சங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்

சங்கரரைப் பற்றிய சிறப்பான அறிமுக நூல்களில் ஒன்று டி.எம்.பி.மகாதேவன் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஆங்கில நூல் (1964). ஒரு இனிய ஆச்சரியமாக, கரிச்சான் குஞ்சு மொழிபெயர்ப்பில் இதன் தமிழாக்கம் வெளிவந்து (1994) இணையத்திலும் கிடைக்கிறது (சுட்டி கீழே). தத்துவப் பேராசிரியர் எழுதிய மூலநூல், சிறந்த இலக்கியவாதியின் கவித்துவமிக்க உரைநடையில் தமிழில் ஒரு தனி மெருகைப் பெற்று விட்டது. 130 பக்கங்களே கொண்ட இந்த சிறிய நூலில் முதல் பாதியில் சங்கரரின் வாழ்க்கைச் சரிதமும், பின்பாதியில் தத்துவ தரிசனமும் சிறப்பாக விளக்கப் பட்டுள்ளன. இறுதியில் சங்கர் நூல்களிலிருந்து சில பகுதிகள் என்று ஒறு சிறு தொகுப்பும் தரப்பட்டுள்ளது.

வரலாறு, சங்கர விஜய நூல்களின் விவரணங்கள் இரண்டையும் தொட்டுச்செல்வதாக வாழ்க்கைச் சரிதம் அமைந்துள்ளது. சங்கரர் காலம் குறித்த அனைத்து பாரம்பரிய ஐதிகங்கள், பின்பு வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கள் அனைத்தையும் கொடுத்து, இறுதியில் பொ.யு. 7-8ம் நூற்றாண்டு என்ற முடிபையும் அளித்திருக்கிறார். சில இடங்களில் தனது கருத்தையும் உறுதியாக எடுத்துரைக்கிறார். மண்டன மிஷ்ரருடன் வாதம் முடிந்ததும் அவரது மனைவி ஸரஸவாணி காமசாஸ்திரம் பற்றி வாதம் புரியத்தொடங்க, அதை அறிந்திராத சன்னியாசியான சங்கரர் அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து வாழ்ந்து அதை அறிந்து வந்ததாக ஒரு கதை வழங்குகிறது. இது குறித்து “சற்றும் பொருத்தமும் பாந்தமும் இல்லாத ஒரு கதையை இடைச்செருகலாகச் சிலர் சேர்த்துச் சங்கரருடைய வரலாற்றைக் கூறியுள்ளனர்” (பக். 35) என்று கூறுகிறார்.

இந்தச் சிறிய நூலில் கூட நுண்தகவல்கள் செறிந்து கிடக்கின்றன. உதாரணமாக, “மண்டனரமிஸ்ரர் மாஹிஷ்மதி என்னும் ஊரில் வாழ்பவர். இந்த ஊர் இருந்த இடம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் உண்டு. விதர்ப்பதேசம் என்று மாதவீயம் கூறும். காஷ்மீரம் என்று கூறுகிறது. சித்விலாசீயம். வியாஸாசலீயம் என்ற நூல் மகதநாடு என்று குறிப்பிடுகிறது. பிஜ்ஜலபிந்து என்று வழங்கும் ஹஸ்தினாபுரத்திற்கு அருகில் உள்ள வித்யாலயம் என்பதே மண்டனர் வசித்த இடம் என்று ஆனந்தகிரி கூறுகிறார்”. (பக். 32) . நூலாசிரியர் காஞ்சி மடச்சார்புடையவர் என்றாலும், ஸரஸவாணியாக அவதரித்த சரஸ்வதி தேவியே சிருங்கேரியில் சாரதையாகக் குடிகொண்டாள் என்பதையும் அங்கு பீடம் அமைத்ததையும், அதோடு காஞ்சியிலும் மடம் அமைத்தார் என்பதையும் பட்சபாதமின்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்துமத வரலாற்றில் சங்கரரின் மகத்தான பணியை நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“…தவறான சமயக்கொள்கைகள் மக்களைத் தவறான பாதையில் செலுத்திக் கொண்டிருந்த காலம் அது. புதிதாய்ப் பரவிய நாத்திகர்களின் கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்கு வழிகாட்ட காலத்திற்குப் பொருந்தாத வறண்ட சடங்குகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதைத் தவிர வேறு சிறந்த வழிகாட்ட முடியாமல் பழைய வைதிகக் கொள்கைகளும் மங்கிக்கிடந்தன. அந்த நிலையில் சங்கரர், உபநிஷதங்களுடைய தத்துவத்தின் சிகரத்தை அடைந்து, அங்கிருந்து சாசுவதமான வாழ்வுக்கான புண்ணிய தீர்த்தத்தை மக்களின் நலத்திற்காகக் கொண்டு வந்தார்.

சங்கரர் எதையும் அழிக்க அவதரித்தவர் இல்லை. நிரப்பி நிறைவு செய்யவே வந்தவர் அவர். அவர் போதித்த அத்வைத தத்துவமே பல்வேறு சிந்தனை முறைகளுக்குப் போட்டியாக வந்த தத்துவமும் அன்று. பரமாத்மா வேறு ஜீவாத்மா வேறு என்று கூறும் துவைத வகைத் தத்துவங்களுக்கும் பிரம்மம் ஒன்றே உண்டு என்று கூறும் அத்வைத தத்துவத்திற்கும் இடையே பேதம் போன்ற பிணக்கு எதுவுமே இருக்கமுடியாது என்று கௌடபாதர் – சங்கரருடைய குருவுக்கும் குருவானவர் – ஏற்கனவே எடுத்துரைத்திருந்தார். யாரும் தனது கை,கால் முதலிய உறுப்புகளுடன் பிணக்கு கொள்வதில்லை; அதேபோல் அத்வைத தத்துவம் மற்ற தத்துவ முறைகளுடன் மாறுபட்டுப் பிணங்குவது கிடையாது. சங்கரர் தத்துவத்தின் ஒருமைப்பாட்டையும், முழுமையையும் கண்டறிந்தார். அவ்வாறு தான் உணர்ந்ததைக் குழப்பமும் முரண்பாடுகளும் நிறைந்திருந்த அந்தக் காலத்தில் அதை வெளியிட்டு உறுப்புகள் போன்ற வெவ்வேறு கொள்கைகளையும் அந்த உறுப்புக்களைக் கொண்ட முழுமையான தத்துவத்துடன் இடமளித்து உரிய வகையில் இணைத்து முழுமைக்கும் அதன் உறுப்புக்களுக்கும் இடையே இருந்த பிணக்கை நீக்கினார். சங்கரருடைய மகத்தான குறிக்கோள் அத்வைதக் கொள்கையை நிலைநாட்டுவது மட்டும் அன்று, ஆறு தரிசனங்களுக்குள் முரண்பாடே இல்லை என்று நிறுவுவதும் அவருடைய குறிக்கோள் ஆகும்… வைதிகக் கொள்கைகள், புறச்சமயக் கொள்கைகள் ஆகிய இரண்டுமே சங்கரர் அவற்றைப் பற்றிக் கூறிய சாதகமான விமர்சனத்தால் பயனடைந்தன… சங்கரர் செய்த விமர்சனத்தால் இரு சாராருமே நஷ்டம் அடையவில்லை. கர்மங்கள், சடங்குகள் – தத்துவஞானத்திற்கு அடிப்படையாய் அமையும் பூர்வாங்கப் பயிற்சி என்ற வகையில் அவற்றுக்குரிய பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டன. புத்தர் வற்புத்திய மிக உயர்ந்த அஹிம்சை – கொல்லாமை என்பது வேதத்திற்குத் தெரியாத, அது கற்பிக்காத அறம் அன்று, அதைச் சங்கரர் இந்து மத அடிப்படையிலான வாழ்க்கை நெறிக்கு இன்றியமையாத ஆசாரமாக, தர்மமாக நிலைநாட்டினார்…” (பக். 37-38)

சைவம், வைஷ்ணவம் முதலான அனைத்து சமய மரபுகளையும் சங்கரர் வலுப்படுத்தியதையும் அத்வைத தரிசனம் மூலம் இணைத்ததையும் குறிப்பிடுகிறார்.

“இந்துக்களின் சமய வாழ்க்கையில் புண்ணிய யாத்திரைத் தலங்களும் திருக்கோயில்களும் முக்கியமான இடம் வகிக்கின்றன. இத்தகைய பல தலங்கள் கோயில்கள் ஆகியவற்றில் பெரும்பாலான இடங்களுக்கு சங்கரர் யாத்திரை செய்தார். தவறான முறையில் வழிபாடு நடந்துகொண்டிருந்த இடங்களில் உரிய திருத்தங்களைச் செய்தார். பல இடங்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை அகற்றினார். மிகவும் உக்கிரமான தெய்வங்களை சாந்தமும் அருளும் நிறைந்தனவாக மாற்றி அமைத்தார். பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரையிலும், காஷ்மீரத்திலிருந்து நேபாளம், அஸ்ஸாம் வரையிலும், துவாரகையிலிருந்து புரி வரையிலும் உள்ள பல்வேறு கோயில்களிலும் சங்கரர் மேற்கூறியபடி தெய்வங்களை அருள்வழிப்படுத்திய மரபான வரலாறு அந்தந்த இடங்களில் இன்றும் வழங்கி வருகிறது” (பக். 55)

நூலின் pdf வடிவத்தை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

சங்கரரின் தத்துவ ஞானம் என்ற பகுதியில் உள்ள சில அழகிய மேற்கோள்களைக் கீழே அளித்திருக்கிறேன்.

“பிரும்மம் குறித்து உபநிஷதங்களில் உள்ள மாறுபட்ட கருத்துக்களை எப்படி நாம் ஒத்துப்போகச் செய்து ஏற்றுக்கொள்வது? இந்த பிரசினையை சமாளிக்க சங்கரர் வாத அடிப்படையில் இரண்டு நிலைகளை அமைத்துக் கொள்கிறார். பாரமார்த்திகம் – அதாவது பிரும்மத்தின் யாவற்றுக்கும் மேற்பட்ட பொருள்நிலை என்றும், வியாவஹாரிகம் – உலக வழக்கத்தை ஒட்டிய தொடர்பு அமைந்த பொருள்ந்லை என்றும் இரண்டு நிலைகளை மேற்கொள்கிறார்… யாவற்றுக்கும் அப்பாற்பட்ட உண்மையான பிரும்மம் எந்த வகையான வரம்புகளுக்கும் உட்பட்டது அன்று. அதற்கு அடைமொழிகளோ, அடுத்த குணங்களோ, கோலங்களோ, குறிகளோ எதுவும் இல்லை. அனுபவ உலகம், அனுபவிக்கும் ஜீவன்கள் ஆகியவற்றின் தொடர்பு கொண்டு காணும்போது, அந்த பிரும்மமே கடவுள் எனப் பெயர் பெறுகிறது. பிரும்மம் ஒன்றுதான். அடைமொழிகள் சேராது, நிர்க்குணம். அடைமொழிகள் சுமத்தப்பட்டது சகுணம். சிலர் தவறாக விமர்சிப்பது போல், இங்கே இரண்டு பிரும்மங்கள் இல்லை. பிரும்மத்தை பரப்பிரும்மம் என்று கூறிக் கடவுளை அபரபிரும்மம் என்று கூறும் வழக்கம் உள்ளது. இதன் பொருள் பிரும்மம் தன் தகுதியில் தாழ்ந்துவிட்டது என்பது அன்று. உலகச் சார்புடைய நமது அனுபவம் என்ற தாழ்ந்த நிலையிலிருந்து பார்க்கும்போது கடவுள் பிரும்மம் ஆகிறது என்பதே இதன் பொருள். இது பிரும்மத்தின் இரண்டு வடிவங்களே தவிர இரண்டு பிரும்மங்கள் இல்லை” (பக். 72)

“கடவுள்தான் சட்டம் இயற்றுவதாகவும் சட்டமாகவும் இருப்பது. அது ஜீவன்களின் உள்ளேயே இருந்து அவற்றை ஆளவும் செய்கிறது. கடவுளின் இந்த ஆட்சியின் இறுதிக் குறிக்கோள் அந்த ஜீவன்களை பிறவிப் பிணிப்பிலிருந்து விடுதலை – மோட்சம் பெறுவிப்பதே” (பக். 78).

“ஜீவனும் கடவுளும் ஒன்றுதான் என்னும்போது அத்வைதத்தில் கடவுளுக்கு இடம் ஏது என்ற கேள்வி பிறக்கும். இதற்கு மிக்க எளிய விடை உண்டு. “அது நீ தான்” (தத்வமஸி), “நானே பிரும்மம்” (அஹம் பிரும்மாஸ்மி) என்பன போன்ற அபேத வாக்கியங்களில்- அதாவது வேறுபட்ட தன்மை இல்லை என்று கூறும் வாக்கியங்களில் – கூட, ஜீவனும் கடவுளும் ஒன்று என்று உபதேசிக்கப்படவில்லை. அந்த இரண்டு வாக்கியங்களிலும் உள்ள இரண்டு சொற்களுக்கும் நேரடியான முக்கியப் பொருளைக் கொள்ளாம, அதன் தொடர்புடைய ஆகுபெயர்ப் பொருளை – முக்கியமல்லாத அடுத்த பொருளை – கொள்வதும் அதற்காகத் தான். இரண்டு சொற்களுக்குமான இரண்டாவது அர்த்தத்தை அதாவது தொடர்பால் தழுவும் அர்த்தத்தையே கொள்ளவேண்டும். பெயரும் வடிவமும் போன்ற அளவுகளுக்கு உட்பட்டுள்ள நீயும் நானும் பிரும்மம் என்பது பொருள் ஆகாமல், இத்தகைய அளவுகளுக்குப் படாத பரப்பிரும்மமே இச்சொற்களுக்குப் பொருள் ஆகின்றது. ஆத்மா தான் பிரும்மம் என்று தான் அத்வைதம் நமக்குச் சொல்கிறது (வெறும் ஜீவன் ஆத்மா அன்று). ஜீவனே கடவுள் என்று அத்வைதம் சொல்லவில்லை” (பக். 74-75)

“மிகப்பெரிய உண்மை என்னவென்றால், எது இல்லையோ அதுவே மாயா (யா=எது, மா=இல்லை). நமது நோக்கிற்கேற்பக் கூறுவதானால், மாயை கடவுளுடைய பேராற்றலாகப் புலப்படுகிறது. ஆனால், அது நமது அறிவுக்கு எட்டாதது. அந்த மாயை உண்மையை மறைத்து, உண்மை அல்லாததைக் காட்டுகிறது. மாயையின் மறைக்கும் ஆற்றலை ஆவரணம் என்றும், உண்மை அல்லாததைக் காட்டும் ஆற்றலை விக்ஷேபம் என்றும் கூறுவர். இந்த மாயை உண்மையானதா, உண்மை அல்லாததா என்று கேட்டால், அதற்கு ஒரே ஒரு விடைதான் உண்டு. அது உண்மையானதும் அன்று, உண்மை அல்லாததும் அன்று. பன்மை மிக்க உலகம் நமக்குப் புலனாகிறது. எனவே மாயை உண்மை அல்லாதது இல்லை. அத்வைத ஞானம் வரும்போது – இது இல்லை என்று தர்க்க யுக்தி எடுத்துக்காட்டுகளால் மறுக்கப்படும்போது இது இல்லாமல் ஆகி விடுகிறது. அது உண்மையாகவும், உண்மை அல்லாததாகவும் இருக்கமுடியாது. ஆகவே மாயை இத்தகையது என்று அறுதியிட்டுக் கூறமுடியாதது (அநிர்வசனீயம்). இதைப் பற்றி ஆராய்வதும் கூட இந்தத் தத்துவத்தைப் புரியவைப்பதற்காக அன்று. அதைக் கடந்து மேலே செல்லத்தான்..” (பக். 81)

“அத்வைதக் கொள்கையின் படி, ஞானயோகம் – அதாவது மெய்ஞ்ஞான நெறிதான் மோட்சத்திற்கு நேரான வழி ஆகிறது. அத்வைதம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்றால், மோட்சம் என்பது ஏதோ புதிதாக அடையக்கூடியதன்று. அதுவே தான் ஆத்மாவினுடைய இயல்பான நிலை. ஆக, அது என்றும் உள்ள நித்திய நிலையே தவிர புதிதாக முயன்று பெறத்தக்கதன்று. அதனால் தான் சங்கரர் யாகம் போன்ற செயல்களே மோட்சத்திற்கான வழி என்று கூறும் மீமாம்ஸைக் கருத்துக்கு எதிராக, செயல்களே மோட்சத்திற்கு வழி ஆகமாட்டா என்று வலியுறுத்துகிறார். செயல்கள் மூலம் பெறும் எதுவே அழியக் கூடியது தான். எனவே, எத்தகைய பற்றுக்கோடும் சார்பும் இல்லாத விடுதலையையே இயல்பாகக் கொண்ட மோட்சம் என்பது செயல்களின் பயனாக வருவதில்லை… ஆத்மாவின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு உணர முடியாமல் தடுப்பது அவித்தை தான். கைவரச் செய்யவேண்டியதெல்லாம் இந்த அவித்தையை அகற்றுவது தான். ஞானத்தினால் மட்டுமே அவித்தையை அறவே அகற்ற முடியும்” (பக். 85)

“இந்த ஞானமார்க்கத்தில் செல்வதற்கு வேண்டிய ஆற்றலும் தகுதியும் பெறுவதற்கான வழிகளே யோகங்கள் எனப்படுவன. கடமைகளைப் பயனில் பற்றின்றிச் செய்வதே கர்மயோகம். தனது இஷ்டதெய்வத்தைத் திடமாகவும் ஒன்றையும் சாராமலும் பக்தியுடன் வழிபடுவதே பக்தியோகம். மனத்தை ஏகாக்ரமாக ஒரே நினைவுடையதாகச் செய்வதே தியான யோகம்” (பக். 86)

“யோகங்களின் மூலமாக ஞானத்திற்கான தடைகள் களையப்பட்டு, ஆத்ம விசாரமும் வெற்றிகரமாகத் தொடரப்பட்டால், இரவின் முடிவில் தவறாமல் சூரியன் உதிப்பது போல அத்வைத தத்துவ ஞானமும் உதிக்கும். ஞானோதயத்தை சூரியோதயத்தோடு ஒப்பிட்டுக் கூறுவது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், உண்மையில் நடப்பது என்ன? சூரியன் உதிப்பது அன்று; நடப்பது வெளிச்சத்திற்குத் தடையாய் நின்ற இருள் விலகுவது தான். அஞ்ஞானம் நீங்கியதுமே ஆத்மா தானே புலப்பட்டு விளங்குகின்றது. இதைத்தான் மோட்சம் என்கிறோம்.. இந்த மோட்சம் ஆத்மாவின் சாசுவதமான இயல்பு. ஆகவே யாரும் பூத உடல் இறக்கும் வரை மோட்சம் பெறக்காத்திருக்க வேண்டியதில்லை. ஒருவன் ஓர் உடலில் குடியிருக்கும் போதே ஞானம் வந்ததும் மோட்சம் பெற்று விடுகிறான். அப்படிப் பட்டவன் தான் ஜீவன் முக்தன் – உயிர் வாழும்போதே வீடு பெற்றவன் எனப்படுவான்” (பக். 87).

“பிரும்மம் ஒன்றுதான் உண்டு என்று அறியும்போது அச்சம் இல்லாத அபய நிலையை அடையலாம். அத்வைதம், அபயம் என்பன ஒரே அனுபவத்திற்குள்ள இரண்டு பெயர்கள், அவ்வளவு தான். இந்த அனுபவம் மனிதராய்ப் பிறந்தோர் அனைவருக்கும் பிறப்புரிமை. ஆகவே இதைப் பெறுவதில் எத்தகைய தடையும் யாருக்கும் இல்லை. வேள்வி முதலியன செய்வதை விதிக்கும் கர்ம மார்க்கத்திலுள்ளது போல இதில் இன்னாருக்கே உரியது என்னும் வேற்றுமைச் சிறப்பும் கிடையாது. பிரும்மம் – பிரும்மஞானம் ஆகியவற்றைப் பொருத்தவரையில் காலம், இடம், சூழ்நிலை போன்றவற்றின் மீதான வேற்றுமைச்சிறப்பு கிடையாது. தற்கால மனிதர்களாகிய நாமும் பழங்காலத்துப் பெரிய ரிஷியாகிய வாமதேவரைப் போன்றே – அவரைப் போன்ற தவமோ ஆற்றலோ இல்லாவிடினும் கூட – பிரும்மத்தை அறிய உரிமையும் ஆற்றலும் உடையவர்களாகலாம். இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வருமாறு மனிதகுலம் அனைத்தையுமே கூவி அழைத்தும் வழிகாட்டியும் சங்கரர் (நலத்தைச் செய்பவர்) தன் பெயருக்கேற்ப இந்த உலகிற்கே பெரிய உதவி செய்த மகா உபகாரி ஆனார்” (பக். 89)

நூலின் pdf வடிவத்தை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *