ம(மா)ரியம்மா – 3

This entry is part 2 of 14 in the series ம(மா)ரியம்மா
அன்றங்கே ஒரு நாடிருந்ததே
அந் நாட்டிலும் மதமிருந்ததே
மதம் நிறைய ஜாதிகளிருந்ததே
ஜாதிகள் வாழ்ந்திட வழியுமிருந்ததே
 
அந் நாட்டில் தொழில் இருந்ததே
தொழில்வழியில் குலம் இருந்ததே
குலங்கள் யாவையும் காத்தருள 
குல தெய்வங்கள் நூறிருந்தனவே

அன்னமிட சத்திரம் இருந்ததே
ஆதுர சாலைகள் பலவும் இருந்தனவே 
தர்ம சாஸ்திர வழி நின்று
தரணியாளும் பலர் இருந்தனரே

அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி அன்பிருந்ததே
என்னைப் படைத்தோன் மட்டுமே இறைவன்
என்றதொரு சண்டை அன்றில்லையே

ஒரு குலத்தின் தொழில் செழித்தால் 
மறு குலமும் வளம் கண்டதே 
ஒரு கையில் காயம்பட்டால் 
பல கைகள் களிம்பிட்டனவே

வீடெங்கும் திண்ணைகள் உண்டே
சாலையெங்கும் சுமை கல் உண்டே
கோடை முழுதும் தாகம் தணிக்க
நீர்மோர் பந்தல்கள் நிறைந்திருந்தனவே

முன்னேர் வழியில் பின்னேர் சென்றதே
மூத்தோர் சொல்லுக்கு முழு மதிப்பிருந்ததே
முழு நிலவுகள் ஆயிரம் கண்டு
முழு வாழ்க்கை பலர் வாழ்ந்தனரே

அக் காலத்தைக் கண்டவர் உண்டோ
அது எங்கே போனது தெளிவுண்டோ
அக்காலம் இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ

மரியம்மாளுக்குள் புகுந்திருக்கும் ஆன்மாவை அடக்கும் வழி என்ன என்று அனைவரும் கூடிப் பேசுகிறார்கள். கட்டுக்குள் அடங்காத யானையை வழிக்குக் கொண்டுவர யானை இனத்தைச் சேர்ந்த அப்பாவியை கும்கியாகப் பயன்படுத்துவதுபோல் ஒரு இந்து ஆவியை அனுப்பிவைக்கலாம். அதுவும் அந்த பாட்டியின் கணவரின் ஆவியையே அனுப்பிவைக்கலாம். இந்து பெண் எப்படியும் கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பார் என்று முடிவு செய்கிறார்கள்.

சாராயம், சுருட்டு, மாமிசம் என படையல் வைத்து தாத்தா ஆவியை வரவழைக்கிறார்கள். அவர் வந்ததும் அவரை திருப்திப்படுத்தி விஷயத்தைச் சொல்கிறார்கள்.

கொள்ளாம். அவ உயிரோட இருந்தப்பயே நான் சொல்லுறதைக் கேட்கமாட்டா; இப்பமா கேட்கப்போறா?

என்ன இப்படிச் சொல்லுதிய. கட்டியவன் சொன்னா கேட்பான்னுட்டெல்லா நாங்க நினைச்சோம் என்கிறார் பாதிரியார்.

நான் எங்க கட்டினேன். அவதான் என்னைக் கெட்டினா. மருமக்கத்தாயத்துல அவளுகதான ராணி. அதிருக்கட்டும். இப்ப எதுக்கு அவளைப் போய்ப் பாக்கணும்.

அவ பேத்திக்க தேகத்துல இறங்கியிருக்கா.

வாய்க்கு ருசியா எதுனாச்சும் திங்க நினைச்சிருப்பா… படையல் போட்டு அனுப்பிவைக்க வேண்டியதுதான.

அதெல்லாம் வேண்டாமாம். பேத்தி மதம் மாறணுமாம்.

எதுக்கு? அவ இப்பம் எங்க இருக்கா?

இயேசுல ஐக்கியமாகியிருக்கா. உம்மைக் கெட்டியவளுக்கு அது பிடிக்கலையாம்.

இதென்ன கெரஹம். யாரும் எங்கயும் போனா வந்தா இவளுக்கு என்னவாம்?

அதைத்தான் நீரு போய்க் கேட்கணும். கேட்டு, உம்ம அருமை ராணியை கையோடு விளிச்சோண்டு போகணும்.

சங்கதி இதுதானா… செஞ்சிட்டா போச்சு என்று சொல்லியபடியே மூப்பர் விடைபெற்றுச் செல்கிறார்.

பாட்டி ஒரு கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்துகொண்டு பூச்சரம் தொடுத்துக்கொண்டிருக்கிறார். மூப்பர் ஒரு செம்பில் நீர் எடுத்துச் சென்று பூக்கள் மீதும் நாரின் மீதும் தெளிக்கிறார். பின் தானும் அமர்ந்துகொண்டு பூ தொடுத்தபடியே மெள்ளப் பேச்சுக் கொடுக்கிறார்.

என்ன உன்னை ரெண்டு மூணு நாளாட்டு இங்க காணும்.

பேத்தியைப் பாக்கப் போயிருந்தேன்.

எப்படி இருக்கா?

சுகமில்லாம கிடக்கா..?

அச்சச்சோ… டாக்டர் கிட்ட போக வெச்சியா..?

உடம்புக்குச் சுகமில்லைன்னா அனுப்பலாம். மனசுக்குச் சுகமில்லாம கெடக்கா.

என்ன சொல்ற?

அவ வழி தவறிப்போயிட்டா.

அப்படின்னா..?

அவ மதம் மாறிட்டா.

மாறினா என்ன? எல்லா சாமியும் ஒண்ணுதான?

எல்லா சாமிகளையும் கும்பிடச் சொல்ற சாமியும் மத்த சாமிகளை அழிக்கற சாமியும் எப்படி ஒண்ணா இருக்கமுடியும்?

எந்த சாமியைக் கும்பிடறோங்கறது முக்கியமில்லை. எப்படிக் கும்பிடறோங்கறதுதான் முக்கியம். நாம எல்லாரும் இந்துன்னு சொல்றானுங்க. ஆனா இந்து சாமியை கும்பிட விடமாட்டேங்கறாங்க. அது தப்புதான.

எப்ப கும்பிடக்கூடாதுன்னு சொன்னாங்க?

ஆகமம், கருவறைன்னு சொல்லி இந்துக்களைப் பிரிச்சித்தான வெச்சாங்க.

ஒரு பேச்சுக்கு அது தப்புன்னே வெச்சுப்போம். உன் குல தெய்வத்தை மட்டும் கும்பிடுன்னு சொன்னாங்கன்னே வெச்சுப்போம். தீக்ஷை வாங்கி மனசுக்குப் பிடிச்ச தெய்வத்தைக் கும்பிட வெச்சதை விட்ருவோம். இப்ப எல்லா கோவில்லயும் எல்லாரையும் கும்பிட விடறாங்கள்ல. இன்னும் ஏன் மதம் மாத்தணும்?

கோவிலுக்குள்ள விடறாங்க; கருவறைக்குள்ள விடலைல்ல.

இவங்களை மட்டுமா தடுக்கறாங்க. எல்லா பிராமணரும் ராஜாவும் செல்வந்தருமே கூட நுழைஞ்சதில்லை. கோவிலைக் கட்டின ராஜாவே நுழையணும்னு கேட்டதில்லை. ஏன் சங்கராச்சாரியரும் ஜீயருமே கூட கருவறைக்குள்ள நுழையமுடியாது. அப்பறம் கருவறைக்குள்ள நுழையவிட்டா தாய் மதம் திரும்பிருவாங்களா..?

அது மொதல்ல விடட்டும். அப்பறம் பாக்கலாம். கோவில்ல நடக்கற அடக்குமுறை ஒரு பக்கம்னா சமூகத்துல நடக்கறது நிறைய இருக்கே. இங்க கொடுமையா நடத்தினதுனாலதான அங்க போனா.

யார் கொடுமையா நடத்தினாங்க?

எல்லாருந்தான் ஒடுக்கினாங்க. அதனாலதான் ஜாதிக் கொடுமையினால வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறல் தரும் இயேசுவைத் தேடிப் போறாங்க.

வல்ல பாதிரி எழுதிக் கொடுக்குன்னதை இங்க வந்து பிரசங்கிக்க வேணாம்.

நான் உள்ளதைத்தான் சொல்லுதேன். மண்டபத்துல யாரும் எழுதிக் கொடுக்கலை.

உமக்கு ஒரு கதை சொல்லட்டா. நாலு எருதுங்க, ஒத்துமையா புல்வெளியில மேய்ஞ்சுக்கிட்டிருந்துச்சு. வெளியில இருந்து வந்த சிங்கத்தால அதுகளை வேட்டையாட முடியவில்லை. நாலும் ஒண்ணாச் சேர்ந்து முட்டி விரட்டிடுச்சு. நரிகிட்ட போய் யோசனை கேட்டுச்சு. நாலு எருதுக்கும் சண்டையை மூட்டிவிட்டு தனித்தனியாகப் பிரிச்சிரு. ஈஸியா அடித்துத் தின்னுடலாம்னு சொல்லிச்சு. அப்படியே இந்த சிங்கம் ஒவ்வொரு எருது கிட்ட போய் நீதான் உசந்தவன். உன்னை மத்தவனுங்க கேவலப்படுத்தறானுங்க… அவமானப்படுத்தறானுங்கன்னு விவிலியம் ஓதிச்சுது. அதை நம்பி நாலு எருதும் பிரிஞ்சு நின்னதும் இந்தச் சிங்கம் நாலுத்தையும் வேட்டையாடிடிச்சு. நரிக்கும் மிச்சம் மீதி கிடைச்சுச்சு. இந்தக் கதைல ஒடுக்குமுறை எங்கே இருக்கு. ஒற்றுமையா இருந்ததாத்தான கதைல சொல்லியிருக்கு?

இதெல்லாம் உண்மையில்லை.

எது உண்மையில்லை? இதுதானே மொதமொதல்ல மதம் மாத்த வந்த பெஸ்கி பாதிரியார் எழுதி வெச்ச வாக்குமூலம்.

அவருக்கு உண்மை தெரியலை. தலித்ன்னு நால் வர்ணத்துக்கு வெளியே தள்ளிவெச்சதும் அவர்கள் ஒடுக்கப்பட்டதும் உண்மை.

யார் ஒடுக்கினாங்க?

ஜாதி இந்துக்கள்…

அது யாரு..?

அதான் வர்ணாஸ்ரமம் சொன்ன நால் வர்ணத்தினர்.

அவங்கதான் ஒடுக்கினாங்கன்னு நல்லாத் தெரியுமா?

ஆமாம். நல் மேய்ப்பனுக்குத்தான் அடிமை ஆடுகளின் வேதனை புரியும்.

அப்படின்னா அந்த நால் வர்ணத்துலயும் போய் ஏன் மதம் மாத்தறானுங்க? அவங்கதான் ஒடுக்கினவங்களாச்சே. அடிமையானவனும் உறவு… அடிமைப்படுத்தினவனும் உறவுன்னு எப்படி இருக்க முடியும்?

அவங்களையும் தான ரட்சிக்கணும்?

எதுக்கு… உம்ம கணக்குப்படியே பார்த்தாலும் காயம்பட்டவனுக்கு மருந்து போடலாம். கத்தியால குத்தினவனுக்கு ஏன் கால் பிடிச்சுவிடணும்? விஷயம் என்னென்னா யாரும் யாரையும் கத்தியால குத்தலை. பெஸ்கி பாதிரி சொன்னதுதான் உண்மை. ஒற்றுமையா வாழ்ந்தவங்களை பிரிச்சு மோதவிட்டிருக்காங்க. அது போகட்டும். கிறிஸ்தவத்துலயும் தனிச் சுடுகாடு, தனி பந்தி, தனி கல்யாணம்னு தானா இருக்கு. இதுக்கு எதுக்கு மதம் மாறணும்?

அது வந்து… கொஞ்ச காலத்துல எல்லாம் மறைஞ்சுடும்.

இந்து மதத்துலயும் அதெல்லாம் மறைஞ்சுட்டுத்தான வருது.

இந்து ஜாதிங்கறது குலத் தொழிலை கட்டாயமாக்கிச்சு. இயேசு போதித்த மதம்தான் அதை மாத்திச்சு.

இந்த உலகத்துல 1800 வரை எல்லா நாட்டுலயுமே குலத் தொழில்தான் இருந்துச்சு. கிறிஸ்தவத்துலயும் மன்னர் புள்ளைதான் மன்னரானான். பண்ணையார் மகன் தான் பண்ணையார் ஆனான். வியாபாரி புள்ளைதான் வியாபாரியானான்.

ஆனா, புதிய தொழில்களைக் கண்டுபிடிச்சு குலத் தொழிலை முடிவுக்குக் கொண்டுவந்தது கிறிஸ்தவர்கள்தான.

அதுதான் இல்லை. அந்த சாதனைகளைச் செஞ்சவங்க கிறிஸ்தவ மதத்துல இருந்தாலும் கிறிஸ்தவத்துக்கும் அந்த அறிவியல், தொழில் நுட்ப சாதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஏன் கிடையாது?

ஏன்னா கிறிஸ்தவத்தோட வரலாறு வேற. அது பூமி உருண்டைனு சொன்ன விஞ்ஞானியை என்ன பண்ணிச்சுன்னு தெரியும்ல. பரிணாம வளர்ச்சியைச் சொன்ன டார்வினை அது ஏத்துக்கலை. ஐன்ஸ்டீனும் மேரி க்யூரியும் சொந்த அறிவை வெச்சுத்தான் கண்டுபிடிச்சாங்க. பைபிளைப் படிச்சு கண்டுபிடிக்கலை. அப்பறம், 18-ம் நூற்றாண்டுல ஐரோப்பால ஏற்பட்ட தொழில் புரட்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் தேவையான உபரி மூலதனம் ஆஃப்ரிக்கா, அமெரிக்கா, இந்தியான்னு பல நாடுகள்ல இருந்து கொள்ளையடிக்கப்பட்டுத்தான் கிடைச்சிருக்கு. இந்த நாடுகள்ல இருந்த பூர்வ குடிகளோட கணிதம், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளை அடிப்படையா வெச்சுத்தான் கிறிஸ்தவ உலகம் இன்னிக்கு உலகைத் தன் கைக்குள்ள கொண்டுவந்திருக்கு. அதனால அந்த வெற்றில இந்தியா மாதிரியான நாடுகள்ல இருந்த பூர்வ குடி மதங்களுக்கும் கலாசாரங்களுக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. குறிப்பா இந்துக்களுக்கு அதுல பெரிய பங்கு உண்டு. இந்தியால பொறந்துட்டு இந்து மதத்தைத் திட்டறது ஒருத்தன் தன்னோட தாயைத் திட்டறதுக்கு சமம். தாயோட கற்பை சந்தேகிக்கறதுக்கு சமம்.

அப்படி இல்லை. அந்த மதம் கடையாந்தரத்துல இருந்தவங்களைக் காப்பாத்தலை. இந்து சாமியைக் கும்பிட்டவங்க செஞ்ச அநியாயத்துக்கு அவங்களை ஒருக்காலும் மன்னிக்க முடியாது. இந்து மதத்தை ஏத்துக்கவே முடியாது.

சரி… அவங்க ஒடுக்கினாங்கன்னே வெச்சுப்போம். இங்க அவங்க என்ன மொழி பேசினாங்க?

தமிழ்.

அப்ப தமிழ் மொழி ஒழிகன்னு சொல்லுவீங்களா… தமிழர்கள் எல்லாம் எதிரின்னு சொல்லுவீங்களா? தமிழகத்துல ஒடுக்கினவங்களோட மதம் இந்து. ஆனா மொழி தமிழ் தான.

இல்லை. தமிழ் மொழி பேசினதுனால ஒடுக்கலை. இந்து மதத்துல இருந்ததால ஒடுக்கினாங்க.

அப்படின்னா தமிழ் மொழிங்கற உணர்வு ஒற்றுமையைக் கொண்டுவரலியா? அப்ப அதுவும் தப்புத்தான.

இல்லை. தமிழ் மொழி உன்னதமானது. அது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு சமத்துவம் பேசக்கூடியது.

செய்யற வேலைக்கு ஏற்ப மதிப்பு மரியாதை மாறுபடும்னுதான சொல்லியிருக்கு.

ஆமாம். ஆனா இந்து மதம் பிறப்புதான் எல்லாத்தையும் தீர்மானிக்கறதா சொல்லுது. மலம் அள்ளுறவரோட மகன் மலம் தான் அள்ளணும் அப்படின்னுதான் சொல்லுது. குலத் தொழில்தான் முக்திக்கு வழின்னுல்ல சொல்லுது.

இதுல பல முக்கியமான விஷயங்கள் இருக்கு. மனுவோட காலத்துல யாரும் மலம் அள்ளலை. அப்பறம் உலகம் பூராவுமே 18-ம் நூற்றாண்டுவரை குலத் தொழில்தான் இருந்தது. அப்பறம் குலத்தொழில்கள்ல எல்லாமே மோசமானது இல்லை. மன்னரோட மகன் மன்னர், பண்ணையாரோட மகன் பண்ணையார், சிற்பியோட மகன் சிற்பி, போர் வீர்னோட மகன் போர் வீரன், படகு செய்யறவரோட மகன் படகுத்தொழில், நெசவுத் தொழில் செய்யறவரோட மகன் நெசவாளி அப்படின்னு மொத்த தொழில்கள்ல 80%க்கு மேல நல்ல கௌரவமான வேலைகள்தான்.

குலத்தொழிலை நியாயப்படுத்தினா மீட்சிக்கு வழியே கிடையாது.

இப்ப நாம மக்களாட்சியை ஏத்துக்கிட்டாச்சு. ஆனா ராஜராஜ சோழன், கரிகாலன்னு மன்னர்களோட பெருமையப் பேசறதில்லையா என்ன? அப்படிப் பேசினா மறுபடியும் மன்னராட்சியைக் கொண்டுவர விரும்பறாங்கன்னா அர்த்தம். குலத்தொழில் காலத்துல இந்தியா உலகத்துலயே எல்லாத்துலயும் மொத இடத்துல இருந்திருக்கு. தத்துவம், ஆன்மிகம், சிற்பம், இலக்கியம், நடனம், நெசவு, விவசாயம், மருத்துவம், இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டும் தொழில்னு அது மொதல் இடத்துல இருந்திருக்கு. துணி துவைக்கும் தொழிலில் இருந்தவர்கள் நூறு வீடுகளில் ஆயிரம் துணிகளை எடுத்துச் சென்றாலும் மிகச் சரியாக அவரவர் வீட்டுத்துணியை அவரவரிடம் 100 சதவிகிதத் துல்லியத்துடன் ஒப்படைத்திருக்கிறார்கள். இன்றைய நூலக புத்தகக் குறியீட்டைபோல் அதி விஞ்ஞானபூர்வமான அடையாளக் குறிகள். இதெல்லாமே குலத் தொழில் கால சாதனைகள் தான். அதனால குலத்தொழிலை ஆதரிச்சதால இந்து மதம் அழியணும்னு சொல்றது முட்டாள்தனம். தெரியாமத்தான் கேட்கறேன். கருணாநிதி செஞ்ச வேலையைத்தான் ஸ்டாலின் செய்யறான். அப்படின்னா அது தப்பா..?

அது சரிதான். அது நல்ல தொழிலா, நிறைய காசுவர்ற தொழிலா இருந்தா அதுல குலத்தொழில் தப்பில்லை. அதோட வேற யாரையும் செய்யக்கூடாதுன்னு சொல்றதுதான் தப்பு. குலத்தொழிலைச் செய்ய விரும்பறவங்களுக்கு அதுக்கான உரிமையும் இன்னொரு குலத்தோட தொழிலைச் செய்ய விரும்பறவங்களுக்கு அதுக்கான சுதந்தரமும் உரிமையும் இருக்கணும். அப்பறம் மத மாற்றத்துனால இந்து மதம் அழிஞ்சுரும்னெல்லாம் பயப்படத் தேவையே இல்லை. பௌத்தம், சமணம்னு கௌம்பினவங்க எல்லாம் இருந்த இடம் தெரியாம ஓடிரலையா..?

அது வேற கதை. மொதல்ல பௌத்தமும் சமணமும் கடவுள் இல்லைன்னு சொன்ன மதங்கள். மனுஷனுக்கு கடவுள் இல்லாம இந்த உலகத்துல தனியா இருக்கவே முடியாது. அதனால அதைச் சொன்ன மதங்களை நம்ம மக்கள் விரட்டிட்டாங்க. ஆனா இஸ்லாமும் கிறிஸ்தவமும் அல்லா, கர்த்தர்னு கடவுள் பொம்மைகளை வெச்சிருக்கு. அதனால அவங்களை விரட்ட முடியாது. அப்பறம் பௌத்தமும் சமணமும் சனாதன வேர்ல இருந்து வந்த மதங்கள். அதனால சாத்விகமாத்தான் பரவிச்சு. இஸ்லாத்தலயும் கிறிஸ்தவத்துலயும் மதவெறி, சாம்ராஜ்ஜிய வெறி, சுரண்டல்னு எல்லாத்தையும் கடவுள் பேரால நியாயப்படுத்தறாங்க. மனுஷனோட விலங்கு குணங்களுக்கு இப்படி ஒரு மத அங்கீகாரம் இருந்தால அது ஏற்படுத்தின அழிவு தாங்க முடியாததா இருக்கு.

இப்பத்தான் அந்த அராஜகங்களை எல்லாம் ஓரங்கட்டியாச்சே.

எங்க ஓரங்கட்டியிருக்காங்க. வன்முறையைக் குறைச்சுட்டு தந்திரமா செய்துட்டு வர்றாங்க. எரிமலை அடங்கியிருக்கு. சாகலை. இப்பயும் எரிமலைக் குழம்பு கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டுத்தான் வருது. பாரத்த்துக்கு ரெண்டு சுனாமி அலை மாதிரி வந்து அழிச்ச இஸ்லாமும் கிறிஸ்தவமும் இப்ப சாதுவான கடல்மாதிரி தோற்றம் காட்டிட்டு நிலத்தடி நீருக்குள்ள் ஊடுருவிக்கிட்டு இருக்கு. கடலோர பொருட்கள், கட்ட்டங்கள் மேல உப்புப் படலம் படிஞ்சு அரிச்சி, அழிச்சிட்டு இருக்கு. பௌத்தமும் சமணமும் துறவு, புலனடக்கம், எளிமைன்னு நல்ல விஷயங்களை முன்வெச்சது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்த உலகம் முழுவதும் மனுஷனுக்கானது. குறிப்பாக அந்த மதத்தைச் சேர்ந்தவங்களுக்கானதுன்னு சொல்லியிருக்கு. அதனால அம்புட்டையும் அழிக்கப் புறப்பட்டிருக்காங்க. பௌத்தம் ஒரு கோடின்னா இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்னொரு கோடி. இந்து மதம் தான் மிதமான, நடு வழியில் செல்லக்கூடியது. நாம சுதாரிக்கலைன்னா உலகமே அழிஞ்சிடும். இந்து மதம் வாழணுங்கறது இந்துவுக்காக மட்டுமில்லை; இந்த உலகத்துக்காகவும் தான்.

Series Navigation<< ம(மா)ரியம்மா – 1<< ம(மா)ரியம்மா – 2ம(மா)ரியம்மா – 4 >>

2 Replies to “ம(மா)ரியம்மா – 3”

  1. அந்த திருவாரூர் இந்துஸ்தானத்தின் பழம்பெரும் தலங்களில் ஒன்று, கடலுள் மூழ்கிய பூம்புகாருக்கு இணையான பாரம்பரியமும் பழமையும் கொண்ட ஊர்

    அந்த ஊர் சிவனின் அடையாளம் ஒன்றால் அறியபட்டது, அரூர் எனும் அந்த நகரமே சிவாலயம் ஒன்றால் பெயர்பெற்றது, அந்த ஆலயம் இல்லையென்றால் அங்கு எதுவுமில்லை

    அப்படிபட்ட ஆலயத்தின் சிறப்புகள் சொல்லி முடிக்க முடியாதவை, முற்கால சோழர் முதல் ராஜராஜசோழனின் கடைசி வாரிசுகள் வரை ஏன் பாண்டியரின் காலம் வரை அந்த ஆலயம் தனிசிறப்புடன் கொண்டாடபட்டது

    “திருவாரூரில் பிறந்தால் முக்தி” எனும் அளவு அது சிறப்பான வரலாறு கொண்டது

    சோழமன்னர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை விரிவாக்கினர், இன்று ஆசியாவின் மிகபெரிய வழிபாட்டு தலங்களில் அதுவும் ஒன்று

    சுமார் ஐந்துவேலி அளவு ஆலயம், ஐந்து வேலி அளவு குளம், ஐந்துவேலி அளவு நந்தவனம் என மிக பிரமாண்டமான வகையில் அது உருவாக்கபட்டது

    எத்தனையோ முனிகளும், சிவனடியார்களும் அங்கு சிவனை தரிசித்தார்கள்

    நாயன்மார்களில் முக்கால்வாசி பேர் அந்த தலத்தை வணங்கியவர்கள், அங்கு வராத நாயன்மார்கள் குறைவு

    சுந்தரர் அங்குதான் நாயன்மார்களின் திருதொண்டர் வகையினை பாடினார்

    சோழமன்னர்கள் அங்கு செய்வித்த காரியம் கொஞ்சமல்ல, நாயன்மார் பாடிவைத்ததும் கொஞ்சமல்ல‌

    அப்படிபட்ட ஊரில்தான் மனுநீதி சோழன் தேர்காலில் மகனை இட்டான் எனும் பெருமையும் பெற்றான், அந்த சோழனுக்கு சிவன் சோதனையினை கொடுத்ததாகவும் அந்த தேர்வடிவில் அவன் அதை வென்றதாகவும் நம்பிக்கை உண்டு

    இதனால்தான் அந்த தேரினை உலகின் மிகபெரிய தேராக சோழமன்னர்கள் செய்தார்கள், இன்றும் உலகின் மிகபெரிய தேர் அதுதான்

    அப்படிபட்ட பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட திருவாரூரில் , அதாவது செம்பியன் எல்லாளன் காலம் தொடங்கி 3ம் ராஜராஜசோழன் காலம் வரை சுமார் 4 ஆயிரம் ஆண்டு ஆண்ட மன்னர்கள் கூட ஒரு தெருவுக்கும் தங்கள் அடையாளத்தை இடவில்லை

    கரிகால் சோழன், விஜயாலயன், பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் என எத்தனையோ உலக சக்ரவர்த்திகள் ஆண்டபொழுதும் அவர்கள் பெயர் இடபடவில்லை

    அதிசிறந்த முனிகள் உலவிய மண் அது, ஒப்பற்ற நாயன்மார்கள் உலாவிய தெருக்கள் அவை அப்படியும் ஒரு நாயன்மார் பெயர் கூட அந்த தெருவுக்கு இல்லை

    காரணம் அந்த ஒப்பற்ற தேர் ஓடும் வீதி தேரின் பெயரிலே அழைக்கபட வேண்டும் என கவுரவபடுத்தினார்கள்

    தியாகராயர் வலம் வரும் வீதி தேர்வீதி அதில் அற்ப மன்னரின் பெயர் இருக்க கூடாது என பக்தியாய் ஒதுங்கினார்கள்

    அப்படிபட்ட பாரம்பரியம் கொண்ட திருவாரூரின் தெற்கு வீதிக்கு கடவுளை நம்பாதவரும் முழு நாத்திகருமான கருணாநிதி பெயரை சூட்டும் அறிவிப்பெல்லாம் சரியானது அல்ல‌

    கருணாநிதி அங்கு சில ஆண்டுகள் 7ம் வகுப்புவரை படித்ததாக வரலாறு உண்டு, அதிலும் தோல்வி, அவ்வளவுதான் அவருக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு, பின்னாளில் ஒருமுறை எம்.எல்.ஏவாக இருந்தார்

    (அவர் ஓடாத தேரை ஓடவைத்தார் என்பதெல்லாம் வெற்றுவாதம் , இந்துக்கள் வாக்கும் இந்து அறநிலையதுறை நிர்வாகம் பெற்றிருந்த அவர் அதை செய்வது கடமை, அவர் அலுவல்)

    இதற்காக அந்த ஊரின் புனிதமான தெருவுக்கு அவர் பெயர் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது

    கருணாநிதியும் சுமார் 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டார், காஞ்சி தேர்வீதிக்கு அண்ணா நாமம் , ஈரோட்டு தேர் வீதிக்கு ராம்சாமி நாமம், மதுரை தேர்வீதிக்கு மதுரை முத்து நாமம் என மாற்றவில்லை

    அவர் செய்யாததை எல்லாம் இந்த அரசு செய்யுமானால் இது அவருக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல , இந்த அரசு சரியான வழியில் செல்லவில்லை என்பதையும் காட்டும் விஷயம்

    இந்துக்களின் எதிர்ப்பு பலமாகின்றது, அதற்கு அரசு செவிமடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாகியுள்ளது, அரசு அதை ஏற்கும் என நம்புவோம்

    தமிழக மக்களை முன்னேற்றவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவுமே இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்

    மாறாக இந்துக்களுடன் எப்பொழுதும் உரசிகொண்டே இருக்கத்தான் இந்த வாய்ப்பினை தங்களுக்கு மக்கள் தந்திருப்பதாக சிலர் கருதுவார்களானால் அது நிச்சயம் நல்ல பலன்களை தராது.

    அரசு அந்த ஆலயத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினால் ஆக்கிரமிப்புகளை அகற்றட்டும், அந்த ஆலயத்துக்கு 5 வேலி அளவில் நந்தவனம் இருந்ததாகவும், செங்கழுநீர் ஓடை என ஒரு ஓடை அவ்வழி வந்ததாகவும் அந்த நந்தவனத்து பூக்களில்தான் தியாகேஸ்வரருக்கு அர்ச்சனை நடந்ததாகவும் நாயன்மார் வாழ்வில் பதியபட்டிருக்கின்றது

    அரசு அந்த நந்தவனத்தை மறுபடி உருவாக்கட்டும், இன்று சாக்கடையாக மாறியுள்ள அந்த நந்தவனத்தை மீட்கட்டும்

    இப்படி எவ்வளவோ அவசர வேலைகள் உள்ள ஆலயத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு வீதிபெயரை மாற்றுவோம் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல, செய்ய வேண்டிய விஷயமும் அல்ல

  2. “வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
    பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
    மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
    உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே”

    என சரஸ்வதி அந்தாதியில் பாடுவான் கம்பன், அதற்கு இவ்வுலகில் பாடுபட்டு தேடும் செல்வமும், உறவும், அதிகாரமும் நிலைக்காது, சரஸ்வதியின் அருளில் கிடைக்கும் செல்வமே நிலைக்கும் என பொருள்

    ஆம், இந்த உலகில் அரசுகள் மாறும் ஒருவன் கையில் இருக்கும் அரசு நாளை இன்னொருவனுடையதாகும்

    ஒருவனின் செல்வம் நாளை இன்னொருவனின் செல்வமாகும், ஒருவன் அரும்பாடு பட்டு கட்டும் மாளிகையும் கட்டடமும் நாளை இன்னொருவனுடையதாகும்

    ஆனால் ஒரு எழுத்தாளனோ கவிஞனோ உருவாக்கும் படைப்பு எல்லா காலமும் அவன் ஒருவனுக்கே உரித்தாகும், இன்னொருவன் வந்து அதை ஆக்கிரமிக்கவோ சொந்தம் கொண்டாடவோ ஒரு காலமும் முடியாது

    எழுத்தாளனுக்கு மட்டும் கிடைக்கும் தனி வரம் அது

    அது தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன், ஒளவை என யார் யாருக்கெல்லாமோ கிடைத்தது, காளிதாசனுக்கு கிடைத்தது அதுதான் அந்த “எழுத்து சித்தனுக்கும்” கிடைத்தது

    அம்மனிதன் ஒரு வரம், ஒரு பொக்கிஷம், ஞானமான எழுத்து என்றால் என்ன என்பதை சொல்ல வந்த தனி வரம்

    இந்த படிக்கெட்டெல்லாம் தன்னை கோவிலுக்கு அழைத்து செல்கின்றது என்பதை அறியாமலே புதினம், கதை, சிறுகதை, சினிமா என எழுதி பின் இறைசக்தி எழுத்தாளன் என தெய்வநிலையினை எட்டிவிட்ட அதிசயம் அவர்

    அவர் ஒரு சாதாரண அலுவலக ஊழியர் , பெரிய படிப்போ பட்டமோ ஏதுமில்லை. அவரின் தமிழும் எழுத்தும் அவரை சினிமாவுக்கு இழுத்து வந்தது

    அங்கும் கொத்தமங்கலம் சுப்பு, திருவாரூர் தங்கராசு போல கதாசிரியர் அல்லது வசனகர்த்தாகாவோ வாழ்ந்து முடித்திருக்க வேண்டியர்தான், அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்

    ஆனால் அவரின் நல்விதி அவரை யார் என புரிய வைத்தது, அந்த திருவண்ணாமலை பூமியும் அந்த விசிறி சாமி எனும் அவதாரமும் அவருக்கு உண்மை உணர்த்திற்று.

    ஆன்மீகத்தில் அவரின் மனம் கலந்தது. பழைய தமிழ் சித்தர்களில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டார். சித்தராக வாழ்ந்தார், சித்தராக சிந்தித்தார், சித்தராக எழுதினார், சித்தராகவே முடிந்தார்

    “எழுத்து சித்தர்” பாலகுமாரன்

    தமிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது

    எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் தத்துவம், ஆன்மீகம், அன்பு, சமத்துவம், வரலாறு என எல்லாம் தாங்கி கதம்பமாய் வந்தன‌ம் தாங்கியே வந்தன‌

    கிட்டதட்ட 270 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட கதைகளும் எழுதியிருப்பார். நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார்

    சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை

    ‘நாயகன்’ ‘குணா’, ‘செண்பகத்தோட்டம்’, ‘மாதங்கள் ஏழு’, ‘கிழக்கு மலை’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘பாட்ஷா’, ‘முகவரி’, ‘சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான வசனங்கள்

    இது நம்ம ஆளு படத்தின் அற்புதமான இயக்குநரும் அவரே, இன்னும் ஏராளம்

    உறுதியாக சொல்லலாம் அவருக்கு நாவல் எழுதும் அவசியமே அவருக்கு இல்லை, ஒரு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடி என்றால் ஒரு வசனகர்த்தா கதாசிரியரால் தனக்கு இத்தனை கோடி என எளிதாக கணக்கிட முடியும்

    அதுவும் பாலகுமாரனால் பல கோடிகளை கோர முடியும், நிச்சயம் சாதாரண எழுத்தாளனென்றால் அதைத்தான் செய்திருப்பான்

    ஆனால் பாலகுமாரனின் மனம் ஒரு கட்டத்தில் பணத்தில் நிறைவுற்றது, பணம் தன் வாழ்க்கையின் நோக்கத்துக்கு சுதர்மத்துக்கு தடை போடும் என உணர்ந்து சினிமாவினை சட்டென உதறினார்

    பட்டினத்தார் சித்தி அடைய கிளம்பியது போன்ற சாயல் இது

    அப்படி அதன் பின் ஞானமும் வரலாறும் ஆன்மீகமும் எழுதி அசத்தினார், மிக பெரிய தெளிவும் தத்துவம் போதனையும் அவர் எழுத்தில் மிகுந்திருந்தன.

    மனிதரிடம் கடைசி வரை அகங்காரமோ, ஆர்பாட்டமோ , கர்வமோ, எழுத்து சிம்மாசத்தின் உச்சியில் இருக்கின்றோம் எனும் மமதையும் கொஞ்சமுமில்லை

    அவர் எல்லோருக்கும் நண்பனாய் இருந்தார், கொடிய எதிரியும் அவரை பழித்துவிட முடியாது. பழித்தோரும் பின்னாளில் அவரிடமே சரணடைந்தனர்.

    அதுதான் ஒரு துறவியின் மனம், அதில் சரியாக இருந்தார் பாலகுமாரன்

    மகாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு, சும்மா அர்ஜூனனை போருக்கு அழைத்து செல்வான் கண்ணன், ஏகபட்ட போர்கள் நடந்தன. அர்ஜூனனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை, சலிப்புற்றான். ஆயினும் சொல்வது கண்ணன் என்பதால் போரிட்டான்

    அந்த போர்களின் அனுபவமே குருஷேத்திரம் எனும் கொடும்போரில் அர்ஜூனனுக்கு கை கொடுத்தது, அப்பொழுதுதான் அர்ஜூனனுக்கு புரிந்தது , “கண்ணன் நம்மை தயார்படுத்தியிருகின்றான்”

    அப்படி தன் 270க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏகபட்ட சினிமா வசனங்கள், 200க்கும் மேற்பட்ட கதைகளெல்லாம் தான் அவதரித்த மிகபெரிய நோக்கத்திற்கான தயாரிப்பு என்பதை உணர்ந்தார்.

    அந்த அனுபவங்களையெல்லாம் கொட்டி அவர் எழுதியதுதான் “கங்கை கொண்ட சோழபுரம்” மற்றும் என்றும் தமிழ் உலகில் கோபுரமாக இன்னும் அந்த “உடையார்”.

    இன்றுவரை எழுத்துலகில் ஒருவன் ராஜராஜனுக்கு வைத்திருக்கும் மிகபெரிய காணிக்கை அந்நூல். தஞ்சை கோவிலுக்கு அதை விட இன்னொருவன் காணிக்கை வைத்துவிட முடியாது

    காவேரி குறித்தும், தஞ்சை பகுதி குறித்தும் அவர் எழுதிய அளவு நுட்பமாக இன்னொருவன் எழுதமுடியாது. ஆனால் இவர் படித்து வளர்ந்தெல்லாம் சென்னையிலே

    முன்னோர்களின் ஏதோ நினைவு அல்லது பூர்வ ஜென்ம‌ தொடர்ச்சி அவரில் கலந்து அந்த தொடர்ச்சியாகத்தான் இவ்வளவும் எழுதி குவித்தார்.

    இந்துமதத்தின் சித்தர்களின் சாயலாகவும் அவர் அறியபட்டார், கண்ணதாசனின் இறுதிகாலம் போலவே பாலகுமாரனுக்கும் ஆன்மீக ஞானம் உச்சத்தில் இருந்தது

    இன்று அவரின் நினைவுநாள்

    எழுத்தில் ஒருவகை தாள நயத்துடன் எழுதியவர் அவர், மெல்லிய பூங்காற்று போன்ற எழுத்து அது
    அந்த மெல்லிய பூங்காற்றில் ஆலயமணி போன்ற ஆன்மீகமும் சோழனின் வாள் சத்தமும், உளி சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது ஒருவித சுகம்

    எத்தனையோ லட்சம் வாசகர்களை கட்டிபோட்ட, எத்தனை ஆயிரம் பேரோ அவரை ஞானதகப்பனாக கொண்டாடிகொண்டருக்கின்றனர்

    ஆனந்த விகடனும், குமுதமும் அவருக்காகவே விற்பனையான காலங்களும் உண்டு

    எழுத்து சித்தர் இனி இல்லை, ஆனால் அவரின் எழுத்துக்களில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்
    மணிரத்னம் படத்தின் ஆரம்ப கால வசனங்கள் அவருடையது, சுருங்க சொல்லி அசத்தியிருப்பார்

    ஒரே வசனத்தில் எல்லோர் மனதையும் அவர் தொட்டது இப்படித்தான்.‌

    இனி இப்படி எல்லாம் எழுத யார் இருக்கின்றார்கள்? அவரின் வசனங்கள் எல்லாம் காதில் ஒலிக்க தொடங்கிவிட்டது

    அவர் எழுத்தில் தமிழின் இனிமையும், ஞானமும் கலந்திருந்தது, ஆன்மீகம் மிதந்து வந்தது, சித்தர்களின் அன்பும் தத்துவ வாசனையும் மணமாய் வந்தது

    ஞானம் கலந்த எழுத்து என்பதை அவர் நிரம்ப கொடுத்தார், ஆன்மீகம் கலந்த எழுத்து எக்காலமும் நிலைத்திருக்கும் என்பதை அவர் காட்டினார்.

    அவர் எழுத்து நதியின் அணைகட்டு, நாமெல்லாம் பயனுற்றோம். அவர் கைகாட்டினார் நாம் வழிகண்டோம், அவர் படிக்கல்லாய் அமர்ந்தார், நாமெல்லாம் நல்வழி ஏறி சென்றோம்

    அவர் மழையாய் பொழிந்தார் நாம் மனநிலமெல்லாம் செழுமை அடைந்தது

    உயர்ந்த ஞானமிக்கோர் எல்லாம் ஒரே வரிசையே

    அதில் வசிஷ்டர் முதல் அகத்தியர் போன்ற சித்தர்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள். அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட சித்தர் பாலகுமாரன்.

    அவர் எவ்வளவு சாதித்தார் என்பதையும், அவரின் மிகபெரும் இடம் என்ன என்பதையும் உலகுக்கு சொல்லவே அவருக்கு மரணம் சம்பவித்தது.

    வாழ்நாளில் அவரை யோசிக்காதவர்கள் கூட அவர் இல்லா காலத்தில் அவரின் அருமை அறிந்து யோசிக்கின்றார்கள், அவர் செய்ததை நாமும் செய்யவேண்டும் என பலர் சிந்திக்கின்றார்கள்

    அவர் இந்து, இம்மண்ணின் தாத்பரிய நம்பிக்கை படி அதிதீவிர இந்து, ஆனால் இந்துநெறி உண்டே தவிர இந்துவெறி இல்லை

    இதனால் எல்லா மதத்திலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள், அவர் பிராமண சமூகமெனினும் அவரின் அந்த மகா உயர்ந்த அணுகுமுறையால் எல்லா சாதியினரும் அவரை கொண்டாடினார்கள்.

    மழைபோல் எல்லோருக்கும் பொதுவான பிடித்தமான எழுத்தளராய் விளங்கினார், அதுதான் அவரின் முத்தாய்ப்ப்பு.

    குருடனுக்கு கிடைத்த கோலாக அவரின் எழுத்துக்கள் எத்தனையோ பேருக்கு வழிகாட்டுகின்றன‌
    தசரதன் இறந்ததை கம்பன் இப்படி புலம்புவான்

    “நந்தா விளக்கணைய நாயகனே நானிலத்தோர்
    தந்தாய் தனிஅறத்தின் தாயே தயாநிதியே
    எந்தாய் இகல்வேந்தர் ஏறே இறந்தனையோ
    அந்தோ இனிவாய்மைக்கு காருளரோ மாற்றுலகில்”

    இது பாலகுமாரனுக்கும் அப்படியே பொருந்தும்

    அவருக்காக நாம் அழவேண்டியதில்லை, அவர் காலத்தில் வாழ்ந்ததற்காக பெருமை படல் வேண்டும்.
    அவரின் பேனா முனையில் இருந்து இன்னும் பல உன்னத‌ உயிர்த்தெழுவார்கள் அவர்கள் அவர் விட்டுசென்ற பணியினை தொடர்வார்கள், அந்த பாலகுமாரனின் ஆன்மாவும் அது கலந்த திருவன்ணாமலை கோவிலும் அதற்கு வழிகாட்டும்

    தமிழகம் கண்ட தனிபெரும் சித்தனுக்கு அஞ்சலிகள், தஞ்சை கோவில் உள்ள அளவும் அவரும் ஒரு கோவிலாய் நிலைத்திருப்பார்..

    இந்த நூற்றாண்டுக்கான ஆன்மீக தமிழ் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஞானதமிழாக சொல்லி நிறுத்திய அந்த சிவனின் எழுத்து குமாரன் அந்த ஞானபெருமகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *