புதிய பொற்காலத்தை நோக்கி – 17

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

முந்தைய பதிவுகளை படிக்க

நாம் அதிக கவனம் கொடுத்துப் பார்க்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் கழிவுகள் அகற்றுதல், தெருக்களைத் தூய்மைப்படுத்துதல், நீர் தேங்காத சாலைகள் அமைத்தல் போன்றதுதான்.

இதில் குப்பைக் கழிவுகள், சாக்கடை, மலம், மருத்துவக் கழிவுகள் அகற்றுதல் என்பது உடனடியாக நாம் கவனம் கொடுத்தாகவேண்டிய விஷயம். நவீன விஞ்ஞானக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாகவேண்டிய முதல் துறை இதுவாகவே இருந்திருக்கவேண்டும்.

சிந்து சரஸ்வதி காலகட்டத்திலேயே ஒவ்வொரு வீட்டின் பின் புறம் இருக்கும் கழிப்பறையில் இருந்து கழிவுகள் ஒரு கால்வாய் வழியாக தெருவின் கடைக்கோடியில் ஓரிடத்தில் சேகரமாகி ஒவ்வொரு தெருவின் கழிவுகள் எல்லாம் ஊருக்கு வெளியே ஓரிடத்தில் சென்று கலக்கும் வகையில் மிக அற்புதமான கட்டமைப்பு இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. இமய மலையில் இருந்து புறப்பட்ட சரஸ்வதி நதி சிந்து சாகரத்தில் என்று சேர்ந்தது வரையில் (கிரிபயாய சமுத்ராத்] சிந்து சரஸ்வதி பூமியில் வேத கலாசாரம் செழித்து விளங்கிய காலகட்டத்தில் தூய ஆத்மாக்களான ரிஷிகள் உரத்தகுரலில் வேத கோஷங்கள் முழங்கிக் கொண்டு புனித வேள்வித் தீயில் நெய்வார்த்துக்கொண்டு இருந்ததோடு கழிப்பறை, கழிவுநீர் மேலாண்மையிலும் அந்த பூமி சிறந்து விளங்கியிருக்கிறது. சமூகத்தின் கடைநிலைப் பணிகளைச் செய்பவர்கள் மேல் அக்கறையோடு விளங்கிய அந்த காலகட்டத்து தொழில்நுட்ப மேன்மையையும் சமத்துவ உணர்வையும் சமூக அக்கறையையும் நாம் மீட்டெடுத்தாகவேண்டும்.

இன்று இதுபோன்ற விஷயங்களில் மேற்குலம் மிகப் பெரிய சதனையைச் செய்துவிட்டிருக்கிறது. தூய்மையான தெருக்கள், முழுவதும் எந்திரம்யமாக்கி கைகளால் தொடாமல் குப்பை கழிவுகள் அகற்றுதல், தேசம் முழுவதும் அதி அற்புதமான வடிகால் வசதிகள் என அது இந்தத்துறையில் உலகுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. நாம் நமது முன்னோர்களைப் போல் இன்றைய மேற்குலகத்தைப்போல் இந்த விஷயங்களில் முழு கவனத்தை உடனே திருப்பியாகவேண்டும். போலியோ இல்லாத தேசம் என்ற இலக்கை எப்படி போர்க்கால நடவடிக்கைபோல் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறோமோ அதுபோலவே நம் தேசத்தில் எந்தவொரு இழிவான கழிவு அகற்றும்பணியும் மனிதரால் செய்யப்படாது என்ற உறுதிமொழியை ஏற்று மிக குறுகிய காலத்தில் அதைச் செய்துகாட்டியாகவேண்டும்.

ஃப்ளெஷ் டாய்லெட்கள் என்பவை மனித மலத்தை மனிதரே அகற்றும் துயர நிலைக்குப் பெருமளவுக்கு முடிவுகட்டிவிட்டிருக்கின்றன. ஆனால், 17-18ம் நூற்றாண்டு வாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நவீன கழிப்பறைகள் நம் தேசத்தில் பரவலாக நிறுவப்பட 21ம் நூற்றாண்டுவரை ஆகியிருக்கிறது. இன்றும் தேசத்தில் காடுகள், புறம்போக்கு நிலங்கள், மலைப்பகுதிகள் என வசிப்பிடத்துக்கு ஏற்ப திறந்த வெளியில் மலம் கழிப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வழிமுறை இருக்கும் பகுதிகளில் மனித மலத்தை மனிதர் அள்ளுவது இல்லை. என்றாலும் ஃப்ளெஷவுட் டாய்லெட்கள் அனைத்துவீடுகளிலும் அமைக்கப்படவேண்டும் என்பது மிக எளியதொரு எதிர்பார்ப்புதான்.

சுதந்தரம் அடைந்து அறுபது எழுபது ஆண்டுகள் கழித்தும் திறந்த வெளியில் மலம் கழிக்காதீர் என்று விளம்பரமும் கழிப்பறைகளுக்கான மானியமும் கொடுக்கவேண்டிய நிலை இருப்பதைப் பார்க்கும்போது சிந்து சரஸ்வதி கலாசாரத்தின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்ள நமக்கு எந்த உரிமையும் இல்லை.

அதுபோல் சாக்கடைகளை சுத்தம் செய்தல், வீட்டுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் இவற்றைக் கையாளவும் பல நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இவற்றை நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் போதிய கவனமும் வேகமும் காட்டப்படவே இல்லை. பள்ளிகளில் எல்.கே.ஜியில் சேர்ந்த குழந்தையைக் கேட்டால் கூட நாம் மருத்துவராக விரும்புகிறேன். கணினி துறையில் சாதிக்க விரும்புகிறேன் என்று மழலையில் தட்டுத் தடுமாறிச் சொல்லவே பயிற்றுவிக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும். வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் கொல்லைப்புறப் பணிகள் சார்ந்து தொழில்நுட்பமும், கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கவேண்டும்.

ஒவ்வொரு வீட்டில் இருந்து வெளியேறும் கழிவையும் குப்பைகளையும் அவரவரே சரிசெய்யும் வகையில் கண்டுபிடிப்புகள் பெருக வேண்டும். இன்று மாநகரங்களில் கூட திறந்த நிலையிலான சாக்கடைகள் அமைக்கப்படுகின்றன. இன்று நகரத்தை இணைப்பது இந்தச் சாக்கடைகளே என்று சொல்லும் அளவுக்கு எந்தத் தெருவுக்குச் சென்றாலும் ஓரமாக ஒரு சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் துப்புரவுப் பணியாளர்கள் வெறும் தொரட்டி போன்ற கழியினால் சாக்கடையை அடைக்கும் மண், குப்பைகளை எடுத்து சாக்கடையில் ஓரத்திலேயே போட்டுவிட்டுச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

அந்த சாக்கடையை சிமெண்ட் போட்டு வலுவாகக் கட்டியிருக்கும் மாநகராட்சி கால்வாயின் அடிப்பகுதியிலும் சிமெண்டைப் போட்டு மூடியிருக்கின்றன. இதனால் அந்த சாக்கடை நீர் மண்ணுக்குள் உறிஞ்சப்படாமல் அப்படியே தேங்கியே நிற்கின்றன. பக்கவாட்டுச் சுவர்கள் சிமெண்டால் கட்டியதில் தவறில்லை. பூமிக்குள் அந்த நீர் போகமுடியாமல் சிமெண்ட் போட்டதுதான் தவறு. அதை மாற்றியமைத்தால் நிலத்தடி நீரும் உயரும்.

இப்படியான சாக்கடை நீரை சுத்தம் செய்து பயன்படுத்துவது தொடர்பாக நமக்கு மனரீதியாக பெரும் தடை இருக்கிறது. இவற்றை சுத்தம் செய்து தோட்டங்களுக்கும் கால்நடைகளுக்குமாகப் பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு வீட்டிலுமே அல்லது தெருக்களில் இப்படியான சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பது மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

அதுபோல் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொட்டப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரித்துக் கொடுக்கச் சொல்லவே நமக்கு பல ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் காய்கறிக் கழிவுகள் முதலான மட்கும் குப்பைகளைப் பயன்படுத்தி அந்த வீட்டுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். பிரிட்ஜ், கிரைண்டர் இருப்பதுபோல் காய்கறிக் கழிவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் அல்லது தெருவிலும் பயோ கேஸ் உருவாக்கும் கருவிகள் அமைக்கப்படவேண்டும்.

இது எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுவதோடு கழிவுகளை அகற்றும் பணியில் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுதலையையும் பெற்றுத்தரும். இன்று அந்தப் பணிகளைச் செய்பவர்களை இந்தக் கருவிகளை உற்பத்தி செய்து விற்கும் தொழில் முனைவர்களாக ஆக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். ஒரு வேலை கடினமாகவும் இழிவாகவும் பொருளாதார லாபமற்றதாகவும் இருந்தவரை ஒரு குலத்தினரைச் செய்யவைத்துவிட்டு நவீன எந்திரங்கள் மூலம் அந்த வேலை எளிதாகி பொருளாதாரீதியாக லாபகரமாகும்போது அவர்களை அதில் இருந்து அப்புறப்படுத்துவது சரியல்ல. அவர்கள் வேறு வேலைகளை விரும்பும் நிலையில் அதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் அதே நேரத்தில் இந்தப் புதிய தொழில் முனைவில் அவர்கள் ஈடுபட முன்னுரிமை தருவதும் அவசியமே.

இந்தத் துறையில் பெரும்பாலான நவீன கருவிகள் போதிய அளவுக்குக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இன்னும் நிறைய கண்டுபிடிக்கப்படும் என்றாலும் இதுவரை கண்டுபிடித்தவற்றை நம் தேசத்தில் முழுவீச்சில் அமல்படுத்தவேண்டும். மாநகரின் தலைநகரில் ஓடிய அழகிய நதியை சாக்கடையாக்கி கூவம் என்றாலே முகம் சுளிக்கும்படியாக வைத்திருக்கும் நாம் முதல்கட்டமாக கழிவு, குப்பை போன்றவற்றில் ஈடுபடும் நபர்களை அதிலிருந்து விரைவில் விடுதலை செய்தாகவேண்டும்.

இப்படி இன்றும் நம் நாட்டில் இருக்கும் இழிவான, கடினமான பணிகளுக்குத் தீர்வாக என்னெவெல்லாம் கண்டுபிடிக்க முடியும் என்ற அடிப்படையில் பள்ளிகளில் ப்ராஜெக்ட்கள், எக்ஸிபிஷன்கள் நடத்தப்படவேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்கள், நவீன கருவிகள், வாகனங்கள், பாதுகாப்பு கவசங்கள் தருவது எவ்வளவு முக்கியமோ அதுபோல் அந்தத் தொழில் சார்ந்த பார்வையை மாற்றுவதும் அதன் பொருளாதார வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதும் மிகவும் அவசியம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு பின் அலுவலகப் பணிகள் செய்து தேசத்தின் அந்நியச் செலாவணியைப் பெருக்கிவரும் இந்திய கார்ப்பரேட்கள், கணினி நிறுவன்ங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன்ங்கள் எல்லாம் அதிக கவனம் செலுத்துவேண்டிய துறை இதுவே.

என் தேசத்தில் கையால் கழிவுகளைக் கையாளும் என் சகோதரர் ஒருவர் கூட இருக்கமாட்டார்.

என் தேசத்தில் எந்த மழைக்கும் இனி சாலைகளில் நீர் தேங்காது.

என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும்.

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு அலுவலகமும் தனது குப்பை, கழிவு அகற்றும் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்ளும்.

எனது தேசத்தில் தெருக்களில் இனி குப்பைகள் சேகரமாகாது.

எனது தேசத்தில் மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படும்

என்பது போன்ற உறுதிமொழிகளே பள்ளிகளில், கல்லூரிகளில், விஞ்ஞான மையங்களில் முழங்க வேண்டும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *