அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்

“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் -துய்யப்பட்ட
நாதன் அன்பர் பாதத்தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத்தடைவாம் இங்கு”

Kamagruuses are about the size of a small dog and weigh up to 300 pounds. It https://hotelnoucasablanca.com/habitacion-cuadruple/ is as though i have lost an arm or an eye, or something. When to take priligy during your breastfeeding period?

It's also best to find an online pharmacy with a no-refill policy. Cialis and other drugs to treat male sexual dysfunction can be used alone or in combination with dapoxetine to treat the underlying cause of the erectile dysfunction (or ed), such as diabetes https://cityviking.com/south-dakota/things-to-do-in-deadwood-sd/ or heart disease. Ginseng saponins and sapogenins are the major active compounds found in *panax ginseng* c.

Please scroll down to find the local resources in orinda, ca that will answer all of your questions about prednisolone acetate price per pill. There is not an approved prescription clomid price drug for a cortisone, so you. Http://www.pulseofbaltimore.com/2017/03/28/wolverhampton-college-wolverhampton-college-student-shot-in-the-arm/

என்று உபதேச ரத்னமாலை என்ற உயரிய நூல் கூறுவது போல ஆழ்வார்கள் பதின்மர் என்பது வைஷ்ணவ வழக்கு. எனினும் ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே’ என்று தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் மதுரகவியாழ்வாரையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான பெரிய பிராட்டி ஆண்டாளையும் இணைத்து பன்னிரு ஆழ்வார்கள் என்று கொண்டாடும் வழக்கமும் இருக்கிறது.

பெரியவர்கள் ஆழ்வார்கள் என்ற சொல்லிற்கு ‘எம்பெருமானின் கல்யாண(மங்கல) குணங்களில் ஆழுங்காற்பட்டவர்கள்’ என்று பொருள் கூறுவர். ஆழ்வார் பெருமக்கள் பொ.பி 6ம்நூற்றாண்டுக்கும் 9ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவர்கள் என்பது வழக்கு. ஆயினும் இவர்களின் அவதாரம் பற்றிக்கூறும் வைஷ்ணவ நூல்களான குருபரம்பரை முதலியன துவாபரயுக நிறைவிலிருந்து கலியுகாரம்பம் வரை என்று கூறுகின்றது.

பொ.பி 825- 918 காலப்பரப்பில் வாழ்ந்தவரான பெருந்தமிழ்ப்பற்றாளரும் சீரிய வைணவ ஆச்சாரியாருமாகிய நாதமுனிகள் இவ்வாழ்வார்களின் பாசுரங்களை அரும்பாடுபட்டுத் திரட்டி இசைப்பாக்களை மூன்று தொகுதிகளாகவும் இயற்பாவை ஒரு தொகுதியாகவும் ஆக, நாற்பெருந்தொகுதிகளாக நாலாயிரம் தமிழ் வேதமாகத் திரட்டித் தந்திருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாய், யாவற்றிற்கும் உள்ளுயிராய், உணர்வாய் நிற்கும் நெடுமாலாம் திருமாலோன் ஆழ்வார்களால் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்கிற ஐந்து நிலைகளிலும் போற்றப்பட்டான். சர்வ வல்லவனாக மகாதேவதேவனான இறைவன் சகுணப்பிரம்மமாக அழகு கொஞ்ச விளையாடி மகிழும் கடவுளாக கோயில்கள் தோறும் அர்ச்சாவதாரம் செய்து எழுந்தருளியிருக்கும் பெருங்கருணைப்பேராளானாக போற்றப்பெற்றான்.

‘என்னைக் கொண்டு தன்னைப் பாடுவித்தான்’ என்று ஆழ்வார்கள் சொல்லுதலால் இப்பாசுரங்கள் ‘அருளிச்செயல்கள்’ என்றும் திவ்விய பிரபந்தம் என்றும் சேவித்துப் போற்றப்படுகின்றது.

முதலாழ்வார்களின் மூத்ததமிழ்

‘பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நால்மறை அந்தி நடைவிளங்க
வீட்டுக்கு இடைக்கழிக்கே விடைகாட்டும் அம்மெய்விளக்கே’

என்று தேசிகப்பிரபந்தம் (89) போற்றுமாப் போலே ஒருவரை ஒருவர் காணாதிரந்த இம்மூன்று ஆழ்வார்களையும் திருக்கோவலூரிலே ஒன்று சேர்த்து அருளிச் செய்தான் கண்ணன் என்ற கருமேகக்கடவுள்.

muthal_alwars
முதலாழ்வார்கள்

இம்மூன்று பெருமக்களாகிய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மும்மூர்த்திகளின் திருவாக்காக மூன்று திருவந்தாதிகள் எழுந்துள்ளன. இயற்கை எழில் காட்சிகளில் ஈடுபட்டு அவற்றிற்கு உட்பொருளாய் நிற்கும் பொருளாகக் கண்ணனை கண்டு அனுபவித்துப் பாடியிருப்பதையும் வெண்பா என்ற தூயதன்மையான பாவின் அழகையும் இப்பெருமக்களின் அந்தாதிகளில் கண்டு இன்புறலாம்.

‘சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் -என்றும்
புனையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு’

என்று முதல் திருவந்தாதியில் பாராட்டுவது போலவே தாமும் ஆதிசேஷனாகிய அரவாழ்வானைப் போல பணி செய்து வாழவேண்டும் என்று கருதி வாழ்ந்திருக்கிறார்கள்.

கடினமான ஒரு மதத்தை பாகவதமதமாக சுலபமான நெறியாக மாற்றிய சிறப்பும் ஆழ்வார்களைச் சார்ந்ததே. திருமலை வாழ் பெருமாளை கண்ணனாய் -கார்மேகக் கிருஷ்ணனாய் கண்டு அநுபவிக்கும் முதல் மூன்று ஆழ்வார்களின் தமிழின்பம் மிகுந்த சுவை நிறைந்தது. திருமலை மேய வேங்கடவன் அங்கே நிற்பது எதற்கு? அவன் நிற்பது சமயம் பார்த்து தன்னடியர் உள்ளத்தில் புகந்து கொள்வதற்குத் தானாம். இப்படிப் பொய்கையாழ்வார் கூறுகிறார்.

‘உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்துள்- உளன் கண்டாய்
வெள்ளத்திலுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்திலுள்ளான் என்றோர்’ (முதல் திருவந்தாதி- 99)

திருமழிசையாழ்வார் காலமும் அவர் செய்கையும்

திருமழிசையாழ்வார் காலம் மிகவும் அவதானமாகச் சிந்திக்க வேண்டியது. ஏனெனில் அவர் தம் பாசுரங்களில் விஷ்ணு பரத்துவம் அழுத்தமாகப் பேசப்படுகின்றது. இக்காலம் இந்துமதத்தின் இருகண்களுள் ஒரு கண்ணான சைவம் மிகச்சிறப்புற்ற காலம். அரசர்களின் ஆதரவுடன் அது வீறு கொண்டு எழுந்த காலம். இந்த எழுச்சியில் மகிழ்ந்த சைவ சமயிகள் என்று தம்மைக் கூறிக்கொண்ட சிலர் விஷ்ணுவைக் கண்ட படி தூஷித்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது. இந்தச் சூழலில் விஷ்ணுவும் சிவபெருமானுக்கு இணையான தெய்வம்… வைஷ்ணவமும் சைவத்திற்கு இணையான தனிச்சிறப்பு வாய்ந்த மதம் என்று நிலைநாட்ட வேண்டிய தேவை திருமழிசையாழ்வாருக்கு வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கமுடிகின்றது. இது இப்படியிருக்க இக்கால கட்டத்தில் ஒரு சிலருக்கிடையிலிருந்த சிறு சிறு வேறுபாடுகள் மாறுபாடான, புறந்தள்ளத்தக்க கதைகள் சிலவற்றை உண்டு பண்ணியிருக்கலாம் என்றும் கருதமுடிகின்றது.

tirumazhisai_alwar1திருமழிசையாழ்வாரின் அருளிச் செயல்களாக 96 பாசுரங்களைக் கொண்ட நான்முகன் திருவந்தாதியும் 120 பாசுரங்களைக் கொண்ட திருச்சந்தவிருத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். “பக்திசாரர்’ என்று அழைக்கப்பெறும் இப்பெருமானின் பாசுரங்களைப் பாடுவோரும் வியாக்யானம் செய்வோரும் அவர் தம் காலத்தை மனங்கொண்டவர்களாயும் வரலாற்றுப் புரிந்துணர்வுள்ளவர்களாயுமிருத்தல் அவசியம். எது எப்படியாகிலும் நாம் இப்பொழுது இந்துதர்மம் என்கிற பொதுமை நிலையிலிருந்து வழுவாமல் அதில் உறுதியாய் நின்று சங்கர நாராயணனைச் சேவிப்பதும் புகழ்வதும் நம்மை உயர் நிலைக்கு இட்டுச்செல்லும்.

முல்லை நிலத்தெய்வமாக, ஆயர்களின் மாயனாக இருந்த கடவுளையும் வேதநெறி நின்று மிகப்பெரிய யாகங்களை ஆற்றி பூஜிக்கப்பெற்ற பரவாசுதேவனையும் ஒன்று படுத்தி உலகமெங்கும் போற்றும் வண்ணம் எளிமையான பக்திநெறியில் அவனை வழிபடும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த சிறப்பில் திருமழிசையாழ்வாருக்கும் முக்கிய பங்குண்டு. பெருமாளையே தன் தமிழுக்குக் கட்டுப்பட வைத்து பைநாகப் பாய் சுரட்டி நடக்கச் செய்த பெருமையும் மீளவும் பைநாகப் பாய் விரித்துக் கொள்ளவும் செய்த பெருமை இவ்வாழ்வாருக்குரியது.

பட்டர் பிரானும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும்

திருவில்லிபுத்தூரில் பிறந்த அந்தணாளர் விஷ்ணு சித்தர். அவரின் பிள்ளைப்பெயர் போலவே அவர் சித்தம் விஷ்ணுவில் இலயித்திருந்தது. மலர்களை இணைத்து மாலையாக்கிப் பெருமாளுக்குச் சாத்தும் பணியிலீடுபட்டிருந்த இவர் மாலோனின் விளையாட்டால் அவன் மகிமையை அரசசபையில் நிறுவி பொற்கிழி பெற்ற பெரியவர். இதனால் ‘பட்டர் பிரான்’ என்ற விருதுக்கும் சொந்தக்காரரானவர்.

periyazhvar3
பெரியாழ்வார்

பாண்டிய அரசனின் பெரும் மரியாதை ஊர்வலத்தைப் பெற்ற இவருக்கு பக்திசுலபனான பகவான் வில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் அழகாகக் காட்சி கொடுத்தான். அவன் அழகைப் பார்த்த இப்பெரியார் ‘ஆ…இவ்வழகு கண்ணூறு பட்டுவிடக்கூடாதே’ என்று கருதி அது நிலைத்திருக்க வாழ்த்தி 11 பாசுரங்களால் திருப்பல்லாண்டு பாடியிருக்கிறார்.

இது தவிர பெரியாழ்வார் திருமொழி என்கிற பிரபந்தமும் (461 பாசுரங்கள்) இப்பெருமானாரினதே. இவ்விரு பிரபந்தங்களையும் ஒன்றாகவே கருதிப் பாடி வணங்கும் வழக்கமும் இருக்கிறது.

பல்லாண்டு பாடுதலை ‘மங்களாசாசனம்’ என்று சொல்வது வைஷ்ணவசம்பிரதாயம். பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டே சேந்தனாரின் திருப்பல்லாண்டுக்கும் வழிகாட்டுதலாக அமைந்தது என்பது வெளிப்படை. மணவாளமாமுனிகள் தமது உபதேசரத்ன மாலையில் திருப்பல்லாண்டு பற்றி சிறப்பித்து

‘கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு
ஓமென்னுமது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலமாதலால்’

என்று பாடுகிறார். இக்காரணம் பற்றியே திவ்விய பிரபந்தத்தின் முன்னும் பின்னும் இது ஓதப்பட்டுவருகின்றது.

பிற்காலத்தில் பல்வேறு பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றில் எல்லாம் பத்துப்பருவங்களே முன்னிட்டுக் கொண்டு பாடப்பெற்றுள்ளன. ஆனால் அவற்றிற்கெல்லாம் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவரான பெரியாழ்வார் தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி, வருகை, சிற்றில், முத்தம், சிறுதேர், காப்பு என்பவை தவிரவும் அம்மம்உண்ணல், குழல் வாரல், பூச்சூடல் என்று இயல்பாக குட்டிக் கண்ணனை போற்றியிருக்கிறார்.

‘முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன்’ என்று கெஞ்சியும் கொஞ்சியும் விஞ்சியும் அஞ்சியும் பெரியாழ்வார் அந்தக் குட்டிக் கண்ணணைப் பாடும் போது இருக்கிற சுவை இருக்கிறதே… நீங்களும் படித்துத் தான் பார்க்க வேண்டும்…

பெரியாழ்வார் பெற்ற பெருஞ்செல்வத்திருமகள்… ஆண்டாள் என்பது அவளின் பிரபலப்பெயர். அவள் தமிழை ஆண்டாள். ஆண்டவனையே ஆண்டாள். பெரியாழ்வாரை ஆண்டாள்.

andal1
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்

முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மேலான தேவதேவனுக்கு தான் அணிந்து அழகு பார்த்த மாலையையே சமர்ப்பித்து ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்ற பெரிய பெயர் பெற்ற கோதாதேவி இவள். பெண்பாற்புலவர் பாடிய காதல் இலக்கியம் என்ற வகையிலும் ஆண்டாள் பாசுரங்கள் ஒப்பற்ற உயர்வுடையன.

30 பாசுரங்களில் உபநிஷதசாரமாக தித்திக்கும் செந்தமிழில் பாவை பாடிய இப்பெரிய பிராட்டி ‘நாச்சியார் திருமொழி’ என்ற 143 பாசுரங்களும் பாடித் துதித்திருக்கிறாள். திருவரங்கம் மேய எம்பெருமானையே காதலித்துக் கலந்த ஆண்டாள் சர்வாலங்காரங்களுடன் திருமணக்கோலத்துடன் அந்த ஸ்ரீ ரங்கநாதனுடன் இணைந்தாள் என்பதல்லவா..? வரலாற்று உண்மை…ஆண்டாள் பற்றி சுரங்கச் சொல்லமுடியாது. அவளே பெரிய பிராட்டியல்லவா..?

திருவரங்கன் திருவடிகளில் இரு தொண்டர்கள்

thondaradipodi2
தொண்டரடிப்பொடி ஆழ்வார்

விப்ர நாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள். திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.

திருமாலை என்ற இப்பெருமானின் பிரபந்தம் மிகநுண்ணிய கருத்துக்கள் மிக்கது. ‘பச்சைமாமலை போல் மேனி’ என் பாசுரம் இதில் மிகப்பிரபல்யம். அரங்கனைப் பார்த்து

‘குடதிசை முடியை வைத்துக் குணதிசைப் பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக்கடவுள் எந்தை அரவணைத்துயிலுமாக் கண்டு
உடலெனக்குருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே’

என்று நாலாயிரம் தமிழ் வழங்கும் தென்னகத்தினை நோக்கிய வண்ணம் அரங்கத்தெம்பெருமான் கிடந்த கோலத்தில் அறிதுயில் கொள்வதை பாடி மகிழுகிற இப்பெருமானாரின் சிறப்பை இவர் தம் பாசுரங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

tiruppanazhvar
திருப்பாணாழ்வார்

பாணர் குடியில் வளர்ந்த பாணர்பெருமான் என்ற திருப்பாணாழ்வாரின் சீர்மை வைஷ்ணவத்தில் ஜாதி பேதங்களில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது. அப்பெருமான் பாடிய ‘அமலன் ஆதி பிரான்’ எனத் தொடங்கும் பத்துப்பாடல்களுக்கும் கொடுக்கப்பெறும் முதன்மை அதனை நன்கு தெளிவுபடுத்தும். ஸ்ரீ ரங்கத்துப் பிரதான அர்ச்சகரான லோகசாரங்காச்சாரியர் தம் தோளில் காவி வந்த பெருமையால் ‘முனிவாஹனர்’ என்ற விருதும் பெற்றவர் இப்பெருமானார்.

‘அண்டர் கோன் அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’

என்று பாடிய வண்ணமே பெரிய பெருமாளோடு கலந்த பாண் பெருமான் வைஷ்ணவத்தின் சமத்துவ செழுமையையும் பறைசாற்றி நிற்கிறார்.

இறைவன் திருவடிகளும் ஆழ்வார் திருவடிகளும்

nammalwar1
நம்மாழ்வார்

இறைவன் திருவடிக்கமலங்கள் ‘சடகோபம்’ என்றும் ‘சடாரி’ என்றும் நம்மாழ்வார் என்ற ஆழ்வார் பெருமானின் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார் அருளிச் செயல்கள் வேதசாரமாக விளங்கி நிற்கின்றன.

மேலும் ஆழ்வார்களைக் கவிஞர்களாயும் தமிழார்வல்லவர்களாயும் கண்டாலும் தாம் பாடியதை ‘இருந்தமிழ் நூல்’ என்றே கூறுவதனூடாக சர்வவல்லவனான பகவானே தம்முள் புகந்து தம் வாக்கில் கலந்து தம்மைத் தாமே பாடிய நூல் என்றே கருதியிருக்கிறார்கள் என்றே கொள்ளமுடிகிறது. ஆக, இவற்றிலுள்ள சொற்பெருக்குகள், தமிழ் இன்பம் உவமை, உருவகங்கள், வர்ணனைகள், எதுகை, மோனை போன்ற யாவும் இரசித்து இன்புறத்தக்கனவே ஆகிலும் அவை யாவற்றிலும் மேலாக பக்திரசத்தையே ஊன்றி அனுபவிக்க வேண்டும்.

இத்தகு பெருமை வாய்ந்த ஆழ்வார்களின் தலைமகனாகக் கொள்ள்ப்படுபவர் நம்மாழ்வார். ஸ்ரீ வைஷ்ணவகுலபதி என்ற சிறப்பிற்குரிய இப்பெருமான் அருளிய இன்பத்தமிழ் மறைத் தொகுதிகள் நான்கு

  1. திருவிருத்தம்- 100 பாசுரங்களால் ஆனது.
  2. திருவாசிரியம்- 7 ஆசிரியப்பாக்களால் ஆன அந்தாதி
  3. பெரிய திருவந்தாதி- 87 வெண்பாக்களாலான அந்தாதி
  4. திருவாய்மொழி- 1102 பாசுரங்களாலானது.

ஆக, நால்வேதசாரமாக தமிழ்மறையாக இப்பெருமான் அருளிச்செய்த மொத்தப் பாசுரங்கள் 1296 ஆகும். நம்மாழ்வார் ஆழ்வார் வரிசைக்கு அப்பால் ஆச்சார்ய வரிசையிலும் வைத்துப் போற்றப்படுகிறார். பதினாறாண்டுகள் உண்ணாமலும் உறங்காமலும் பேசாமலும் இருந்த குழந்தை ஆழ்வாரின் சீடர் ஞான வயோதிபரான மதுரகவியாழ்வார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் திருத்தொண்டே புரிபவராகி அவர் பேரிலேயே ‘கண்ணி நுண் சிறுதாம்பு..’ என்கிற பத்துப் பாசுரங்களைச் செய்த பெருமை உடையவர் ஆதலினாலும் தேவர்கள் அளித்த நம்மாழ்வார் திருவுருவைப் பிரதிஷ்டை செய்த தன்மையாலும் அவருக்கு அளிக்கும் மரியாதையாக ஆழ்வார் திருவடிகள் ‘மதுரகவி’ என்று அழைத்துப் போற்றப்படுகின்றன. இப்பாதங்களின் துணைக் கொண்டே நாதமுனிகள் நாலாயிரத்தைத் தொகுத்ததும் ஸ்ரீ வைஷ்ணவ ஜகதாச்சார்யர் ஆகிய எம்பெருமானார் ஸ்ரீராமானுஜர் வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை பாரதமெங்கும் பரவச் செய்ததும் தனிச்சரித்திரங்கள்.

சேரதேசத்து ராஜாவும் கலியனும்

நான் வைதீக (சைவ)மரபில் வளர்ந்ததால் ஆழ்வார்கள் பற்றிக்கேள்விப்படுகின்ற போது நாயன்மார்களுடன் இணைத்து நோக்கிப் பார்த்திருக்கிறேன். தவறோ, சரியோ, அப்போது நான் சில அதிசயமான உண்மைகளைக் கண்டேன். குலசெகராழ்வாரை சேரமான்பெருமாளுடனும் திருமங்கையாழ்வாரை சுந்தரமூர்த்திஸ்வாமிகளுடனும் பெரியாழ்வாரை மாணிக்கவாசகருடனும் நம்மாழ்வாரை திருஞானசம்பந்தருடனும் திருநாவுக்கரசரை திருமழிசையாழ்வாருடனும் திருப்பாணாழ்வாரை நந்தனாருடனும் இன்னும்.. நாதமுனிகளை நம்பியாணடார் நம்பி அடிகளுடனும் இணைத்துப் பார்த்திருக்கிறேன். இதனூடே சைவமரபில் அவர்கள் ஆற்றிய புரட்சியும் வைஷ்ணவ மரபில் இவர்கள் ஆற்றிய புரட்சியும் ஒருங்கே நோக்கி சிறப்பை அறிய கூடியதாக இருந்தது.

kulasekara
குலசேகராழ்வார்

இது இப்படியிருக்க சேரதேச அரசவம்சம் தந்த ‘பொன்வண்ணத்தந்தாதி’ பாடிய நாயனார் போல அதே அரசவம்சம் பெரிய ஒரு வைஷ்ணவத் தமிழ்க் கொடையும் செய்தது. அது குலசேகராழ்வார். அவர் பேரிலேயே ‘கோயில் படி’ வழங்கி வருவதும் ஈண்டு சிந்திக்க வேண்டியது. பெருமாள் திருமொழி என்ற 105 பாசுரங்கள் தமிழிலும் முகந்தமாலை என்கிற அத்புத பிரபந்தத்தை சம்ஸ்க்ருத பாஷையிலும் இவர் செய்திருக்கிறார். வேங்கடவனிடம் அதிசயமான பேரன்பு பூண்ட குலசேகரப்பெருமாள்

‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே’

என்று உருகுவார்.

இவ்வாழ்வார் கண்ணபுரத்தென் கருமணியே என்று விளித்து திருக்கண்ணபுரம் பெருமாள் பேரில் பாடிய தாலாட்டும் அதி இனிமை வாய்ந்தது. அரங்கத்துப்படை, கச்சிக்குடை, வேங்கடத்து வடை,கண்ணபுரநடை என்று சிறப்புப் பெற்ற திவ்வியதேசமல்லவா? அது.

நீலன், கலியன், கலிகன்றி, பரகாலன், ஆலிநாடன், திருக்குறையலூர்க்கோன் என்றெல்லாம் பேசப்படும் திருமங்கை மன்னன். திருவாலிநாட்டின் குறநிலமன்னனாயிருந்தவர். எதிர் வந்த படை ஓடஓட விரட்டி சோழனுக்குக் கீர்த்தி தந்த சுந்தரர். இவர் காதலித்த பெண் குமுதவல்லி. காதல்ப் பெண்ணால் கெட்டவர்கள் பலருண்டு. ஆனால் பெண்ணால் பெற்றவர்களும் உளர். அவர்களில் மங்கைமன்னன் முதன்மையானவர். சுயநலவாதி –தான் நினைத்ததை செய்யும் வீரன்- இப்பெண்ணால் பரமபாகவதனானான். என்ன அதிசயம்..?

tirumangai_alwar
திருமங்கை ஆழ்வார்

‘வானில் ஏறி விண்மீனையும் சாடுவோம்…. காதற்பெண்ணின் கடைக்கண் பார்வையில்…’ பாரதி சொல்வது போல தன்னால் முடியாதென்று தெரிந்தும் தன் காதல் மனையாளின் கட்டளைக்கு உடன்பட்டு தினமும் களவாடியும் பாகவதகைங்கர்யம் செய்து வந்தார். அதிலேயே பித்தரானார். மாப்பிள்ளை வடிவு கொண்டு வந்த மஹாவிஷ்ணுவையே இடைமறித்து களவாட முயன்றார். அப்போது
பரந்தாமன் ‘கலியனோ… வலியனோ..?’ என்று வினவி திருவெட்டெழுத்தாகிய அஷ்டாட்சர நாமத்தை உபதேசம் செய்ய கலியன் கற்றவர் ஏத்தும் ஆழ்வாரானார். திருஞானசம்பந்தரை இப்பெருமான் சந்தித்து ‘உறவாடி’ பல்சமய உறவாடலை நிகழ்த்தினார் (இல்லை…சைவம் வேறு வைஷ்ணவம் வேறு அல்ல என்பதே சிறியேனின் அபிப்ராயம்) என்றும் கூறப்படுகிறது. ஆனால் பெரியபுராணத்தில் அப்படி எதையும் காணமுடியவில்லை. சைவம் மீள பெரும் உயர்வு பெற்றிருந்த சோழர் காலநூலாதலில் இப்புராணம் இந்தவிஷயத்தை சொல்லாமல் விட்டுமிருக்கலாம்.

நம்மாழ்வாருக்கு திருவரங்கத்தில் மார்கழியில் விழா எடுத்த மங்கiயாழ்வார் நம்மாழ்வார் பாடிய தமிழ் நால்வேதங்கள் போல சிpட்சை,வியாகரணம்,நிருத்தம், கல்பம். ஜொதிடம், சந்தோவிஷிதி என்ற வேதத்தின் ஆறங்கங்கள் போல ஆறு பிரபந்தத்தொகுதிகளை அருளிச்செய்திருக்கிறார்.

பெரிய திருமொழி- 1084 பாசுரங்கள்
திருக்குறுந்தாண்டகம்- 20பாசுரங்கள்
திருநெடுந்தாண்டகம்- 30பாசுரங்கள்
திருவெழுகூற்றிருக்கை- 01
சிறிய திருமடல்- 01
பெரிய திருமடல்- 01

ஆழ்வார் பாசுரங்களின் எழுச்சி

ஆழ்வார் பாசுரங்களை இசையும் ஆடலுமாக ‘அரையர் சேவை’ என்று அபிநயத்துடன் காண்பிக்கிற வழக்கம் இருக்கிறது. இன்றைக்கும் திருவில்லிபுத்தூர் மற்றும் திருவரங்கம் பெரியகோயிலில் இவ்வழக்கு சிறப்போடு இருந்து வருகிறது. இக்கலை அழியாமல் பாதுகாக்கப்படவேண்டும். சிறப்பிற்குரிய தமிழகக்கலைகளுள் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பெற வேண்டும். கோஷ்டிசேவையாகவும் பாசுரங்கள் பாடப்பெற்று வருகின்றன. ஸ்ரீமத் ராமானுஜர் காலம் தொட்டு மணிப்பிரவாள நடையில் பாசுரங்களுக்கு வியாக்கியானம் செய்யும் வழக்கமும் ஏற்பட்டது.

முழுமையாக சம்ஸ்கிருத பாஷைக்கே முதன்மையிருந்த விஜய நகர நாயக்கர்காலத்தில் இப்படி தமிழுக்கும் சிறப்புக் கொடுத்து வைஷ்ணவ உரையாசிரியர்கள் இரண்டும் கலந்து எழுதியிருக்கிறார்கள் .கால ஆராய்ச்சியில்லாத இன்றைய ஆய்வாளர்கள் ‘வைஷ்ணவர்கள் தமிழுடன் சம்ஸ்கிருதத்தை கலந்து விட்டார்கள்’ என்று தவறாகக் கூச்சலிடுகிறார்கள்.

வேதாந்ததேசிகர் பெருமான் த்ரமிடோபநிஷத்தாத்பர்ய ரத்னாவளி, த்ரமிடோபநிஷத் சங்கதி என்கிற நூல்களை தமிழ் வேதமான ஆழ்வார் பாசுரங்களை போற்றி சம்ஸ்கிருத மொழியில் செய்திருக்கிறார் .கோதாஸ்துதியும் பாடியிருக்கிறார். இவற்றால் தமிழ் அறியா அயலவர்கள் ஒரு சிலரேனும் இப்பாசுரங்களைக் கற்பதற்காகவே தமிழ்கற்றிருப்பார்கள் என்று கருதமுடிகிறது. இது பற்றி எவரேனும் ஆய்வு செய்தார்களா? ஏன்று தெரியவில்லை.

தெலுங்குக் கீர்த்தனையை பாடுகிறார்களே… என்று கூச்சலிடும் தமிழ் (பற்றாளர்கள்…?;) தயவு கூர்ந்து எந்த ஒரு முரணுமின்றி ஆழ்வார் பாசுரங்கள் தினமும் திருக்கோயில் திருக்கதவம் திறந்த உடனேயே ஆந்திராவிலுள்ள திருப்பதி போன்ற வைஷ்ணவ ஸ்தலங்களில் அநுசந்திக்கப்படுவதை அவதானிக்க
வேண்டும்.

vedantadesika
வேதாந்த தேசிகன்

வேதாந்த தேசிகர் ‘செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி தேரியாத மறைநிலங்கள் தெரியப்பெற்றோம்’ என்று பாடுவதும் இங்கே கட்டாயம் சிந்திக்க வேண்டியது. குமரகுருபரர் ‘பைந்தமிழ் பின் சென்ற பச்சைப்பசுங்கொண்டல்’ என்று கூறுவதும் இதனையே உணர்த்தி நிற்கிறது. (மழிசையாழ்வார் கதையை உணர்த்துகிறது என்பர் சிலர்)

ஆழ்வார்கள் ‘சரணாகதிக்கு’ முதன்மை தந்திருக்கிறார்கள்.
‘இற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்’
(திருப்பாவை- 29)

‘உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன்’ ( பெரியாழ்வார் திருமொழி)

‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுழல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே’
(திருவாய்மொழி)

இப்படியெல்லாம் சொல்லுகிற ஆழ்வார்கள் ஜாதி, குலம், கோத்திரம் பார்க்கவில்லை. அவர்கள் ‘இழி குலத்தவர்களேனும் எம் அடியார்களாகில் தொழுமின் நீர்’ (திருமாலை 42)என்று இறைவனே கட்டளை செய்திருப்பதாகவே பாடியிருக்கிறார்கள்.

இத்தகு ஆழ்வார்களுக்கு விஷ்ணுவாலயங்கள் தோறும் சிற்றாலயங்கள் அமைப்பதும் அவர்களின் திருநாட்களை கொண்டாடுவதும் அவசியமாகும். இவ்வாழ்வார்களின் திருப்பெயராலேயே சக்கரத்தாழ்வார், கருடாழ்வாh, தும்பிக்கையாழ்வார் என்று பெருமாளின் சேனாநாயகர்கள் யாவருக்கும் பெயர் ஏற்பட்டிருக்கிறது என்றும் கருத முடிகிறதல்லவா..?

தவிர ஈழத்தின் வடபால் உள்ள மூல (சம்ஸ்கிருத)ஸ்காந்தத்திலேயே புகழப்பெறும் பழைமைமிக்க வல்லிபுரம் என்கிற விஷ்ணுவாலயத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கே ‘வல்லிபுரஆழ்வார்’ என்றே பழம் காலம் தொட்டுப் பெயர் வழங்கி வருகிறது. இப்படி இறைவனுக்கே பெயர் ஏற்பட்டிருப்பதும் சிந்திக்க வேண்டியதாயிருக்கிறது. இதுவும் பன்னிரு ஆழ்வார்களின் திருத்தொண்டின் பயனாய் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பெயராகவே இருக்க வேண்டும். வைதீக சைவஅந்தணர்களாலேயே வழிவழியாகப் பூஜிக்கப்பெறும் இத்தலத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கும் தனியே சந்நிதிகள் சிறப்பாக அமைந்திருப்பதும் இதனை வலியுறுத்தி நிற்கிறது. தமிழில் இராமாயணம் செய்த கம்பரை ‘கம்பநாடாழ்வார்’ என்றும் பாரதம் செய்த வில்லிபுத்தூரரை ‘வில்லிபுத்தூராழ்வார்’ என்றும் இரகுவம்சம் செய்த அரசகேசரியை ‘அரசகேசரியாழ்வார்’ என்றும் போற்றிடுவதும் இங்கு சிந்திக்கத்தக்கதாகவே உள்ளது.

சேக்கிழார் செய்த பெரியபுராணம் நாயன்மார்களின் வரலாற்றைத் தெளிவாகத் தருவது போல ஆழ்வார்கள் பேரில் சிறப்பாக வரலாறு பேசும் காப்பியங்கள் ஏழாமையும் இவர்களின் வரலாறு தொடர்பில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்குக் காரணமாயிருக்கின்றன. ஆக, இதனை நிவர்த்தி செய்து இது பற்றிய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமானதாகும். அவ்வாறு அபூர்வமான நூல்கள் ஏதும் இருப்பின் அவற்றபை; பிரபல்யப்படுத்த வேண்டியதும் நம் கடமையாகும்.

இப்படியாக ஆழ்வார் பெருமக்கள் செய்த பெருஞ்சேவையை நினைவில் கொண்டு வாழ்த்துவோம். பிறந்திருக்கிற கன்னித்திங்களில் (புரட்டாதி) வேங்கடம் மேய பேரருளாளன் பெருங்கருணையுடன் ஆழ்வார்கள் பற்றிய சிந்தனையை மனங்கொள்ளுவோம்.

‘பரந்த சிந்தை ஒன்றி நின்று நின் பாதபங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’
(திருமங்கையாழ்வார்)