பாம்பன் சுவாமிகளின் முழுமையான வைதிக சிந்தனை

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் குறித்து எழுத ஆரம்பித்தவுடனேயே சுவாமிகள் தனித்தமிழ் ஆதரவாளர் என்பதுபோல ’ஆரியத்துக்கு எதிரான அவரை செரிக்க பார்க்கும் பார்ப்பனீய தந்திரம்’ என்றெல்லாம் ஒரு சிலர் அன்பான தனி செய்திகள் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு:

இது 1916 ஆம் ஆண்டு சுவாமிகள் தகராலய ரகசியத்துக்கு சுவாமிகள் அருளிச்செய்த சதானந்தசாகரமெனும் உரைக்கு சுவாமிகள் எழுதியருளிய ‘நூலாசிரியரதுரைப்பாயிர’த்திலிருந்து:

“உரையிற் பணித்தவாறு வித்தைப் பதினெட்டிலும் வேதமே சிறப்புடைப் பிரமாணமென்றல் பரதகண்டத்துப் பண்டைநூலறிவுடையார் யாவரும் ஒப்பும் ஒரு முடிபினை ஏன்று கொள்ளும் எம்மாலும் அச்சிறப்புடைய பிரமாணங்களே இந்நூலுரைகளிற் கொன்னும் பிரமாணிக்கப்பட்டன. … சைவருள் இப்பிரமாண மொய்ம்பு புலங்கொளவறியாச் சிலர் பலர், வேதம் யஞ்ஞ வாயிலாக உயிர்வதை செய்து ஊனுங் கள்ளுமுண்ணுமாறோதும்; ஆகமம் அவ்வாறோதாதென்றும், வேதம் பலதேவ வழிபாடுகளைப் பகரும்; ஆகமம் ஒரு தேவவழிபாடாய சிவாராதனையையே உரைக்குமென்றும் பிரசங்கிக்கும் வழி வேதத்தை இழித்துக் கூறுமொரு கொள்கையினையே தொழிலாக உடையாரென்பது இத் திராவிட தேயத்தார் பலருமறிந்ததேயாம்..

வேதம் ஆகமம் என்னும் இவ்விருதிற நூல்களின் கன்ம காண்டங்கள் ஊன் முதலிய உண்டற்குரிய கன்மங்களையும் கன்ம சம்பந்தமான பலதேவவழிபாடுகளை விதிக்கினும், ஞானகாண்டங்கள் அவ்வாறு விதியாவென்பதையும் நூன் முதலாங்காண்டத்து உரையகத்து விளக்கியபடி யக்ஞபதார்த்தங்களும் செயல்களும் ஞான யோக அந்தரியாகத்து அமைகின்றன என்பதையும் இனியேதும் அறிந்து வேத நிந்தை புரியாதிருத்தல் நலம். …”

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உண்டு

அன்றைக்கு சைவருள் சிலபலர் வேத நிந்தனை செய்ய முற்பட காரணம் வேதத்துள் பலதெய்வ வழிபாடு உண்டு என்றும் வேத சடங்குகள் குறித்த இழிவான பார்வையும். இதற்கான காரணம் முக்கியமாக அன்றுநிலவிய புரோட்டஸ்டண்ட் மனநிலை. அடிமைநிலையில் தளர்வுற்றிருந்த மக்களின் அறிவு காலனிய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியமல்ல.

ஆனால் சுவாமிகள் இவற்றை மறுதலிக்கிறார். கன்மகாண்டத்தை அவர் இழிவாகவும் பார்க்கவில்லை. அதனை செய்வோரை அவர் அறியாமையில் இருப்பதாகவும் சொல்லவில்லை. அதிலிருந்து ஞானகாண்டத்துக்கு செல்ல இயலும் என்பதை சுட்டுகிறார். யக்ஞ பதார்த்தங்களும் செயல்களும் ஞான யோக அந்தரியாகமாக அவை மாறுகின்றன என்பதை சொல்லுமிடத்திலும் ஞான காண்டமும் கர்ம காண்டமும் ஏதோ ஒன்றை ஒன்று எதிர்ப்பது போன்ற இன்றைய முரணியக்க கோட்பாட்டாளர்கள் போல் பேசவும் இல்லை. மாறாக ஒரு முழுமைப்பார்வையை முன்வைக்கிறார். இவை அனைத்தும் ஒருசேர இருப்பதில் என்ன பிரச்சனை? ஏன் ஒன்றை உயர்த்த வேண்டும் ஒன்றை தாழ்த்த வேண்டும்? ஏன் வேதங்களையும் ஆகமங்களையும் பிரிக்க வேண்டும்? இப்படி போலியாக பிரிப்பதில் உள்ள அபத்தத்தையும் காட்டுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக நம்முடைய கல்வியுலக மேதாவிகள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக சுவாமிகள் போன்ற ஆன்மிக பெரியோரின் பார்வைகளை நம் இலக்கிய வரலாற்று கல்விசூழலில் வரவிடாமல் ஆக்கிவிட்டனர். இதன் விளைவாக ஆரியர்-திராவிடர், பிராம்மணர் அபிராம்மணர், வேதம் ஆகமம், சாதி குடிகள் வனவாசிகள் என்றெல்லாம் எதையெல்லாம் எப்படியெல்லாம் பிரிக்க முடியுமோ அப்படி பிரிப்பதே அவர்களுக்கு தெரிந்த ஒரே ஆராய்ச்சி பார்வை ஆகிவிட்டது.

சுவாமிகளின் பார்வை நம் கல்வி உலகத்தையும் வழிநடத்தும் நாள் வரட்டும்.

(ஆசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *