மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1

மூலம்: வால்டர் வுல்லன்வெபர்

தமிழில்: அருணகிரி

இந்தக்கட்டுரை, ஜெர்மனியைச்சார்ந்த ஸ்டெர்ன் (STERN) என்கிற ஊடக நிறுவனம் 2003-இல் வெளியிட்ட கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாக்கி எழுதப்பட்டது. இதில் வெளிச்சம் போடப்பட்டுள்ள பல விஷயங்களைக்குறித்து புத்தகங்களும், கார்டியன் முதலான பத்திரிகைகளில் கட்டுரைகள் பலவும், சானல் 4 டாக்குமெண்டரிகளும் வெளிவந்து விட்டன. ஆனால் இன்றுவரை இந்த கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் மதர் தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்”  (Missionaries of Charity)  அமைப்பிடமிருந்து எந்த பதிலும் கிடையாது.

அடைப்புக்குறிக்குள்  “மொ.பெ.” என்று குறிக்கப் பட்டுள்ளவை மொழிபெயர்ப்பாளரின் குறிப்புக்கள்.

இனி கட்டுரை.

ஏழைகளின் தேவதை என்று கருதப்பட்ட மதர் தெரசா சில வருடங்கள் முன்பு காலமானார். வேறு எந்த சேவையமைப்புக்கும் இல்லாத அளவு இன்றும் மதர் தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்”  (Missionaries of Chrity) அமைப்புக்கு பணம் வந்து கொட்டுகிறது. ஆனால் நோபல் பரிசு வென்ற இந்த  அம்மையார் செல்வத்தை உதறித்தள்ளி வறிய வாழ்க்கையை ஏற்பதாக அறிவித்தவர்.  அப்படியென்றால், அவரது அமைப்புக்கு வந்த பணமெல்லாம் எங்கே சென்றது?

mothr-teresa-trib-art-web-tசொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அங்கே தெரசா அவர்கள் கட்டாயம் இருப்பார்கள்தான். மதர் தெரசா என்று பிற்காலத்தில் அன்புடன் அழைக்கப்பட்ட மாஸடோனியாவைச்சேர்ந்த ஏக்னஸ் கான்ஷ்வா போஆஷ்யு ஜனவரி 6, 1929-இல் கத்தோலிக்க லொரெட்டோ அமைப்பின் பெண்துறவியாக கல்கத்தா வந்திறங்கிய போது அவருக்கு வயது பதினெட்டு. 68 வருடங்கள் கழித்து அவர் இறந்தபோது, இந்திய அரசு அவருக்குத் தந்த இறுதி மரியாதையில் கலந்துகொள்ளும் பொருட்டு  உலகத் தலைவர்கள் பலரும் கல்கத்தாவில் கூடினர். இந்த 68 வருடங்களில் தெரசா கத்தோலிக்க சர்ச்சின் வரலாற்றிலேயே வெற்றிகரமானதொரு அமைப்பை நிறுவி, நோபல் பரிசு பெற்று, சமகாலத்தின் மிகப்புகழ் வாய்ந்த கத்தோலிக்க ஆளுமையாக உருவாகி இருந்தார்.

இப்படி ”நினைவுச்சின்னமாகி” விட்ட ஒருவர்மீது சந்தேகம் வரலாமா என்ன? ஆனால் கல்கத்தா மக்கள் பலரும் அவ்வாறு சந்தேகப்படுகிறார்கள்தாம்.

உதாரணத்திற்கு, பற்களெல்லாம் கொட்டிப்போய் கல்கத்தா சேரியில் வாழ்க்கை நடத்தும் சமிதியை எடுத்துக்கொள்வோம். எந்த நகரின் ஏழைகளுக்காக மதர் தெரசா தன் வாழ்வை அர்ப்பணித்ததாகச்சொல்லப்பட்டாரோ அந்த கல்கத்தாவின் ”ஏழைகளிலும் ஏழை”களில் ஒருவர் சமிதி. சேவை அமைப்பு ஒன்று கொண்டு வந்து தரப்போகும் அரிசி பருப்புக்காக கையில் பிளாஸ்டிக் பையுடன் கல்கத்தாவின் பார்க் தெருவில் ஒரு கிலோமீட்டர் நீள வரிசையில் காத்திருப்பவர். ஆனால் அதைக்கொண்டு வந்து தரப்போவது மதர் தெர்சாவின் அமைப்பு கிடையாது. தினமும் 18000 பேருக்கு உணவளிக்கும் அஸெம்ப்ளி ஆஃப் காட் என்கிற அமெரிக்க கிறித்துவ அமைப்பு அது.

சமிதியிடம் கேட்டால் ”மதர் தெரசாவா? அவர்களிடமிருந்து எங்களுக்கு ஒன்றுமே கிடைத்தது கிடையாதே. அந்த சிஸ்டர்களிடம் இருந்து ஏதாவது எங்களுக்கு எப்போதேனும் வந்திருக்கிறதா என்று இங்குள்ள சேரிகளில் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். அப்படி ஒருவரையுமே  நீங்கள் இங்கே பார்க்க முடியாது” என்கிறார்.

பண்ணாலால் மாணிக் அவர்களுக்கும் இந்த ஐயம் உள்ளது. ”உங்களைப்போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்களெல்லாம் இந்தப்பெண்மணியை ஏன்  இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப்புரியவில்லை!” என்கிறார். ராம்பகன் சேரியில் ஐம்பத்தாறு வருடங்களுக்கு முன் பிறந்தவர் பண்ணாலால் மாணிக். ராம்பகன் சேரி என்பது முன்னூறு வருடங்களாக இருக்கும் கல்கத்தாவின் ஆகப்பழமையான சேரிப்பகுதியாகும். அங்கே மாணிக் இன்று செய்து காட்டியிருப்பதை ஓர் அதிசயம் என்றே சொல்லலாம்.

மாணிக் அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார்!  கட்டிட வேலைக்கு அவசியமான பொருட்களை வாங்க வேண்டி – ஒரு அபார்ட்மெண்டுக்கு பத்தாயிரம் மார்க்குகள் (ஜெர்மானியப்பணம்) ஆனது- அவர் கையேந்தியது இந்து சேவை அமைப்பான ராமகிருஷ்ணமடத்திடம்தான்.   ராமகிருஷ்ணமடம் அவருக்கு உதவியது. மதர் தெரசாவின் அமைப்பு? “அவரிடம் மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது!”

கல்கத்தா நகரில் ஏழைகளுக்கு உதவும் 200 சேவை அமைப்புகள் உள்ளன. மதர் தெரசாவின் அமைப்பு இந்த சேவை அமைப்புகளில் பெரிதாக முன்னே நிற்கும் அமைப்பே அல்ல என்பதே உண்மை. ஆனால் இந்த நிதர்சனம் அந்த அமைப்பைப்பற்றி வெளியுலகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பத்துக்கு நேர்எதிராக இருக்கிறது. மதர் தெரசா என்கிற பெயரே கல்கத்தா நகருடன் இறுகப்பிணைந்த பெயரல்லவா. வறுமையை எதிர்த்தபோரில் மும்முரமாய் அவரது அமைப்பு முனைப்பாய் இயங்கும் இடம் கல்கத்தா என்றுதானே நோபல் பரிசு வென்ற இவரது உலகளாவிய ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

final_verdict_book_on_mother_teresa”எல்லாம் பொய்”  என்கிறார் அரூப் சாட்டர்ஜி. இவர் ஒரு மருத்துவர். கல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். மதர் தெரசா என்கிற பொய்ப்பிம்பத்தைப்பற்றிய புத்தகத்துக்கான ஆய்வில் உள்ள இவர்   கல்கத்தா சேரிகளில் உள்ள ஏழைகளிடம் சென்று விசாரித்திருக்கிறார் (இப்போது முடிக்கப் பட்டு விட்டது- The Final Verdict என்று அந்தப் புத்தகத்துக்குப் பெயர்  – மொ.பெ) மதர் தெரசாவின் உரைகளை கூர்ந்து ஆராய்ந்த இவர் சொல்கிறார். “எங்கே ஆய்ந்து தேடினாலும் சரி, நான் கண்டதெல்லாம் பொய்களையே- உதாரணத்திற்கு- பள்ளிக்கூடங்கள் பற்றிய பொய்யைப்பார்ப்போம். கல்கத்தாவில் ஐயாயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தை நடத்துவதாக மதர் தெரசா அடிக்கடி குறிப்பிடுகிறார். ஐயாயிரம் குழந்தைகள்!- அப்படியென்றால், அது கட்டாயம் பெரிய பள்ளிக்கூடமாகத்தானே இருக்கும், சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள பெரும்பள்ளிக்கூடங்களிலேயே ஒன்றாகக்கூட அது இருக்கும். ஆனால் அந்தப் பள்ளிக்கூடம் எங்கே? நான் அதை எங்குமே காணவில்லை, அது மட்டுமல்ல, அந்தப் பள்ளிக்கூடத்தைப்பார்த்த ஒருவரையும்கூட நான் எங்குமே கண்டதில்லை” என்கிறார் சாட்டர்ஜி.

கல்கத்தாவின் பிற சேவை நிறுவனங்களை விட மதர் தெரசாவின் சேவை நிறுவனங்கள் இருவிதங்களில் வேறுபடுகின்றன: 1) மதர் தெரசாவின் சேவை நிறுவனங்கள் உலகப்புகழ் பெற்றவை, 2) பிற அமைப்புகளைவிட மிக அதிக நிதிஆதாரம் கொண்டவை.

சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத்தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது. சேவை அமைப்புகளின் கணக்குகளை சரிபார்க்க வேண்டிய டெல்லி நிதி அமைச்சகம் இந்த அமைப்பின் சரியான கணக்கு வழக்குகளை வைத்துள்ளதா என்று தெரியவில்லை. ”STERN” நிர்வாகம் இந்திய நிதி அமைச்சகத்தை இதுகுறித்து கேட்டதில் இது வெளியிட முடியாத ரகசியத் தகவல் என்று கூறி விவரங்கள் தர மறுத்து விட்டது. (முதன்முறையாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட போது இருந்த நிலை இது.  ஆர்வலர்கள் இது  குறித்து  தகவல்  அறியும்  சட்டத்தின்  அடிப்படையில்  இப்போது  இந்திய  அரசாங்கத்தை  மீண்டும் அணுகிப் பார்க்கலாம் – மொ.பெ).

மதர் தெரசாவின் சேவை அமைப்பிற்கு 6 கிளைகள் ஜெர்மனியில் உள்ளன. அங்கும் நிதி விவகாரங்கள் ரகசிய தகவல்கள்தான். ஜெர்மனி கிளைகளின் செயல் தலைவரான சிஸ்டர் பௌலினிடம் இதுகுறித்து கேட்டபோது, “எங்களிடம்  எந்த அளவு பணம் உள்ளது என்பது- அதாவது நான் சொல்ல வந்தது எந்த அளவு குறைவாக எங்களிடம் பணம் உள்ளது என்பது- மற்ற யாரும்தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லை” என்றார். மரியா டிங்கல்ஹாஃப் என்பவர் இந்த அமைப்பில் கணக்கு வழக்குகளை எழுதுபவராக 1981 வரை தாற்காலிக வேலை பார்த்து வந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது வருடத்திற்கு மூன்று மில்லியன் (ஜெர்மானிய மார்க்குகள்) வந்ததாக நினைவு கூர்கிறார். ஆனால் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள மதர் தெரசா வெளியாட்களை முழுதும் நம்பவே இல்லை. ஆகவே, 1981-இலிருந்து சிஸ்டர்களே கணக்கு வழக்குகளைக் கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். “நான் வெளியேறியபின் உண்மையில் எவ்வளவு பணம் வந்ததென்று தெரியாது, ஆனால் மூன்று மில்லியனின் பல மடங்குகளாக அவை இருந்திருக்கும்தான்” என்று கணக்கிடுகிறார். அவ்வகையில் “ஜெர்மனிக்கார்களைப்பொறுத்தவரை மதர் தெரசா மிகவும் மகிழ்வாகவே இருந்தார்” என்கிறார் மரியா.

நியுயார்க்கின் ப்ரான்க்ஸ் பகுதியில் உள்ள ”புனித ஆவி இல்லம்”தான் மதர் தெரசாவின் கிளைகளிலேயே பணம் கொழிக்கும் கிளையாக ஒருவேளை இருந்திருக்கக்கூடும். சிஸ்டர் விர்ஜினாக இருந்து பின்னர் சுசன் ஷில்ட்ஸ் என்று சாதாரண வாழ்க்கைக்குத்திரும்பியவர்  ஒன்பதரை வருடங்கள் அங்கே பணியாற்றி இருக்கிறார். “எங்கள் நாளின் பெரும்பகுதியை நன்றிக்கடிதம் எழுதவதற்கும், எங்களுக்கு வந்த செக்குகளை கையாள்வதிலுமே செலவிட்டோம்” என்கிறார்.  ”ஒவ்வொரு இரவும், நன்கொடை ரசீது தயாரிப்பதற்காகவே 25 சிஸ்டர்கள் பல மணிநேரங்கள் செலவழிப்பார்கள். ஒரு தொழிற்சாலை போல செயல்படுவார்கள்: சிலர் தட்டச்சு அடிப்பார்கள், மற்றவர்கள் தொகைக்கான பட்டியலைத் தயாரிப்பார்கள்; பிறர் கடிதங்களை அதன் கவர்களில் போட்டு மூடுவார்கள்; வேறு பலர் வந்த செக்குகளைப் பிரிப்பார்கள். 5 டாலரில் இருந்து 100 டாலர் வரை செக்குகள் வரும். பல நேரங்களில் நன்கொடையாளர்கள் செக்குகளை வாசல் கதவில் வைத்துவிட்டுபோய் விடுவார்கள். கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினங்களில் நன்கொடை கட்டுக்கடங்காமல் போய்விடும். போஸ்ட்மேன்கள் சாக்குமூட்டைகளில் கடிதங்களைக்கொண்டு வருவார்கள்- 50,000 டாலர் நன்கொடை செக்குகள் வருவதெல்லாம்கூட அதிசயம் கிடையாது” என்கிறார் சிஸ்டர் விர்ஜின். நியுயார்க் பேங்க் அக்கவுண்டில் ஒருவருடத்தில் மட்டும் 50 மில்லியன் டார்கள் இருந்ததை நினைவுகூர்கிறார். ஒரு வருடத்தில் 50மில்லியன்  டாலர்கள்!- அதுவும் கத்தோலிக்க பெரும்பான்மை இல்லாத ஒரு நாட்டில்! அப்படியென்றால் ஐரோப்பாவிலும், பிற உலக நாடுகளில் எவ்வளவு வசூல் செய்தார்கள்?

உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள்- இந்த வசூல் பலப்பல வருடங்களாகத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று.

நிதி வரவு மட்டுமல்ல, செலவும் கூட மர்மமாகவே வைக்கப்படுகிறது. மதர் தெரசாவின் சேவை அமைப்புகள் அதனளவில் பெரும் நிதியைச் செலவழிக்க முடிவதில்லை. ஸிஸ்டர்கள் ஆதரவில் இயங்கும் சேவை அமைப்புகள் அளவில் மிகச்சிறியவை- முக்கியமற்றவை- உள்ளூர்க்காரர்களுக்குக்கூட அவை எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது பெரும் கடினமான வேலையாக இருக்கிறது.  பெரும்பாலான நேரங்களில்  ”மதர் தெரசா ஹோம்” என்பது சேவைச்செயல்கள் எதுவும் நடைபெறாத, சிஸ்டர்கள் வாழ்வதற்கான ஓர் இருப்பிடமாகவே இருக்கிறது. வெளித்தெரியக்கூடிய அல்லது பயனுள்ளதான உதவிகள் எதுவுமே அவ்விடங்களில் இருந்து தர இயலாது. இந்த அமைப்புகளுக்கு பெரும் நன்கொடைகள் பணமாகவும் பணமற்ற பிற வகையிலும் அடிக்கடி வருகின்றன. உதாரணத்திற்கு, வெளிநாட்டு மருந்துகள் பெட்டி பெட்டியாக இந்திய விமான நிலையங்களில் வந்திறங்குகின்றன. நன்கொடையாக வரும் உணவுப்பொருட்கள், பால் பவுடர், ஆகியவை கல்கத்தா துறைமுகங்களில் கண்டெய்னர்களில் வந்து இறங்குகின்றன. எண்ணிப்பார்க்கவே முடியாத அளவுக்கு ஆடைகளும், உடைகளும் அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நன்கொடைகளாக வருகின்றன. இவ்வாறு வரும் உபயோகப்படுத்தப்பட்ட மேல்நாட்டு உடைகள்  கல்கத்தாவின் நடைபாதைக்கடைகளில் 25 ரூபாய்க்கு விற்கப்படுவதைக்காணலாம். நடைபாதை வியாபாரிகள் “மதரிடமிருந்து சட்டைகள், மதரிடமிருந்து பேண்டுகள்” என்று கூவி விற்கிறார்கள்.

(கேதரின் பூ எழுதிய Behind the beautiful forever புத்தகத்திலும் இதுதொடர்பான குறிப்பொன்று உள்ளது: மதர் தெரசாவை முன்னிறுத்தும் சிஸ்டர் பௌலெட்டின் அமைப்புக்கு பம்பாய் சேரிக்கென்று வரும் நன்கொடைப்பொருட்கள் சில நாட்களில் பம்பாய் நடைபாதைகளில் விற்கப்படுவதை ஆவணப்படுத்தி இருக்கிறார்.கேதரின் பூ பம்பாய் சேரியில் பல வருடங்கள் வசித்தவர். 2012-இல் அவர் புத்தகம் வெளி வந்தது. அன்றும் சரி இன்றும் சரி சேரி அனாதைகளுக்காக கிறித்துவ அமைப்புகளுக்கு வரும் நன்கொடைப்பொருட்கள் வெளியே விற்கப்படுவது மாற்றமின்றி தொடரும் ஒன்று என்பதையே இது காட்டுகிறது. அவரது புத்தகம் பற்றிய அருணகிரியின் கட்டுரைக்கான இணைப்பு இங்கே – மொ.பெ.)

india-mother-teresa
Image Courtesy: AP

பிற சேவை அமைப்புகள் போலல்லாமல், தெரசாவின் ”சேவையின் பிரசாரகர்கள்” (Missionaries of Charity) அமைப்பு சுய நிர்வாக செலவுக்காக பெரிதாக எதுவும் செலவழிப்பதில்லை, செலவற்ற ஓர் அமைப்பாகவே அது நிர்வகிக்கப்படுகிறது. 150 நாடுகளில் இருக்கும் நான்காயிரம் ஸிஸ்டர்கள், பல மில்லியன் டாலர்கள் கொண்ட இந்த உலகளாவிய சேவை அமைப்பின் வேலையாட்கள். வறுமை, கீழ்ப்படிதல் ஆகியவற்றை வாழ்நாள் நெறியாக ஏற்றுக்கொண்டவர்கள் இவர்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. இவர்களுக்கு உதவுவதற்கென்று சாதாரண குடிமக்களில் இருந்து 3 லட்சம் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.

மதர் தெரசா சொல்வதுபடியே பார்த்தால்கூட அவரது அமைப்பு உலகெங்கிலும் 500 இடங்களில் செயல்படுகிறது. ஆனால் அந்த இடங்களை விலைக்கு வாங்கவோ வாடகைக்கு எடுக்கவோ அந்த அமைப்பு தன் வங்கிக்கணக்கை தொடக்கூட வேண்டியதில்லை. ”அதற்கெல்லாம் செலவழிக்கவே வேண்டாம் என்பார் மதர்” என்கிறார் சுனிதா குமார். சுனிதா குமார் கல்கத்தாவின் பெரும்பணக்கார சீமாட்டிகளில் ஒருவர்;  மதர் தெரசாவின் அமைப்புக்கு வெளியே அவருக்கு நெருக்கமானவரும் கூட. “மதர் தெரசாவிற்கு வீடு தேவைப்பட்டால், அது அரசாக இருந்தாலும், தனிஆளாக இருந்தாலும், நேரடியாக சொந்தக்காரரை அணுகுவார். அவரிடம் பேசிப்பேசி கடைசியில் இலவசமாகவே அந்த இடத்தைப் பெற்றும் விடுவார்”என்கிறார்.

அவரது இந்த வழிமுறை ஜெர்மனியில் பெரும் வெற்றி பெற்றது. 2003 மார்ச்சில் ஜெர்மனியின் ஹாம்பெர்க்கில் இவ்வாறு பெறப்பட்ட ”பெத்லஹேம் வீடு” வீடற்ற பெண்டிருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 4 சிஸ்டர்கள் அங்கு வேலை செய்தனர். தனித்துவம் வாய்ந்த அமைப்புடைய அந்தக்கட்டிடத்தை முடிக்க அன்றைய தேதியில் 2.5 மில்லியன் ஜெர்மன் மார்க்குகள் செலவாயின. ஆனால், மதர் தெரசாவின் அமைப்பு அந்தக்கட்டிடத்திற்காக தன் நிதியிலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. அதற்கான பணம் கிறித்துவ அமைப்பு ஒன்றால் ஹாம்பர்கில் சேவை நிதியென்று வசூலிக்கப்பட்டது. குறுகியகாலத்தில் மில்லியன்களைத்திரட்ட மதர் தெரசா என்கிற பெயர் ஒன்றே போதுமானதாக இருந்தது.

(தொடரும்) 

அடுத்த பகுதி

இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

மூலம்: பல்பீர் புஞ்ச் எழுதிய கட்டுரை (இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.10.2014)
தமிழில்: எஸ்.ராமன்

இந்தியாவையும், அதன் ஆணி வேரான இந்துத்துவத்தையும், வெகு காலமாகத் தனக்கே உரிய காமாலைக் கண்ணோட்டத்தில் கவனித்துக் கொண்டிருக்கும் மேலை நாடுகளின் ஓரகப் பார்வை மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், அமைதிக்கான இந்த வருடத்தின் நோபல் பரிசுத் தேர்வுகள் அவை பற்றி ஆவலுடன் கேட்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவரது உள்ளங்களையும் குளிர வைத்திருக்கும்.

விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசுகளை தீர்மானிக்கும் ஒரு குழு தீர்மானிக்காது, அமைதிக்கான பரிசை நார்வே நாட்டின் பாராளுமன்றக் குழு ஒன்று தேர்வு செய்கிறது. அதனால் அந்தத் தேர்வில் அரசியல் சாயமும், உணர்ச்சிகளும் கலப்பது இயற்கை என்பது எழுதாத விதி போலத் தெரிகிறது. கிடைத்தற்கரிய அந்தப் பரிசைப் பெறுவதற்கு, அது கிடைக்கப் பெற்றவர்கள் எல்லா விதத்திலும் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் பரிசுத் தேர்வுக்காக நார்வே குழு அறிவித்துள்ள காரணத்தை ஒத்துக்கொள்வதில் தான் பிரச்சினை இருக்கிறது. “கல்விக்கான ஆதரவையும், வன்முறைக்கான எதிர்ப்பையும் திரட்டுவதில் ஓர் இந்து முஸ்லீம் உடனும், ஓர் இந்தியன் பாகிஸ்தானியனுடனும் சேர்ந்து போராடுவது முக்கியம் என்று இந்தக் குழு கருதுகிறது” என்று அறிவிக்கும் அந்தக் குறிப்புதான் உறுத்துகிறது.

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகள் தவிர வேறெந்த நாடுகளும் கல்வி விஷயங்களிலோ, குழந்தைகள் நலன் காப்பதிலோ இவ்விரு நாடுகளின் பங்களிப்பை ஒருசேரப் பார்ப்பது கிடையாது. இந்தியாவின் அரசியல் சட்டப்படி கல்வி கற்பதற்கான உரிமை குழந்தைகளுக்கு இருக்கிறது; மேலும் அரசியல் உரிமைச் சட்டப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதிலும் தடை இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண்கள் கல்வி பெறுவது 80 விழுக்காடையும் தாண்டி, சில இடங்களில் 100 விழுக்காடையும் எட்டியிருக்கிறது.

nobel_2014_malala_satyarthi

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் நடைமுறையில் பல இடங்களில் குறை இருக்கிறது. அது தவிர, ஒரு குடும்பத்தின் பரிதாபகரமான ஏழ்மை நிலையால் குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் இருப்பதற்கு பெற்றோர்களாலும் முடிவதில்லை. இதற்கான தீர்வு சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதிலும், குழந்தைகளின் கல்வி உரிமையை நன்கு நிலைநாட்டச் செய்வதிலும் தான் இருக்கின்றன. அவ்வாறு அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதிலும், இரகசியமாகச் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுவதைப் பலரும் அறியும் வண்ணம் வெளியே கொண்டுவருவதிலும் நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

அவருடையது போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சேவையால் இந்திய அரசாங்க நிர்வாகத்தின் வலிமை நன்கு கூடி வருகிறது. தற்போது கிடைத்துள்ள நோபல் பரிசு தரும் வளத்தால் அந்த வலிமை மேலும் கூடி, சட்ட திட்டங்கள் 100 விழுக்காடு அளவும் அமல்படுத்தப்பட்டு, கல்வி உரிமையும் நிலைநாட்டப்பட்டு பெருமளவிற்கு நன்மை விளையும் என்பது நிச்சயம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படியும், இந்தியச் சட்ட அமலாக்க முறைப்படியும் நாம் ஆண்களையும், பெண்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. மேலும் கல்வி பயிலும் விஷயத்தில் பல தலைமுறைகளாகப் பெண்களுக்கு இருந்த அநீதிகளை நீக்கும் பொருட்டு, பல மாநிலங்களில் பெற்றோர்களுக்குப் பல விதமான விசேஷமான வசதிகள் செய்து தரப்பட்டு, அவர்கள் தங்கள் பெண்களைப் படிக்க அனுப்பி வைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிரார்கள்.

அவ்வாறான நிலைமை பாகிஸ்தானில் இல்லை. பதினைந்தே வயதான மாலாலா யூசுப்ஸை பாகிஸ்தானியப் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய போது, பெண் கல்வியை முஸ்லிம் மதக் கொள்கை ஏற்காது என்ற காரணத்தால் அவளைக் கொல்வதற்காக முஸ்லீம் தீவிரவாதிகளான தாலிபான் துப்பாக்கியால் சுட்டார்கள். அவள் சாகாமல் உயிர் தப்பிப் பிழைத்ததற்கு, அவள் உடனே பாகிஸ்தானில் இருந்து சிகிச்சைக்காக லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டதே காரணம். அவளைக் கொல்வதற்குத் தாலிபான் பயங்கரவாதிகள் இன்னமும் பாகிஸ்தானில் காத்துக் கொண்டிருப்பதால் அவள் அங்கு செல்ல முடியாது லண்டனிலேயே தங்கி வேலை செய்கிறாள். இஸ்லாமிய சட்டமுறையை முஸ்லீம் மத குருமார்கள் இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளதால் அவர்கள் மாலாலாவின் பெண் கல்வி உரிமைக்கான போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மத குருமார்களின் இந்த எதிர்ப்பு பயங்கரவாதிகளின் எதிர்ப்புக்கு ஆதரவாக இருக்கிறது.

இதற்கு முற்றிலும் நேர் மாறாக, இந்திய அமைப்புச் சட்டம் எந்தவொரு மதத்தையும் வேறுபடுத்தி ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட மதங்களின்படி வந்த வழிமுறைகளும், அதன் சம்பிரதாயங்களும் எதுவானாலும், அனைத்துக்கும் பொதுவான சட்டத்தின்படியே நீதித்துறை செயல்படுகிறது. அதனால் இந்த இரண்டு தேசங்களுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேற்றுமைகளை நோபல் பரிசுக் குழு அறியாது இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

மேலும் நோபல் பரிசு பெற்ற அந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள். இது தவிர, இந்தியாவோ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் பாகிஸ்தானோ பயங்கரவாதத்தைத் தன் மண்ணில் ஊக்குவித்து வளர்த்து, அதைத் தன் நாட்டில் உள்ள சிறுபான்மையோர் மீதும், அண்டை நாட்டின், முக்கியமாக இந்தியா, மீது கட்டவிழ்த்து விடுவதை ஓர் ஆயுதம் போலப் பயன்படுத்துவதில் அதன் நிர்வாகமே பங்கு வகிக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு வரையறுத்துள்ள “சிறுவர்களைப் பணியில் அமர்த்துவதைத் தடுக்கும்” சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிற போது, அதன் வேறோர் கோணத்தை நாம் கவனிக்காது இருந்து விடக் கூடாது. நாம் விவாதிக்கப் போகிற அந்த அம்சம் ஒரு சிறுவனின் மதத்தையோ, குலத்தையோ சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுவது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வி கேள்விகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து படிப்பறிவைப் பரவலாக்கும் நம் முயற்சியில், தச்சு வேலை, இயந்திரத் தொழில், கட்டுமான வேலை, உலோக வார்ப்புத் தொழில், நுணுக்கமான பொற்கொல்லன் வேலை போன்ற பட்டறிவை வளர்க்கும் கைவினைப் பணிகளில் ஒருவன் தேர்ச்சி அடையும் மகிமையை அனைவரும் உணர வேண்டிய பொறுப்பை நாம் மங்கச் செய்துவிட்டோம். அதன் விளைவாக, ஒருவன் படித்திருந்தாலும் அவன் உருப்படியானதொரு வேலை செய்யத் தெரியாத நிலையை உண்டாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி விட்டதோடு, கைவினைப் பணியாளர்களை வளர்க்கவும் தவறி விட்டோம்.

பண்டைய வழக்கப்படி குடும்பத் தொழில் ஒன்று அவரவர் கைவினையால் சந்ததி சந்ததியாக வரும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால், இன்று கைவினைப் பணியாளர்களே தங்கள் பிள்ளைகள் தாங்கள் செய்யும் பணிகளைத் தொடராமல் அலுவலகம் சென்று ஆபீசராக வேலை பார்க்கப் போவதையே ஊக்குவிக்கின்றனர். இந்த இமாலயத் தவறை நன்கு உணர்ந்த கல்வியாளர்கள் நடுநிலைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில் கல்வி ஒன்றை ஒருவன் தொடரவும், மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்பு அது போன்றவற்றில் சிறப்புத் தகுதி பெறவும் வழி வகுத்திருக்கின்றனர்.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் வேலைக்குச் செல்வது தகாது என்னும்போது, அந்தச் சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இருந்து கூடமாட வேலை செய்து பரம்பரைத் தொழிலையும் கற்க முடிவதில்லை; அவர்களது ஏழ்மையால் படிப்பறிவுக் கல்வியையும் கற்க முடியவில்லை. அதைத் தீர்க்கும் முகமாக மேல்நிலைப் பள்ளி வரை ஒருவன் கற்பதற்கு கல்வியை குறைந்த செலவில் அளிக்க அரசு வழி வகை செய்திருந்தாலும், தொழில் கல்வித் திறனைப் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றிச் சரி செய்வதற்கு நாம் இன்னமும் அடியெடுத்து வைக்கவில்லை.

பருவ வாயிலில் இருக்கும் ஒரு சிறுவன் மோட்டார் மெக்கானிக்காக இருக்கும் ஒருவரிடம் சென்று தொழில் செய்யுக் கற்றுக்கொள்ளப் போனால், அவன் வளர்ந்து பெரியவன் ஆகும் சமயம் தன் காலில் தானே நிற்கும் தகுதி அடைவதோடு, வேறோர் இடத்தில் நல்ல வேலை கிடைக்கும் லாபத்தையும் அடைகிறான். ஆனால் அதே கால அளவிற்குப் பள்ளி சென்று படித்து விட்டு வரும் 18-வயதை உடைய ஒருவன் குறிப்பிடத் தக்க தகுதியை அடையாதது மட்டும் இன்றி, தன்னால் என்ன தொழில் செய்ய முடியும் என்றும் தெரியாது இருக்கிறான். அதனால் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவது நல்லது என்ற கருத்து இங்கே வைக்கப்படவில்லை; மாறாக செய்தொழில் திறனை வளர்ப்பதும், அந்த வழியில் தொடர்ந்து கற்பவர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர்களைப் போலவே மதிக்கப்பட வேண்டும் என்றுதான் இங்கே வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் நமது கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கியவாறும் இருக்கும்; நம் சமுதாயத்தில் தொழில் தொடர்பாக உணரப்படும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கியவாறும் இருக்கும்.

சிறுவர்கள் பள்ளிக்கும் செல்ல வேண்டும். அதற்கும் மேலாக, தங்களது முந்தைய பணிகளால் நன்கு பெயர் வாங்கி, ஏற்றுமதி மார்க்கெட்டிலும் நல்ல புகழ் பெற்றவர்களிடம் தொழில் செய்து, அவர்களிடம் இயற்கையாகவே படிந்துள்ள பல விதமான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டும். அத்தகைய சிறுவர்கள் சட்டத்திற்குப் புறம்பாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள் என்ற கருத்து நீங்கி, மாறாகத் தங்களது கடின உழைப்பால் நுண்ணிய திறன்களை வளர்த்துக்கொண்டு, பொருளாதாரத்திற்கும் தங்களாலான சேவையை அளிக்கிறார்கள் என்ற கருத்து வளர வேண்டும். அவ்வாறான நிலையில் வேலை செய்யும் திறமை கொண்டவர்களும் வளர்வார்கள்; வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். தொழிற்சாலையில் வேலை செய்தால் தான் தொழிற் பயிற்சி பெறுவதாக அங்கீகரிக்கப்படும் நமது சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு, ஏற்கனவே புகழ் பெற்றுள்ள தொழில் கலைஞர்கள், மற்றும் மூத்தோர்களிடம் எடுத்துக் கொள்ளப்படும் பயிற்சியும் அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஒரு போலீஸ் கான்ஸ்டபில் ஆவதற்கும், தகுதி ஏதுமே இல்லாது ஓர் ஆசிரியர் ஆவதற்கும் எவரிடம் கையூட்டு கொடுக்கலாம் என்று அலையும் ஒரு கும்பல் இருக்கும் நாடாக இல்லாமல், இந்தியா பல வகையான திறங்கள் கொண்ட பலதரப்பட்ட மக்கள் இருக்கும் ஒரு பரந்து, விரிந்த தொழில் சந்தையாக மாறவேண்டும். அவ்வாறான ஒரு சீர்திருத்தத்தை, எந்த விதமான இடையூறுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி வந்து, நிறைவேற்றும் அத்தகைய மாமனிதர்களில் ஒருவருக்கு அடுத்த நோபல் பரிசு கிடைக்க வேண்டும்.

காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்

ARMY_2106277f
மக்களை மீட்கும் ராணுவவீரர்கள்.

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. சேவை செய்தவர்களைக் குறை கூறும் பிரிவினைவாதிகளுக்கும் இந்த ஊடகவாலாக்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

ஒரு முக்கியமான சம்பவம். காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையத் அலி கிலானி வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் ராணுவவீரர்களால் மீட்கப்பட்டார். இந்தப் புகைப்படம் ஊடகங்களில் வெளியானவுடன் அவர்,  “ஆபத்துக்காலத்தில் ஆக்கிரமிப்பு நாட்டின் உதவியைப் பெறுவது தப்பில்லை’’ என்று சொன்னார். என்ன ஒரு நெஞ்சழுத்தம்? அவரை மீட்ட இந்திய ராணுவவீரர்கள் ஆக்கிரமிப்பு நாட்டின் ராணுவமாம்.

Geelani Rescue
ராணுவவீரர்களால் மீட்கப்படும் கிலானி

இவ்வாறு கூறிய கிலானியை மறுகேள்வி கேட்கவும் எந்த ஊடகவாலாக்களுக்கும் துப்பில்லை. இதே வெள்ளம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் மீட்க ஆளின்றி தவித்த கதைகள் உள்ளம் உருக்குபவை. அந்தப் பகுதிக்கும் கூட உதவத் தயார் என்று நமது பிரதமர் மோடி அறிவிக்கிறார். ஆனால், உயிரைப் பற்றிய கவலையின்றி வெள்ளத்தில் சிக்கிய கிலானியை மீட்ட நமது வீரர்கள் ஆக்கிரமிப்பு ராணுவமாம்! இவ்வாறு கூற கிலானிக்கு எங்கிருந்து துணிவு வந்தது?

நமது ஆங்கில ஊடகங்கள் கடைபிடிக்கும் மாய்மால மதச்சார்பின்மையும், இஸ்லாமிய அமைப்புகளின் பிரசார வலிமையும், அவற்றின் நாடுதழுவிய ஆபத்தான வலைப்பின்னலும், அரசியல்வாதிகளின் நடுநிலையற்ற சுயலாபக் கொள்கைகளுமே கிலானிக்கு இந்த துணிவைத் தந்திருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரை வெள்ளம் சூழ்ந்ததிலிருந்தே அங்கு மக்கள்நலப் பணிகளிலும் மீட்பு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபடும் எந்த ஒரு ஸ்வயம்சேவகரின் படமும் ஊடகங்களில் வெளிவராமல் தணிக்கை செய்யப்படுவதற்குக் காரணமும் இதுவாகவே இருக்க முடியும்.

இதே கிலானி, தான் மீட்கப்பட்டு இரண்டொரு நாள்கள் கழித்து சௌகரியமாக ஸ்ரீநகரில் அமர்ந்தபடி பேட்டி கொடுக்கிறார். அப்போது, “இந்திய ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதாக நாடகமாடுகின்றனர். அவர்கள் சுற்றுலாப் பயணிகளையும் வெளிமாநில மக்களையும் மீட்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். உள்ளூர் மக்களை பாரபட்சமாக அணுகுகின்றனர்’’ என்றார். அவர் வணங்கும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அறிவாளனுமான அல்லா, இவ்வாறு அவர் நேர்மையின்றிப் பேசுவதற்கு என்ன தண்டனை தருவார்?

கிலானி தண்டனை பெறுவது இருக்கட்டும். அவரது பேச்சு எதிர்பார்த்தபடியே ஸ்ரீநகரில் புகைச்சலை ஏற்படுத்திவிட்டது. அவரது பேச்சால் மதியிழக்கும் மக்கள் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்? வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களை அவரது பேச்சு உசுப்பிவிட்டது. அதன் விளைவே மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல்கள். இது ஒருவகையில் இந்திய அரசின் மீட்புப் பணிகளை மட்டம் தட்டும் உலகளாவிய சதித்திட்டத்தின் அங்கமும் கூட.

நமது நாட்டில் ஒரு சிந்தனையோட்டம் இருக்கிறது. அது இயற்கைச் சீற்றமான வெள்ளத்தைவிட அபாயகரமானது. மதச்சார்பின்மை என்ற பெயரில் தேசிய இயக்கங்களைப் புறக்கணிப்பதும், பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிப்பதும் தான் ஊடக தர்மம் என்ற சிந்தனைப் பாங்கு கடந்த காலத்தில் இங்கு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைப்பதாகவும் தகவல்கள் உண்டு. அதன் விளைவாகவே, கிலானி போன்ற உளறல் பிரிவினைவாதிகளுக்கு ஊடகங்கள் அளவுக்கு மீறி வெளிச்சம் தருகின்றன. அதேசமயம், அர்ப்பண மனப்பான்மையுடன் சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளின் பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

வெள்ள மீட்புப்பணியில் ஸ்வயம்சேவகர்கள்.

நல்லவேளை ஆர்.எஸ்.எஸ். சேவைகளை இருட்டடிப்பு செய்தாலும், ராணுவவீரர்களின் சேவையையேனும் நமது ஊடகங்கள் வெளிப்படுத்தினவே என்று நிம்மதி கொள்ளலாம் என்றால், அங்கும் வந்தது பிரச்னை. வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம் சரிவர இயங்கவில்லை என்று, அந்தப் பகுதிக்கே செல்லாமல்- தில்லி ஸ்டுடியோவுக்குள் இருந்தபடி- செய்தி வாசித்து சர்ச்சை கிளப்பி, ரேட்டிங் ஏற்றிக்கொண்டனர் சில காகிதப்புலிகள்.

இந்த வெள்ளச்சேதத்தைக் குறைத்ததில் ராணுவவீரர்களின் பணி அளப்பரியது. இப்பணியில் இதுவரை 9 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். வெள்ளம் கடுமையாக பாதித்த செப். 7 முதல் செப். 15 வரை, 2.26 லட்சம் மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இப்பணியில் சுமார் 30,000 வீரர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணியில் 86 மீட்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. 224 ராணுவப் படகுகளும் 148 தேசிய பேரிடர் மீட்புப் படகுகளும் 24 மணிநேரமும் அயர்வின்றி தொடர்ந்து ஒருவார காலத்திற்கு இயங்கின. வெள்ளம் பாதித்த மக்களுக்கு செப். 12ம் தேதி நிலவரப்படி, 5 லட்சம் குடிநீர் பாக்கெட்கள் வழங்கப்பட்டன. 1,054 டன் அளவுள்ள 3 லட்சம் உணவு பாக்கெட்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டன. குடிநீர் சுதிகரிப்பு மாத்திரைகள் மட்டுமே 13 டன் அளவிற்கு வழங்கப்பட்டன. இது ஒரு மாபெரும் மீட்புப்பணி.

மீட்புப்பணியில் பிராந்திய வாரியாக பாரபட்சம் காட்டப்படுவதாக, பிரிவினைவாதிகளான யாசின் மாலிக், கிலானி உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்த அதேநேரத்தில் தான், மீட்புப்படையில் 21,000 பேர் ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், 9,000 பேர் ஜம்மு பகுதியிலும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதை உரக்கச் சொல்ல வேண்டிய ஊடகங்கள் மௌனம் காத்தது ஏன்?

புவியியல் அமைப்பில் உள்ள சிக்கலான சூழலால், காஷ்மீரில் வீரர்கள் அதிகம் பணிபுரிய வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்பு மிக அதிகமாக இருந்தது ஜம்மு பிரந்தியத்தில் தான். அங்கு தான் அதிகபட்ச (200) உயிரிழப்பும் கிராமங்கள் அழிவும் நேரிட்டிருக்கின்றன. ஆனால், நமது தலைநகரச் செய்தியாளர்களோ ஸ்ரீநகர் (இங்கு இறப்பு எண்ணிக்கை 60 பேர்) மட்டுமே காஷ்மீர் என்பதுபோல படம் காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கேமராக்குழுவுக்கு சேணம் கட்டியது யார் என்று தெரியவில்லை.

india-pakistan-floodi_josh_650_091314053705
நிவாரணப் பொருள்களை ஹெலிகாப்டரில் விநியோகிக்கும் வீரர்கள்.

வெள்ளம் பாதித்தவுடன் சங்க ஸ்வயம்சேவகர்கள் வழக்கம் போல யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ராணுவ வீர்ர்கள் அணுக முடியாத் பகுதிகளில் கூட ஸ்வயம்சேவகர்கள் சேவைப் பணியில் ஈடுபட்டனர். சாலை சீரமைப்புப் பணிகளிலும் வீரர்களுக்கு அவர்கள் உதவினர். ஆனால் ஒரு குறைபாடு, அதைப் பதிவு செய்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இல்லை. அதற்கான கருவிகளுடன் சென்று சிறு பணியையும் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுக் காசாக்கும் தந்திரமும் அவர்களிடம் இல்லை. சேவை செய்வதை விட அதற்கு புகைப்பட  ‘போஸ்’ கொடுப்பதே முக்கியம் என்ற ஊடக அளவுகோல் அவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் தெரியவில்லை. இன்னமும் கூட, ஒவ்வொரு நொடி படக் காட்சியிலும் லாபம் கொழிக்கச் செய்யும் தொலைக்காட்சி தர்மம் குறித்து இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். ஊடகவாலாக்களுக்கோ, சென்டிமீட்டர் செய்தியையும் காசாக்கும் ஞானம் மட்டுமே வாய்த்திருக்கிறது.

உண்மையில் பாரபட்சம் காட்டுவது யார்? வெள்ளத்தில் உயிரை பற்றிய சிந்தையின்றி மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவமா? பிரதிபலன் கருதாது மதம் கடந்து சேவை செய்த ஸ்வயம்சேவகர்களா? அல்லது பிழைப்புக்காக செய்தித் தணிக்கை செய்வதுடன், உளறல் செய்திகளையும் வாசிக்கும் நமது ஊடகங்களா?

பிரிவினைவாதிகளின் தூண்டுதலால் கல்லெறிந்த மக்களுக்கும் ராணுவம் உதவி செய்கிறது. ”துஷ்பிரசாரத்தால் ராணுவவீரர்கள் காயம் பட்டபோதும், “நாங்கள் ஜாதி, மதம், இனம், பிராந்தியம் என்ற எந்த அடிப்படையிலும் பாரபட்சம் காட்டாமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறோம். வெள்ளத்தில் சிக்கிய கடைசி மனிதரையும் மீட்கும் வரை எங்கள் பணி தொடரும்” என்று விளக்கம் அளித்துக் கொண்டே ராணுவம் அங்கு தொடர்ந்து பணிபுரிகிறது. இந்த ராணுவத்தைத் தான் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று முன்னொருசமயம் கூக்குரலிட்டார் அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா.

வெள்ளநகராகிவிட்டஸ்ரீநகர்.
வெள்ளநகராகிவிட்ட ஸ்ரீநகர்.

மோடி பிரதமரானால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும் என்று முன்னர் சொன்ன அதே வாய் தானே? இப்போது ஜம்மு காஷ்மீர் வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடர் என்று அறிவித்து உடனடியாக ஆயிரம் கோடி நிதியுதவியும் அறிவித்திருக்கிறார் ஸ்வயம்சேவகரான பிரதமர் மோடி. ஜம்மு காஷ்மீர் மக்களைக் காக்க பெருமளவு நிதியுதவி தருமாறு அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு நெடுகிலும் இருந்து நிதியுதவி குவிகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் பொருளை ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அதைத் தடுக்கவே, ராணுவம் மீதான கல்வீச்சை ஊக்குவிக்கிறார்கள் பிரிவினைவாதிகள்.

ஜம்மு காஷ்மீர் மீண்டு சீராக இன்னும் 6 மாதங்கள் ஆகலாம். கிட்டத்தட்ட ரூ. 60,000 கோடி மதிப்புக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உள்கட்டமைப்பில் பல்லாயிரம் கோடி மதிப்புக்கு அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஓமர் அப்துல்லா கூறியிருக்கிறார். இந்த இக்கட்டான நிலையில் சகோதர மக்களுக்கு உதவுவது நமது கடமை. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்.சின் சேவைப்பிரிவான சேவாபாரதி நாடு முழுவதும் அதற்கான நிதி சேகரிப்பைத் துவக்கி, தனது பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது.

வெள்ளத்தில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 1, 024 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4.7 டன் மருந்து செப். 14 வரை வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தின்போதும் மீட்புப்பணிகளில் சிறு குறைகள் இருக்கவே செய்யும். ஆனால், அந்தக் குறையைக் கூற ஒரு தகுதி வேண்டும்.

காஷ்மீர மக்களின் ஆபத்பாந்தவன் இந்திய ராணுவம் தான்.
காஷ்மீர மக்களின் ஆபத்பாந்தவன்
என்றும் இந்திய ராணுவம் தான்.

உண்மையில் ராணுவம் செய்த பணிகளில் இருந்த குறைபாடுகளுக்கு தகவல் பரிமாற்ற இடைவெளிகளே காரணம். காஷ்மீர் பள்ளத்தாக்கு போன்ற பயங்கரவாதிகள் சூழ்ந்த பகுதியில் திடீர் வெள்ளச்சேதத்தை எதிர்த்து எந்த ஆயுதமும் இன்றிப் போராடும் நமது வீரர்களை- தங்கள் முகாமே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனாலும் கவலையின்றி மீட்புப்பணியில் ஈடுபடும் நமது வீரர்களை- விமர்சிப்பதென்பது, இந்நேரத்தில் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாத பிரிவினைவாதிகளின் கீழ்த்தரமான பிரசாரத்திற்கே உதவும்.

உண்மையில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் இப்போது அரண்டுபோயிருக்கிறார்கள். இந்திய வீரர்களின் தன்னலமற்ற மீட்புப்பணியால் காக்கப்பட்ட லட்சக் கணக்கான காஷ்மீர மக்களிடம் மத்திய அரசு மீது நல்லெண்ணம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. பேரிடரின்போது ஓடி ஒளிந்த தங்களைப் பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள தவறான பிம்பத்தைச் சரிசெய்தாக வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா மீதான நல்லெண்ணம் மக்களிடம் ஏற்பட்டால் தங்கள் ‘பிழைப்பு’ என்னாவது என்ற கவலை அவர்களுக்கு. இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டிய ஊடகங்கள் தங்கள் மனங்களில் புகுந்துள்ள சகதியை வெளியேற்ற வேண்டிய தருணம் இது.

.

தாமிரபரணி முதல் பரமகுடி வரை…

23-07-1999 இல் திருநெல்வேலி மாநகரில் தலித் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஊர்வலத்தில் காவல்துறை நடத்திய தடியடியும் அதன் விளைவாக 17 பேர் பலியானதும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சோக நினைவுகள். அன்றைய செய்தி தாள்களில் வெளியான கொடுமையான படங்கள் என்றும் river1நம் மனசாட்சியை உலுக்கி கேள்வியை எழுப்பிக் கொண்டிருப்பவை. ஊர்வலம் சென்றவர்களின் நடத்தையே இந்த தடியடிக்கும் படுகொலைக்கும் காரணமானது என ஒரு வாதம் அப்போது பரவலாக வைக்கப்பட்டது. அன்று நடத்தப்பட்டது சாதி ஊர்வலமோ அல்லது ஒரு சாதி தான் ஆண்ட சாதி என பெருமையடித்துக் கொண்ட ஊர்வலமோ அல்ல.  எந்த ஒரு ஆதிக்க சாதி ஊர்வலத்தைப் போல (தேவர், வன்னியர் … என எந்த சாதியையும் அதில் போட்டுக் கொள்ளுங்கள்)  இங்கு நடத்தையோ கோஷங்களோ மோசமாக  இருந்திட வாய்ப்பில்லை. என்றாலும் தலித்துகள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் பெண்கள் கரையேறத் தவிப்பதையும் அவர்களை காவலர்கள் லத்தியால் அடித்து உள்ளே தள்ளுவதையும் அன்றைய செய்தி தாள்கள் வெளியிட்டிருந்தன. தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் சின்னங்களாக அவை என்றென்றும் அமைகின்றன. இதனையொட்டி அண்மைக்கால சோக நிகழ்வையும் மறந்திட முடியாது. செப்டம்பர் 11 2011 இல் நடந்த பரமக்குடி படுகொலை. அதிலும் ஏழு தலித்துகள் கொல்லப்பட்டனர். போலீஸ் துப்பாக்கிச் சூடு.

இது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும். தலித் சமுதாயத்தினரின் ஊர்வலத்துக்கும் பிற சாதிய ஊர்வலங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. பல நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட சமுதாயம். paramakutiஅது இன்று தன் உரிமைகளை கோருகிறது. அப்போது அந்த ஊர்வலங்களில் உணர்ச்சி வேகம் இருப்பது இயல்பானது இயற்கையானது. அவர்கள் தம்மை ஆண்ட பரம்பரையினர் என சொல்லவில்லை. அன்று திருநெல்வேலியில் ஊர்வலம் சென்றவர்கள் எவரும் தம்மை ‘ஆண்ட பரம்பரை’ என்று பேசவோ ‘மீண்டும் ஆளுவோம்’ என்று சவால் விடவோ இல்லை. அவர்கள் கேட்டது தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு. அதற்கு கொடுக்கப்பட்ட பரிசு படுகொலை. அன்றைய திமுக அரசு பின்னர் விசாரணை கமிஷன் என்கிற வழக்கமான சம்பிரதாயத்தை நடத்தியது.  பதினோரு மாதங்கள் விசாரணை. 27.06.2000 அன்று  நீதிபதி மோகன், ”இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்துதான்” என அறிவித்தார். புதியதமிழகம் கிருஷ்ணசாமி அந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

தலித் அரசியல் எழுச்சி என்பது சரியா? ஹிந்து ஒற்றுமைக்கு அது ஊறு விளைவிக்காதா? என சிலர் கேட்கலாம். இயற்கையான தலித் அரசியல் எழுச்சி ஹிந்து ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காது என்பது மட்டுமல்ல. இறுதியில் ஆரோக்கியமான ஒற்றுமையான ஹிந்து சமுதாயத்தை ஏற்படுத்தும்.  ptk1’எனது அரசியல் பயணம்’ என்கிற தலைப்பில் 14-08-2013 தேதியிட்ட துக்ளக் இதழில் எழுதிய கட்டுரையில் ‘புதிய தமிழகம்’ டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகிறார்:

தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் தீண்டாமை கொடுமை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளைத் தட்டிக் கேட்கின்ற நிலை இல்லாததால், மத மாற்றம்தான் இதற்குத் தீர்வு என்று கருதக்கூடிய மனநிலை அந்த மக்களிடம் இருந்தது. ஆனால், மதமாற்றம் அதற்குத் தீர்வாகாது என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்ட உணர்வை வளர்த்திருக்கிறோம். எங்கள் பணி மூலம் தென் தமிழகத்தில் மதமாற்றம் என்பது பெருமளவில் குறைந்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் சாதிய மோதல்களைத் தடுத்து நிறுத்தி சமூக நல்லிணக்கத்திற்கான சூழலை வளர்ப்பதற்குத் தொடர்ந்து முயற்சி எடுத்து, பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறோம்.

STATUEசில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ஹிந்து இணையதளம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டு தலித்துகளுக்கும் தலித்தல்லாத சாதிகளுக்கும் இடையில் கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதே அது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் real_culpritsசிலைக்கு செருப்பு மாலை போட்டு, பழியை தலித் இந்துக்கள் மீது போட்டு எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கலவரங்களை தென் மாவட்டங்களில் உருவாக்கினார்கள் என்பது குறித்ததே அது. முத்துராமலிங்க தேவர், தம் சமுதாயத்துக்கும் தேவேந்திரகுல வெள்ளாளர் சமுதாயத்துக்குமான மோதலில் எடுத்த நிலைபாடு சமுதாய ஒற்றுமைக்கு ஏற்றதல்ல என்பது ஒரு கசப்பான உண்மை. அதே நேரத்தில் டாக்டர் அம்பேத்கரை அன்றைய காலகட்டத்தில் தீவிரமாக ஆதரித்த, அவர் பக்க நியாயங்களை வெளிப்படையாக ஏற்ற ஒரு சில தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதும் உண்மை.  இதோ டாக்டர். அம்பேத்கர் குறித்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியவை:

மத்திய அரசாங்க சட்ட மந்திரி கனம் அம்பேத்கர் ஒரு காலத்தில், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராக இருந்தார் எனச் சொல்கிறார்கள். ambedkarதேச விடுதலைக்காக உழைத்தவர்கள் என்று மார்தட்டும் வீரப் புலிகளின் யோக்யதையை, அந்தரங்க எண்ணத்தை ஆதியிலிருந்து இன்று வரை அலசிப் பார்ப்போமானால், அம்பேத்கர் அவர்கள் மற்றெல்லோரையும் விட தேச பக்தியில் சிறந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். … “இந்த ஜாதிகள் pasumpon.jpg_480_480_0_64000_0_1_0தேசத்தின் சத்ருக்குக்களாகும். ஏனெனில் சமுதாய வாழ்வை இந்த சாதிகள் பிளவுபடுத்துகின்றன. அதோடு பல்வேறு ஜாதிகளிடையே துவேசத்தையும்,பொறாமையையும் ஜாதிமுறை ஏற்படுத்துகிறது. நாம் உண்மையிலேயே ஒரு ஜன சமுதாயமாக ஒன்றுபட வேண்டுமானால் இத்தீமைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். ஜன சமுதாயமாக ஒன்றுபட்டு சகோதரத்துவம் நிலைத்தாலன்றி சுதந்திரம் வேரூன்றாது”. மேலேயுள்ள வேத வாக்கெனத் தகும் அறிவுரையைக் கூறிய டாக்டர் அம்பேத்கர்… சுட்டிக்காட்டும் குற்றங்கள் அனைத்தும் உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதே முத்துராமலிங்க தேவரின் பரம்பரை என்றும் சொந்த சாதி என்றும் சொல்கிறவர்கள் அதிகம் இருக்கிற இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலை பாதுகாப்பு கருதி கூண்டுக்குள் வைக்கப்படுகிறது. ஒரு நடிகர் அவர் ஒரே சாதியில் பிறந்தவர் என்பதால் முன்னிறுத்தப்படுகிறார். sekaranarஇதைவிட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவுக்கு மிகப் பெரிய அவமரியாதை செய்யமுடியுமா? பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்தவர்; நேதாஜியுடன் கை கோர்த்தவர்; டாக்டர் அம்பேத்கரை மதித்தவர். இவைதான் அவரை வரையறை செய்யும் விசயங்களாக இருக்க வேண்டும். அவரது புகழ் ஒளியைக் குறைக்கும் நிகழ்வான தியாகி இம்மானுவேல் சேகரன் சம்பவத்தை தேவரின் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாக நினைக்க வேண்டும். இன்னும் சொன்னால் தேவர் சமுதாய தலைவர்கள் இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொண்டு இதுவரை நடந்துவிட்ட சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிப்பது நல்ல விஷயமாகவே இருக்கும்.   காவல்துறையும்  தாமிரபரணி சம்பவத்தில் நிகழ்ந்த கொடுமைக்கு தலித் சமுதாயத்தினரிடம் வருத்தம் தெரிவிக்கலாம். தாமிரபரணியில் சமூகநீதிக்காக உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசே ஒரு நினைவுத்தூணை அல்லது நடுகல்லை ஏற்படுத்தலாம். இனி இத்தகைய நிகழ்ச்சிகள் நடவாமல் இருக்க.

இருநூறு ஆண்டுகள் காலனிய ஆதிக்கமும் அதற்கும் மேலாக சில நூற்றாண்டுகளாக இருந்த சமூக தேக்கநிலையும் பல அண்டை சமுதாயங்களை எதிரித் தீவுகளாக மாற்றியுள்ளன. ஒரு இந்துத்துவனின் கடமை இந்த மோதல்களுக்கு அப்பால் சமரச உறவுகளை உருவாக்குவதுதான். திருமணப்பாலங்களாக அது இருக்கலாம், நீர்நிலைகளையும் இயற்கை ஆதாரங்களையும் பகிர்வதாக அவை அமையலாம். இறை வழிபாட்டுத்தலங்களில் பாரம்பரிய அடுக்குமுறை ‘கடமை’களைத் தவிர்த்து பரஸ்பரமாக சமுதாயங்கள் ஒன்றுக்கொன்று மரியாதை காட்டுவதாக அது அமையலாம்.

நம் சமுதாயத்தில் நிலவும் சாதியத்தின் தீமைகளை நாம் வெளிப்படையாக அலசுகிறோம். பேசுகிறோம். விவாதிக்கிறோம். தீர்வுகளை முன்வைக்கிறோம். சமுதாயம் மெல்ல என்றாலும் தீர்க்கமாக சமூகநீதியின் திசையில் பயணிக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி ஆபிரகாமிய மதவாதிகள் சாதியமே இந்து மதம் என ஒரு மாயையை உருவாக்கி குழம்பிய குட்டையில் wasp_kulavi_cartoonமீன்பிடிக்க பார்க்கிறார்கள். இந்து சமுதாயத்தில் நிலவும் எந்த தீமையும் அதிக அளவிலேயே இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் இருக்கின்றன. அண்மையில் சுவனபிரியன் என்கிற பெயரில் தமிழ்ஹிந்துவில் வந்து இஸ்லாமிய தாவா செய்யும் நபர் தான் இந்துவாக பிறந்திருந்தால் இன்னும் சமூக நீதிக்காக போராடிக் கொண்டிருந்திருப்பேன் என கூறினார். ஐயா இஸ்லாமிய அடிப்படைவாதியே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சமூக நீதிக்காக போராடுவது என்பது நல்ல விசயம். அதற்கான ஜனநாயக சூழலை இந்து பண்பாடு அளித்திருக்கிறது. அந்த பண்பாட்டின் ஒரு ஏற்றமிகு உச்சமான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் அளித்திருக்கிறது. பெண்களை கல்லால் அடித்து கொல்வதைக் காட்டிலும் பிறமதத்தவரின் கழுத்தை வெட்டிக் கொல்வதைக் காட்டிலும் சவூதி அரேபியாவின் மானுடத்தன்மையற்ற சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதைக் காட்டிலும் குழந்தை திருமணங்கள் மூலமாக இந்திய சிறுமிகளை அராபிய ஷேக்குகளுக்கு மார்க்கரீதியாக விற்பதைக் காட்டிலும், அப்பாவிகளை குண்டு வெடிப்பில் கொன்று அதை ஜிகாத் என சொல்லி புளகாங்கிதமடைவதைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக போராடும் இந்துவாக இருப்பது எவ்வளவோ மேல். ஆனால் அது ஆபிரகாமிய அடிப்படைவாதிகளின் அராபிய அடிமைத்தனம் நிரம்பி வழியும் மூளையில்  ஏறாதது ஆச்சரியமல்ல.

இந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை

”டாக்டர் அம்பேத்கர். நீங்கள் இந்த நாட்டின் முக்கிய தலைவர். உங்களிடம்தான் எங்கள் கோரிக்கையை முன்வைக்க முடியும்.”

“சொல்லுங்கள் பாபா சாகேப்ஜி” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

டாக்டர் அம்பேத்கரால் பாபா சாகேப் என அழைக்கப்பட்ட அந்த தலைப்பாகை கட்டிய முதிய கம்பீரமான தலைவர் சொன்னார், “இந்த தேசத்தின் கொடியாக காவிக்கொடித்தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.” டாக்டர். அம்பேத்கர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். morning_hindutvaபின்னர் கூறினார்: “ஆக, பகவா கொடியை செங்கோட்டையில் பறக்க விட ஒரு மகரிடம் வந்திருக்கிறீர்கள். சரிதான். இதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். காவிக்கொடியை தேசிய கொடியாக்க கோரும் அந்த மக்கள் இயக்கத்தை நான் ஆதரிப்பேன்.”

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் பம்பாய் விமானநிலையம். ஜூன் 1947.

இதற்கு பல ஆண்டுகள் முன்னர்….

மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க தோழர் ஹென்றி போலக். அவர் பாரதம் வந்திருந்தார். அப்போது பாரதத்தில் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்தது.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து பாரதம் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்  சமூக விடுதலைக்கான போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன.  ஹென்றி போலக் மும்பையில் மில் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து கேள்விப்பட்டிருந்தார். ’போராட்டங்களை மட்டும் பார்த்தால் போதாது. எங்கள் தொழிலாளர்கள் வாழும் நிலை எப்படிப்பட்டது என்பதையும் நீங்கள் நேரடியாக பார்த்தால் மட்டுமே எங்கள் நியாயம் உங்களுக்குப் புரியும்.’ என அவரிடம் கூறியவரும் அதே தலைவர்தான். அது மட்டுமல்ல அவரையும் ராம்ஸே மெக்டொனால்டையும் (இவர் பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஆனார்) தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அவர்களின் நிலையைக் காட்டினார்.

யார் அந்த தலைவர்? பாபா சாகேப் போலே என மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் அவரது முழுப் பெயர் சீதாராம் கேசவ் போலே என்பது.

சிறுவயதிலேயே போலேயின் முதல் ஆதர்சமாக அமைந்தவர் அவரது ஆசிரியர் கிருஷ்ணராவ் அர்ஜுன் கேலூஸ்கர்.  வெள்ளைகாரர் ஒருவர் நடத்த உத்தேசித்த மராட்டிய பத்திரிகைக்கு ஆசிரியராக ரூபாய் 100 சம்பளத்தில் அழைக்கப்பட்ட போதும் சுதந்திரம் இல்லாத இடத்தில் தாம் பணி புரிய முடியாது என உதறித்தள்ளியவர் கேலூஸ்கர்.babasaheb_bole  இவரது வழிகாட்டுதலில் உருவானவர் போலே. தமது இளவயதிலேயே இந்து அமைப்பு ஒன்றை உருவாக்கினார் போலே. இந்த அமைப்பு முதலில் போலேயின் சமுதாயமான பண்டாரிகள் மத்தியில் செயல்பட்டாலும் அதன் குறிக்கோள் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்துக்களின் சமுதாய விடுதலை என்பதாக இருந்தது. போலே இரவு பள்ளிகளை ஆரம்பித்தார். பிளேக் நோய் வந்த போது  ஆரோக்கியமான நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல அவர் முன்வந்தார். ஆனால்  பிரிட்டிஷ் அரசாங்கம் பிளேக்கை பயன்படுத்தி மக்களை துன்பப்படுத்துவதை அவர் எதிர்த்தார்.  ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி பெற கல்வியே முக்கியமான ஆயுதம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் பாபா சாகேப் போலே. எனவே மகாராஷ்டிரத்தில் ஒரு மகர் இளைஞன் முதன் முதலாக SSC தேர்வில் வெற்றி பெற்றதும் அவரை பாராட்டும் நிகழ்ச்சியை தானே தலைமையேற்று நடத்தினார். அந்த இளைஞனின் பெயர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்.

1909 களில் பல ஆலைகள் மூடப்பட்டு வந்தன. அப்போது வேலையிழந்த தொழிலாளர்கள் பட்ட இன்னல்களை போக்க போலே தொழிலாளர்கள் நல அமைப்பை உருவாக்கினார். அவர்களுக்காக இரவு பள்ளிகள் தொடங்கி கீர்த்தனைகள். அவர்களை போதைகளிலிருந்து விடுவித்தல் என ஒரு பக்கமும் அவர்களுக்காக போராடி வாதாடி அவர்கள் உரிமைகளை பெறுவது என மறுபக்கமுமாக ஒரு முழுமையான தொழிலாளர் இயக்கத்தை போலே கட்டி எழுப்பினார். இக்காலகட்டத்தில்தான் அவர் மெக்டொனால்டையும் போலக்கையும் அவர்கள் வாழும் பகுதிகலுக்கே அழைத்து சென்று அவர்கள் நிலையை குறித்த விழிப்புணர்வை ஆளும் வர்க்கக்த்திடமும் உருவாக்கினார். ஹோலி பண்டிகையை தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்கு அவர் பயன்படுத்தினார்.

ஆரிய சமாஜத்தின் ஆரிய சகோதரத்துவ அமைப்பு அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது. தலித்துகள் பெருமளவில் கலந்து கொண்ட முதல் சமபந்தி போஜனம் அதுவே என வரலாற்றறிஞர்கள் கருதுவதுண்டு. babasaheb_suddhiஆனால் கடைசி நேரத்தில் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டிய பெருந்தலைகள் பலர் பல காரணங்களைச் சொல்லி வரமுடியாது என கூறிவிட்டனர். முன்வைத்த காலை பின்வைக்காமல் அதில் கலந்து கொண்ட வெகுசில தலைவர்களில் பாபா சாகேப் போலேயும் ஒருவர். இதனைத் தொடர்ந்து அவரை அவர் பிறந்த பண்டாரி சாதியிலிருந்து விலக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வி அடைந்தன. இந்துக்கள் சாதி வேறுபாடுகளை களைந்து தம்மை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு உடல் பயிற்சி மல்யுத்த சாலைகள் வேண்டுமென்பது போலே அவர்களின் சிந்தனை.  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு முன்னோடியாக அமைந்தவை இத்தகைய உடற்பயிற்சி மல்யுத்த சாலைகளே. அவைகளுக்கு பெரும் பண உதவி செய்ததுடன் ’ஹனுமான் வியாயம் சாலை’ எனும் அமைப்பின் போட்டிகளுக்கு தலைமையேற்று நடத்தினார்.  கல்விசாலைகளில் தம்மை பிராம்மணர்கள் என கருதியவர்களால் பிராம்மணரல்லாத ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அநீதிகள் இவற்றால் அவர் அபிராம்மண ஆசிரியர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.  பெண் ஆலைத் தொழிலாளர்களுக்கு பேறுகால வசதிகளுக்காக போலே அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் முக்கியமானது ஆகும்.

1923 இல் மும்பை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது பாபா சாகேப் போலே அவர்களால் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் எல்லா தெருக்களும் எல்லா நீர்நிலைகளும் எல்லா பள்ளிகளும் எல்லா வசதிகளும் தலித்துகளுக்கு திறந்து விடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த தீர்மானமே ஒரு சாதனை என்றாலும் அந்த தீர்மானத்துடன் நின்றுவிடுகிறவரல்ல போலே.  baba_Sahebs1928 இல் அடுத்து ஒரு முக்கிய வலிமை இந்த தீர்மானத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை மதிக்காத நகராட்சிகள் ஊராட்சிகளுக்கு அனைத்து அரசு உதவிகளும் நிறுத்தப்படும் என்கிற விதிதான் அது. இதுவும் போலே அவர்களின் கைவண்ணமே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானம் தலித் போராளிகளால் ‘போலே தீர்மானம்’ என அழைக்கப்பட்டது. இதன் அமுலாக்கம் தலித் விடுதலை போர்களின் ஒரு முக்கிய குரலாக விளங்கியது. இதே காலகட்டங்களில் இந்து மகாசபையிலும் இணைந்து தீவிரமாக இயங்கினார் பாபா சாகேப் போலே அவர்கள். குறிப்பாக வரலாற்றுக் காரணங்களுக்காக அன்னிய மதங்களுக்கு வழி தவறி சென்ற நம் சமய சகோதரர்களை தாய்மதம் திருப்பும் சுத்தி இயக்கத்தில் பாபா சாகேப் போலே அவர்களின் பங்கு முக்கியமானது.  1938-1945 பிராந்திய இந்து மகாசபையின் தலைவர் பதவியில் அவர் இருந்தார். 1947 இல் இந்து  மகாசபை தொண்டர்களுடன் பாபா சாகேப் அம்பேத்கரை சந்தித்து இந்த தேசத்தின் தேசிய கொடியாக பரம பவித்திர பகவத் துவஜம் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை, தொழிலாளர் உரிமை, மகளிர் உரிமை ஆகியவற்றின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள், இருள் மிகுந்து சமுதாய தேக்கநிலை திகழ்ந்த காலகட்டத்தில் ஒளிவிளக்காக விளங்கியவர்கள் இந்துத்துவர்கள்.  பாபா சாகேப் சீதாராம் கேசவ போலே போன்ற ஒப்பற்ற சமுதாய சீர்திருத்த வாதிகளால் உருவாக்கப்பட்ட இந்த மண்ணின் விடுதலை இயக்கம் இந்துத்துவம். எனவே அடுத்த முறை உங்களிடம் ‘இந்துத்துவம் மேல்சாதி பார்ப்பனீய பெண்ணடிமை சித்தாந்தம்…’ என கூறும் வரலாற்று அறிவிலியிடம் கேளுங்கள் … பாபா சாகேப் போலேயைத் தெரியுமா என்று.

 ஒரு அறிவிப்பு 

இன்று ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய கூடுகையில் வெளியிடப்படுகிறது.

இடம்:  திருவான்மியூரில் நடைபெறும் இந்து சேவை ஆன்மிக கண்காட்சி. தமிழ்ஹிந்து.காம் ஸ்டால் எண்: E1

நேரம்: 5:30 மணி மாலை

எழுத்தாளர்கள்  திரு.ஜோ டி குரூஸ், திரு.பா.ராகவன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.எஸ்.ராமச்சந்திரன், தத்துவ பேராசிரியர் அறிவழகன், சமூக சேவகர்கள் திரு.கணபதி, திரு.மணிகண்டன்,  தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் ம.வெங்கடேசன், ஜடாயு, ஓகை நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

morning_hindutvaபொதுவாக ஒரு எண்ணத்தை ஊடகங்களும் காலனிய வரலாற்றாசிரியர்களும் நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். சமஸ்தான மகாராஜாக்கள் என்பவர்கள் எப்போதும் அந்தபுரத்தில் தங்கள் காலங்களை கழித்தபடி மக்களை உறிஞ்சி கொழுத்தவர்கள். வெள்ளைக்காரர்களின் அடிவருடிகள். காமக் கொடூரர்கள். இத்தகைய ஒரு சித்திரமே தொடர்ந்து காலனிய ஆதிக்கவாதிகளால் படித்த மக்கள் மனதில் உருவாக்கப்பட்டு வந்தது. ஏனெனில் காலனிய ஆதிக்கத்துக்கு முதல் எதிர்ப்பு குரல் படித்த வர்க்கத்திடமிருந்து வரும் என காலனியவாதிகள் எதிர்பார்த்தனர். அத்தகைய சூழலில் அவர்கள் மனதில் பிரிட்டிஷாரின் ஒழுக்கம் தார்மீகம் ஆகியவை குறித்த ஒரு உயர்ந்த சிந்தனையும் சுதேச அரசுகள் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருப்பது அவசியம் என்பது அவர்களுக்கு புரிந்திருந்தது. சமஸ்தான அரசர்கள் குறித்த இந்த சித்திரத்தில் ஒரு உண்மையும் உண்டு. எந்த வித தீர்மானம் எடுக்கும் உரிமையும் இல்லாமலாக்கப்பட்டிருந்தனர் இந்த மன்னர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வரிவசூல் செய்து கொடுக்கும் அலங்கார பொம்மைகள் என்கிற ரீதியில் இவர்கள் நடத்தப்பட்டனர். இவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக மக்களிடம் இவர்கள் பெரிய அளவில் இணங்கி நடந்துவிட முடியாது. எனவே இவர்கள் தேங்கிய சமூக சொந்த சூழலில் சுகபோகிகளாக மாறினர். செல்வம், செயலின்மை, சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுதல் இவை எல்லாமே அவர்களை ஒரு எதிர்மறை சித்திரமாக மாற்றின. என்ற போதிலும் அந்த சூழல் சிறைக்குள் மக்களுக்கு நன்மைகளை செய்ய முயன்றவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள் உண்டு. அந்த சாதனைகள் பெரும் ஆபத்துகளின் நடுவில் செயல்படுத்தப்பட்டன. ஒரு பக்கம் பிரிட்டிஷார் மறுபக்கம் பிரிட்டிஷாரின் தேக்கநிலை சமூக சூழலில் உருவான மேல்மட்ட வர்க்கம். இரண்டையும் ஒருசேர சமாளித்தே சமூக நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் சூழலில் இந்த சமஸ்தான மன்னர்கள் இருந்தனர்.

உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருவிதாங்கூர் சமஸ்தானம் -இன்றைய கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கன்யாகுமரி மாவட்டம்- கல்வி அறிவில் சிறப்பாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக விடுதலைக்காக போராடிய ஐயா வைகுண்டரும்,ஸ்ரீ நாராயண குரு தேவரும், ஐயன் காளியும் இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். அடுத்த நிலையில் அதனை ஏற்று கல்வியை ஏழை எளிய சிறுவர்களிடம் கொண்டு செல்வதற்கான செயல்திட்டம் சமஸ்தானத்தால் வகுக்கப்பட்டது. பெரியவர் பாரதிமணி பதிவு செய்கிறார்:

1940-களிலிருந்தே, திருவிதாங்கூர் சமஸ்தான அரசுப்பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு மதிய வேளைகளில் வயிறு நிறைய ’கஞ்சியும் சம்மந்தியும்‘ (தேங்காய்த்துவையல்) இலவசம். mani1 இதற்காகவே, Vanchi Poor Fund என்ற அமைப்பை அரசே ஆரம்பித்து, மைய சமையல் கூடத்தில் சுடச்சுட கஞ்சி தயாரித்து, தினமும் பள்ளிகளுக்கு வினியோகித்தார்கள். (சம்பா அரிசிக்கஞ்சி, தேங்காய் சம்மந்தி வாசனை மூக்கைத் துளைக்கும். ஆனால் ஆசிரியர்களுக்குப்பயந்து ஒருநாள்கூட நான் சாப்பிட்டதில்லை!)இன்றைய ’மூன்று முட்டை‘ சத்துணவுத் திட்டத்தின் தாத்தா இது! ஆம், சித்திரைத்திருநாள் மகாராஜாவும், திவான் C.P.யும் தான் இதற்கு காரண கர்த்தாக்கள்! raja1 திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகளான கன்யாகுமரி, தேவிகுளம், பீருமேடு, செங்கோட்டை இவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்க, திரு. நேசமணி தலைமையில் பட்டம் தாணுபிள்ளை அரசுக்கெதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் மாணவனாக நானும் கலந்து கொண்டு ஒருநாள் முழுதும் சிறையிலிருந்திருக்கிறேன்! அப்போது நாகர்கோவிலுக்கு அடிக்கடி வரும் காமராஜர், இந்தத்திட்டத்தின் நன்மைகளை மனதில் கொண்டு, ‘வயத்துக்கில்லேன்னா, எவன் பள்ளிக்கூடம் வருவான்னேன்?‘ என்று அவர் முதலமைச்சரான போது ஆரம்பித்தது தான் மதிய உணவுத்திட்டம்! இந்தியாவிலேயே பள்ளிகளில் இலவச மதிய உணவுத்திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது திருவிதாங்கூர் தான்!

இந்த பீடிகை எல்லாம் நம் சமஸ்தான ராஜாக்கள் நம் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களித்த ஒரு பரிமாணம் நம் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டத்தான்.

குஜராத்தை உருவாக்கியவர் என்றே அவரை சொல்லலாம். இன்றைக்கு குஜராத்தில் பார்க்கும் பல கல்லூரிகள், sayaji1மருத்துவ சாலைகள், நூலகங்கள் இவை எல்லாம் அவர் உருவாக்கியவைதாம். ஆனால் அவர் இதை எல்லாம் உருவாக்கிய போது அது குஜராத் இல்லை. பரோடா எனும் சமஸ்தானமாகவே அது இருந்தது. அந்த சமஸ்தானத்தின் அரசர் மூன்றாம் சாயாஜி ராவ் கெய்க்வாட்தான் குஜராத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியவர். அவர் வாழ்ந்த காலம் 1863-1939. கெய்க்வாட் ஒரு சாதாரண குடும்பத்தை சார்ந்த சிறுவனாக இருந்தவர். ஆங்கில அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தத்தெடுக்கப்பட்டார்.  1881 இல் பட்டமேற்றது முதல் தனது கடும் உழைப்பினால் சமஸ்தான நிர்வாகத்தை நடத்துவதில் நல்ல திறமையை வளர்த்துக் கொண்டார்.  சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன. பெரிய ஏரிகள் வெட்டப்பட்டன. இன்றைக்கும் பரோடாவின் விவசாய வாழ்வாதாரமான அஜ்வா ஏரி ராஜா கெய்க்வாட் அவர்களால் வெட்டப்பட்டதுதான். சிறுவிவசாயிகள் வங்கிக் கடன் வாங்கும் வசதிகளை இவர் ஏற்படுத்தினார்.  குடிசை தொழில்களை வளர்க்க அவரது காலத்தில் அவர் சமஸ்தானத்தில் உருவாக்கப்பட்ட வங்கிதான் ‘Bank of Baroda’. அவரது சமஸ்தானமெங்கும் நூலகங்களையும் கல்விசாலைகளையும் நிறுவினார். சமஸ்தான அரண்மனைகளில் அடங்கி கிடந்த கலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வர வேண்டும் என்பதற்காக கலை மையங்களை உருவாக்கினார். கல்விசாலைகளை ஏற்படுத்தினார்.

சமுதாய நீதியின் தேவையையும் அது நமது சமுதாயத்தில் குறைபடுவதையும் வேதனையுடன் உணர்ந்தவர் கெய்க்வாட்.  வேதங்கள் பிராம்மணர்களுக்கு மட்டும் உரியதல்ல வேதமும் வேதம் ஓதும் உரிமையும் அனைத்து இந்து சமுதாயத்துக்கும் உரியது எனும் கொள்கையில் அவர் தெளிவாக இருந்தார்.  ஆச்சாரவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தலித்துகள் மேல் பதவிகளுக்கு வர வேண்டும் என்பதற்காக பல சகாயங்களை அவர் செய்து வந்தார்.  தொடக்கக் கல்வி கட்டாயமாக்கி அது இலவசமாகவும் வழங்கப்பட்டது. 1883 இலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்ப கல்விசாலைகளை அவர் திறந்தார். பெண் விடுதலையும் அவர் கவனித்திலிருந்து விலகவில்லை. குழந்தை திருமணம், பர்தா முறை இரண்டையும் ஒழிக்க போராடினார். அரசரின் மனைவி திரை மறைவில்தான் இருக்க வேண்டும் என்னும் முறையை ஒழித்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

ஒரு நாள் அவர் முன்னால் மெட்ரிக் தேர்வில் நன்றாக மதிப்பெண் வாங்கிய ஒரு இளைஞன் தோன்றினார். நல்ல அறிவு, தீட்சண்யமான பார்வை, ஆனால் வாழ்க்கை சூழலோ படிப்பை மேற்கொண்டு தொடர முடியாது எனும் நிலை. பம்பாய் கல்லூரியில் சேர்ந்து படிக்க அந்த இளைஞனுக்கு ஆர்வம். ஆனால் முடியாது ஏனெனில் அந்த மாணவன் மகர் – தீண்டப்படத்தகாதவன் என ஒடுக்கப்பட்ட சமுதாயம். babasaheb1அந்த இளைஞன் தன் நிலையை நேரடியாக அவரை கண்டு கூற முடிந்தது. மகாராஜா உடனடியாக அனைத்து அட்மிஷன் செலவுகளுக்குமாக ரூபாய் நூறும் பின்னர் மாதாமாதம் உபகார சம்பளமாக ரூபாய் இருபத்தி ஐந்தும் கொடுத்தார். 1912 இல் அந்த மாணவன் பட்டப்படிப்பை முடித்தார். அந்த மாணவனின் தந்தையார் இறந்துவிட்டிருந்தார். இந்த சூழலில் தான் மேலும் படிக்க வேண்டுமென ஆசைப்பட்டார் அந்த மாணவன். மகாராஜாவை மீண்டும் சந்தித்தார். அப்போது கெய்க்வாட் சிறந்த இந்திய மாணவர்களை அமெரிக்காவுக்கு கொலம்பியா பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். இந்த மாணவன் நிச்சயமாக தகுதி உடையவன். பாபா சாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் கெய்க்வாட்டினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பாரதத்தின் வரலாற்றில் பாபா சாகேப் மூலமாக அமரத்துவம் அடைந்தார் கெய்க்வாட்.  பாபா சாகேப் அம்பேத்கர் தனது முனைவர் பட்டபடிப்பை முடிப்பது வரை கெய்க்வாட்டின் உதவி தொடர்ந்தது.

ராஜா கெய்க்வாட் சிறந்த தேசபக்தரும் கூட.  மகாராஷ்டிரத்தில் அப்போது இயங்கிய ரகசியமான தீவிர தேசபக்த இயக்கமான அபிநவ பாரத சங்கத்துடன் அவருக்கு தொடர்பிருந்தது. அதனை உருவாக்கியவ மாணவனின் பெயர் விநாயக தமோதர சாவர்க்கர். சாவர்க்கரின் அபிநவபாரத சங்கத்தில் மாணவர்கள் மட்டும் இருக்கவில்லை.savarkar10 நாவிதர்கள், கூலி தொழிலாளிகள், டோபிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் இருந்தனர். அபிநவபாரத சங்கத்துக்கும் மகாராஜா கெய்க்வாட்டுக்கும் தொடர்பிருக்கிறது என்பது பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தெரிந்தது. கெய்க்வாட் எச்சரிக்கப்பட்டார். கெய்க்வாட்டும் எச்சரிக்கையை அமைதியாக கேட்டு அதனை ஆமோதித்தார். ஆனால் எப்படியோ அபிநவபாரத சங்கத்துக்கும் கெய்க்வாட்டுக்கும் செய்தி பரிமாற்றம் நடந்தது. மட்டுமல்ல மறை முக உதவியும் அபிநவ பாரத சங்கத்துக்கு செய்யப்பட்டு வந்தது.  இறுதியில் பிரிட்டிஷார்கள் கண்டுபிடித்தனர். கெய்க்வாட்டின் நாவிதர் சங்கர் வாஹ். இவர் வீர சாவர்க்கரின் அபிநவபாரத சங்கத்துடன் தொடர்புடையவர். இவர் மூலமாகவே வீர சாவர்க்கரும் கெய்க்வாடும் தகவல்கள் பரிமாறிக் கொள்ள முடிந்தது. பிரிட்டிஷார் இது குறித்து உஷாரானார்கள். சங்கர் வாஹ்ஹை உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்தது. அவரை வேலை நீக்கம் செய்ய மறைமுக நிர்ப்பந்தங்கள் அவை. ஆனால் கெய்க்வாட் அவரை  இறுதிவரை வேலையிலிருந்து விலக்கவே இல்லை.

எங்கிருந்து வந்தது கெய்க்வாட்டுக்கு இந்த தேசபக்தியும் சமூக நீதி குறித்த பிரக்ஞையும்? ஆரிய சமாஜம் தொடங்கிய இந்துத்துவ வேர்கள் அவருக்கு இருந்தன. பண்டித ஆத்மாராம் என்கிற ஆரியசமாஜ அறிஞர் மகாராஜா கெய்க்வாட் அவர்களால் பிரத்யேகமாக1905 இல்  பரோடாவிற்கு அழைக்கப்பட்டார். அவரது பொறுப்பு தலித்துகள் மேம்பாடும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவ முஸ்லீம்களை மீண்டும் தாய்மதம் திருப்புவதும் ஆகும். குஜராத்தில் இந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் வித்திட்டவர் கெய்க்வாட் அவர்களே என்றால் அது மிகையல்ல. 1908 இல் பதிதார் யுவக் மண்டல் எனும் சாதி பேதமற்ற இந்து இளைஞர்களுக்கான அமைப்புகள் உருவாக்கபப்ட்டன. தலித் விடுதலைக்காக இவை பாடுபட்டன. 1911 இல் சூரத்தில் சாதி பேதமற்ற இந்து இளைஞர்கள் மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்று உருவாக்கப்பட்டது. குறிப்பாக பல்வேறு தலித் சாதிகளை சார்ந்தவர்கள் தம்மிடையே இருக்கும் பிரிவுகளை மறந்து ஒருங்கிணைந்து உரிமைகளுக்காக பாடுபட வேண்டும் எனும் செயல்திட்டத்துடன் இயங்கும் கேந்திரங்களாக இவை விளங்கின. (துரதிர்ஷ்டவசமாக பரோடாவில் நிலை மோசமாகவே இருந்தது என்பதை பாபா சாகேப் அம்பேத்கரின் அனுபவங்கள் மூலமாக அறிகிறோம்.) சாதி பேதமில்லாமல் தலித்துகளும் தலித்தல்லாத இந்துக்களும் அனைத்து இந்து வைதீக சடங்குகளையும் செய்வதன் மூலமாக இந்து ஒற்றுமையையும் சாதியற்ற இந்து சமுதாயத்தை உருவாக்கவும் யுவக் மண்டல் உழைத்தது.

சாயாஜி ராவ் கெய்க்வாட் குஜராத்துக்கு மட்டும் சொந்தமல்ல. வளர்ச்சி-சமூகநீதி-பண்பாட்டு தேசியம் என இன்றைக்கு நாம் பேசும் அனைத்துக்கும் மூலமுதல் வித்தாக விளங்கியவர் இந்த குஜராத் மகாராஜா… வரலாறு மீண்டும் திரும்பட்டும்… குஜராத்தின் ஆலவிதை பாரதமெங்கும் நிழல் அளிக்கும் பெரும் தருவாகட்டும்.  அதற்கான காலம் கனிந்து வருகிறது. நம் உழைப்பையும் அதற்கு நல்குவோம்.

மதர் தெரசா: ஒரு பார்வை

1997ம் ஆண்டு அன்னை தெரேசாவின் இறுதி ஊர்வல சடங்குகள் இதுவரை யாரும் கண்டிராத ஆர்பாட்டத்துடன் நடத்தப்பட்டது. இதில் நமது செக்யூலர் தலைவர்கள் பொறுமையாக வாடிகனினால் நடத்தப்பட்ட 2 மணிநேர சடங்கை பார்வையிட்டு பிறகுதான் அவர்களை இறுதி மரியாதை செய்ய அனுமதித்தார்கள். நேதாஜி மூடிய விளையாட்டு அரங்கம் அன்று இந்தியர்க்ளின் வரிப்பணத்தை கொண்டு இரங்கல் மரியாதை செய்தது ஒரு வாடிகனின் தலைநகரை போல் காட்சியளித்தது. இது அரசர்களுக்கு நடத்தம் இறுதி மரியாதை போல்தான் இருந்தது.

இதில் பணம் படைத்தவர்களும் செக்யூலர்களும்தான் கலந்து கொண்டார்கள், ஏழைகள் அல்ல. மீறிவந்த ஏழை கூட்டத்தை ஒரு மென்மையான லத்தி உதைமூலம் கலையச் செய்ததாகப் பொய் செய்திகள் வெளிவந்தன. இனிமேல் அவர்களின் தேவை மிஷினரிகளுக்கு தேவையில்லை. தாங்கள் திட்டமிட்டபடி அவரை ஒரு தன்னிகரில்லா கிருஸ்துவ தொண்டராக உலக அரங்கில் உயர்த்தியாகி விட்டது. இவரை கல்கத்தாக்காரர்கள் தங்களுக்கு கிடைத்த வரபிரசாதமாக எண்ணி பெருமைப்படுகிறார்கள். ஆக்நஸ் பேஜாஜியூ என்ற தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்கு தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை? நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.

இன்று கல்கத்தாவிற்கு என்ன பயன் தெரேசாவால் என்பதைவிட கல்கத்தாவால் தெரேசா உலக அரங்கில் சிறந்த சமூகசேவகியாக நிறுத்தப்பட்டுவிட்டார் என்பதுதான் நிதர்சனம். இவரது முதன்மைப் பணி பிணியில் இறப்பை எதிர் நோக்கும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்வது என்று அறியப் பட்டது. ஆனால் உண்மையில் அவர் வெளிநாட்டு கிருஸ்துவப் பணக்காரர்களிடமிருந்து பணம் திரட்டும் வேலையைதான் தீவிரமாக செய்து வந்தார் என்று பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் கூறியுள்ளார்கள். அவர் நடத்திய நோயாளிகளின் இருப்பிடம் நம் ஊர் அரசாங்க மருத்துவ மனையைவிட மிகக் கேவலமான முறையில்தான் இயங்கி வந்தது. வசதிகள் ஏதும் இன்றி சுகாதாரமற்ற முறையில்தான் இயங்கியது என்று பலர் பகிங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார்கள். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்காமலும் பெயின் கில்லர் போன்ற மருந்துக்களை செலுத்தாமலும் ஏசு ஜபம் செய்தால் எல்லாம் தானே குணமாகிவிடும் என்று அறிவுரை சொல்லியே பலர் மரணம் அடைந்தார்கள். இதே நிலையைதான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த குழுந்தைகள் காப்பக இல்லங்களிலும் இருந்தது.

httpv://www.youtube.com/watch?v=dSvFCwGmGow

httpv://www.youtube.com/watch?v=6Pei8lSiv6s

இப்படி மோசமான நிலையில் நடத்தப்பட்ட காப்பகங்கள் மருத்துவமனைகள் பற்றி உலகில் மிகவும் பிரபலமான மருத்துவச் செய்திகளை வெளியிடும் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்சன்ட் (Lancent) என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ராபின் காக்ஸ் (Dr.Robin Cox) கடுமையாக சாடியிருந்தார். இந்த இடங்களில் நோயாளிகள் படுக்கப் படுக்கை வசதி இல்லாமல் வெறும் தரையில் படுக்க வைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சில குறுகிய அறைகளில் 60க்கு மேறப்பட்ட நோயாளிகளை அடைக்கிறார்கள் என்றும் ஊசிபோடும் சிரிஞ்சுகளை மறுபடி மறுபடி பச்சை தண்ணீரில் நனைத்து உபயோகிக்கிறார்கள் என்றும் கூறுகிறார். பல தீவிர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் இல்லாமலும் நோயாளிகளை மாற்று மருத்துவமனைக்கு அனுப்பாமலும் அங்கேயே சாகடிக்கப் படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி சுகாதாரமற்ற முறையில் நேயாளிகளை நடத்துவதால் அங்கே பணியில் இருக்கும் பல நர்ஸ்கள் காசநோய் எயிட்ஸ் போன்ற நோய் தொற்றிக்கொண்டு அவதிப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். இந்த குறைகளுக்கெல்லாம தெரேசாவின் ஒரே மருந்து ஏசு ஜபம்தான். இந்த ஜபம் செய்ய பொருள் செலவோ வங்கிக் கணக்கோ தேவையில்லை!

இதுதான் அவர் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் செய்துவந்த பிரார்த்தனை தொண்டு. பல சமயம் அவர் நோய்வாய்ப் பட்டால் இங்கே சிகிச்சை மேற்கொள்ளாமல் பாஸ்டன் போன்ற வெளிநாட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தனது கடைசிக் காலத்தில் நோய்வாய் பட்டபோது பயணம் செய்ய இயலாததால் கல்கத்தாவில் உள்ள ஆர்.கே.பிர்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இது ஹிந்துக்கள் நடத்தும் அதி நவீன தொண்டு நிறுவனம். இங்கே அவருக்கு கிருஸ்துவர்களது பணமோ அல்லது பிரார்தனையோ தேவையில்லை!

அவரது கொள்கை ஏழைகளுக்கு மட்டும் பணம் செலவு இல்லாமல் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றுதான் – அதாவது ஆன்மீக சுத்திகரிப்பினால் மன நிறைவை ஏற்படுத்தி ஏசுவிடம் அனுப்புவது. இப்படித்தான் அவரது தொண்டு நிறுவனங்கள் வசதிகள் ஏதும் இன்றி ஏழைகளுக்கு உதவுவதாக கண்துடைப்பு செய்துகொண்டு உலக கிருஸ்துவ நாடுகளிலிருந்து கணக்கிலடங்கா நன்கொடைகளை பெற்று அதில் பெரும் பங்கை வாடிகன் பாங்கில் செலுத்தி மேலும் உலகில் பலநாடுகளில் ஆட்டு மந்தை வியாபாரத்தை (Soul Harvesting Business: ஆன்ம அறுவடை வணிகம்) விரிவாக்கம் செய்ய உதவி வந்தார். இதில் பெரும் பங்கு சர்சு கட்டுவதற்கும் கான்வென்ட் பள்ளிகள் கட்டுவதற்கும் செலவு செய்யப்பட்டன. அவர் நடத்தி வந்த ”மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்” என்ற நிறுவனம் உலகில் மிகவும் பணம் படைத்த ஒன்று. இவர்களது வெளிநாட்டு வங்கி நியூயார்கில் உள்ளது. அதில் கரண்ட் கணக்கில் வைத்திருந்த தொகை 50 மில்லியன் டாலர்களுக்குமேல். இருந்தும் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி மேன்மேலும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்.

தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். சந்திரசாமி போன்றவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை வெளிப்படையாகவே ஆதரித்தார். சஞ்சய் காந்தியின் கட்டாய குடும்ப கட்டுபாடு திட்டத்தை ஆதரித்தார். ஆனால் கருச்சிதைவையும் தற்காலிகக் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் சாதனங்களின் உபயோகத்தையும் எதிர்த்தார்!

இவர் பெரும் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதைவிட கிரிமினல்களிடமிருந்து பணம் பெறுவது எளிது என்பதை அறிந்து அதன்படி செயல்ப்பட்டார். அதில் முக்கியமான இருவர் ”சார்லஸ் கீடிங்”. இவர் இன்று கலிபோர்னியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் ஒருவர் ”ராபர்ட் மாக்ஸ்வெல் ” என்ற கிரிமினல். இவர் ஸ்காட்லாந்து போலீஸ் தன்னை பிடிக்க நெருங்கிவந்த பொழுது பிடிபடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவருமே தங்கள் வங்கிகளில் பணம்போட்டவர்களை மோசடி செய்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள்.

இந்த கீடிங் என்பவன் சுமார் 900 மில்லியன் டாலர் பொதுமக்கள் சொத்தை சூறையாடியவன். இவனது கேஸ் கோர்டில் நடந்து வந்தபொழுதுதான் தெரேசா இவனிடமிருந்து 1 மில்லியன் டாலர் மேல் நன்கொடை பெற்றுக்கொண்டு அந்த கோர்ட்டின் நீதிபதிக்கு அவனை மன்னித்து விடுமாறும் அவன் ஏழைகளுக்கு தொண்டு செய்தவன் என்றும் சிபாரிசு கடிதம் எழுதினார். மேலும் அவர் குற்றாவாளியின் விலாசமான மனதை ஜீசஸ் எவ்வாறு அணுகுவாறோ அவ்வாறே அணுகவேண்டும் என்று எழுதினார். இதனால் கோபம் கொண்ட நீதிபதி, ‘அதுசரி அவனை மன்னிக்கலாம் ஆனால் அவன் மோசடி செய்த பணத்தைத் தங்களால் கொடுக்க முடியுமானால் அந்த பணத்தை உரியவரிடம் சேர்ப்பித்து அவனை விடுதலை செய்கிறேன்’ என்று பதில் எழுதினார். ஏன் வாய் திறப்பார் இந்த பரோபகாரி!

வேறு ஒரு சமயம் அரசியல் சார்ந்த சினிமா பிரசார படம் எடுப்பதற்காக ஹைட்டி (Haiti) நாட்டை சேர்ந்த டுவேலியர் மிச்சேல் தம்பதிகளுக்கு உதவி செய்தார்.  இவர்கள் அந்த நாட்டின் ஏழைகளிடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்து ஸ்பெயின் நாட்டிற்கு ஓடியவர்கள். இதன் பிரதிபலனாக டுவேலியரிடமிருந்து (ஒரு நாட்டின் மொத்த குடிகளும் தண்டிக்க தயாராக உள்ள ஒருவனிடமிருந்து) மில்லியன் கணக்கில் நன்கொடையும் பாராட்டுப் பட்டங்களையும் பெற்றார்.

அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனத்தொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரிஸ் ஆஃப் சாரிடி”  நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன் தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது.

இப்படி இந்தியாவில் பல ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்த இவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் தான் கழித்துள்ளார். பணம் திரட்டுவது வெளிநாடுகளில் தன்னுடைய சேவை நிறுவனத்தின் கிளைகள் திறப்பது என்பது அவரது முதன்மை பணியாக இருந்தது. அவர் வாழ்ந்த நாளில் இயற்கை சீற்றங்கள் பல இந்தியாவில் நிகழ்ந்தது. ஏதோ குறிபிட்டு சொல்லும் ஒரு இரு நிவாரண பணிகளை தவிர்த்து மற்றவற்றில் இவரது நிறுவனம் பங்கு கொள்ளவே இல்லை.  அப்படியே பங்கு கொண்டாலும் அதற்கான பகட்டான பல விளம்பரங்கள் செய்து விழா கொண்டாடியதை தவிர உண்மையான நிவாரண பணி மேற்கொள்ளப் படவில்லை.

நோயாளிகளுக்கு உருப்படியான சிகிச்சை செய்வது அவருக்கு அறவே பிடிக்காது. நோய் முற்றிவிட்டால் அவர்களிடம் ஜீசஸ் நெருங்கிவிட்டார் என்றும் அவரை மருந்து செலுத்தி குணப்படுத்துவதை விட ஜபம் செய்து ஜீசஸிடம் சேர்ப்பதுதான் உண்மையான கிருஸ்து நெறி என்பார். கல்காதாவில் உள்ள இந்த காப்பகத்தில் (Nirmal Hriday – House for dying destitute)  இதுவரை 86170 நோயாளிகள் சேர்கப்பட்டார்கள் என்றும் அதில் 34815 பேர் ஜீசஸிடம் போய் சேர்ந்தார்கள் என்றும்  சிஸ்டர் கிளெண்டா (Sister Glenda) என்ற கன்யாஸ்திரி தெரிவிக்கிறார்.  அவரது தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த பல கன்யாஸ்திரிகள் அவரது அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டினால் வேலையை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

முடிவாக, ஐரோப்பாவிலிருந்து இந்திய இறக்குமதி வரிசையில் ராபரட் கிளைவ் 18 ஆம் நூற்றாண்டில்.  சோனியாவும் குட்ரோச்சியும் சமீபத்தில். பின்பு வந்தவர் தெரேசா.  இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டில் பெறமுடியாத பணத்தையும் புகழையும் இங்கே பெற்றார்கள்.  இன்று தெரேசாவின் வாரிசு சகோதரி நிர்மலா. இவர் “ஏழைகள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்; அவர்கள் இல்லையேல் எங்களுக்கு வேலை கிடையாது” என்கிறார். ஏன் சொல்ல மாட்டார்?

“கான்வெண்டுகள் மற்றும் சர்ச்களின் மதிள் சுவர்களுக்குள் கற்பழிப்புகளும், கொலைகளும் காலம்காலமாக நடந்து வருவது தான். ஆனால் சர்ச்சுக்கு வெளியில் “கன்யாஸ்திரீ கற்பழிப்பு” என்பது மட்டும் தான் இங்கே பற்றி எரியும் செய்தியாகிறது …

சகோதரி பிரேமா சொல்வது போல, அவரது நிறுவனம் ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறது என்றால், இந்த நாட்டின் ஏழைகளுக்காக வந்த பணம், ஏன் ரோம் நகரின் (வத்திக்கான்) பணக்கருவூலங்களுக்குப் போகவேண்டும்? மிஷநரிஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப் படுகின்றனவா? சர்ச் நிலங்களும், சொத்துக்களும் ஏன் தணிக்கை செய்யப் படுவதில்லை? ஏன் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்? இது ஒரு தேசவிரோத செயல் இல்லையா? …

இவர்கள் ஏன் ஏழைகளை நிம்மதியாக இருக்கவிடக் கூடாது? யார் யாரைச் சுரண்டுகிறார்கள்? ஏழைகளை ஏழ்மையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பது தான் தேவ ஆசிர்வாதமா? பிற்போக்குத் தனம் அப்படியே இருக்கவேண்டும் அல்லது வளர வேண்டும் என்பது தான் பிரார்த்தனையா?…

முழுதும் படிக்க: மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள் – டாக்டர். திருமதி ஹில்டா ராஜா

அஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அருட்பரம்பரையில் வந்துதித்த வள்ளல் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஆவார். 1942-ல் திருப்பராய்த்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் அமைத்து ஆன்மிக, கல்விப்பணிகளை இனிதே நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் தபோவனத்திற்குள் 13 வயது நிரம்பிய ஒரு சிறுவன் நுழைகிறான். நேரே பெரிய சுவாமி சித்பவானந்தரின் அறையை அடைகிறான். அவர் இச்சிறுவனை மேலும் கீழும் பார்க்கிறார்.(நயன தீட்சை கொடுத்தாயிற்று)

“நீ எங்கிருந்து வருகிறாய்? உன் பெயர் என்ன?” இது சுவாமி.

சிறுவன்: என் பெயர் நடராஜன். கோவை மாவட்டம் கொடுமுடி வட்டத்திலுள்ள “காகம்” எங்கள் கிராமம்.

சுவாமி: இங்கு எதற்கு வந்தாய்?

சிறுவன்: நான் துறவியாக விரும்புகிறேன்.

சுவாமி: அப்படியா! நீ சிறு பிள்ளையாக இருக்கிறாய். ஊருக்குச் சென்று எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்துவிட்டு சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு வா.. சேர்த்துக்கொள்கிறேன்.

சிறுவன் நடராஜன்: கட்டாயம் சேர்த்துக்கொள்வீர்களா?

சுவாமி: ஒரு முடிவு எடுத்துவிட்டால் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். சாப்பிட்டுவிட்டு போய் வா!

இதற்கிடையில் நடராஜன் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கிறான். சான்றிதழ் எடுத்துக்கொண்டு திரும்பவும் தபோவனப் பிரவேசம் ஆகிறான்.

சுவாமி: என்னை விடமாட்டாய் போலிருக்கே! சரி நான் சொல்கிறபடி செய்கிறாயா?

நடராஜன்: அதற்குத்தானே வந்திருக்கிறேன்.

பெரிய சுவாமியுடன் பிரசிடென்சி கல்லூரியில் படித்த சகமாணவர் ஒருவர் கத்தோலிக்க பாதிரியாராக மாறி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக அப்போது பதவி வகித்து வந்தார். அவருடைய பெயர் பிரிட்டோ. பெரிய சுவாமி அவருடன் தொடர்புகொண்டு நடராஜனை இன்டர்மீடியட் வகுப்பில் சேர்க்கிறார். வேட்டி, முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு மதிய உணவு எடுத்துக்கொண்டு தினமும் எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு பயணமாகி கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தார் நடராஜன்.

கல்லூரியை ஒட்டி லூர்து மாதா சர்ச் இருந்தது (இப்போதும் இருக்கிறது). அக்கோயிலின் வாசலில் ஒரு வயதான மூதாட்டி பசியால் வாடிக்கொண்டிருந்ததை நடராஜன் கவனிக்கிறார். தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அந்தப் பாட்டி தினந்தோறும் இவர் வருகைக்காக காத்திருக்கிறார். நடராஜனும் தினந்தோறும் தன் அன்னதான திட்டத்தை எவருக்கும் தெரியாமல் நிறைவேற்றி வருகிறார். இன்டர்மீடியட் வகுப்பு முடிந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சியடைகிறார்.
பெரியசுவாமி நடராஜனை பி.ஏ. கணிதம் (with logic Ancillary) சேர்க்கிறார். அப்போது அவருடைய வகுப்பு மேசைத் தோழர்கள் இருவர். ஒருவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் நாகராஜன். இவர் லால்குடியிலிருந்து ரயிலில் வருவார். மற்றொருவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நடராஜனின் கணிதத் திறமையைப் பார்த்து அப்துல் கலாம் புகழாத நாளே இல்லை என்று டாக்டர் நாகராஜன் சென்ற ஆண்டு சென்னையில் அவரை நான் சந்தித்தபோது கூறினார்.

பாட்டிக்கு கிடைக்க வேண்டிய சாப்பாடு தினமும் நடராஜன் மூலமாக கிடைத்து வந்தது. ஒரு நாள் தன் தோழர்களிடம் நடராஜன், “எனக்கு லௌகீகப் படிப்பில் விருப்பமில்லை. ஆன்மிகக் கல்வியில் மட்டுமே விருப்பமுள்ளது. நான் கல்லூரியிருந்து நின்று கொள்ளலாம் என்றிருக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்கிறார். நண்பர்களும், நடராஜனின் கருத்தை ஆமோதித்தனர். அன்று மாலை பெரிய சுவாமியிடம் சென்று தனக்கு லௌகீகப் படிப்பில் பிரியமில்லை என்றும் ஆத்ம சாதனத்தில் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகவும் கூறுகிறார். உடனே குருநாதர் சித்பவானந்தர், “சபாஷ்! நீ எடுத்த முடிவு சரியானது. நானாவது தேர்வு வரைக்கும் சென்றேன். நீ 3ஆம் வருஷம் பட்டப் படிப்பு தேர்வுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டாய். அப்படியே ஆகட்டும். இன்று முதல் நீ குருகுல மாணவர்களுக்கு வார்டனாக இரு!” என்று உத்தரவிடுகிறார்.

ஒரு நாள் மட்டும் கல்லூரிக்குச் சென்று வருவதாக குருநாதரிடம் கூறிவிட்டு அங்கு சென்று பாட்டியைப் பார்த்து அன்றைய மதிய உணவை வழங்கிவிட்டு, “நாளை முதல் நான் வரமாட்டேன். நீங்கள் உணவிற்கு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டுவிட்டுத் தன்னிடம் இருந்த 5 ரூபாயை பாட்டியிடம் கொடுத்து தெரு ஓரமாக ஒரு சிறிய கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி விடை பெறுகிறார்.

சில ஆண்டுகளில் பெரிய சுவாமி இவருக்கு சந்நியாச தீட்சை வழங்கி நித்தியானந்தர் என்ற பெயரைச் சூட்டுகிறார். மாணவர்களுக்கு வார்டனாக இருந்ததால் அனைவரும் ‘வார்டன் சுவாமிஜி’ என்றே அழைத்து வந்தனர். குருநாதர் ஏற்பாட்டின்படி வட இந்திய யாத்திரைக்கு சென்று வருகிறார். குறிப்பாக கமார்புகூர் (பரமஹம்ஸர் பிறந்த ஊர்), ஜெயராம்பாடி (அன்னை சாரதா தேவியார் பிறந்த ஊர்), விவேகானந்தர் அவதரித்த தலங்களுக்கு சென்றும், பேலூர் மடத்துக்கு சென்றும் பண்பட்ட துறவியாகத் திரும்புகிறார். அவரிடம் வித்யாவன உயர்நிலைப்பள்ளியின் செயலர் பொறுப்பும், குலபதி பொறுப்பும், தர்மச்சக்கரம் இதழின் ஆசிரியர் பொறுப்பும் ஒப்படைக்கப்படுகிறது. பல பள்ளிகளை கவனிக்கும் பொறுப்பை பெரியசுவாமி நித்தியானந்தரிடம் ஒப்படைக்கிறார். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு அனைத்து பள்ளிகளையும் சீரிய முறையில் நிர்வகித்து வந்தார்.

தமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது ஆசிர்வாத நிகழ்ச்சிக்கு நித்யானந்தரை பெரிய சுவாமி சித்பவானந்தர் தம்முடன் அழைத்துச் செல்கிறார். அந்த வருடம் பெரிய சுவாமியும், நித்தியானந்தரும் அருகருகே அமர்ந்து இருக்கிறார்கள். ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் பெரிய சுவாமிஜி ஆசிர்வாதம் செய்கிறார். மற்றவர்களுக்கு நீ ஆசிர்வாதம் செய் என்று நித்தியானந்தரைப் பார்த்து ஆணையிடுகிறார். அப்போது நித்தியானந்தர், “ஆசிர்வாதம் செய்யும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?” என்று வினவுகிறார். பெரிய சுவாமி, “சூரிய காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும். முழுமையாக சொன்ன பிறகுதான் பிள்ளைகளின் தலையிலிருந்து கையை எடுக்க வேண்டும்” என்று விளக்குகிறார். அது முதல் எல்லோருக்கும் நித்தியானந்தர் தான் ஆசிர்வாதம் செய்ய ஆரம்பித்தார். சுவாமி குஹானந்தர் தலைவராக இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தில் குஹானந்தரும், நித்தியானந்தர் இருவருமே பிள்ளைகளுக்கு ஆசிர்வாதம் செய்தார்கள்.

குருநாதர் மறைவிற்குப் பின் தலைமைப் பொறுப்பைக்கூட அவர் விரும்பி ஏற்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைவர் பொறுப்பை ஏற்றார்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்ற கருத்துடையவர் அவர்.

தமிழ்நாடு முழுவதும் தம் குருநாதர் நிகழ்த்தி வந்த அந்தர்யோகங்களை இவரும் சிறப்பாக நடத்தி அன்பர்களின் அன்புக்கு ஆளானார். குருநாதர் உத்தரவுப்படி ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அன்பர்களுடன் பாதயாத்திரை சென்று வந்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்துமத தத்துவங்கள் உயிரூட்டப்பட்டன. அதுமட்டுமல்ல தம் குருவின் வாழ்க்கை வரலாற்றை தம் கைப்பட எழுதி பிரசுரித்தார். சித்பவானந்த குருவின் நூற்றாண்டு விழாவை குருநாதர் பிறந்த ஊரான கோவை மாவட்டம் செங்குட்டைப் பாளையத்தில் துவங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடச் செய்து மகிழ்ந்தார். 1998-ஆம் ஆண்டு தபோவனத்தில் நடைபெற்ற சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா குறிப்பிடத்தக்கது.

விடுதியில் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவை மட்டுமே சாப்பிடுவார். தனக்கென்று விசேஷமாக எதையும் தயாரித்து சாப்பிடமாட்டார். எங்கு சென்றாலும் அவரது நினைவு மட்டும் ஸ்ரீ விவேகானந்த வித்யாவன குருகுல மாணவர்கள் மீதே இருக்கும். தாய் தந்தையர்கள் கூட இவரைப் போல பிள்ளைகளை வளர்க்கமாட்டார்கள். அதனால் தான் அத்தனை மாணவர்களும் அவர் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர்.

தலைமை ஸ்தானத்தை அவர் தேடிச் செல்லவில்லை. அது தானே தேடி வந்தது. ராமன் இருக்க பரதன் நாடாள்வதா? என்று மறுத்து பெரிய சுவாமிக்குப் பின் சுவாமி குஹானந்தரை தலைவராக்கி அழகு பார்த்தார். குஹானந்தருக்குப் பின்புதான் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இத்தகைய சுயநலமற்ற கருணாமூர்த்தி 09.04.2012 இரவு 12 மணிக்கு தம் 82ஆம் வயதில் இறைநிலை எய்தினார். அவரது தேக தகனம் பெரியசுவாமியின் சமாதிக்கு அருகிலேயே 10.04.2012 அன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெற்றது.

சுவாமிஜியின் மகாசமாதி நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை இங்கு காணலாம்.

அணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்

‘குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்’ என்பார்கள். அது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது. அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அமெரிக்க நாட்டின் தன்னார்வ நிறுவனங்கள் நிதி உதவி செய்கின்றன என்ற நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து, ‘மோதிரக்கையால் குட்டு’ அல்லாமல் வேறென்ன?

சதா சர்வகாலமும் அமெரிக்க முதலாளிகள் சொல்வதையே வேதமாகக் கொண்டு செயல்படும் நமது பிரதமரே கூறி இருப்பதால், இந்தக் கருத்தின் உண்மைத்தன்மையை நாம் சந்தேகிக்க வேண்டியதே இல்லை. இயக்கத்துக்கு தயார்நிலையில் கூடங்குளம் அணுஉலை இருந்தும் மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் அதை திட்டமிட்டபடி துவக்க முடியாமல் அரசு தவிக்கிறது. இந்த வெகுஜனப் போராட்டத்தின் பின்னணியைத் தான் பிரதமர் பிட்டு வைத்தார். கூடவே ஒரு முக்கியமான, சிக்கலான, இதுவரை அரசு மறைத்துவந்த ஆபத்தான விஷயத்தையும் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

அது, நம் நாட்டில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் பல அமைப்புகள் சேவைக்காக என்று கூறி வெளிநாடுகளிலிருந்து பெறும் கோடிக் கணக்கான நிதி வேறு செயல்களில் பயன்படுத்தப்படுவதையும் பிரதமரின் பேட்டி வெளிப்படுத்தி இருப்பது தான். குறிப்பாக மதமாற்ற வியாபாரிகளான கிறிஸ்தவ அமைப்புகள் கிறிஸ்தவ நாடுகளிலிருந்து ‘சேவை’ என்ற போர்வையில் பெறும் கோடிக் கணக்கான பணம் நமது நாட்டில் சமூகச் சீர்குலைவுக்கு வித்திடும் மதமாற்ற நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.

இதில் முன்னணி வகிப்பவர் தான் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமார். இவர் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ மத வெறியர். வெளிநாடுகளில் கல்வி ஆராய்ச்சி செய்வதாக கூறிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. குறித்து தவறான கருத்துக்களை உருவாக்கும் ‘ஆராய்ச்சி’ நூல்களை எழுதியவர் தான் உதயகுமார். ‘Presenting the Past: Anxious History and Ancient Future in Hindutva India’, ‘Om-made’ History: Preparing the Unlettered for the Future Hindu Rashtra’, ‘Historicizing Myth and Mythologizing History: The Ayodhya Case in India’, ‘Mapping the ‘Hindu’ Remaking of India’, ‘Betraying a Futurist: The Misappropriation of Gandhi’s Ramarajya’ போன்றவை அவர் எழுதிய நூலகளில் சில. இந்த நூல்களை வெளியிட உதவிய வெளிநாடுகளே, தற்போது கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி உதவி செய்கின்றன. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

அடிப்படையில் உதயகுமார் ஒரு மத அடிப்படைவாதி. அவர் அறிவுத்துறையில் (Intelectual) கிறிஸ்தவ மதத்தின் தாக்கத்துக்காக பணிபுரிய நியமிக்கப்பட்டவர். அவர் தனது பணிகள் இதுவரை கச்சிதமாகவே செய்து வந்திருக்கிறார். ஆனால் தனக்கு என்று அரசியல் சார்ந்த எண்ணங்கள் இல்லை என்று இப்போது புருடா விடுகிறார். ”1998 ல் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோது, மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அறிவுஜீவிகள் குழுவை அமைக்க முயன்றதாகவும், அதற்கு மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு’வான ஹிந்து ராம் ஆதரவளித்ததாகவும்’ அவரே ஒரு இணையக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். தவிர ‘இந்திய பசுமைக் கட்சி’ என்ற கட்சியின் நிறுவனராகவும் இவர் இருக்கிறார். இக்கட்சி தேர்தல் அரசியலில் இப்போது ஈடுபடாவிட்டாலும், பாஜகவுக்கு எதிரான சிந்தனைகளைப் பரப்ப தேர்தல் காலத்தில் பயன்படும் என்பது ரகசியமல்ல.

இவரது நூல்கள், ஹிந்துத்துவ வெறுப்பை உமிழும் இவரது ஆழ்மனதை புலப்படுத்தும் அரிய ஆவணங்கள். உண்மையில் இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவர். ஆனால், இறையருளால், இவரது முகத்திரையை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமரே தோலுரித்திருக்கிறார். அதற்கு முன்னதாக, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இந்திய தலைமை பீடங்களை அணுகி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மேற்கொண்ட சமரச முயற்சி பலரும் அறியாதது.

கூடங்குளம் அணுஉலை திட்டம் ரஷ்ய உதவியுடன் நிறுவப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தான். அப்போது கோர்பசேவ் ரஷ்ய அதிபராக இருந்தார். இந்தத் திட்டத்துக்காக ராஜீவுக்கு ரஷ்யா ‘அன்பளிப்பு’ வழங்கியதாகவும் பேச்சு உண்டு. இன்றும் கூட கோர்பசேவ் ராஜீவ் குடும்பத்தின் ஆப்த நண்பராக உள்ளார். சோனியா குறித்த வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை எழுதியவர் கோர்ப்பசேவ். அப்படிப்பட்ட நிலையில், கூடங்குளம் அணுஉலை முடங்குவதை கௌரவப் பிரச்னையாக காங்கிரஸ் காண்கிறது. எனவே தான், அணுஉலை எதிர்ப்புப் போராளிகளுக்கு எதிராக காங்கிரஸ் களம் இறங்கியது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சும்மாவா சொன்னார்கள்?

காங்கிரஸ் கட்சியின் அணுஉலை ஆதரவு நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் இருப்பினும் இருந்துவிட்டுப் போகட்டும். அதை ஆதரிக்கும் பிற கட்சிகள் தேச நலனின் அடிப்படையில் இதைத் துவக்க வேண்டும் என்று கோருகின்றன. உண்மையில் இத்திட்டம் இப்போதுள்ள வடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தது பாஜக தான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான், முடங்கிக் கிடந்த அணுஉலைத் திட்டம் வேகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான், பல்வேறு கெஞ்சல்களையும் புறந்தள்ளிய உதயகுமார் கும்பல் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கி இருக்கிறது.

அதற்கு முன்னதாக ‘புதுவையின் கபில் சிபல்’ நாராயணசாமியை அனுப்பி தனது பிரசாரங்களை மத்திய அரசு முடுக்கிவிட்டது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் விளக்க வேண்டிய விஷயங்களை நாராயணசாமியின் ஆணவப் பேச்சுக்கள் திசை மாற்றின. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அணு உலைக்கு ஆதரவாகவும், கூடங்குளம் மக்களுக்கு நன்மை அளிப்பதாகவும் முன்வைத்த திட்டங்கள் போலல்லாது, ஆணவப் போக்குடன் மத்திய அரசு நடந்துகொண்டது. அதன் விளைவாக உதயகுமார் கும்பலுக்கு ஆதரவு பெருகியது. மத்திய அரசுடன் ஊடல் கொண்டாடும் தமிழக அரசு எதையும் கண்டுகொள்வதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்க, போராட்டக் காரர்களுக்கு வசதியாகிவிட்டது.

இருப்பினும் நாராயணசாமியின் பேச்சு ஒருவிதத்தில் நன்மை அளித்தது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் முறைகேடான நிதி உதவி குறித்து அவர்தான் முதலில் புகார் கூறினார். பிற்பாடு அதையே பிரதமரும் உறுதிப்படுத்தினார். இதில் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் தர்ம சங்கடமான நிலையில் தான் தவித்தது. அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்துவோர் உள்ளூர் கிறிஸ்தவ பாதிரியார்கள் என்பதே காங்கிரஸ் கட்சியின் சங்கடத்துக்கு காரணம். எனவே தான், கத்தோலிக்கர்களின் இந்திய தலைமை குருமார்களுடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பேச்சு நடத்தினர். அதனால் பயன் பெரிய அளவில் விளையவில்லை. ஏனெனில், மதத்தை விட, இந்தப் போராட்டத்துக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் சர்வதேச அரசியல் வலுவானது.

அமெரிக்காவும், பிரான்சும் அடிப்படையில் கிறிஸ்தவ ஆதரவு நாடுகளாக இருந்தாலும், ரஷ்யாவுக்கு எதிரானவை. ரஷ்யாவின் வளர்ச்சியை முடக்க அமெரிக்கா பனிப்போர் காலத்திலிருந்தே பல கோடி டாலர்களை செலவிட்டு வருகிறது. அதற்கு உதவும் சாதனங்களாகவே தன்னார்வ நிறுவனங்களை (NGO) உலக நாடுகளில் அமெரிக்க பயன்படுத்தி வருகிறது. சர்வதேச அரசியலில் தனது தாக்கத்தை செலுத்த விரும்பும் நாடுகளின் கைப்பிள்ளைகளாகவே இந்த தன்னாவத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது ஒன்றும் பரம ரகசியம் அல்ல.

அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாரும் கூட, SACCER (South Asian Community Center for Education and Research) என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்துபவர் தான். இத்தகைய அமைப்புகளில் நோக்கம் கல்வி, ஊரக வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு என்பது போன்று அறிவிக்கப்பட்டாலும், உள்நோக்கம் வேறாக இருப்பதையே அனுபவத்தில் காண்கிறோம்.

கிறிஸ்தவ அமைப்புகளும் இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் போர்வையில் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நிதி உதவியை தற்போது மத்திய அரசின் நடவடிக்கைகள் ஊர்ஜிதப்படுத்தி இருக்கின்றன. நாடு முழுவதும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். கூடங்குளம் அனுபவம் ஒருவகையில் மத்திய அரசுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி!

திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் இயங்கும் பல தன்னார்வ அமைப்புகள் கிறிஸ்தவர்களால் நடத்தப்படுபவை. அவற்றுக்கு சமூகப் பணிக்கென (உதாரணமாக சுனாமி நிவாரணம் என்ற பெயரில் வரும் பணம்) கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் கட்டப் பயன்படுத்தப்படுவதையும் மதமாற்ற நடவடிக்கைகளில் செலவிடப்படுவதையும் காண முடியும். இது புதிய புகாரல்ல. கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து முன்னணி கூறிவரும் குற்றச்சாட்டு தான். இவ்வாறு கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வரும் நிதி அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு மடை மாற்றப்பட்டதா என்பது குறித்து அரசு ஆராய்ந்தது. (சமூக வளர்ச்சிப் பணிக்காக என்று கூறி பெறும் நிதியை மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டும் மடை மாற்றலாமா?)

துவக்கத்தில் ஏழு அமைப்புகளை ஆராய்ந்த உள்துறை அமைச்சகம், தற்போது நான்கு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவை: ஊரக மேம்பாட்டு மையம் (RUC), தூத்துக்குடி டயோசிசன் சங்கம் (TDA), குட் விஷன், ட்ரினிடி ஊரகம் மற்றும் நகர்ப்புற அதிகாரம் அளிக்கும் அமைப்பு (TRUE) ஆகியவை. இதில் மத்தியப் புலனாய்வுத் துறையால் RUC , TDA அமைப்புகள் விசாரிக்கப்படுகின்றன. குட் விஷனும் TRUE அமைப்பும் தமிழக புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்படுகின்றன.

இவற்றில் தூத்துக்குடியில் இயங்கும் TDA அமைப்பு கடந்த நிதியாண்டில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ. 1.43 கோடி பெற்றுள்ளது. ஜெர்மனியிலிருந்து 84 லட்சமும், இத்தாலியிலிருந்து 61 லட்சமும், நெதர்லாந்திலிருந்து 45 லட்சமும் என, 2010 -11 ல் இந்த அமைப்பு பெற்ற மொத்த வெளிநாட்டு நிதி உதவி ரூ. 3.60 கோடிக்கு மேல்! இதேபோல RUC அமைப்பு சென்ற நிதியாண்டில் பெற்ற மொத்த நிதி ரூ. 2.38 கோடி! இந்த நிதி மதமாற்ற நடவடிக்கைகளிலும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உதவும் செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவையல்லாமல், திருநெல்வேலி, தூத்துக்குடியில் அரசின் கண்காணிப்பு வளையத்தில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்களும், அவற்றுக்கு வந்த வெளிநாட்டு நிதி உதவியும் குறித்த தகவல்கள் இதோ…

1 . சால்வேஷன் ஆர்மி இந்திய சவுத் ஈஸ்டர்ன் டெரிட்டரி (ரூ. 8.45 கோடி)

2 . சோஷியோ எகனாமிக் அண்ட் எஜுகேஷனல் டெவெலப்மென்ட் சென்டர் (ரூ. 4.41 கோடி)

3 . தி காக்ரிகேஷன் ஆப் தி பிரதர்ஸ் ஆப் தி சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ் (ரூ. 2.74 கோடி)

4 . பீப்பிள்ஸ் ஆக்ஷன் அண்ட் கம்யுனிட்டி எம்பவர்மென்ட் (ரூ. 2.64 கோடி)

5 . டோனாவூர் பெல்லோஷிப் (ரூ. 2.59 கோடி)

6 . சவுத் இந்தியா அசெம்ப்ளீஸ் ஆப் காட் (ரூ. 2.55 கோடி)

7 . தூத்துக்குடி மல்டி பர்பஸ் சோஷியல் சர்வீஸ் (ரூ. 2.44 கோடி)

-இவ்வாறு பட்டியல் நீள்கிறது. நாடு முழுவதும் இதுபோல 72 தன்னார்வ நிறுவனங்கள் மத்திய அரசின் கழுகுப் பார்வையில் தற்போது சிக்கியுள்ளன. எனினும் இதுகுறித்த மேல் விபரங்களை அரசு வெளிப்படுத்தவில்லை. பொதுவான கண்ணோட்டத்தில், கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை நிறுவனங்களின் பெயரில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவது உறுதியாகத் தெரிகிறது. இந்தப் பணம் தான், உள்நாட்டில் பல குழப்பங்களுக்கு வித்திடுகிறது.

உதாரணமாக வேர்ல்டு விஷன் என்ற ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடுவதாகக் கூறி நன்கொடைகளை உள்நாட்டில் திரட்டுகிறது. இந்த அமைப்பே ஒரு சர்வ தேச அமைப்பு. பல ஆசிய நாடுகளில் இதற்கு கிளைகள் உண்டு. வெளிநாட்டு நிறுவனமான இதற்கு வெளிநாடுகளில் இருந்தும் நிதி குவிகிறது. அதுபோக உள்ளூரிலும் கையேந்துகிறது. எல்லாம், பாவிகளை ரட்சிக்க!

இவ்வாறாக, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதியாக இருக்கிறது, கிறிஸ்தவ சேவை நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பணம் குறித்த தகவல்கள். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் இடிந்தகரை மக்களுக்கு இதில் பெரும் பகுதி செலவிடப்படுவதாகக் கூறுகிறார், அதே பகுதியில் வாழும் அணுஉலை ஆதரவு இயக்கத்தின் நிர்வாகி சத்தியசீலன். இந்த விவரம் அனைத்தையும் அறிந்திருக்கும் உள்ளூர் இந்து அமைப்புகள் அப்பகுதிகளில் கடுமையான எதிர்ப்புக்கிடையே அணுஉலை ஆதரவு பிரசாரம் செய்து வருகின்றன. அண்மையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அணுஉலை எதிர்ப்பாளர்களான கிறிஸ்தவர்களுக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே நேரிட்ட மோதலை இங்கு குறிப்பிடலாம்.

குமரி, நெல்லை மாவட்டங்களின் அரசியல் களத்தைத் தீர்மானிப்பவர்களாக பாதிரியார்கள் இருப்பதால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைவி ஜெயலலிதா அமைதி காப்பதாகக் கருதப்படுகிறது. அவரது கூடங்குளம் அணுஉலை குறித்த குழப்பமான நிலைப்பாடு விரைவில் மாறுவதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கி உள்ளன. கடற்கரையோர கிராமங்களில் மாநில உளவுத்துறையினர் உபயோகமான தகவல்களைத் திரட்டி வருவது அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு கிலி ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும், ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்து ‘அரசியல்’ நடத்துகிறார் உதயகுமார். இந்த நாடகத்துக்கு விரைவில் திரை போடப்பட உள்ளது.

இந்த அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு அமெரிக்க, பிரெஞ்ச் நாட்டு அமைப்புகள் உதவ வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. காரணம் தெளிவு. இந்தியாவில் அணுஉலை அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற முயன்ற இந்நாடுகள் சில காரணங்களால் தோல்வியைத் தழுவின. இந்தியாவின் நண்பனாக இருந்த ரஷ்யா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. எனவே தான் ரஷ்ய அணு உலைகள் இயங்குவதை எப்பாடு பட்டாவது தடுக்க அவை முயற்சிக்கின்றன என்பது ஒரு தகவல். இது உண்மையாகவே இருக்கலாம். ஏனெனில் ஆயுத பேரங்களில் ஈடுபடுவதற்காக இத்தகைய தன்னார்வ சேவை அமைப்புகளைப் பயன்படுத்துவது வல்லரசு நாடுகளின் வழக்கமே. கூடங்குளம் அணுஉலை மின்னுற்பத்திக்கு என்று சொல்லப்பட்டாலும் அதன் அணு ஆயுத உபயோகங்கள் முக்கியமானவை. இதனை நாட்டுநலன் கருதி வெளிப்படுத்த முடியாத நிலையில் நமது விஞ்ஞானிகள் உள்ளனர். இதை உணர்ந்தே அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் எதிர்க்கின்றன என்று கருதலாம்.

இதை வெளிப்படையாகக் கூற முடியாவிட்டாலும், பிரதமர் அமெரிக்க பத்திரிகைக்கு (Science) அளித்த பேட்டியில் கோடிட்டுக் காட்டி இருக்கிறார். அவர் கூறியது இது தான்:

”நாட்டின் மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புரிந்துகொள்வதில்லை. இவற்றில் பல, அமெரிக்காவில் உள்ளவை. இதனால் தான் அணுமின் நிலையங்கள் பிரச்னைகளை சந்திக்கின்றன…. எங்கள் நாடு சந்திக்கும் வளர்ச்சி தொடர்பான சவால்களை அமெரிக்காவிலிருந்தும் ஸ்காண்டிவேவிய நாடுகளிலிருந்தும் நிதி உதவி பெறும் இந்திய தன்னார்வ நிறுவனங்களும் புரிந்துகொள்ளவில்லை…”

இத்தனைக்கும் பிரதமர் மிகவும் பூடகமாகவே கூறி இருக்கிறார். இதற்கே பிரதமர் தங்களை இழிவு படுத்திவிட்டதாக கூக்குரல் இடுகிறார் உதயகுமார். பிரதமர் மீதே வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டுகிறார். இதையும் நமது அரசுகள் ஜனநாயகம் என்ற போர்வையில் அனுமதிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தன்னார்வ அமைப்புகளுக்கு 2009 -10 ம் ஆண்டில் அந்நிய நாடுகளிலிருந்து வந்த நிதி ரூ. 1,663 கோடி. தமிழகத்தில் மட்டும் 3,218 தன்னார்வ அமைப்புகள் அயல்நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுகின்றன’ என்கிறது ‘புதிய தலைமுறை’ வார இதழ். இந்த புள்ளிவிபரம் நம்மை எச்சரிக்கிறது. தூத்துக்குடியில் இயங்கும் சில தன்னார்வ அமைப்புகளின் தேசவிரோத நடவடிக்கைகள் அம்பலம் ஆகியுள்ள நிலையில், அந்நியக் கரங்களாக இயங்கும் இத்தகைய அரசுசாரா அமைப்புகளை கண்காணிப்பது அவசியம். அவசியம் ஏற்பட்டால், இவற்றுக்கு வரும் நிதிப் பரிமாற்றத்தை முடக்குவதும் அவசியம். கூடங்குளம் அளித்துள்ள பாடம் இது எனில் மிகை இல்லை.

இ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை

இந்து மக்கள் கட்சி அமைப்பினரிடமிருந்து கீழ்க்கண்ட கோரிக்கை நமக்கு வந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறோம் –

imk1

மதிப்பிற்குரிய தமிழ் ஹிந்து உணர்வாளர்களுக்கு வணக்கம் !

ஹிந்து அறவழி போராட்டத்திற்கும் – போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லுகின்ற தொண்டர்களுக்கும் – ஹிந்து பலிதானிகள் குடும்பத்தார்க்கும், எங்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் அறப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும் தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

அறவழி போராட்டங்கள்:

கடந்த ஆண்டு ஹிந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சுமார் 127 க்கும் மேற்பட்ட ஜனநாயக அறவழி போரட்டங்கள் அரசின் தடைகளை மீறி நடை பெற்றுள்ளது உதாரணமாக பெரியார் திராவிடர் கழகத்தின் வன்முறை நடவடிக்கைகளை எதிர்த்து மேட்டூர் கோவை சென்னை ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி பண்டிகைகளின் போது இ.ம.க. சார்பில் போராட்டங்கள் நடந்து எமது தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சமூகசேவை:

எமது அமைப்பின் சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் நான்கு சொர்க்கரதங்களும் இயக்கப் படுகின்றன. இத்தகைய எமது சேவை தற்போது சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு உள்ளது. 13 முழு நேர ஊழியர்கள், 2 அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஹிந்து ஒட்டு வங்கி துவக்கப்பட்டுள்ளது, தாய் மதம் திரும்பும் விழாக்கள் நடத்தப்படுகிறது, ரத்த தான சேவை, கண் தான சேவை, உடல் தான சேவை, ஆகியவை எமது தொண்டர்களால் பரவலாக நடத்தப்படுகிறது.

எமது அமைப்பின் பணி தொடர்ந்திட இதைப் படிக்கும் இந்து உணர்வுள்ள பெருமக்கள் தங்களால் இயன்ற நிதியை எமது இந்து தர்ம சேவை அறக்கட்டளைக்கு (பதிவு எண்: 127/2006) அனுப்பிட வேண்டுகிறோம்..

காசோலை/டிராஃப்ட் Indu Dharma Seva Arakkattalai என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் –

திரு. அர்ஜுன் சம்பத்,
தலைவர், இந்து மக்கள் கட்சி – தமிழகம்
130, வீரகணேஷ் நகர், கெம்பட்டி காலனி
கோயம்புத்தூர் – 641 001.தொலைபேசி : 0422 – 2394877
தொலைநகல் : 0422 – 2349922
கைப்பேசி : 098422 44833, 094421 54833
மின் அஞ்சல் : imkarjunsampath@yahoo.co.in
இணையத்தளம் : http://imkhindu.com/

நேரடி பணம் செலுத்த வங்கிக் கணக்கு விவரம்:

Indu Dharma Seva Arakkattalai
A/c No: 1120155000131901
Karur Vysya Bank, OPPANAKARA STREET (branch).

பணம் செலுத்திய விவரத்தை அஞ்சல் மூலமாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.