“பராசரா, உன்னிலிருப்பது ஞானம். அது மரங்களை மடித்து உண்டு காடதிர காலெடுத்து நடந்துசெல்லும் மதகரி.. கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவை. அது விண்ணில் நீந்தும், மலர்களில் தேனுண்ணும்.. மதகரியைப் படைத்த நியதியே பறவையையும் படைத்தது என்று உணர்க” என்றார். தன் வல்லமையையும் எல்லையையும் உணர்ந்த பராசரர் அதன்பின் மலைச்சிகர நுனியில் நின்று வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார்..” (வெண்முரசு – 8)
De dondequiera que se trate, la medicación oral acabará con las creencias de los niños asociadas con el síndrome gripal. This product is http://johndanatailoring.co.uk/wordpress/ not approved for use in the treatment of certain medical conditions. It can happen anytime as long as you have a clean scalp and enough time to apply it and ensure that the area isn't infected.
Is this medicine available by mouth or through a vein? This allows the Kunshan doxt sl online medication to be tracked online and easily tracked after the fact (you may view it with. Fauci is a strong believer of the theory that antibiotics kill, without fail, the germs responsible for strep throat and other common cold-like illnesses.
Please use the shipping calculator below to see estimated delivery time in different countries. T doxy 100mg tobradex eye drops price price but that doesn't seem to be what this is about. It is also referred to as the taukei namjaa in hindi.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து மகாபாரதத்தை வெண்முரசு என்ற நவீன நாவல் வடிவில் ஜெயமோகன் எழுதிக் கொண்டிருக்கிறார். பல நாவல்களின் தொகுப்பாக, தினந்தோறும் ஒரு அத்தியாயமாக தொடர்ந்து பத்து வருடங்களுக்கு இந்த நாவலை எழுதப் போவதாக அறிவித்து, “முதற்கனல்” என்ற முதல் நாவலில் இன்றுடன் 38 அத்தியாயங்கள் வெளிவந்திருக்கின்றன.
“விழுந்த ஞாயிறு எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழுநூறே”
என்றவாறு கம்பர் ராமகாதையை பன்னிரண்டாயிரம் பாடல்களில் எழுதி முடித்தது தான் நினைவு வருகிறது. ஒவ்வொரு நாளும் வெண்முரசின் பகுதிகளை வாசித்து, லயித்துப் பின் தொடரும் அனுபவம் என்பது சாதாரணமானதல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் கம்பராமாயணத்திற்கு ஈடான மற்றொரு பெருங்காவியம் எழுந்து கொண்டிருக்கிறது. அதை விட பல மடங்கு அளவிலும் வீச்சிலும் பெரியதாக, உக்கிரமானதாக. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக பெரும்பாய்ச்சலுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகனின் இலக்கியப் பயணத்தின் நீரோட்டமும் ஆழமும் விசையும் இந்தப் படைப்பில் நிலைகொண்டு அதை அடுத்த கட்டத்திற்கு உந்திச் செல்வதை இதுவரை வந்துள்ள பகுதிகளை வாசிப்பதில் உணர முடிகிறது.
எழுதுவதற்கு எவ்வளவோ புதிய விஷயங்கள் இருக்க, ஏன் எல்லாருக்கும் தெரிந்த “பழம்பெரும்” கதையான மகாபாரதத்தை மீண்டும் வேறு வடிவில் எழுத வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால், மகாபாரதமும் ராமாயணமும் தம்மளவில் இந்திய மக்கள் எல்லாருக்கும் புரியக் கூடிய கலாசார மொழிகளாகவே உள்ளன. அதிலும், மகாபாரதம் காலந்தோறும் இந்தியாவின் பேரறிஞர்களையும் பெரும் கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் வசீகரித்தும் பிரமிப்பூட்டியும் வந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டிலேயே, தாகூர், பாரதி முதல் எஸ்.எல்.பைரப்பா, பி.கே.பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை எல்லா இந்திய மொழிகளிலும் மாபெரும் இலக்கிய கர்த்தாக்கள் மகாபாரதத்தை தங்கள் படைப்புகளின் கருப்பொருளாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே ஜெயமோகனின் இந்த முன்னெடுப்பைக் கருத வேண்டும். 1984 முதலே மகாபாரத்ததை எழுதுவது ஒரு பெரிய கனவாக தம்முள் இருந்ததாக ஒரு சமீபத்திய நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.. அவர் முன்பு எழுதியுள்ள பத்துக்கு மேற்பட்ட அற்புதமான மகாபாரத சிறுகதைகள் பாரத காவியத்தில் அவருக்கு உள்ள ஈடுபாட்டையும் தோய்தலையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த நாவல் குறித்த பல ஆரம்பகட்ட கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் ஜெயமோகனே தெளிவாக விடையளித்தும் இருக்கிறார். புதிய வாசகர்களும், அல்லது ஒரு குறிப்பிட்ட வகை புனைவுகளை மட்டுமே வாசித்துப் பழகிய சம்பிரதாயமான வாசகர்களும் காவியத் தன்மை கொண்ட ஒரு நவீன இலக்கியப் பிரதியை முதல் முறையாக அணுகி வாசிக்கும் போது எழக் கூடிய கேள்விகள் அவை. “விஷ்ணுபுரம்” நாவல் அது வெளியான காலகட்டத்தில் வாசகர்களிடம் உருவாக்கியது போன்ற புதிய சவால்களை, வாசிப்புப் பயிற்சிக்கான தேவைகளை இன்னும் பெரிய அளவிலான வாசகர்களிடையே வெண்முரசு உருவாக்கி வருகிறது என்று தெரிகிறது. அத்துடன், இதன் கதைப் பரப்பு மகாபாரதம் என்பதால், இப்படியெல்லாம் மறு ஆக்கங்கள் செய்யலாமா என்பது குறித்த சுவாரஸ்யமான விவாதங்களும் எழுந்துள்ளன. இந்த நாவலை மகாபாரத மறு ஆக்கங்களின் ஒட்டுமொத்த பின்னணியில் வைத்து ஒப்பிட்டு புரிந்து கொள்ள அந்த விவாதங்கள் உதவும்.
இது வரை வந்துள்ள பகுதிகளின் அடிப்படையில், மகாபாரதத்தின் மையமான குரு வம்சக் கதைப் பகுதிகளும், தொடர்புடைய மற்ற தொன்மங்களும், மிகவும் கலாபூர்வமாகவும், நுட்பமாகவும் வெண்முரசில் மறு ஆக்கம் செய்யப் பட்டுள்ளன என்றே கருதுகிறேன். மற்ற மறு ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் இது இன்னும் தெளிவாகப் புரியும். எஸ்.எல்.பைரப்பாவின் “பருவம்” ஒரு மிகச் சிறந்த படைப்பு தான்; மகாபாரதத்தின் முழுமையை, குறிப்பாக, இறுதிக் கட்டத்தில் மானுட வாழ்வின் வெறுமை குறித்த தரிசனத்தை அபாரமாக எடுத்துக் காட்டிய படைப்பு அது. ஆனால், மகாபாரதத்தை யதார்த்தமான வரலாற்றுக் கதையாக ஆக்கும் முயற்சியில், அதன் காவியத் தருணங்களை, மாயத்தை, மீமெய்மை (hyper reality) கூறுகளை, அறப் பார்வைகளை முற்றிலுமாக பருவம் ஒதுக்கி விட்டது. பி.கே.பாலகிருஷ்ணனின் “இனி நான் உறங்கட்டே” மகாபாரதத்தின் கவித்துவம் நீர்த்துப் போகாமல் உணர்ச்சிகரமான மொழியில் எழுதப் பட்ட படைப்பு. ஆனால் குந்தி முதலான பெண்களின் ஆற்றாமைகளையும், சோகங்களையுமே மையமாகப் பிரதிநிதித்துவப் படுத்தியது. இதே ரீதியில், கர்ணன், பீமன், திரௌபதி என்று ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் பார்வையிலேயே மகாபாரதம் சொல்லப் படுமாறு சமைக்கப் பட்ட நல்ல மறு ஆக்கங்கள் உண்டு; ஆனால் அவை ஒற்றைப் படையான குரல்களுடன், ஒரு குறிப்பிட்ட தரப்பின் நியாயங்களையும் தார்மீகங்களையும் வலியுறுத்துவதாகவே உள்ளன. பாரத காவியத்தின் பிரம்மாண்டத்தை அதன் முழுமையான நோக்கில் மீள் உரைக்க முற்படுவது என்பது வியாசன் சென்றடைந்திருக்கும் அதே உயரங்களுக்குத் தாவும் முயற்சி தான். வானோக்கித் துதிக்கை நீட்டிப் பறக்க எத்தனிக்கும் யானையின் முயற்சி. வெண்முரசு நாவலில் நெடுக அதைக் காண்கிறோம்.
*******
“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!” வியாசர் திடுக்கிட்டு “நானா?” என்றார். “என்ன சொல்கிறாய்?” சுகன் சிரித்தான். “ஆம், உன் சொல் காலத்தின் சொல்…அது நிகழும்” என்றார் வியாசர். பின் நடுங்கும் கைகளைக் கூப்பியபடி “ஆனால் சுகதேவா, இது வரமா சாபமா?” என்றார்… சுகன் அதைக் கேட்கவில்லை. கிளிகள் வேதமந்திரங்களுடன் குகைக்குத்திரும்ப ஆரம்பித்தன. அவற்றின் கால்களில் இருந்து தானியமணிகள் அவன் மேல் பொழிந்தன. அவன் இன்னொரு கிளிபோல அவற்றைப் பொறுக்கி உண்ணத் தொடங்கியிருந்தான். (வெண்முரசு – 34)
முதற்கனல் நாவலின் இந்த முதல் 38 அத்தியாயங்களில் கூர்ந்து வாசித்து ரசித்து லயிக்க வேண்டிய பல அம்சங்களும் வந்து சென்று விட்டன. ஒரு வசதிக்காக இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்:
அ) காவியத் தருணங்கள்
ஜெனமேஜயனின் சர்ப்ப யாகம், ஒரு வேள்வியாக மட்டுமின்றி மகத்தான பிரபஞ்ச சக்திகளின் மோதலாக வருவது.
குருஷேத்திரத்தின் பெரும்போரையும் அழிவையும் கண்டு ஆறாத தவிப்புடன் பாரத வர்ஷமெங்கும் அலையும் வியாசரின் மனத் தடாகத்திலிருந்து சொல் சொல்லாக காவியம் பிறப்பது. பராசரரின் ஞானமும், யமுனையின் மீனவப் பெண்ணின் பித்தும் இணைந்த அவரது ஆளுமை. ஒரு தாயின் மகனாக, புதல்வனின் தந்தையாக அவரது தவிப்புக்கள்.
வாழ்க்கை முழுவதும் தேடலும் நிராசையுமாகவே அலையும் சந்தனு. தேவாபி வாஹ்லிகன் உடனான அவனது சகோதர உறவுகள். கங்கர் குலப் பெண்ணுடன் மின்னல் போல வந்து செல்லும் காதல். சந்தனுவின் மறைவு.
யமுனையின் ஆழங்கள் போன்ற மனமும், கருணையும் கடுமையும் கலந்த தாய்மையும் வடிவெடுத்து நிற்கும் சத்யவதி.
பீஷ்மரின் மன உறுதியும் அறமீறல் சார்ந்த தவிப்புகளும். அம்பையும் பீஷ்மரும் சந்தித்து விலகும் தருணம்.
யௌவனத்தின் பேரழகுகள் ததும்பி நிற்கும் கன்னி அம்பை. தன் சுய இருப்புக்காக ஏங்கும் பெண் அம்பை. பிடாரியாக, கொற்றவையாக, அன்னையாக, கனலியாக ஆகும் அம்பை. காலங்கள் தோறும் படகோட்டி அவளைக் கரைசேர்க்கும் நிருதன்.
நோயாளி அரசனாகப் பிறந்து மடியும் மகாபாரத விசித்திரவீரியன் இந்த நாவலில் நாம் என்றும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக ஆகும் அற்புதம். நம் பரிவுக்குரியவளாகும் அம்பிகை.
ஆ) குறியீடுகள், தொன்மங்கள், படிமங்கள்
புராண தொன்மங்கள் நாவல் முழுவதும் பல இடங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. சம்பவங்களின் முன்னறிவிப்புகளாக, எதிரொலிகளாக, குறிப்புணர்த்தல்களாக இவை சொல்லப் படுகின்றன. சதி தாட்சாயணி, பாற்கடல் கடைதல், சிபி சக்ரவர்த்தி, மகிஷாசுர வதம், ரேணுகாவின் மகன் பரசுராமன், சத்யவான் சாவித்ரி என்று நாம் நன்கறிந்த தொன்மங்கள் கவித்துவமான மொழியில் படிமங்களாகவும் தரிசனங்களாகவும் ஆக்கம் பெறுகின்றன.
சிலவற்றில், கதையில் பொதிந்துள்ள தத்துவக் குறியீடுகள் வெளிப்படையாக சொல்லப் படுகின்றன. மகிஷவதம் ஒரு உதாரணம். முற்றிலும் தமோகுணமே வடிவெடுத்த இருள் வடிவான மகிஷன், சத்துவத்தின் முழுமையாக சகல தேவதைகளின் ஒளிகளும் பெண்வடிவாகத் திரண்டு வரும் தேவியின் கையால் மடிந்து பின்னர் அவளது காற்சிலம்பாக ஆகி ஒடுங்கி விடுகிறான். இந்து தத்துவ ஞானத்தின் படி, நன்மை – தீமை என்பவை குணங்களின் சேர்க்கைகளே அன்றி ஆபிரகாமிய மதங்களில் உள்ள கடவுள் – சாத்தான் மோதல் போன்ற நிரந்தரப் பகைமை அல்ல என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. கூர்ந்து வாசிப்பவர்களுக்கு இந்த தத்துவ வெளிச்சங்கள் புரிய வரும். அனேகமாக, இந்த நாவல் முடியும் தறுவாயில், பதினெட்டு புராணங்களிலும் உள்ள எல்லா தொன்மங்களும் இதற்குள் வந்து விடும்; இந்த நாவலே ஒரு மாபெரும் புராணக் களஞ்சியம் போல ஆகி விடும் என்று தோன்றுகிறது.
விலங்குகள் பாத்திரங்களாக ஆகும் இடங்கள் அருமையானவை. காசி இளவரசிகளின் சுயம்வரத்திற்கு முன் பீஷ்மர் வியாசரை சந்திக்க செல்கிறார். அப்போது எதேச்சையாக தன் குட்டிகளுக்கு இரைதேடி வந்து ஆசிரமத்துக் கன்றை அடித்துக் கொல்லும் சித்ரகர்ணி என்ற கிழ சிங்கம் ஆட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு காரணமாகிறது. பீஷ்மனின் அகத்தின் பிரதிபலிப்பே தான் அந்த சிங்கம். சத்யவதியால் நியோகத்திற்கு அழைக்கப் பட்டிருக்கும் வியாசர் மனக்குழப்பத்தில் இருக்கையில் கானகத்தின் நடுவில் குஹ்யஜாதை என்ற கழுதைப் புலி தன் குட்டிகளுடன் உயிர்போய்க் கொண்டிருக்கும் ஒரு கிழச்சிங்கத்தை (சித்ரகர்ணி!) அடித்துத் தின்று உண்பதைப் பார்க்கிறார். தெளிவடைகிறார். நீரன்னைகளை (‘ஆப்ரி’ தேவதைகள்) போற்றும் ரிக்வேத சூக்தத்தை அவர் பாட, அருகிருந்து கேட்டு ஆமோதிக்கின்றன கழுதைப் புலிக் குட்டிகள்!
நாவலின் தொடக்கத்தில் சில அத்தியாயங்கள், ஜெனமேயனின் சர்ப்ப யாகம், ஆஸ்திகன் வருகை, குருவம்ச அறிமுகம் ஆகிய பகுதிகளின் சித்தரிப்புகள் முழுவதும் நாகர்களையும் நாகங்களையுமே சுற்றி வந்தன. கடைசிவரை இது நாகபாரதமாகத் தான் இருக்கப் போகிறது என்றார்கள் சில நண்பர்கள். ஆனால், அடுத்தடுத்த பகுதிகளில் நாவல் புதுப்புது வடிவங்கள் கொண்டது; ஆனால் நாகங்கள் ஒரேயடியாக மறைந்தும் விடவில்லை. இதுவரை வந்த அனைத்து அத்தியாயங்களையும் ஒருசேரப் பார்த்தால் சலிப்பூட்டும் வகையில் இல்லாமல், விதவிதமான புதுப்புது படிமங்களும், குறியீடுகளும் வந்து கொண்டே இருக்கின்றன என்பது புலப்படும்.
இ) வடிவம், மொழி:
பின்நவீனத்துவ நாவல்களில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கால மயக்கங்களும் வளைகோட்டுத் தன்மைகளும் (non linear) இந்த நாவலில் சரியாகவே தவிர்க்கப் பட்டுள்ளன. இந்த சிக்கலான கதை அவற்றால் மேலும் சிடுக்காகி இருக்கக் கூடும். நாவலில் கதை சம்பிரதாயமாக வியாச பாரதத்தில் உள்ளது போல சர்ப்பயாகத்தில் ஆரம்பித்து நேர்கோட்டில் முன் செல்கிறது; ஆனால், அதற்குள், சம்பவங்களும், முற்பிறவிக் கதைகளும், பழைய புராண தொன்மங்களும் சூதர்களின் பாடல்களாக, கதை மாந்தர்களின் நினைவில் எழுபவைகளாக விவரிக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சூதர்களின் கதைகள் மூலமாக கதாசிரியன் மாற்றுக் குரல்களையும் meta fiction கூறுகளையும் வெளிப்படுத்த முடிகிறது. சூதர்கள் இடைவெட்டுகள் போல அல்லாமல், கதாபாத்திரங்களுடனும், கதையின் உணர்ச்சிகளுடனும் பின்னிப் பிணைந்து வருகிறார்கள்.
அடிப்படையில் வெண்முரசு ஒரு நவீன நாவல் தான். ஆனால் அதன் வடிவத்திலும் கூறுமுறையிலும், இந்திய காவிய மரபின் அழகியலும், பின் நவீனத்துவ, மாய யதார்த்த கூறுகளும் கலந்துள்ளன. அதன் மொழி கவித்துவமானது, ஆனால் ஒப்பீட்டில் விஷ்ணுபுரத்தை விட எளிமையானது. சம்பவங்கள் உரையாடல்கள் வர்ணனைகள் எதுவுமே நீண்டு செல்லாமல் கச்சிதமாக ஆனால் செறிவாக அமைந்துள்ள மொழி இது. பொதுவாக நவீன நாவல்களில் படிப்படியாக வளர்ந்து சென்று சில புள்ளிகளில் மட்டுமே தீவிரம் கொள்ளும் மொழிநடை இருக்கும். ஆனால், இந்த நாவலின் தன்மைக்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்து கூடி வந்துள்ள மொழி நடையே இயைபுள்ளதாக இருக்கிறது.
ஈ) படங்கள்:
இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் அன்றைய பகுதியுடன் வரும் படங்கள் நாவலுடன் இணைபிரியாதவை போல ஆகிவிட்டன என்று சொல்ல வேண்டும். சித்திரக்காரர் ஷண்முகவேல் இவற்றை கணினி வரைகலை மூலம் வரைகிறார் என அறிகிறேன். அதன் சாத்தியங்களை முழுதுவாகப் பயன்படுத்தி தனது கற்பனை மூலம் எழுத்தில் உள்ள காட்சியை கலாபூர்வமாக விரித்தெடுக்க அவரால் முடிகிறது. பின்னணியில் பெரும்பாலும் அடர் இருள் வண்ணங்கள். அமர்ச்சையான ஆனால் மனதில் நிற்கக் கூடிய இயற்கைக் காட்சிகள். பாத்திரங்கள் முகம் தெரியாமல் உருவெளித் தோற்றம் மற்றுமே துலங்கும் வண்ணம் நிழலும் ஒளியும் கலந்த கலவையாக காட்சிகளை வரைகிறார். வாசிப்பு அனுபவத்தை மேலும் அழுத்தமாக்குகின்றன இந்தப் படங்கள்.

*******
“முழுமையிலிருந்து முழுமைநோக்கி வழிந்த காவியத்தை எழுதி நிறுத்திய தாழை மடலை மதகளிற்று முகத்தானின் மண்சிலைக்கு முன்னால் வைத்துவிட்டு மெலிந்த கைகளைக் கூப்பியபடி கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்தார் வியாசர். விடிந்துவிட்டதைச் சொல்ல அவரது மாணவர் பைலர் குடிலுக்குள் வந்தபோது குறுகிய உடலுடன் அவர் ஒடுங்கி அமர்ந்து மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். பைலர் மெல்ல வந்து தாழை மடலைக் கையிலெடுத்து வாசித்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது..” (வெண்முரசு – 5)
மூன்று விதங்களில் இந்த நாவலை வாசிக்கலாம்.
முதலாவது, முற்றிலும் அகவயமான, அந்தரங்கமான வாசிப்பு. நாவலின் ஒவ்வொரு பகுதியையும் நேரடியாகவே நமது வாழ்க்கையுடன், எண்ணங்களுடன் இணைத்து வாசிப்பது. நம்பிச் சென்ற காதலன் கைவிட்டபின் தாய்வீடு வரும் அம்பை அங்கும் புறக்கணிப்பை சந்திப்பது, அண்ணன் சித்ராங்கதனின் பிம்பத்தை குளத்தில் கண்டு நிலையழியும் விசித்திர வீரியன், அம்பிகை அம்பாலிகைக்கு இடையே உள்ள அக்கா தங்கை உறவு, மனக் குழப்பத்தில் ஆழ்ந்த மாபெரும் ஞானியான வியாசன் புதல்வனான சுகனின் அணைப்பில் பெறும் இதம் – இப்படிப் பல இடங்களை சொல்லாம். (வியாசர் சுகர் சந்திப்பு குறித்த பகுதிக்கான படத்தைப் பார்த்தபோது எனக்கு அஜிதனின் தோளில் கைபோட்டு ஜெயமோகன் நடந்து செல்லும் காட்சி நினைவு வந்தது!)
இரண்டாவது, ரசனை பூர்வமான வாசிப்பு. நாவலின் அழுத்தமான இடங்களை, சொற்களை முழுமையாக உள்வாங்கி கற்பனை மூலம் விரித்தெடுத்து அவற்றில் லயிப்பது. சொல்லப் படாத இடங்களை உய்த்துணர்வது. குறியீடுகளை உள்வாங்குவது. ஏற்கனவே இலக்கியப் படைப்புகளை வாசித்து, விவாதித்து ரசனையை வளர்த்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அதிகமாக இத்தகைய வாசிப்பில் ஈடுபடுவார்கள்.
மூன்றாவது, அறிவுபூர்வமான வாசிப்பு. புறவயமாக நாவலை ஒரு இலக்கியப் பிரதியாக அணுகுவது. இந்த நாவலில் இதற்கான பல்வேறு சாத்தியங்கள் உள்ளன. மூலக் கதைகள் மறு ஆக்கம் செய்யப்படுவதில் ஏதேனும் பொதுவான சரடு உள்ளதா, வியாச பாரதத்தின் படி அல்லாமல் தேவி பாகவதத்தில் உள்ளபடி சொல்லப் பட்டவைகள் எவை போன்ற விஷயங்களை ஆராயலாம். பாரதவர்ஷம், திருவிடம், உத்தர தட்சிண பாஞ்சாலம் என்றெல்லாம் இந்த நாவல் காட்டும் நிலவியல் குறித்து பேசலாம். குலங்கள், குடிகள், நான்கு வர்ணங்கள், சாதிகள், அரசுகள் இந்த நாவலில் சித்தரிக்கப் படும் விதம் மகாபாரத காலத்துடன் பொருந்துகிறதா என்று சமூக வரலாற்றுக் கோணத்தில் விவாதிக்கலாம். முக்குணங்கள், சாங்கிய தரிசனம், ஆத்ம ஞானம் போன்ற தத்துவ கருத்தாக்கங்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்று அலசலாம். இலக்கியக் கோட்பாடுகளின் வழியே நாவலைக் கட்டுடைக்கலாம்.
ஒரு நல்ல, சமநிலை கொண்ட வாசிப்பு என்பது இந்த மூன்று அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, அதே சமயம் அவற்றின் எல்லைகளையும் உணர்ந்ததாக இருக்கும்.
ஜெயமோகனின் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்கள், இந்த நாவலில் முந்தைய படைப்புகளின் எதிரொலிகளை, பிம்பங்களைக் காணக் கூடும். அது மிக இயல்பானதே. அதுவும், இந்த மகாபாரத நாவலின் களமும் வீச்சும் மிகப் பிரம்மாண்டமானது. கலைக்களஞ்சியத் தன்மை (Encyclopedic) கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மாபெரும் உலக இலக்கியகர்த்தாக்கள் தங்கள் அனைத்து படைப்புகளையும் உள்ளடக்கும் இறுதிப் பெரும்படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். தீவிர படைப்பூக்கம் கொண்ட ஒரு கலைஞனின் அகம் என்பது தொடர்ந்து பிரவாகித்துக் கொண்டிருக்கும் நீரோட்டம் போல. அந்த பிரவாகத்தின் இயல்புகள் அதன் ஒவ்வொரு அலை மடிப்பிலும் தெரியவராவிட்டால் தான் ஆச்சரியம்!
இந்த நாவலைத் தொடர்ந்து வாசித்து வருவது திகட்டுகிறது; ஒவ்வொரு பகுதியும் உக்கிரமாக, உச்சங்களுடன் கூடியதாக இருக்கிறது என்று நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள். பெரும் காவியங்களை வாசிக்கையில் இயல்பாக நேர்வது தான். கம்பராமாயணத்தையும், காளிதாசனையும் கற்றவர்கள் இதனை உணர முடியும். When you encounter something of Epic Proportions, it exhausts you… and this is a real Epic! காப்பியச் சோர்வு என்று இதைத் தான் கூறுகிறார்கள் போலும்!
தொடர்ந்து வாசித்து வருவது தான் ஒரே வழி. குறிப்பாக, இந்த நாவல் விஷயத்தில், இதைத் தினந்தோறும் வாசிக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக பிறகு அதே கவனத்துடன் வாசிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. தொடர்ந்து நாவலின் ஒவ்வொரு பகுதியைக் குறித்தும் உரையாடுவதும், விவாதிப்பதும் காப்பியச் சோர்வை நீக்க ஓரளவு உதவும். சில வாரங்கள் முன்பு, வெண்முரசு நாவல் பற்றி உரையாடுவதற்காக மூணாறில் கூடிய விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்கள் கூட்டத்திலும் இந்த விஷயம் அங்கு வந்திருந்தவர்களுக்குப் புலப்பட்டது.
இந்த மகாபாரத ஆக்கம் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு மகத்தான பெருங்கனவு. பெரும்பயணம். பயணிகள் பாக்கியவான்கள்.
விஷ்ணுபுரம் குறித்து முன்பு எழுதிய கட்டுரையின் இறுதி வரிகளையே வெண்முரசு குறித்தும் கூற விழைகிறேன் –
புராணக் கடலை அடக்கிய குறுமுனிக் கமண்டலம் போன்ற மனம் கொண்ட பாணர்கள் காலந்தோறும் அதைப் பாடக் கூடும். கல்லில் உறைந்து குளிர்ந்த கால ரூபமான காவிய மண்டபங்களில் வைசம்பாயன ரிஷியும், சூதரும் வெண்பறவைகளாக சிறகடித்து அதை ஆசிர்வதிக்கக் கூடும். மகா வியாசனான கிருஷ்ண துவையான மகரிஷி சுடர்விளக்கில் வந்தொளிர்ந்து அதை அங்கீகரிக்கக் கூடும்.
ஓம். அவ்வாறே ஆகுக.