சாணக்கிய நீதி – 3

This entry is part 3 of 8 in the series சாணக்கிய நீதி

சாணக்கிய நீதி-3

எந்தவொரு நாட்டில் வசிக்கக்கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்தினார் என்று போன பகுதி இறுதியில் சொல்லத் தொடங்கினார்.  அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.  மேலும் தனது அறிவுரைகளைத் தொடருகிறார்.

உடனே, நமது மனதில் தோன்றுவது இதுதான்: 

இதெல்லாம் தனி மனிதருக்குச் சொல்லும் அறிவுரைகளாகத்தானே இருக்கின்றன; இதில் அரசநீதி எங்குள்ளது?

சிந்தித்தால், இது அரசருக்கும், நாட்டை வழிநடத்துவோருக்கும் உள்ள அறிவுரை எனப் புரிந்துகொள்ளலாம்.  இவ்வாறு நடக்கும்படி நாட்டை வைத்துக்கொள்ளாது, அனைவருக்கும் வாழும்வழி செய்யவேண்டும் என்பதே அது. 

4நிக: ஶ்ரோத்ரியோ ராஜா நதி3 வைத்3யஸ்து பஞ்சம:  |

பஞ்ச யத்ர ந வித்3யந்தே ந தத்ர தி3வஸம் வஸேது  ||  9  ||

பதவுரை:  செல்வந்தர், அறிஞர், அரசன், ஆறு, மருத்துவர் என ஐவர்;  எங்கு இந்த ஐவர் இல்லை என்று தெரிகிறதோ, அங்கு ஒரு நாள்கூட வசிக்க வேண்டாம்.

விளக்கம்:  சென்ற செய்யுளில் தனி மனிதருக்கு எவை கிட்டாவிட்டால், அந்த நாட்ட்டைவிட்டு நீங்கவேண்டும் என அறிவுறுத்தினார், சாணக்கியர்,

அதெல்லாம் சரிதான்.  இப்படி ஒவ்வொரு நாடாகச் சோதித்துப் பார்க்க இயலுமா?  ஆகவே, எந்த நாட்டில் எவர் இல்லையோ, அங்கு வசிக்கவேண்டாம் என்கிறார்.  எப்படிப்பட்டவர்?  ஐந்துவிதமானவர்கள் இருக்க வேண்டும், அப்படியிருந்தால் தான் அந்நாடு குடிபுகுந்து வசிக்கத்தகுந்தது என்பது அவரது கணிப்பு.

முதலில், ஒருவர் வாழவேண்டுமானால், அங்கு ஊதியம் ஈட்டவேண்டும்.  அதற்கு, செல்வம் உள்ளவர் இருந்து வேலை கொடுத்தால்தான் அது நடக்கும்.  ஆகவே, செல்வந்தார் அங்கு இருக்கவேண்டும்.   ஆக, வாழ வழி வேண்டுமெனில் செல்வந்தர் இருக்கவேண்டும். 

அடுத்தபடி, கல்வி கற்கவேண்டுமெனில் கல்விக்கூடங்கள் வேண்டும்.  அக் கல்விக்கூடங்களை நிறுவ, அவற்றை ஆதரிக்கச் செல்வந்தர் நிதி தந்து உதவவேண்டும்.  கல்விக்கூடங்களைத் திறந்துவைத்தால் மட்டும் போதுமா?  அங்கு கற்பிக்க ஆசிரியர் வேண்டும். அவர்களையே அறிஞர் எனக் குறிப்பிடுகிறார்.

சரி, வேலை கிட்டிவிட்டது. பிள்ளைகள் அறிவுச் செல்வம்பெற அறிஞர், ஆசிரியர்கள் கிட்டிவிட்டனர்.  நாட்டை நல்வழியில் நடத்திச் செல்ல, மக்களைத் தீயோரிடமிருந்தும், படையெடுத்துவரும் பகைவரிடமிருந்தும் பாதுகாக்க ஒரு நல்லரசன் வேண்டுமே!  எனவே, அந்த நாட்டுக்கு மூன்றாவதாக அரசர் தேவைப் படுகிறார்.

மக்கள் உண்டு, உடுத்தி, உறைய உழவர், , தச்சர், கொத்தர், வணிஞர், இன்னும் கைவினைஞர்கள் வேண்டும்.  அனைத்துக்கும் முதற்தேவை உணவு.  அது விளையத் தேவை நீர்.  மக்கள் குடிக்க, குளிக்க, உடை துவைக்கத் தேவை நீர்.  இதைத் தங்கு தடையின்றித் தருவது ஆறு.  ஆகவேதான், முதலில் ஊர்கள் ஆற்றங்கரையில் எழும்பின.

திருவள்ளுவரும்,

விசும்பிற் றுளிவீழி னற்றால் மற்றாங்கே

பசும்புற் றலைகாண் பரிது,

என்று தண்ணீரைப் பற்றிப் போற்றி வான்சிறப்பு அதிகாரத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளார்.

பாரதத்தின், திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, தில்லி, கொல்கொத்தா, பிரயாகை போன்ற நகரங்கள் ஆற்றங்ககையில்தான அமைந்துள்ளன.  அமெரிக்காவிலும் மின்னியாபாலிஸ், மெம்ஃபிஸ், சின்சின்னாட்டி, வாஷிங்டன் டி.சி., போர்ட்லன்ட், ஃபிலடெல்ஃபியா போன்ற நகரங்களும் ஆறுகளைச் சார்ந்தே அமர்ந்துள்ளன.  இப்படிப் பெரிய பட்டியலையே கொடுத்துக்கொண்டு போகலாம்.

இதெல்லாம் இருந்தாலும், மக்கள் நோய்நொடியின்றி வாழவேண்டும். அதற்கு மருத்துவரின் சேவை இன்றியமையாதது.  இரண்டாண்டுகளாக கோவிட் மக்களை வருத்தெடுத்துக் கொல்லும்போது, மக்களுக்கு உதவிசெய்து, பிணிநீக்கியவர் மருத்துவர்தாமே!  அவர்களின் உழைப்பும், பரிவும், தன்னலமற்ற சேவையும் இல்லாதுபோனால் எத்தனை கோடி மக்கள் மரித்திருப்பர்?

இதில் நால்வர் மனிதர்;  ஆனால் ஆறு என்று   குறிப்பிட்டிருக்கிறதே, ஆறு எப்படி மனிதருக்குச் சமமாகும் என்ற கேள்வி நம் மனதில் எழுகின்றதல்லவா?  பாரதத்தில் ஆறுகள் பெண்களாகவே உவமிக்கப்பட்டுள்ளன.  கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி, நர்மதை போன்ற நதிகளை அன்னையராகவே எண்ணி வழிபடுகிறோம்.  ஆகவே, ஆற்றை மனிதர் அளவுக்கு உயர்த்தி ஐவராகக் கணக்கிடுகிறார், சாணக்கியர்.

இந்த ஐந்தும் இல்லா இடத்தில் ஒருநாளும் வசிக்காதே எனில், இந்த ஐந்தும் இருக்குமிடத்து வசிக்கலாம் என்று பொருள்செய்து கொள்ள வேண்டும்.

லோகயாத்ரா ப4யம் லஜ்ஜா தா3க்ஷிண்யம் த்யாக3ஶீலதா  |

பஞ்ச யத்ர ந வித்3யந்தே ந குர்யாத் தத்ர ஸம்ஸ்தி2திம்  ||  10  ||

பதவுரை:  மக்கள் (தடையின்றிப்) பயணித்தல், (குற்றம் செய்ய) அச்சம், (தீச்செயல் புரிய) வெட்கம், இரக்க மனப்பான்மை, தியாக நடவடிக்கை இவ்வைந்தும் எங்கு இல்லையென்று தெரிகிறதோ, அங்கு குடியேற்றம் செய்யவேண்டாம்.

விளக்கம்:  எந்தவிதமான ஐவர் இருக்கும் நாட்டில் இருக்க வேண்டாம் –  அல்லது குடியிருக்க எந்த ஐவர் வேண்டும் என்று எதிர்மறையாகச் சொல்லிவிட்டு, எந்த ஐவகைப் பண்புகொண்டதாக நாம் குடியேறும் நாடு இருக்கவேண்டும் என்பதைத் தன் எதிர்மறைப் பாணியில் சாணக்கியர் சொல்கிறார்.

இந்தநாட்டில் வாழும் வழி, இன்னபிற இல்லையே என்று வேறொரு நாடு- மானிலம் – ஊருக்குக் குடிபுக முடிவெடுத்துவிட்டால் மட்டும் போதாது.  செல்லுமிடம் எப்படியிருக்கவேண்டும் என்பதும் ஆய்ந்தறிய வேண்டும் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. 

இது தனி மனிதருக்கு மட்டுமா?  அரசநீதி என்று சொல்லிவிட்டுத் தனி மனிதருக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறதே என்ற ஐயம் அனைவரும் எழுவது நியாயமே.

இதையெல்லாம், ஓர் அரசன் (நாட்டுத் தலைவர், முதலமைச்சர், ஊர்த் தலைவர், மக்கள் பிரதிநிதிகள்) கற்கவேண்டும்.  அப்பொழுதான் நல்லாட்சி செய்ய இயலும்.

ஒரு நாட்டில் மக்கள் தாங்கள் விரும்பும் இடத்திற்குத் தங்குதடையின்றிப் பயணிக்க அனுமதி இருக்க வேண்டும்.  சில நாடுகளில் ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குச் செல்ல அனுமதி பெறவேண்டும்.  அப்படிப்பட்ட நாடுகளும் உள்ளன.  மக்கள் சட்டம், ஒழுங்கை மீற அச்சப்படவேண்டும்;  அத்துடன் தீச்செயல்கள் செய்ய வெட்கப்படவேண்டும்.  சட்டம், காவல் இருப்பதால் மட்டும் தீச்செயல் செய்யாமலிருப்பது மக்களின் உண்மையான பண்பைக் காட்டாது.  திருடினால் தண்டனை கிடைக்கும் என்பதால் திருடாமலிருப்பது நற்பண்பு அல்ல.  அது தீச்செயல் என்று வெட்கி ஒதுக்கவேன்டும். 

மற்றவரிடமும், பிராணிகளிடமும் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்துகொளல் வேண்டும்.  தன்னலம் மட்டும் கருதிச் செயல்படாது, மற்றவருக்காக அறமளிக்கும் பண்பும், மனப்பாங்கும், நடவடிக்கையும் வேண்டும்.

இவ்வைந்து பண்பாடுகளும் ஒரு நாட்டில் உள்ளதா என்று கண்டறியவேண்டும்   இப்படிப்பட்ட  ஐந்தும் இல்லாதுபோனால் அங்கு குடியேறுவதைச் செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறார்.

அப்படிச் செய்தால், துரத்தும் கரடிக்குப் பயந்து மரத்தில் ஏறுவதைப் போலத்தான் இருக்கும்.

ஜானீயாது ப்ரேஷணே ப்4ருத்யாநு பா3ந்தவானு வ்யஸநா(ஆ)க3மே  |

மித்ரம் சா(ஆ)பத்திகாலேஷு பா4ர்யா ச விப4வக்ஷயே  || 11  ||

பதவுரை:  பணியாட்களை(ப் பற்றி) வேலைக்கனுப்பும் போதும், உறவினர்க(ளைப் பற்றித்) துன்பம் வரும்போதும், நண்பர்(களைப் பற்றி) இன்னல் காலத்திலும், மனைவி(யைப் பற்றிச்) செல்வமில்லாதபோதும் அறிந்துகொள்ளலாம்.                …               11

விளக்கம்:  நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான குணம் என்ன, அவர்கள் எப்படி தங்கள் சுய உருவத்தைக் காட்டுவார்கள் என்று எப்பொழுது, எப்படி அறிந்துகொள்வது?  இது அரசருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியவேண்டிய ஒன்றுதானே!  அதைச் சாணக்கியர் பக்குவமாக விளக்குகிறார்.

நம்வீட்டில் வேலைசெய்யும் பணியாட்கள், நாம் வேலைசெய்யும் அலுவலகத்தில் நம்மிடம் பணியாற்றும் அலுவலர்கள் நம்மைப்பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார்கள் என்று எப்படி அறிவது?  அவர்களிடம் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டு, அவர்கள் அறியாமல் அவர்கள் நம்மைப்பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தால் தெரியும்.  இது அரசர்களுக்கு மிகவும் முக்கியமல்லவா?

நமக்குத் துன்பம் வரும்போது, இன்னல்களால் வருந்தும்போதுதான் நமது உறவினர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.  செல்வம் நிரம்பி வழியும்போது நாம் அறியாதவர்கூட உறவு, நட்பு பாராட்டிக்கொண்டு வருவர்; நா இனிக்க இனிக்க நம்மைப் புகழ்ந்து பேசுவர். ஆனால், நம்மிடமிருக்கும் செல்வம் போய்விட்டால்,

“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்;

அக்குளத்தே கோட்டியும், ஆம்பலும் போல ஒட்டியுறுவார் உறவு,”

என்றுதானே பழமொழி செப்புகின்றது?

“உடுக்கை இழந்தவன் கைபோல மற்றாங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு,”

என்றுதானே செந்நாபோதாரும் செப்பிச் சென்றிருக்கிறார்?  ஆகவே, உண்மையான நண்பரைப் பற்றி நமக்குத் துயரத்தால் கையறு நிலை வரும்போதுதான் அறிய இயலும்?  அச்சமயம் நாம் சொல்லாமலே, நமது நிலையைப் பற்றி அறிந்து ஓடிவந்து உதவிசெய்பவர்தான் (உண்மையான) நண்பராவர்.  மற்றவரெல்லாம் தெரிந்தவரே.  உதவிசெய்யாவிடிலும் பரவாயில்லை, நம் நிலையை அறிந்து, நம் பின்னால் இகழ்பவரும், நம்மைத் தெரியாதவர்போன்று காட்டிக்கொள்பவரும் நண்பரே அல்லர்.

“இல்லானை இல்லாளும் வேண்டாள்,” என்றே தமிழ்மறை எழுதிய திருவள்ளுவரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்திருக்கிறார்.  ஆகவே, செல்வமின்றி, மனைவியின், குடும்பத்தின் தேவையை நிறைவேற்றாதவனை மதிக்கமாட்டாள்.  இருப்பினும், கணவன்பால் மாறாக் காதல் கொண்ட மனைவி அவன் காட்டுக்கே ஏகினாலும் உடன் செல்வாள் என்பதும் கண்கூடு.

ஆதுரே வ்யஸநே ப்ராப்தே துர்பிக்ஷே ஶத்ரு ஶங்கடே  |

ராஜத்வாரே ஶ்மஶாநே யஸ்திஷ்டதி ஸ பாந்தவ:  ||  12  ||

பதவுரை:  துன்பத்திலும், கவலையிலும், பஞ்சகாலத்திலும், எதிரிகளால் இடையூறு வரினும், அரசவையிலும், சுடு(இடு)காட்டிலும், எவர் (நம்முடன்) நிற்கிறாரோ, அவர் உறவினர்.               …           12

விளக்கம்:  நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைப்பர் என்பதை எக்காலத்தில் அறியலாம், எப்படி அறியலாம் என்ற சாணக்கியர் அடுத்து எவர் நமது உறவினர் என்பதையும் விளக்குகிறார்.  நம்மிடம் செல்வம் இருக்கும்போது நண்பர், உறவினர் வருவர்.  நமக்குத் துன்பமும், அதனால் கவலையும் வந்தால், யாரிடமாவது சொல்லித்தானே ஆறுதல் அடையவேண்டும்?  அப்படிச் சொல்வதை ஓருமுரை கேட்டவுடனே பலரும் நழுவிக்கொள்ளத்தான் பார்ப்பர்.  ஏனெனில்,  உதவி செய்யவேண்டும் என்றால், நேரமும் பணமும் செலவாகும்.  அது தேவையில்லாத் தொல்லை என்றுதான் முடிவுகட்டுவர்.  பஞ்சகாலத்திலோ, துன்புறுபவரை நெருங்கவும் அஞ்சுவர்; தனக்கு மிஞ்சித்தானே, தானமும் தருமமும் என்று நியாயம் பேசுவர்.

அதை விட்டுவிடுங்கள், தெருவில் ஒருவரை இன்னொருவர் அடித்துத் துன்புறுத்தினால், முதலில் அங்கிருந்து நீங்கி ஓடிவிடவோ, அல்லாது, அதைப் படமெடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடவோதான் பலரும் முனைவர்.  தற்செயலாக அங்கு போலிசார் வந்தால், சாட்சிசொல்ல அழைத்தால் தொல்லை என்று நகர்ந்துபோவர்.

அரசவை என்றால், தற்பொழுது அரசு அதிகாரிகள், நீதி மன்றம் என்று எடுத்துக்கொள்ளலாம்.  நம்மை ஒருவர் பாராட்ட அங்கு அழைத்தால் எவரும் உடன்வர மறுக்கார்.  ஆனால் சாணக்கியர் குறிப்பிடுவது ஆபத்துக் காலத்தில்தான்.  எனவே, அச்சமயத்தில் ஒருவர் அழைக்கப்பட்டால், தாமும் அப் பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் என்செய்வது என்று ஓடிஒளிவர்.

சுடுகாட்டுக்கும் இடுகாட்டுக்கும் இறந்தவரை இறுதிப் பயணத்துக்கு இட்டுச் செல்லும்போது, உடன்வந்து நிற்பவர் உறவினர்.  பொதுவாகவே, இது நடக்கிறது. உறவினர் சிலர் ஒருவர் இறந்தால் அங்கு வருகின்றனர்.

கண்ணதாசனும்,

“வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?” என்றுதான் கவிதை எழுதினார்.  வீடுவரை மட்டும் இருப்பவர் உண்மையான உறவல்லர்.  காடுவரை வரும் பிள்ளைதான் உண்மையான உறவு என்று சொல்லாமல் சொன்னார்.  சாணக்கியரோ, அதுமட்டும் போதாது, மற்ற நேரத்திலும் உடன் நிற்கவேண்டும் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

(தொடரும்)

Series Navigation<< சாணக்கிய நீதி – 8<< சாணக்கிய நீதி – 7<< <strong>சாணக்கிய நீதி – 6</strong><< சாணக்கிய நீதி – 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *