பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

(அண்மையில் மணி மணிவண்ணன் என்பவர் எழுதிய ஒரு ஃபேஸ்புக் பதிவை ஒரு நண்பர் கவனப்படுத்தினார். தருமபுரம் பல்லக்கு சர்ச்சையை முகாந்திரமாக்கி ஆதீனங்களையும், மடங்களையும், புராணங்களையும் காட்டமாக சாடும் அந்த இந்து விரோத பதிவில் கீழ்க்கண்ட பாரதியார் பாடலையும் பதிவர் கொடுத்திருந்தார். அதன் சரியான விளக்கம் என்ன என்று நண்பர் கேட்டார். அதை முன்னிட்டு இப்பதிவு)

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே
வந்து சமன்செய் குட்டைமுனியும்

நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த
நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் ஒன்று
உன்மையொன்றோதி மற்றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் அதில்
நல்ல கவிதைகள் பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

இந்த வரிகளுக்குக் கீழ் “பெரும்பாவலன் பாரதி (குயில் பாட்டு)” என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் குறிப்பிடுகிறார். பாரதி படைப்புகளின் சாதாரண வாசகருக்குக் கூட இது குயில்பாட்டு இல்லை என்று உடனடியாகத் தெரிந்து விடும். அந்த அளவில் இருக்கிறது அவரது “புலமை”.

மேற்கண்ட வரிகள் “உயிர் பெற்ற தமிழர் பாட்டு” என்ற தலைப்புடன் பாரதியார் கவிதைகள் புத்தகங்களில் “புதிய பாடல்கள்” என்ற பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும். வானவில் பிரசுரம் 1982 பதிப்பில் இப்பாடல் உள்ள இடம், பக். 677-681.

மெய்ஞானியும், யோகியும், கவிஞனும் ஆன பாரதியின் கவிதைகளைக் கற்கும் போது அவற்றின் ஆழ்ந்த உட்பொருளைக் கருத வேண்டுமே அல்லாது, மேம்போக்காகப் படித்தால் அர்த்தத்திற்குப் பதில் அனர்த்தம் தான் கிடைக்கும்.

இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம்.

“கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்” – இது யாகத்தீயிலிருந்து தோன்றிய பாஞ்சாலி என்ற திரௌபதியைக் குறிக்கிறது. பாரதக் கதையும் பாஞ்சாலியும் முழுப் பொய் என்று பாரதி உண்மையிலேயே கருதியிருந்தால், ஏன் நூற்றுக் கணக்கான பாடல்களில் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை எழுத வேண்டும்? அதன் கடவுள் வாழ்த்திலேயே “ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை” என்று கூற வேண்டும்? பராசக்தியையும், தேச விடுதலையையும் தரிசிக்க ஏன் இந்த அற்புதமான சரிதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?

“விதியுறவே மணம் செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்”

இந்த வீமனையும், அவன் சகோதரன் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக பாரதி காண்கிறார் –

“விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா”

(பாடல் – ஒளி படைத்த கண்ணினாய்)

“முன்னைப் பார்த்தன் கண்ணன் இவன் நேரா – என்னை
உய்யக் கொண்டருளல் வேண்டும்”

(பாடல் – தேடிச் சோறு நிதம்)

“பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர் வானக நாடுறும்”

(பாடல் – சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது)

“கடலினைத் தாவும் குரங்கும்” என்பது அனுமன் என்னும் மகோன்னத தெய்வீக புருஷரை மறுதலிக்கிறது என்றால், பின்பு ஸ்ரீராமரின் அவதார வைபவத்தை பாரத தேவியின் பெருமையாக அறிவித்து பாரதியார் கீழ்க்கண்டவாறு பாடியிருப்பாரா என்ன?

“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்”.

எனவே பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் பாடல் ஒரு அலாதியான, தத்துவரீதியான நிராகரிப்பு மனப்பான்மையில் பாரதியார் பாடியது. யோக மொழியில் “நிவ்ருத்தி” என்று அதைக் குறிப்பிடுவார்கள்.

ஒப்புமைக்காக, ஆதிசங்கரரின் தச சுலோகீ என்ற புகழ்பெற்ற பாடலில் உள்ள சில வரிகளை எடுத்துக் கொள்வோம்.

ந மாதா பிதா வா ந தே³வா ந லோகா,
ந வேதா³ ந யஜ்ஞா ந தீர்த²ம்ʼ ப்³ருவந்தி …
ந ஸாங்க்²யம்ʼ ந ஶைவம்ʼ ந தத்பாஞ்சராத்ரம்ʼ
ந ஜைனம்ʼ ந மீமாம்ʼஸகாதே³ர்மதம்ʼ வா ..
ந ஶாஸ்தா ந ஶாஸ்த்ரம்ʼ ந ஶிஷ்யோ ந ஶிக்ஷா …

தாயில்லை தந்தையில்லை தெய்வங்கள் இல்லை லோகங்கள் இல்லை
வேதங்கள் இல்லை வேள்விகளில்லை புனித தீர்த்தங்களுமில்லை…
சாங்கியம், சைவம், பாஞ்சராத்ரம் (வைஷ்ணவம்),
ஜைனம், மீமாம்சம் முதலான மதங்களுமில்லை..
கற்பிப்பவர் இல்லை, சாஸ்திரம் இல்லை, சிக்ஷையும் இல்லை..

இந்த வரிகளை மட்டும் தனியாகக் காட்டி சங்கரர் வேதங்களையும் வேள்விகளையும், சிவ விஷ்ணு வழிபாடுகளையும் எதிர்த்தவர் என்று கூறலாமா? அப்படிக் கூறுவது முற்றிலும் தவறாக இருக்கும். ஏனென்றால், வேத நெறியையும், அதன் தத்துவ சிகரமான வேதாந்தத்தையும் நிலைநிறுத்தியவர் சங்கரர். ஷண்மதம் எனப்படும் சைவம், வைணவம் முதலான ஆறு வைதிக சமயங்களையும் தழைக்கச் செய்தவர். இவற்றோடு கூட இறுதி உண்மையாக அருவமான, குணங்களைக் கடந்த அத்வைதப் பரம்பொருளையும் உணர்த்தியவர் என்பதுதான் வரலாறு. அதே பாடலில் இறுதியில்,

ந ச த்வம்ʼ ந சாஹம்ʼ ந சாயம்ʼ ப்ரபஞ்ச꞉
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ..


நீ என்பது இல்லை, நான் என்பதும் இல்லை, இந்த பிரபஞ்சமும் இல்லை
ஒன்று மாத்திரமாக எஞ்சியிருக்கும் சிவம், அதுவே யான்.

என்று கூறுகிறார்.

பாரதியின் மேற்கண்ட பாடலுக்கும் இதுவே பொருந்தும். அதன் பிற்பகுதியில்

எல்லையில்லாப் பொருள் ஒன்று – தான்
இயல்பறிவாகி இருப்பதுண் டென்றே.
சொல்லுவர் உண்மை தெளிந்தார் – இதைத்
தூவெளியென்று தொழுவர் பெரியோர்

என்ற வரிகளும் உள்ளன.

பாரதியாரின் தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் கருத்துக் கூறும் திராவிட இயக்க அறியாமையை.

இதிகாச புராணங்கள், சாத்திரங்கள் முதலான இந்துமத புனித நூல்களின் மேன்மையை பாரதியார் புகழ்ந்துரைக்கும் இரண்டு பாடல்களை இங்கே தருகிறேன். இதே விஷயத்தை தனது பல கவிதை, கட்டுரைகளிலும் அவர் எடுத்தாண்டுள்ளார் என்பதை பாரதியை ஓரளவாவது கற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பாடல் 1: வீரர் முப்பத்திரண்டு கோடி” எனத் தொடங்கும் “பாரத மாதா நவரத்தின மாலை”யிலிருந்து.

அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே
பன்னி நீ வேதங்கள், உபநிடதங்கள்
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்
இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.


[அவனி – உலகம்; பன்னி – உரைத்து; காலங் கொன்ற – காலத்தைக் கடந்து நிற்கின்ற]

இப்பாடலில் பாரத ரிஷிகளின் ஞான ஒளி காலத்தை வென்று நிற்கிறது என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி.

பாடல் 2: “மண்ணுலகின் மீதினிலே” என்று தொடங்கும் ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது வாழ்த்துப் பாக்கள்

எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்; சதுர்வேதங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.

[அமரநிலை – அழியாத நிலை; சதுர்வேதங்கள் – நான்கு வேதங்கள்; மெய்ப்பான – சத்தியமான; துப்பான – தூய்மையான]

எனவே, பாரதி யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று கூறுமிடத்தில் மட்டுமே புராணம், சாத்திரம் எல்லாம் கதைகளே என்று கூறுகிறார், மற்றபடி வேத புராணங்களையும் சாத்திரங்களையும் மிகவும் புகழ்ந்து கூறுகிறார் என்பது தெளிவு. இதை முற்றிலும் அபத்தமாகப் புரிந்து கொண்டு, ஈவேரா, கருணாநிதி மற்றும் தான் கூறுவது போன்றே பாரதியும் கூறுகிறார் என்று பிதற்றுவது எப்படியிருக்கிறது?

சுவாமி விவேகானந்தர் சொல்லுகிறார் – “பல சமயங்களில் மிக ஆழ்ந்த மூடத்தனத்தில் இருப்பவர்கள், சில புறத்தோற்றங்களைக் கண்டு தாங்கள் ஆன்மிக உயர்நிலை அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு மனம் பிறழ்வார்கள். மாமன்னரின் மகனான புத்தர் சகல செல்வங்களையும் துறந்து ஓர் இரவில் வீட்டை விட்டுச் செல்கிறார். அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் பிச்சைக் காரன் ஒருவன் “புத்தர் தான் செய்யக் கூடுமா? நான் எல்லாவற்றையும் துறக்கிறேன்” என்று சொல்வானானால் அது எவ்வளவு முட்டாள் தனம்! இழப்பதற்கு என்ன இருக்கிறது இவனிடம்?”

அப்படித் தான் இருக்கிறது.

(நான் 2007ல் முன்பு இதுகுறித்து எழுதியிருந்த பதிவின் மேம்படுத்தப் பட்ட வடிவம் இது. கூடுதலாக சில விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன்)

2 Replies to “பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?”

  1. இந்நாட்டை அபகரித்து இந்நாட்டு மக்களை கசக்கி வரிபிரித்து கடும் கொடுமை செய்த‌ அவுரங்கசீப்பின் அடியாள் ஆற்காட்டு நவாப் எனும் இஸ்லாமியன் கொள்ளைகாரன் அல்ல‌

    இந்த இந்து பூமி தன்னுடையது என சொல்லி வரிபிரிக்க ஆள் அனுப்பிய ஆற்காடு நவாப் கொள்ளைகாரன் அல்ல‌

    அவனுக்கு வரிபிரிக்க துப்பாக்கியோடு வந்த ஐரோப்பிய மிலேச்ச இந்து வெள்ளைக்காரன் கொள்ளைகாரன் அல்ல‌

    இந்த இந்துபூமி எங்களுடையது, இந்த தாமிரபரணி எங்களுடையது, இங்கு விளையும் நெல் எங்களுக்கு, இந்த நெல் காலம் காலமாக திருசெந்தூர் கோவிலுக்கு நைவேத்தியம் செய்ய கொடுக்கபட்டது என திருவைகுண்டம் நெல் களஞ்சியத்தின் நெல்லை எடுத்து கொண்ட இந்து மன்னன் கட்டபொம்மன் கொள்ளைகாரனாம்

    எங்கிருந்தோ வந்த அந்நியர்கள் அந்நிய மதத்தவர்கள் கொள்ளைகாரன் அல்ல‌, இந்த மண்ணும் நீரும் நெல்லும் ஆலயமும் எங்களுடையது என வாளேந்தி எடுத்து கொண்ட இந்து ராஜ்ஜிய இந்து மன்னன் கொள்ளைக்காரன்

    அவனுகளும் அவனுக ஆராய்ச்சியும்…

  2. சமீபத்தில், தேசியவாத மனப்பாண்மை உள்ளவர்களுக்கிடையே, சில மனபேதங்கள் இருப்பதை, சமூக ஊடகங்கள் மூலம் அறிகிறேன். இதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயம். பெரிது படுத்தாமல் போவதே சரி.

    ஒரு குடும்பம் ஒன்றிணைந்தாலே, பல கருத்து வேறுபாடுகள், சகஜம் எனும் போது, ஒருவரை ஒருவர் அறியாமல், தேச நலனை சிந்திக்கும் பலர், ஒன்றிணையும் போது, இப்படி கருத்து வேறுபாடுகள் வரவில்லை எனில் அதிசயம் தான். நாம் என்ன குடும்ப அடிமைகளா அல்லது சில கட்சி தலைவர்களின் அடிமைகளா, கருத்து வேறுபாடின்றி, முட்டு கொடுக்க.

    திரு அண்ணாமலையின் வருகை, அனைவருக்கும் புத்துணர்ச்சி ஊட்டியுள்ளதில், எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால் இதற்கான விதைகளை, முடிந்த வரை முன்பிருந்த தலைவர்கள், இதைவிட கொடுமையான காலகட்டத்தில், விதைத்து கொண்டே தான் இருந்தனர். ஒரு உபயோகமில்லாத நிலத்தை, பண்படுத்த தங்களால் இயன்றதை, செய்து கொண்டே தான் இருந்தனர். பலர் தங்கள் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். இன்று ஓரளவுக்கு அந்த விதைகள் முளைக்க தொடங்கி உள்ளன. இது மேலும் பரவ, பழைய பாணியை விட்டு, வேறு சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் என்பதும் முக்கியம் தான். ஆனால் அதனை நிதானமாக, படிப்படியாகத்தான் செய்ய இயலும்.

    ஒரு சமூக வளைதளத்தில், பலரை லைக் செய்ய வைப்பதும், கட்சியில் இணைந்து, நேரடியாக களத்தை சந்திப்பதும், இரு வேறு தளங்கள். இன்றும், சமூக வளைதளத்தில் கமெண்ட் இடும், ஆதரவாக பேசும் பலர், கட்சியில் நேரடியாக இணைந்திருக்க மாட்டார்கள். அது தேவையும் இல்லை.

    இடது சாரிகளை ஒரு தரம் பாருங்கள். எல்லோரும் கட்சியிலா உள்ளனர். மீடியாவில், அரசு பணியில், சமூக சேவகர்களாக, வழக்கறிஞர்களாக, திரைப்பட நடிகர் டைரக்டர், சின்னதிரை தயாரிப்பாளர், தொழிலதிபராக என பல அவதாரங்களில், கண்ணுக்கு தெரியாமல், தங்கள் பணியை செய்து கொண்டு உள்ளனர். பல சமயம் உங்கள் அருகிலேயே, இடதுசாரி சிந்தனையாளர் அமர்ந்து கொண்டு, தன்னுடைய பணியை செய்வார். நம்மால், அதை உணரக்கூட இயலாது.

    உதாரணமாக 1990களில் ராமர் கோவில் விவகாரத்தில், நடுநிலை, மனிதாபிமானிகள் என்ற பெயரில், அங்கே ஒரு கோவிலை விட, மஸ்ஜித்தை விட, ஆஸ்பத்திரியோ, கல்லூரியோ கட்ட வேண்டும் என சொல்லினர். உண்மையை சொன்னால், நான் கூட அதில் மயங்கினேன். அந்த சமயத்தில், இந்தியாவில் மதக்கலவரம் நடக்க கூடாது என்ற எண்ணத்தில். ஆனால் அப்படி சொல்லி சொல்லி, ஏமாற்றி தங்கள் மதவெறியை, இந்துக்களுக்கான அநீதியை, தொடர்ந்து விதைத்து கொண்டே இருந்தனர். புரியவே சில காலம் பிடித்தது.

    இன்றும் அப்படித்தான், இந்துக்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர். ஆனால் இந்து கலவரம் என்றால், கலங்காலமாக அதனை பாஜக என பரப்புவார்கள். உதாரணம், சமீபத்தில் பஞ்சாபில் சிவசேனாவை சேர்ந்த இந்துக்கள் கலவரம் செய்தனர். ஆனால் மீடியாக்கள் அதனை இந்துக்கள் மட்டும் என்று பதிவு செய்தனர். அடுத்து சிலர், அதனை பாஜகவுடன் இணைத்தனர்.

    இப்படித்தான் திருடிய மாட்டுக்காக, அந்த கிராம இந்துக்கள் திருடனை அடித்தால், அதனை பாஜகவுடன் இணைத்து பேசுவார்களே தவிர, திருடர்கள் எல்லாம் பங்களாதேஷி முஸ்லீம்கள் என்பதை மறைப்பார்கள். அங்கே போலீசும், நிர்வாகமும் பணத்திற்க்காக கொள்ளையர்களுடன் கூட்டு வைத்து இருப்பதையும், பங்களாதேசி இந்தியாவில் கள்ளத்தனமாக நுழைவதை மறைத்து, இந்திய முஸ்லீம்களை, கொன்றதாக பரப்பினர். இன்று ஏன் அதுபோல சம்பவங்கள் நடப்பதில்லை என யோசிக்கும் மனத்திறன் கூட அற்றவர்கள் தான் நடுநிலை இந்துக்கள்.

    அதே சமயம் திரு மாரிதாஸோ, திரு பாண்டேவோ, திரு கார்த்திக்கோ, இன்னமும் பலரும், கொஞ்சம் கொஞ்சமாக தேச சிந்தனைகளை, திராவிட சிந்தனையில் ஊறிய ஒரு சமூகத்தில், விதைக்க தங்களால் இயன்றதை செய்தனர் என்பதையும் மறுக்க இயலாது. இன்று நம்மிடையே ஒரு தவறான எண்ணம் வளர்கிறது. தேசநலனை பற்றி பேசுபவர்கள் அனைவரும் பாஜக கட்சியில், உடனடியாக இணைய வேண்டும் என்பது. அது தேவையில்லை. தனியாக கூட இருந்து கொண்டே ஆதரவு அளிக்கலாம்.

    கம்யுனிஸ்ட் கட்சியை பாருங்கள், கேரளாவை தவிர்த்து எங்கும் இல்லை. ஆனால் அவர்கள் எல்லா மாநிலத்திலும் வன்முறையை பரப்புவது, போராட்டங்கள் நடத்துவது என கோவிட் வைரஸ் போல எல்லா இடங்களிலும் உள்ளனர். நேரிடையாக தேர்தலில் ஈடுபட்டு, வெற்றி பெறுவதில்லை. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையுமில்லை. அவர்கள் நோக்கம் ஒன்றே, பணத்திற்க்காக, இந்தியாவை பிளப்பது மட்டும்.

    ஒரு மிகச்சிறிய தேசஅபிமானியாக, அனைவருக்கும் விடுக்கும் ஒரு வேண்டுகோள், அவரவர் கடமையை செய்து கொண்டே இருங்கள். சிறிய தவறுகளை பெரிது படுத்த வேண்டாம். ஊழல் அல்லது பெரும் தவறுகளை, பாஜக செய்தால் மட்டுமே, வெளிப்படையாக கருத்து சொல்ல வேண்டும். அதை விடுத்து எப்போது வளரும், எப்படி வளரும் என்றெல்லாம் கேள்விகள் வேண்டாம்.

    சில 100 வருடமாக போராடி, தங்கள் கருத்துகளை பரப்ப, இந்துக்களுக்கு உணர்வை ஊட்ட, பலர் உயிரை கொடுத்துள்ளனர். அந்த சமயங்களில் நாம் பிறக்கக்கூட இல்லை. பிரிட்டிஷாரின் கொடுமைகளை, முகலாய வம்சத்தினரின் கொடுமைகளை, காங்கிரஸ், கம்யுனிஸ்ட், இதர குடும்ப கட்சிகளின் வன்முறைகளுக்கு இடையே, இன்று நீங்கள் பார்க்கும் பாஜக வளர்ந்தது.

    இன்று வட இந்தியாவில் கூட, பல இடங்களில் தடுமாற்றம் உள்ளது. மே வங்கத்தில், கேரளத்தில், ராஜஸ்தானில், இன்றும் பாஜகவினரை குறிவைத்து, பல வன்முறைகள் நடக்கின்றன. பலர் உயிரை இழப்பதும், குடும்பத்தினர் பாதிக்கப் படுவதும் தொடர்கிறது. அந்த கட்சி மேல் நம்பிக்கை வைத்து, வளர்ச்சிக்கு சிறிய அளவில் உதவுவதை விடுத்து, தனிமனித விமர்சனம் வேண்டாம்.

    அது தலைவரோ, தொண்டரோ, கட்சியில் இல்லாமல், தனிப்பட்ட முறையில், கட்சி கொள்கைகளை, நடவடிக்கைகளை சமூக வளைதளமோ, மீடியாவிலோ பரப்புபவர்களோ அல்லது எதுவும் இன்றி வெறும் லைக்கும், கமெண்டும் இடுபவர்களோ. யாரையும் கேலி, கிண்டல், விமர்சனம் செய்வதால், தேசத்தின் எதிரிகள் பலம் பெறுவார்கள், நாம் பலவீனமடைவோம்.

    இன்றில்லாவிட்டாலும், சில வருடங்களில் தேசாபிமானிகள் எண்ணிக்கை, தமிழகத்திலும், திராவிடத்தை மீறி வளரும். அதற்கான பணிகளை மட்டும் செய்வோம். பலனை தேசமக்களிடம் தீர்ப்புக்கு விடுவோம். ஒரு நாளில் எதுவும் மாறாது. அதீத எதிர்பார்ப்பும் வேண்டாம்.

    திரு அண்ணாமலை, பேட்டியில் “யார், யூடியுபில் பேசுபவர்தானே” என்று சொன்ன ஆட்கள் நீங்கள் அல்ல, அவருடைய குறி வேறு சிலர். “ரெட் பிக்ஸ்தானே” என்று சிரித்த சிரிப்பு, உங்களுக்கு புரியாமல் போனது, துரதிருஷ்டம். நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.

    ஜெய் ஹிந்த்!

    பாரத மாதா கீ ஜெய்!

    வந்தே மாதரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *