ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1

எமது சமய வழிபாட்டு மரபில் இரு வகையான பாரம்பரியஙகள் உள்ளதைக் காணலாம்.

வேத, ஆகம மரபு / தந்தை வழி மரபு (CONVENTIONAL WORSHIP):

ஆகம நியமங்களின்படி வழிபாடுகளாற்றும் மரபு எங்கும் பரவலாக உள்ளது. இதற்கான விதிமுறைகள் ஆகம நூல்களிலும், அவற்றின் வழி வந்த பத்ததிகளிலும் உள்ளன. இவ்வாறு சைவத்துக்கு இருபத்தெட்டு சிவாகமங்களும், 207 உப ஆகமங்களும், பதினெட்டு பத்ததிகளும் உள்ளன. இவற்றுள் இன்று சைவக்கிரியை மற்றும் வழிபாடுகளுக்கு அடிப்படையாக உள்ளவை காரணம், காமிகம் என்னும் இரண்டு சிவாகமங்களும், முருக வழிபாட்டுக்குரிய குமாரதந்திரம் என்னும் உப ஆகமமும், சோமசம்பு பத்ததி, அகோரசிவ பத்ததி என்னும் இரு பத்ததிகளுமாம். மகுடாகம முறை திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் சிதம்பரம் போன்ற சில ஆலயங்களில் பின்பற்றப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

இதே போலச் சாக்தத்துக்கு அறுபத்து நான்கு ஆகமங்கள் உள்ள போதிலும் கௌலம் என்னும் சாக்த அகமமும், யாமளம் என்னும் சைவ/ சாக்த ஆகமமுமே சக்தி வழிபாட்டில் தீவிரமாக உள்ள சாக்தர்களால் பின்பற்றப்படுகின்றது.

”உன் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே”

என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் என்னும் பெயர் பெற்ற சுப்பிரமணிய பட்டர் பாடுகின்றார்.

வைணவ மரபில் பாஞ்சராத்திரம், வைகானசம் என்னும் இரண்டு ஆகமங்கள் இராமானுஜர் காலத்தில் இருந்து தெனிந்தியாவில் வழக்கில் உள்ளன. திருவேங்கடத்தில் வைகானச ஆகமமும், திருவரங்கத்தில் பாஞ்சராத்திர ஆகமமும் நடைமுறையில் உள்ளன. இருந்த போதிலும் ஈழத்து வைணவ ஆலயங்களில் சிவனுடைய நவந்தரு பேத வடிவங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படிகின்ற மஹாவிஷ்ணு ஆலயங்களில் தொன்று தொட்டு சிவாகம மரபுப்படியே பூசைகள், திருவிழாக்கள் நடைபெறுவது வழமை. இதற்கான பத்ததி கையெழுத்துப்பிரதியாக ஈழத்துச் சிவாச்சாரியார்களிடம் இன்றளவும் வழக்கில் உள்ளது. ஆயினும் இதுவும் தென்னிந்திய வைணவ ஆகம மரபை ஒட்டி திருத்தப்படுவருவது கவலைக்குரியது. தென்னிந்திய வைணவ ஆகமங்களையும் அதன் வழி ஒழுகும் பட்டர்களையும் ஈழத்திலும் அறிமுகப்படுத்தும் அண்மைக்கால முயற்சிகள் சில இன்றளவும் வெற்றியளிக்கவில்லை.

ஆகமங்களினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள இவ்வளவு வழிபாட்டு முறைகளும் எமது சமயத்தின் தந்தை வழி மரபு எனலாம். இதை நெறிப்படுத்துபவர்களும், நடைமுறைப்படுத்துபவர்களும் சிவாச்சாரியர்களும், அவர்களின் மாணவ மரபினருமே. ஆகமங்களிலும் கூட ஆங்காங்கே மரபுக்குப் புறம்பான தெய்வங்களின் பிரதிட்டைகள் பற்றியும், வழிபாடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவாகம மரபில் உள்ள சிவாச்சாரியார்கள் ஏனைய மரபின் மூர்த்தங்களையும், ஆலயங்களையும் தாபிப்பதிலும், கிரியைகள் செய்வதிலும் அதிகாரம் உள்ளவர்கள் என்றும் சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பித்தக்கது.

ஆகமத்துக்கு அப்பாலான வழிபாடு / தாய்வழி மரபு வழிபாடு (UNCONVENTIONAL WORSHIP)

எமது கிராமிய வழிபாட்டு முறைகளான பொங்கல், குளிர்த்தி, மடை. படையல், காவடி, தீ மிதிப்பு, கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம், சாமியாடல் யாவும் இவ்வாறான தாய்வழி மரபு வழிபாட்டு முறைகளாகும். இவற்றைப் பற்றிய விபரங்களையோ குறிப்புகளையோ ஆகமங்களில் காணமுடியாது.

வழிபாட்டில் மச்சம், மாமிசம், மது, மாது என்பவற்றுடன் வழிபடும் முறைகளைக் கூறுகின்ற சாக்த ஆகமங்களை வாம தந்திரங்கள் என்று அழைகின்றார்கள். சைவத்தின் அகப்புறச்சமயங்கள் ஆறினுள் சக்தியை முதலாகக் கொண்ட வாமமும் ஒன்று.

இதே விதமான வழிபாட்டு முறைகளுடன் பைரவரை முதலாகக் கொண்ட மார்க்கம் பைரவம். பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்ட சிவன் பைரவ சன்னியாசி வடிவிலேயே வந்ததாகப் பெரியபுராணம் கூறுகின்றது.

…… அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்

(பெரியபுராணம்)

இதையொத்த இன்னொரு அகச்சமயம் மாவிரதம். இவர்கள் அணியும் பஞ்சவடி என்னும்பூணூல் தலைமுடியினால் ஆனது. மானக்கஞ்சாறரின் மகளின் திருமண மேடையில் வந்து அவளுடைய கூந்தலை தனது பூணூலுக்காகக் கேட்ட சிவன் வந்தது ஒரு மாவிரதி வடிவத்தில் ஆகும்.

வந்தணைந்த மாவிரத
முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ்
சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்என்
றுருகியஅன் பொடுபணிந்தார்.

(பெரியபுராணம்)

இந்த தலைமயிரினால் ஆன பஞ்சவடி என்னும்பூணூல் அணியும் மாவிரதிகள், கபாலத்தைக் கையில் ஏந்தி அதில் பிச்சை ஏற்கும் கபாலிகள், உடலெங்கணும் நீறு பூசித் திரிகின்ற பாசுபதர் முதலானோரைத் தேவாரங்களிலும் பாடியுள்ளதைக் காணலாம்.

தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 67: 04)

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப் பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4 : 20: 03)

நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்புந் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4: 64: 04)

பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 91: 02)

உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 90: 05)

வேத வேள்விகளும் ஆகம ஹோமங்களும்:

மிகப்பெரிய அளவில் மிருகங்களைப் பலியிட்டுச் செய்யப்படுகின்ற வேள்விகளும், யாகங்களும் வேதங்களில் விதந்தோதப்பட்டிருந்தாலும் கலியுகத்தில் இவ்விதமான வேள்விகள் சாத்தியமில்லை என்று புராணங்கள் கூறினாலும், சிவாகமங்களில் இவ்விதமான வேள்விகள் கூறப்படாவிட்டாலும் வேதவேள்விகளைச் சிவாகமங்கள் மறுதலிப்பது இல்லை. தமிழில் உள்ள தேவார திருமுறைப் பதிகங்களும் அவ்வாறே.

கொக்கிறகோடு கூவிளமத்தங் கொன்றையொ டெருக்கணிசடையர்
அக்கினொடாமை பூண்டழகாக அனலதுவாடுமெம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்விரைமலர் தூவப்
பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே

(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமுறை1.041.02)

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.

(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமுறை 3.108.01)

முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4.074.01)

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே

(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6.048.1)

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

(சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், திருமுறை 7.068.8)

….வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை
ஆயிர நூற்றுக் கறி வரியானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை …..

(நக்கீரதேவ நாயனார் அருளிய பெருந்தேவபாணி, திருமுறை 11.13.1)

வேத வேள்விகளுக்குப் பதிலாக எளிமையான, தத்துவார்த்த விளக்கமுள்ள, மந்திரம், பாவனைகளுடன் கூடிய அக்கினிகாரியம் என்னும் ஓமக் கிரியைகள் ஆகமங்களில் கூறப்படுகின்றன. இங்கு பாவிக்கப்படும் அக்கினியானது மந்திரம், பாவனைகளினால் பிறப்பிக்கப்பட்ட சிவாக்கினி ஆகும்; இது யாகாக்கினியை விட மேலானது. பாவிக்கப்படும் மந்திரங்களும் சிவ மந்திரங்கள் ஆகும்; இவை வேத மந்திரங்களைவிட மேலானவை. கும்பம் சிவ கும்பம் ஆகும்; அதிலுள்ள தீர்த்தம் சிவதீர்த்தம் ஆகும்; இது கங்கா தீர்த்தத்தை விட மேலானது ஆகும். இதைச் செய்யும் ஆச்சாரியார் சிவோஹம் பாவனையில் தான் சிவனாகவே நின்று செய்கின்றபடியால் சிவாச்சாரியார் ஆவர். இவ்வாறு மந்திரம், கிரியை, முத்திரை, பாவனைகளினால் ஆற்றப்படும் அக்கினிகாரியமாகிய ஓமத்தைப் பற்றி திருமந்திரத்தின் முதல் தந்திரம் பத்து பாடல்களில் கூறுகின்றது.

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.

(தொடரும்)

One Reply to “ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும் – 1”

  1. \\ மிகப்பெரிய அளவில் மிருகங்களைப் பலியிட்டுச் செய்யப்படுகின்ற வேள்விகளும், யாகங்களும் வேதங்களில் விதந்தோதப்பட்டிருந்தாலும் \\

    யாகங்களில் மிருக பலி கிடையாதென்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார் சோ, அவரது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில். பக்கம் 58. அத்தியாயம் 7 புத்தகம் 1.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *