி சீன ஆய்வகத்துக்குத் தரப்பட்டிருந்தது. இவையெல்லாம் தெரிந்த டிரம்ப் ஒட்டு மொத்த உலகையும் சீனாவுக்கு எதிராக அணி திரட்டத் திட்டமிட்டிருந்தார். அதனால்தான் சீன அரசாங்கம் கறுப்பர்-வெளுப்பர் பிரச்னையைக் கிளப்பிவிட்டு அவரைக் காலி செய்துவிட்டது.

டிரம்பின் தோல்விக்கு அவருடைய ஐந்தாண்டு ஆட்சியுமே காரணம் தான்.

நிச்சயமாக இல்லை. அவருக்கு கணிசமான ஆதரவு இருந்தது. கறுப்பர்கள், அயல் நாட்டு ஊடுருவல்காரர்கள், இஸ்லாமியர்கள் நடுநிலை வெளுப்பர்கள் என ஒரு போலரைசேஷன் அங்கு உருவாக்கப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது. சீனாவின் பங்கு இதில் மிக மிக அதிகம். இன்று சீன வைரஸ் கொடுமைக்காக சீனாவை எதிர்க்க யாருமே இல்லாத நிலை உருவாகிவிட்டது.

நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அந்த பீட்டர் தஸ்ஸாக் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி. அவருடைய நிறுவனம் நியூ யார்க்கில் இருந்தது. சீனாவில் நடந்த அவருடைய ஆய்வுக்கு அமெரிக்க அரசின் நிதி உதவி முழுமையாக இருந்திருக்கிறது என்றும் சொல்கிறீர்கள். உலக மக்கள் மட்டுமல்ல அமெரிக்க மக்களும் லட்சக்கணக்கில் இறந்ததற்குக் காரணமான ஆய்வுக்குப் பணம் கொடுத்ததே அமெரிக்க அரசுதானே. எனவே சீனாவை மட்டும் கட்டம் கட்டுவது தவறுதான்.

ஆய்வுக்கு நிதி உதவி செய்ததாலேயே இந்த பயோ வாரின் காரணகர்த்தாவாக அமெரிக்காவைச் சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் உலகிலேயே இந்த நோயினால் அதிகம் இறந்திருப்பது அமெரிக்கர்கள்தான். அமெரிக்க அரசு நிதி உதவி தந்ததன் பின்னால் வேறொரு காரணம் இருந்திருக்கலாம். சீனாவின் இந்த ஆய்வகத்தின் மூலம் சீன அரசின் பயோ வார் முயற்சிகளை உளவு பார்க்கும் நோக்கம் இருந்திருக்கலாம் என்று அரசியல், விஞ்ஞான நிபுணர்கள் சொல்கிறார்கள்.

என்ன காரணம் சொன்னாலும் இந்த வைரஸை சீன-அமெரிக்க வைரஸ் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஒருவகையில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், அமெரிக்கா வைரஸ் ஆய்வுக்கு மட்டுமே நிதி கொடுத்தது. அதை வைத்து அமெரிக்காவையே காலி செய்துவிட்டது சீனா. வரம் கொடுத்தவரின் தலையிலேயே கை வைப்பதைப் போன்றது. இதில் கொடூரமான வேடிக்கை என்னவென்றால் இரண்டு நாடுகளுமே மற்றவரைக் காட்டிக் கொடுக்க முடியாது. வூஹானில் நடந்த ஆய்வுகள் தான் இப்படியான பேரழிவுக்குக் காரணமென்றால் மிக அபாயகரமான அந்த வைரஸ் ஆய்வுகளுக்கு அமெரிக்க அரசு ஏன் நிதி உதவி கொடுத்தது. அதுவும் எங்கள் நாட்டில் அந்த ஆய்வை மேற்கொண்டது ஏன் என்று சீனா கேட்கும். அதற்கு அமெரிக்க என்ன பதில் சொல்ல முடியும். எல்லா உண்மைகள் தெரிந்த பின்னரும் நாம் இது பற்றி பொதுவெளியில் பேசவேண்டாம் என்றுதான் சொல்லமுடியு. ஆக இரண்டுபேருமே கூட்டுக்களவாணிகள். இருவருடைய நெற்றியிலும் துப்பாக்கி குறிவைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பேருமே மவுனமாக இருந்துவிடுவார்கள் என்றுதான் தெரியவருகிறது.

(தொடரும்)

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் தரப்பட்ட விஷயங்கள் ஆதாரபூர்வமானவை. உலகப் புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் நிகோலஸ் வேட் சமீபத்தில் எழுதிய Origin of Covid என்ற கட்டுரையில் இந்த விவரங்கள் ஆதாரபூர்வமாகவும் விரிவாகவும் தரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *