ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஐந்து மாநிலங்களிலும் ஐந்து விதமான தீர்ப்புகள். மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. தமிழகம், புதுவை (யூ.பி) ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சி மாற்றம். இந்தத் தேர்தல் முடிவுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்திய ஜனநாயகம் மறுபடி ஒருமுறை தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒவ்வொரு கட்சியும் மகிழ்ச்சி அடையவும் வருத்தம் கொள்ளவும் பல முடிவுகளை அளித்திருக்கிறது எனில் மிகையில்லை. எந்த ஒரு தனிக் கட்சியும் இந்தத் தேர்தல் முடிவுகளால் அதீத மகிழ்ச்சியும் அடையவில்லை; யாருக்கும் பெரிய சரிவும் இல்லை. இது ஒரு வித்யாசமான தேர்தல் தீர்ப்பு. ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

மேற்கு வங்கம்: எதிர்பாராத தீர்ப்பு

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது மேற்கு வங்கத் தேர்தல் தான். அங்கு ஆட்சியில் இருக்கும் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆளும் பாஜக வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. தேர்தல் களத்திலும் சூடு பறந்தது. ஆனால், பலரும் வியக்கும் விதமாக சென்ற 2016 தேர்தலில் (211 இடங்கள்; பெற்ற வாக்குகள் 44.91 %) பெற்றதை விட அதிகமான ஆதரவைப் பெற்று (214 இடங்கள்; 47.9 %) ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மொத்த இடங்கள்: 292.

பாஜக ஆதரவாளர்களுக்கு இது பெரும் ஏமாற்றமே. ஆனால் அவர்கள் ஒரு மாபெரும் வெற்றிகான ஏணியில் ஏறத் துவங்கிவிட்டனர் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன. 2016 தேர்தலில் இருந்த இடம் தெரியாமல் இருந்த பாஜக (3 இடங்கள், கூட்டணிக் கட்சியான கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா- 3 இடங்கள்; 10.16 % வாக்குகள்), இம்முறை மாநில ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததுடன், மாநில அரசியல் களத்தையே மாற்றி அமைத்திருக்கிறது. இதுவரை அந்த மாநிலத்தில் ஆண்ட காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜக 77 இடங்களில் (வாக்கு சதவிகிதம்: 38.13 %) வென்று பிரதான எதிர்க்கட்சியாகி இருக்கிறது. இது சாதாரணமான வெற்றியல்ல.

சென்ற தேர்தலில் 44 இடங்களில் (12.25 % வாக்குகள்) வென்ற காங்கிரஸ் கட்சியும், 26 இடங்களில் வென்ற ( 19.75 %) சிபிஎம் கட்சியும் இம்முறை ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை. தவிர அவற்றின் வாக்கு விகிதமும் காங்கிரஸ்- 2.94 % ஆகவும் , சிபிஎம்- 4.73 % ஆகவும் குறைந்துவிட்டது.

இத்தனைக்கும் சம்யுக்த மோர்ச்சா என்ற மாபெரும் கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், ஃபார்வர்ட் பிளாக், இந்திய மதசார்பற்ற முன்னணி (இதன் தலைவர் அப்பாஸ் சித்திக்கி என்ற முஸ்லிம் மதகுரு!), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உள்பட பல கட்சிகள் இருந்தன. ஆயினும், திரினமூல் காங்கிரஸ்- பாஜக என்ற இரு துருவங்களிடையிலான மோதலில் அவை காணாமல் போய்விட்டன. தவிர, பாஜக வெல்லாமல் இருக்க மமதாவை அதாரித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை போட்டுக் கொண்டன.

பல தசாப்தங்களாக இக்கட்சிகளின் பிடியில் இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக இப்போது இரண்டாவது பிரதானக் கட்சியாகி இருக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு சோகத்திலும் ஆறுதல். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கோ, பாஜக ஆட்சிக்கு வர முடியாமல் போனதில் ஆறுதல்! மமதாவுக்கோ பாஜகவின் அசுர வளர்ச்சி ஓர் அதிர்ச்சி.

இந்தத் தேர்தல் முடிவின் மூலமாக தேசிய அரங்கில் மமதா பானர்ஜி முதன்மை பெறுகிறார். தவிர, மத்திய- மாநில உறவும் பலத்த சரிவுக்கு உள்ளாகிறது; அதுமட்டுமல்ல, சிறுபான்மையின ஆதரவு அரசியலும் மீண்டும் வலுப்பெறுகிறது; தேசிய குடியுரிமை திருத்தச் சட்டமும் இம்மாநிலத்தில் கேள்விக்குள்ளாகிறது. அந்த வகையில் தேசிய நலன் விழைவோருக்கு மமதாவின் வெற்றி ஓர் அபாய எச்சரிக்கையே.

அஸ்ஸாம்: ஆட்சியில் மாற்றமில்லை

அஸ்ஸாம் மாநிலத்தில் 2016 தேர்தலில் காங்கிரஸ் வசமிருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது. அப்போது 29.5 % வாக்குகளுடன் 60 இடங்களில் வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் 8.1 % வாக்குகளுடன் 5 இடங்களில் வென்றது. சர்வானந்த சோனோவால் முதல்வரானார். 30.9 % வாக்குகளுடன் 26 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 13 % வாக்குகளுடன் ஏ.ஐ.யு.டி.எப். (இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சி) 13 இடங்களிலும் வென்றன. மொத்த இடங்கள்: 126.

இந்த முறை காங்கிரஸ் கட்சி, மௌலானா பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான ஏ.ஐ.யு.டி.எஃப்., போடோலாந்து ஜனநாயக முன்னணி, இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் மகா கூட்டணி அமைத்ததால், ஆட்சி மாற்றம் நிகழும் என்று ஊடகங்கள் நம்பின. குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய மக்கள் படிவேடும் அங்கு மக்களிடையே பாஜகவுக்கு எதிரான அலையை உருவாக்கி இருப்பதாக அறிவுஜீவிகள் கதைத்து வந்தனர்.

அதேசமயம், அசாம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்த பாஜக அதிதீவிர பிரசாரத்தில் இறங்கியது. தேர்தலின் முடிவில் 33.4 % வாக்குகளுடன் 60 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் 9 இடங்களிலும் யுபிபிஎல் 6 இடங்களிலும் வென்றுள்ளன. சென்ற தேர்தலைவிட அதிக இடங்களில் வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தொடர்கிறது.

அதேசமயம், 20.7 % வாக்குகளுடன் 29 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 9.3 % வாக்குகளுடன் 16 இடங்களில் ஏ.ஐ.யு.டி.எஃப். கட்சியும், 3.4 % வாக்குகளுடன் போடோலாந்து ஜனநாயக முன்னணியும் வென்றுள்ளன.

ஹிமாந்த பிஸ்வ சர்மா தலைமையிலான வடகிழக்கு மாநில தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சிகளை வலுப்படுத்துவதாக அஸ்ஸாம் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் ஊடுருவல்காரர் விவகாரம் அஸ்ஸாமில் உச்சத்தில் உள்ள நிலையில், அங்கு பாஜக வென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

கேரளம்: காங்கிரஸுக்கு ஏமாற்றம்

கேரள மாநிலத்தில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி சட்டசபைத் தேர்தல்களில் வெல்வது வழக்கம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அடுத்த தேர்தலில் ஆட்சியை மாற்றிவிடுவது மலையாளிகளின் தெளிவான முடிவு. ஆனால், இம்முறை பினறாயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மீண்டும் வென்று, காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

2016 தேர்தலில் இ.ஜ.முன்னணி 91 இடங்களிலும் ஐ.ஜ.முன்னணி 47 இடங்களிலும் பாஜக ஓரிடத்திலும் வென்றிருந்தன. மொத்த இடங்கள்: 140. இம்முறை இரு தரப்பிலும் கூட்டணியில் பெரும் மாற்றமில்லை. கிறிஸ்தவர்களின் ஆதரவு பெற்ற கேரள காங்கிரஸ் (மானி பிரிவு) மட்டும் காங்கிரஸ் அணியிலிருந்து விலகி சிபிஎம் அணியில் சேர்ந்தது. தேர்தலின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.

பாஜகவின் மூன்றாவது அணி முயற்சியும் காங்கிரஸ் தேசியத் தலைமையின் நத்தைவேகமும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் கனவுக்கு முட்டுக்கட்டை ஆகியுள்ளன. பாஜக இங்கு ஒரு தொகுதியில் கூட வெல்லாதபோதும் தனது வாக்குவிகிதத்தை 10.6 % லிருந்து 11.3 % ஆக உயர்த்திக் கொண்டிருக்கிறது. தவிர, குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் காங்கிரஸின் தோல்விக்கு பாஜக பெற்ற அதிக வாக்குகள் காரணமாகி உள்ளன.

இறுதியில், இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களிலும் வென்றுள்ளன. அதிலும், ஆளும் தரப்பில் சிபிஎம் 62 (25.4 %), சிபி.ஐ. 17 (7.58 %) இடங்களில் வென்றுள்ளன. எதிர்த்தரப்பில், காங்கிரஸ் 21 (25.1 %), முஸ்லிம் லீக் 15 (8.3 %) இடங்களில் வென்றுள்ளன. 11.3 % வாக்குகளைப் பெற்ற பாஜக ஓரிடத்திலும் வெல்லாதபோதும் மஞ்சேஸ்வரம், காசர்கோடு, மலம்புழா, பாலக்காடு, சாத்தனூர், அட்டிங்கல், கழக்கூட்டம், வட்டியூர்க்கரா, நேமம் ஆகிய ஒன்பது தொகுதிகளில் இரண்டாமிடத்தில் வந்துள்ளது.

மொத்தத்தில், இடதுசாரிகள் ஆளும் ஒரே மாநிலமாக கேரளம் தொடர்கிறது. ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்த கேரளத்தை காங்கிரஸ் பறிகொடுத்திருக்கிறது. தங்க கடத்தல் ஊழல், சபரிமலை புனிதம் மாசுபட்ட விவகாரம் போன்றவற்றை மீறி பினறாயி விஜயன் வென்றிருக்கிறார். இதுவும் ஜனநாயகத்தின் அம்சமே.

ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை எல்லை மீறி அதிகரிக்கும்போது மக்கள் தொகைப் பரவல் நிகழ்த்தும் அரசியல் மாற்றங்களுக்கு மேற்கு வங்கம், கேரளம், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் ஆகியவை உதாரணமாகத் தொடர்கின்றன.

புதுவையில் ஆட்சி மாற்றம்:

மிகச் சிறிய (மொத்த இடங்கள்: 30) சட்டசபையைக் கொண்ட யூனியன் பிரதேசமான புதுவையை தனது கோமாளித்தனமான ஆட்சியால் சீர்குலைத்திருந்தார் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி. சென்ற முறை தேர்தலில் காங்கிரஸ் வென்றபோது நமச்சிவாயம் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, புழக்கடை வழியே தேசியத் தலைமையின் ஆசியுடன் முதல்வரானவர் அவர். இந்த 5 ஆண்டுகளும் புதுவைக்கு போதாத காலம் தான்.

இந்த நிலையை மாற்றும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. 2021 தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் (10), பாஜக (6), ரங்கசாமி ஆதரவு சுயேச்சைகள் (5) என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலு 21 ஆக உயர்ந்துள்ளது. எதிர்த்தரப்பில் திமுக (6), காங்கிரஸ் (2), காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை (1) என 9 பேர் உள்ளனர். முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி தலமையில் புதிய ஆட்சி அமைகிரது. தென்னிந்தியாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் இரண்டாவது இடம் புதுவை.

2016 தேர்தலில் காங்கிரஸ் (15), என்.ஆர்.காங்கிரஸ் (8), அதிமுக (4), திமுக (2) இடங்களில் வென்றிருந்தன. இம்முறை காட்சி மாறி இருக்கிறது. கட்சிகளின் வாக்கு விகிதமும் மாறி இருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் 13.7 % (2016-இல் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது 28.1%), பாஜக 25.65 % (2016-இல் 2.4 %), காங்கிரஸ் 15.71 % (2016இல் 30.6 %), திமுக 18.61 % (2016-இல் 8.9 %) அதிமுக 4.14% (2016-இல் 16.8 %) என கட்சிகள் வாக்குகளைப் பெற்றுள்ளன.

புதுவையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. காட்சிக்கு எளியவரும், சர்ச்சைகளில் சிக்காதவருமான என்.ரங்கசாமி தலைமையில் அமைகிற ஆட்சி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என நம்பலாம்.

தமிழகத்தில் அதிரடி மாற்றம்:

தமிழகத்தில் பத்தாண்டுக்கால அதிமுக ஆட்சிக்கு விடை கொடுக்கப்பட்டிருக்கிறது. இரு தேர்தல்களில் தோற்றபோதும் திமுகவை கட்டுக்கோப்பாக நடத்திய முக.ஸ்டாலின் வென்று முதல்வராக உள்ளார். ஆனால், திமுகவினர் எதிர்பார்த்தது போல இந்த வெற்றி அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாமல், அவரது அடுத்த அரசியல் வாரிசுகளின் தலைமையில் நடைபெற்ற முதல் தேர்தல் இது. கருணாநிதியின் நேரடி வாரிசான ஸ்டாலின் தனது அரசியல் தலைமையை நிரூபிக்கும் கட்டாயமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் அடுத்த தலைமை தானே என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தன. இந்தச் சோதனையில் இருவருமே வென்றுள்ளனர்.

அதேசமயம், அதிமுகவை எளிதாக வென்று 200 இடங்களுக்கு மேல் பிடித்துவிடலாம் (மொத்த இடங்கள்: 234) என்ற திமுகவின் கணக்கு பொய்த்துப் போனது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அமைத்துக் கொடுத்த வியூகங்களும் திட்டங்களும் இல்லாதிருந்திருந்தால் திமுக ஆட்சியைப் பிடிப்பதே சவாலாக இருந்திருக்கும்.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக (66- 33.28 % வாக்குகள்), பாமக (5 – 3.8 % வாக்குகள்), பாஜக (4 – 2.63 % வாக்குகள்), பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி (1) ஆகியவை வென்றுள்ளன. திமுக கூட்டணியில் திமுக (126- 37.68 % வாக்குகள்), காங்கிரஸ் (18 – 4.28 % வாக்குகள்), விடுதலைச் சிறுத்தைகள் (4), மதிமுக (4), முஸ்லிம் லீக் (3) சிபிஎம் (2), சிபிஐ (2), கொமதேக (1), மமக (1), தவாக 91) ஆகியவை வென்றுள்ளன. திமுக கூட்டணி- 159; அதிமுக கூட்டணி- 75 இடங்களில் வென்றுள்ளன.

கூட்டணி பலத்தில் திமுகவே முதன்மை பெற்றிருந்தது. ஆளும் கட்சிக்கு எதிரான திருப்தியும் மக்களிடையே இருந்தது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் வளர்க்கப்பட்ட வெறுப்புணர்வுப் பிரசாரமும் திமுகவுக்கே சாதகமாக இருந்தது. ஊடகங்கள் (தினமணி, தினமலர் தவிர) பெரும்பாலானவை திமுகவின் ஊதுகுழலாக இருந்தன. சிறுபான்மையினரின் பெருத்த ஆதரவு, அரசு ஊழியர்களின் ஆதரவு ஆகியவை திமுகவுக்கு மிகவும் சாதகமான அம்சங்கள். இத்தனையையும் தாண்டி, இந்தத் தேர்தலை 20-20 கிரிக்கெட் பந்தயம் போல, கடைசி மணித்துளி வரை விறுவிறுப்பாக்கியதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் வியூகமும், ஆற்றலும் அளப்பரியன.

கொங்கு மண்டலத்தில் அதிகக் கவனம் கொடுத்தது, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தது, வன்னியர் உள்ளிட்ட பிற்பட்ட வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது, தேவேந்திர குல வேளாளர் என 7 ஜாதியினரை பெயர் மாற்றம் செய்தது, இலவச வாஷிங் மெஷின் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றுடன், தேர்தல் களத்தில் இறுதி வரை போராடினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோரின் பிரசாரங்களும் அதிமுகவுக்கு வலுக் கூட்டின.

எனினும், கூட்டணியில் தேமுதிகவையும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தையும் சேர்க்காததால் சுமார் 30 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவி உள்ளது. அதேபோல தினகரனின் அமமுக தனித்துப்,போட்டியிட்டதால் சுமார் 15 தொகுதிகளில் அதிமுக தோல்வியுற்றுள்ளது.

சுமார் 500 முதல் 3,000 வரையிலான வாக்கு வித்யாசத்தில் மட்டுமே அதிமுக இழந்த தொகுதிகள் 40-க்கு மேல். இதுகுறித்து தனியே ஆய்வு செய்யப்பட வேண்டும். பாஜக தலைவர் முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் 1,393 வாக்குகள் வித்யாசத்தில் தான் தோற்றார். பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனும், டாக்டர் சரஸ்வதியும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றனர். இதற்கு அதிமுக கூட்டணி வலிமை குறைவு என்பதே காரணம்.

தமிழகத்தில் வெற்றிவாகை சூடிய பாஜக வேட்பாளர்கள்

திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியாக சேர்த்துக் கொண்டிருந்தபோது, அதிமுக தரப்பில் ஒவ்வொரு கட்சியாக வெளியேறிக் கொண்டிருந்தன. இந்த நிலையை மாற்றி இருந்தால், அதிமுக நிச்சயமாக ஆட்சியை இழந்திருக்காது எனலாம்.

எது எப்படியோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அயராத உழைப்பு, அவர் அமைத்த கூட்டணி, அளித்த தேர்தல் வாக்குறுதிகள் போன்றவை அவரை ஆட்சிக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றுள்ளன. மக்களாட்சியின் மகத்துவமே அமைதியான ஆட்சி மாற்றம் தான். அவருக்கு வாழ்த்துக்கள்!.

இனிமேலாவது இந்து விரோதப் போக்கையும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்களையும் கைவிட்டு, தேச வளர்ச்சியையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு திமுகவின் அடுத்த தலைமை ஆட்சி செய்ய வேண்டும் என்பதே நாட்டு நலனை விரும்புவோரின் எதிர்பார்ப்பு. அதிமுக, பாஜக, பாமக ஆகியவை நல்ல எதிர்க்கட்சிகளாகச் செயல்பட வேண்டும் என்பதும் மக்களின் அவா.

மொத்தத்தில் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் காட்டுவது மக்களாட்சியின் மகத்தான சாதனையையே. மின்னணு வாக்கு இயந்திரம் மீதான சந்தேகமும் இப்போது அறவே நீங்கி இருக்கிறது. தேர்தல் கால கசப்புகளை மறந்து, மக்கள் சேவையில் அரசியல் கட்சிகள் இறங்க வேண்டிய தருணம் இது.

2 Replies to “ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்”

  1. டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் புதிய தமிழகம் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்க்காததும், மத்திய அரசு அறிவித்துள்ள மற்றும் சட்டமாக்கிய , பொருளாதார ரீதியிலான ஏழைகளுக்கு 10 % இட ஒதுக்கீடு அளிக்க மறுத்த தமிழக ஆளும் கட்சியான அதிமுக தோல்வியை தழுவநேரிட்டது . வன்னியர்களுக்கு மட்டும் 10.5 % தற்காலிக உள் ஒதுக்கீடு வழங்கி எடப்பாடியார் உத்தரவு போட்டார். வன்னியர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்கும் இதே போல , தற்காலிக உள்ஒதுக்கீடு ஒன்றை தேர்தலுக்கு முன்னரே செய்து கொடுத்திருக்கலாமே, வன்னியர்களை மட்டும் கவனித்துவிட்டு நம்மை புறக்கணிக்கிறார்கள் என்று கோபம் அடைந்தனர் .

    மதமாற்ற ஏஜென்ட் கமல் கட்சி தோற்றது எல்லோருமே எதிர்பார்த்தது தான் . தமிழகம் ஒரே ஒரு தீயசக்தியிடம் இருந்து தப்பித்தது .திமுகவின் பி டீம் ஆக இருந்து , திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரித்த கமல் படுதோல்வி அடைந்தார்

    திமுகவின் ஏஜெண்டாக செயல்பட்டு , அதிமுக வாக்குகளை பிரித்த தினகரன் கட்சியும் , ஒரே ஒரு இடத்தில் கூட வெற்றிபெறமுடியாமல், 2019 மக்களவை தேர்தலில் பெற்ற 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் பாதியை கூட பெறமுடியாமல், படுதோல்வியை அடைந்தது .

    சீமான் கட்சி தனது வாக்கு சதவீதத்தை கூட்டிக்கொண்டுள்ளது . கமல், தினகரன் இருவருமே தங்கள் கட்சியை வேறு ஏதாவது அரசியல் கட்சியுடன் இணைப்பது தான் ஒரே வழி அல்லது அரசியலை விட்டு, ரஜினி ஒதுங்கியது போல , விலகவேண்டும்.

  2. 2006 to 2011 தி.மு.க ஆட்சியில்தான் கருணாநிதியின் பேரன்களின் ஆதிக்கம் தமிழகம் முழுவதும் ஆரம்பமானது, குறிப்பாக தமிழ் திரைத்துறையைச் சுற்றி வளைத்தது –

    ஏற்கனவே கருணாநிதி குடும்பத்திற்கு பேரன் கலாநிதியின் மூலம் 40ற்கும் மேற்பட்ட TV சேனல்கள் இருந்தாலும், திரையுலகை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர்-

    கலாநிதிமாறன் 2008-ல் சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தார்-

    உதயநிதி ஸ்டாலின் 2008-ல் ரெட் ஜெயின்ட் மூவீஸ் ஆரம்பித்தார்-

    தயாநிதி அழகிரி 2008-ல் கிளஃவுட் நைன் மூவீஸ் ஆரம்பித்தார்-

    இதில் சன்பிக்சர்ஸ் 2008லிருந்து 2011 வரை மட்டும் 20ற்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டது

    இதில் முதல்படம் #காதலில்_விழுந்தேன் தொடங்கி –
    #படிக்காதவன் –
    #அயன் –
    #எந்திரன் –
    #சிங்கம் –
    #வேட்டைக்காரன் –
    #சுறா –
    போன்றவை பெரிய நடிகர்கள் நடித்த பெரியபட்ஜெட் படங்கள்-
    இவையில்லாமல் இன்னும் பல படங்கள் –

    ஆனால் 2011-ற்குப் பிறகு 2018 வரை ஏழு ஆண்டுகள் திரைத்துறை பக்கம் வரவில்லை –
    பிறகு 2018-ல் –

    #சர்கார் –
    #பேட்ட-
    #காஞ்சனா 3-
    #நம்மவீட்டுப்பிள்ளை-
    #அண்ணாத்த – என்று மீண்டும் பெரிய பட்ஜெட் படங்கள்-

    அடுத்ததாக, ரெட் ஜெயின்ட் மூவீஸ்-
    #வின்னைத்தாண்டிவருவாயா தொடங்கி வரிசையாக 26 படங்கள்-
    அதில் –
    #மதரஸாபட்டிணம் –
    #மைனா –
    #கோ-
    #ராஜாராணி –
    #அரண்மனை –
    #நேர்கொண்டபார்வை-
    #மாவீரன் –

    போன்றவை குறிப்பிடத்தக்கவை-

    அடுத்து, கிளஃவுட் நைன் மூவீஸ்-
    #தமிழ்படம் தொடங்கி –
    #பையா –
    #நான்மகான்அல்ல –
    #மங்காத்தா- என்று பல படங்கள் –

    2008 முதல் 2011 வரை மூன்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகமே இவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது –

    அதனாலென்ன படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாமே, தயாரிக்கலாமே என்று கேள்வி கேட்பவர்களுக்கு-

    எடுக்கலாம், ஆனால் இவர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை, நடிகர்களை காயடித்து அழித்துவிட்டனர் என்பதுதான் உண்மை –

    தி.மு.க ஆட்சியில் கமல், ரஜினி, விஜய், அஜித் தவிர்த்து சூர்யா, கார்த்தி, விஷால் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைக்கும், மற்றவர்களுக்கு தியேட்டர் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டும், இதனால் இன்றுவரை பெட்டிக்குள் தூங்கும் திரைப்படங்கள் ஏராளம், பிச்சையெடுக்கும் தயாரிப்பாளர்களும் ஏராளம் –

    மாதவன், மம்மூட்டி போன்றவர்களை இயக்கிய எனது நண்பர் ஒருவர்கூட அந்தக் காலகட்டத்தில் மூன்று படங்களை தயாரித்து இயக்கி வெளியிட முடியாமல் தூக்கிவீசிவிட்டார்-

    அதேபோன்று சினிமாவில் ஹிந்துமத எதிர்ப்புகளைப் பரப்பி, கிறிஸ்தவத்தை வளர்ப்பதும் இவர்கள்தான் –

    வடஇந்தியப்படங்கள், தெலுங்குப் படங்கள் தேசியத்தைப் போற்றியும், ஆன்மிகத்தைப் புகுத்தியும் திரைப்படங்கள் எடுத்துவரும் வேலையில் –

    இவர்கள் இன்றும், ஈழத் தமிழர்கள், விவசாயிகளை மத்திய அரசு நசுக்குகிறது, தாழ்த்தப்பட்டவர்களை செருப்பு போடவிடுவதில்லை போன்ற கதைகளைச் சுற்றியே வருவதற்கும் இவர்கள்தான் காரணம் –

    இன்று மீண்டும் இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது, இனிவரும் காலங்களில் தமிழ்படங்களையும், திரையுலகின் கதியையும் நினைத்தாலே பயமாக இருக்கிறது –

    இந்த நல்லவர்களை ஆதரித்து வாக்களித்த தமிழக மக்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது –

    இலவசம், குடி, சினிமா இவை மூன்றிற்கும் தமிழகம் அடிமையாகக் கிடக்கிறது –

    அதில் திராவிட தலைவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *