பாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்

சுவாமிஜியைப் போற்றிய பாதிரியார்

ஆக்கம்: ரீவ்ஸ் கால்கின்ஸ்

(பிப்ரவரி 2009 ராமகிருஷ்ண விஜயத்தில் வெளிவந்த கட்டுரை.)

சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த என் முதல் அனுபவம் மகிழ்ச்சியான ஒன்றல்ல. அவர் இந்தியாவின் பிரதிநிதியாக சிகாகோவிற்கு உலக சர்வ சமய மாநாட்டிற்கு வந்திருந்தார்.

swami_vivekananda_chicago_addressஅப்போது கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு பாதிரியாராகச் சேர்ந்திருந்த நான், தொன்மை வாய்ந்த கிறுத்துவ வரலாற்றைப் போற்றாமல் அவர் “கிழக்கில் உதித்த நட்சத்திரமாக”, வேதாந்தம் என்ற வேறு ஒரு தத்துவத்தைப் பிரச்சாரம் செய்தது எனக்குப் பிடிக்கவே இல்லை.

அமெரிக்க ஜனநாயக எண்ணங்களில் நம்பிக்கை கொண்டிருந்த என்னை, “அவரது அரசரைப் போன்ற கம்பீரமான நடத்தையும் பேச்சும்”தான் நிலையகுலையச் செய்தன என நினைக்கிறேன். “பிறரை விடத் தான் சிறந்தவர்” என்று அவர் எப்போதும் காட்டிக்கொள்ளவில்லை.

அதன் பின் பல வருடங்களுக்கு நான் அவரைப் பற்றி வேறு ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. நானும் அவரைப் பற்றி மறந்து விட்டிருந்தேன்.

டிசம்பர் 1900-ல், நேப்பிள்ஸிலிருந்து கிளம்பி நான் “ரூபப்பட்டினோ” என்ற கப்பலில் இந்தியாவிற்குப் பயணம் செய்துகொண்டிருந்தேன். கப்பலில் உணவருந்தும் அறையில் எனது இருக்கை நடு பாகத்தில் ஒரு வரிசையின் இறுதியில் இருந்தது. நான் கூறப்போகும் நிகழ்ச்சிக்கு இது தொடர்புடையது.

ட்ரேக் ப்ராக்மேன் ஐ.ஸி.எஸ். என்பவர் வலது புறத்திலும் வேறு யாரோ ஓர் ஆங்கிலேயர் அவரது எதிரிலும் இருந்தனர். கப்பல் சூயஸ்கால்வாயை நெருங்கிய போது எங்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது ஒரு புதியவர், இந்திய உடையில் ட்ரேக் ப்ராக்மேனுக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

அவர் யாருடனும் பேசவில்லை. கப்பலில் தந்த பிஸ்கட்டையும் சோடாவையும் அருந்தினார். உணவு நேரம் முடியும் முன்பே எழுந்து சென்றுவிட்டார். அவ்வளவு அமைதியாகவும், அதே சமயம் கம்பீரமாகவும் வந்து சென்ற அவர் யார்?

அவர் சாதாரணமானவர் அல்ல என்பது மட்டும் தெரிந்தது. அங்கிருந்த பழக்கப்பட்ட பிரயாணி ஒருவர் உணவு பரிமாறும் பிரதம பணியாளரிடம் அன்றைய மது பானத்திற்கு ஆர்டர் செய்தவர்களின் பட்டியலைக் கொண்டு வரும்படிப் பணித்தார். அது கொண்டுவரப்பட்டதும், தனது அட்டையைத் தேடுவதுபோல அவர் வேறு ஓர் அட்டையை வெளியில் எடுத்து அதை அங்கிருந்தவர்களிடம் காட்டினார்.

என்னிடம் அது காட்டப்பட்டபோது அதில் “விவேகானந்தா” என எழுதியிருந்ததையும், சோடா நீருக்கான வேண்டுகோள் மட்டும் பதிவாகியிருந்ததையும் கண்டு நான் துணுக்குற்றேன்.

அவர் சர்வசமய மாநாட்டில் ஏற்படுத்திய சலசலப்பு எனக்கு நினைவிற்கு வந்தது. கப்பலில் தொடர்ந்த என் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் அவரைச் சந்திக்கக் காத்திருந்தேன்.

அந்த சுவாமியுடன் முதல் சந்திப்பில் ஏற்பட்ட எதிர்மறையான எண்ணங்கள் அப்போதும் என் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. அதனால் நானே சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

தற்செயலாக வேறு ஒருவர் சுவாமியின் பெயரைக் கூறி, “அவரை நாம் சீண்டிப் பார்ப்போம்; பேச வைப்போம்” என்று கூறியது என் காதில் விழுந்தது. அந்நியர்களிடமும் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் அடுத்த பத்து நாட்களும் விவேகானந்தரின் நண்பனாக இருந்து அவரைச் சீண்டுபவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது.

young_vivekananda_2இந்த நட்புணர்வை உணர்ந்தவர்போல் உடனே அவர் என்னைத் தேடி வந்து கேட்டார்: “நீங்கள் அமெரிக்க மதப் பிரச்சாரகரா?”

”ஆம்” என்றேன்.

 “எங்கள் நாட்டில் நீங்கள் ஏன் கிறுத்துவ மதத்தைப் போதிக்கிறீர்கள்?” என்று அவர் நேரடியாகக் கேட்டார்.

“நீங்கள் ஏன் எங்கள் நாட்டில் மதத்தைப் போதிக்கிறீர்கள்?” என நானும் திருப்பிக் கேட்டேன்.

பிறகு நிலவிய அமைதியில், நான் புருவங்களை உயர்த்தி அவரது கண்களைப் பார்த்தேன். உடனே நாங்கள் இருவரும் மனம் விட்டுச் சேர்ந்து சிரித்தோம். நண்பர்களானோம்.

ஓரிரு நாட்களுக்கு உணவறையில் சில பயணிகள் வந்து அவரைச் சீண்டுவார்கள். ஆனால் அவர், எந்த விவாதத்திற்கும் தாம் தயாராக இல்லை என்பதை மிகச் சில வார்த்தைகளால் வெளிப்படுத்தி விடுவார். அது அவர்களைப் புண்படுத்தாது, ஆனால், புரிய வைக்கும். தேவையான அளவு மட்டும் பேசப்படுபவையாக அவரது பதில்கள் இருக்கும்.

அவை பொருத்தமான மேற்கோள்களுடன் இருக்கும். அப்பதிலைக் கேட்டுச் சாதாரணமானவர்கள் தங்களது வாள்களை உறையிலிட்டு, வாலைச் சுருட்டிக்கொண்டு சென்று விடுவர். ஆனால் ப்ராக்மேன் மட்டும் பின்வாங்கவில்லை.

மற்ற அனைவரும் சுவாமியுடன் செய்யும் கருத்துப் பரிமாற்றத்தில், உதாரணங்களையும் உவமைகளையும் தள்ளிவிட்டு, அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயங்களை மட்டுமே ப்ராக்மேன் பேசுவார்.

அது சுவாமியை சங்கடத்தில் ஆழ்த்தியது. சிறிது சிறிதாகக் கடைசி மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்த எங்களிடமிருந்து மற்ற பயணிகளின் கவனம் விலகிச் சென்றுவிட்டது. எங்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

ஓர் இரவில் நான் சுவாமியின் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டுபிடித்தேன். விவேகானந்தர் அன்றூ தமது பேச்சில் நிகரற்றவராக ஒளிர்ந்தார். அவரது சொற்கள் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதைப் போல் வெளிவந்தன. அந்தப் பிரவாகத்தத் தடைசெய்ய அங்கு வேறு ஒன்றுமில்லை.

இடையில் எங்களது கேள்விகள் அவரது கவனத்தைச் சற்றே திசை திருப்பும். ஆனாலும், பதில் கூறிவிட்டு நொடியில் அவர் கவனம் தமது பேச்சின் மையக்கருத்தின் பிரவாக தாரைக்குத் திரும்பும்.

என்றாவது எங்கள் இதயத்தைத் தொடும்படி அவர் ஏதாவது விஷயத்தைப் பற்றிப் பேசி முடித்திருந்தாரென்றால், அவர் விடைபெற்றுச் செல்லும் முன் எங்கள் ஒவ்வொருவருக்கும், மரியாதையுடன் வணக்கம் கூறிவிட்ட்டு, எழுந்து அமைதியாகச் சென்றுவிடுவார். ப்ராக்மேனின் எதிரில் அமர்ந்திருந்தவர் என்னிடம் கேட்டார்:

“அந்த இந்தியக் கனவானிடம் நாம் குறுக்குக் கேள்விகள் கேட்டால், அவர் எங்கே நிறுத்தினாரோ, அங்கிருந்தே மீண்டும் பேச்சைத் துவக்குவதைக் கவனித்தீர்களா?”

“ஆமாம், நாங்கள் அதைக் கவனித்தோம்.”

“அவர் நமக்காக, தான் ஏற்கனவே ஆற்றிய சொற்பொழிவு ஒன்றைத்தான் மீண்டும் கூறியிருக்கிறார்” என்றார்.

ஆம். அது அப்படித்தான் இருந்தது. அது ஓர் ஆச்சரியமளிக்கும் சுவையான அனுபவம். கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து தேநீரை உறிஞ்சிக் குடிக்கும் நேரத்தில் செய்யப்படும் திசையற்ற உரையாடல் போல அது எங்களுக்குத் தோன்றவில்லை ! அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று !

ஜனவரி 12. விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாகும்.  அவர் விடுத்த அனல் போதனைகள் நம் உரிமைகளின் உயிர் மூச்சாக இருக்கிறது.  இந்துக்களின் உயிரில் ஊக்கம் எழுப்பிய விவேகானந்தப் பரஞ்சோதியின் காலடியை இன்று பணிந்து தொழுவோம்.

சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்

image330“அனைத்துப் படைப்புகளும் ஒன்றே” எனும் ஒற்றுமையை பாரதத்தின் வரலாறு முழுக்க வேதாந்தம் வலியுறுத்தி வந்துள்ளது. அதனால், இந்த ஒற்றுமையை மானுடர்கள் தன் ஆன்மாவில் உணர முடிந்தது. ஆனால், ஏற்றதாழ்வுகளும் சாதி உணர்வும் அதிகார அந்தஸ்து பேதங்களும் இந்த ஆன்மிக சமத்துவத்தை தனிமனிதன் உணராதவாறு செய்கின்றன என்பதும் வரலாறு.

இந்தியாவில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஏற்றதாழ்வு இருந்திருக்கிறது. அதனுடன் அந்த ஏற்றத்தாழ்வை மீறியும் எதிர்த்தும் அனைத்து மக்களும் ஆன்ம சொரூபியரே எனும் அத்வைத சமத்துவ குரலும் தொடர்ந்து ஒலித்த படியே இருந்துள்ளது.

அத்வைதத்தின் ஆன்மநேய சமத்துவ ஒளிக்கு சத்தியகாமனும் ரைவகரும் வேதகால எடுத்துக்காட்டுக்கள் ஆவர். சமுதாயம் ஒதுக்கிய தொழுநோயுற்ற பெண்கள் வேதத்தில் மந்திர த்ருஷ்டர்களாகப் போற்றப்படுகின்றனர். [ஆன்மீக சக்தியைத் தூண்டும் மந்திரங்களைக் கண்டறிந்தவர்கள் மந்திர த்ருஷ்டர்கள். உதாரணமாக, காயத்ரி மந்திரத்தைக் கண்டறிந்த விசுவாமித்திரர் ஒரு மந்திர த்ருஷ்டர்.]

vivek2வரலாற்றுக் காலங்களில் அந்த சமத்துவ ஞானக்குரல் புத்தர் மூலமாக ஒலித்தது. சங்கரர் மனீஷா பஞ்சகம் மூலம் காசியில் அதே வேதாந்த மானுட நேயத்தை பிரகடனம் செய்தார். ராமானுஜர் வைணவத்தை அனைத்து மக்களையும் அணைக்கும் ஆன்மிக மக்கள் இயக்கமாகக் கண்டார். தாழ்த்தப்பட்டவர் கொண்டு வந்ததால், அவர் கொண்டு வந்த எள்ளை சுவாமியின் நைவேத்யத்திலேயே சேர்த்தார் ராகவேந்திரர்.

இந்த பாரத ஞான மரபின் தொடர்ச்சியை நாம் ராமகிருஷ்ண-விவேகானந்த மரபில் பரிபூரணமாகக் காணலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதியுணர்வை முழுமையாகத் தாண்டிய நிலையில், தனது தலை முடியால் தாழ்த்தப்பட்டவரின் கழிவறையை சுத்தம் செய்தார். தாழ்த்தப்பட்டவரிடம் புகையிலையைக் கேட்டு வாங்கினார் விவேகானந்தர். சாதிவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹூக்காக்களை சாதி வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி மனிதர்கள் மனிதர்களிடையே ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை சிறுவயதிலேயே விவேகானந்தர் உடைத்தார்.

தொடரும் இந்த பாரத சரித்திரத்தில் மற்றொரு மாபெரும் ஆளுமையாக திகழ்பவர் அம்பேத்கர் ஆவார். அம்பேத்கார் திறந்த மனமும் சிறந்த சிந்தனைத்திறனும் கொண்டவராக இருந்தார். அவரது குடும்பம் ராமானந்த-கபீர் பக்தி மார்க்கத்தில் வந்ததாகும்.

சாதிக் கொடுமைகளை தாமே அனுபவித்து வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர் அம்பேத்கர். அவரது ஒவ்வொரு போராட்டத்தையும் அவர் முழுக்க முழுக்க அஹிம்சை முறையிலேயே நடத்தினார். உதாரணமாக, காலாராம் எனும் ராமர் கோவில் நுழைவு போராட்டத்தில் மேல்சாதியினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட போதும் அம்பேத்கர் தமது மக்களை அமைதி காக்கச் சொன்னார்.

இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.

சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

பாரத தேசிய ஒற்றுமை என்பது என்ன ?

ஒருமைப்பாடே பாரதத்தின் அடிப்படைத் தன்மையாக உள்ளது. இந்த அடிப்படைத் தன்மையின் இயற்கை என்ன ?

சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்,

‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘1

p08அரசியல் அதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகள் மட்டுமே ஒரு தேசத்தின் ஒற்றுமையை நிர்ணயிக்கின்றனவா எனும் கேள்விக்கு பின்வருமாறு அம்பேத்கர் பதிலுரைக்கிறார்,

‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே. ‘2

சமுதாய பிரச்சினைகள் பற்றி அறிய இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது என்பது அம்பேத்கரின் கருத்து.

ஆனால் இன்றைய அறிவுஜீவி என தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இவ்வாறு கேட்கலாம்:

“இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரியரென்றும் திராவிடரென்றும் இரு வேறு இனத்தவர்கள் அல்லவா?

அவர்கள் எப்படி ஒரே இனத்தவர்கள் ஆக முடியும்?

ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாசிரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன?

‘இந்தியா’ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க மேல்சாதி கட்டமைப்பல்லவா ?

பல தேசிய இனங்களின் தொகுப்புதானே இந்தியா?”

இத்தகைய கருத்துகளை அறிந்தோ அறியாமலோ பரப்புகிற பலர் டாக்டர். அம்பேத்கரின் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பு வியாக்கியானங்களை எவ்வாறு எதிர் கொண்டார் ?

இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.

ஆரிய இனவாதம் குறித்து சுவாமி விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

aryans-011

‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும்.

சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன்.ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’களை பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை , ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர், ஆரியரன்றி வேறல்ல.’ 3

டாக்டர் அம்பேத்கர் மிகுந்த தடைகளுக்கு எதிராக வேதங்களை தாமே கற்றறிந்தவர். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் செய்த இனரீதியான தவறான வியாக்கியானங்கள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அவருக்குத் தந்தன. உதாரணமாக, அனாஸா என்பதை மாக்ஸ்முல்லர் அ-நாஸா என பதம் பிரிப்பதை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். சாயனரின் பதப்பிரிப்பே சரியானது என அவர் கருதினார்.

டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,
ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரின் மனத்தை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வு வக்கிரப் பட்டுப் போனதின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.
‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:

1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.

2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.

3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

4. வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘4

நாம் வாழவேண்டுமென்றால்

ஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் களைய வேண்டும். இந்த அவசியத்தை ஸ்வாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்,

‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால், ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால் நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…

நம் மதமே ‘என்னைத்தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம். ‘5

இதே கருத்தை அம்பேத்கரும் கூறியுள்ளார். காத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார்,

‘சாதியத்தின் விளைவே தீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘6

சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்

sanskrit2ஸ்வாமி விவேகானந்தர் சமஸ்கிருதம் தேசம் முழுமைக்கும் சொந்தமான பாரம்பரிய பொக்கிஷமாக மட்டும் கருதவில்லை. அதற்கும் மேலாக அது அனைத்து வகுப்பினராலும் கற்கப்படுவதன் மூலம் சமுதாய வேறுபாடுகள் சாதியக் கொடுமைகள் அகற்றப்பட முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்.

சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை ஸ்வாமி முன் வைக்கிறார்:

‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ..எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.’7

“தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்” எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்,

‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.’

மேலும் அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அதுவே சமுதாய ஏற்ற தாழ்வுகளை போக்கிடும் வழி என்றும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் குறிப்பிட்டார் அவர்.

அன்று மதத்தின் பெயரில் நிலவிய மானுடத் தன்மையற்ற நடத்தைகளால் முழுமையாக அந்த அமைப்பில் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கஷ்டங்களும், அவரே அனுபவித்த துயரமும் அவரது வார்த்தைகளில் கடினத்தை ஏற்றியிருந்திருக்கலாம்.  இருந்த போதும் இந்த மண்ணின் ஆன்மிக ஊற்றிலிருந்தே இத்துயரத்தை துடைக்கும் அமுதம் கிடைக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.  எனவேதான் அவர் இந்த மண்ணின் மைந்தரான புத்த பகவானின் காருண்ய வழியை தேர்ந்தெடுத்தார்.

sikh-festivalsபுத்த வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் அவர் குரு கோவிந்த சிங்கின் கால்ஸா பாதையை டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார். சுவாமி விவேகானந்தரையும் மிகவும் ஆகர்ஷித்த ஒரு ஆன்மிக வடிவமாவார் குரு கோவிந்தர்.

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காக திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளை காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழி சொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனைப் போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன்.”

என்று விவேகானந்தர் முழங்கினார்.9

பகவான் புத்தரிடம் விவேகானந்தரின் மனம் இயல்பாகவே லயித்தது. புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர்.

‘புத்தசமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால் அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.”

என அவர் கூறினார்.10

அம்பேத்கருடன் நடந்த சந்திப்பு ஒன்றில், இந்த நூற்றாண்டின் சிறந்த இந்தியர் என சுவாமி விவேகானந்தரை அம்பேத்கர் கருதியதாக ஜவஹர்லால் நேருவின் அந்தரங்க காரியதரிசி பதிவு செய்திருக்கிறார்.11

பாரதம் குறித்த அடிப்படையான பார்வை குறித்தும், பாரதத்தின் மேன்மைக்கான செயல்திட்டம் குறித்தும் சுவாமி விவேகானந்தரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி எத்தனை ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது மேலே கூறியுள்ளவற்றால் தெரியும். இந்த இருதய ஒற்றுமை எப்படி வந்தது?

சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுட துன்பத்தைக் கண்டு இரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுட துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையை துறந்து அதற்காக உழைத்தனர். அத்தகைய இரு பேரான்மாக்களின் பார்வைகளின் தேசத்துக்கான நல்வழிப்பார்வை ஒன்றானது அதிசயமல்லவே.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்

 1. லாகூர் பேருரை சுவாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம். III
 2. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter-IV
 3. சுவாமி விவேகானந்தர் , கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்
 4. டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII,
 5. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். VII
 6. டாக்டர் அம்பேத்கரின் செய்தி ஹரிஜன், பிப்ரவரி 11, 1933
 7. சுவாமி விவேகானந்தர், சென்னை பேருரை (பாகம்-III)
 8. டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித்தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம் தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11.ஸெப்டம்பர், 1949.
 9. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம். III
 10. சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை 26 செப்டம்பர் 1893
 11. எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3: http://jeyamohan.in/?p=4715

தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்

யார் ஹிந்து?

guru_gobind_singh1மகா புருஷனான குரு கோவிந்த சிங்கனைப் போல ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும் பொழுதுதான் –அப்போது மட்டுமே- நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்களத்தில் கொல்லப்படுவதைப் பார்த்த பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணந்தான் என்னே! யாருக்காகத் தமது உதிரத்தையும் தமது நெருங்கிய மக்களின் இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளியே வந்தது, தெற்கே வந்து மடிய! நன்றி கெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித்தவறியும் வெளியிடவில்லை.

உங்களது நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆக வேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக்கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து தன்மையைக் கவனியுங்கள். உங்களை தாக்கி புண்படுத்த நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்கள் மீது சாபமழையை பொழிந்தாலும் நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையேத் திருப்பியளிக்க வேண்டும். அவர்கள் உங்களை வெளியே துரத்தினால் அந்த மகா சக்திசாலியான சிங்கத்தைப் போல குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய இலட்சியத்தையே நாம் எப்பொழுதும் நம் முன் வைத்திருப்போமாக.

நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையிலும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.

அன்பு கொண்ட தொண்டுக்கு தகுதிகள் என்ன?

திறக்கவே முடியாத கதவுகளையும் அன்பு திறந்து விடுகிறது. எனது வருங்கால சீர்திருத்தக்காரர்களே! வருங்கால தேசபக்தர்களே! நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து இரத்தக் குழாய்களில் ஓடி இதயத்துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா? ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களை பைத்தியமாகவே ஆக்கிவிடுகிறதா? இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனத்தை முற்றும் கவர்ந்திருக்கிறதா? அழிவு பற்றிய துன்பம் பற்றிய கவலைகளால் பீடிக்கப்பட்டும் உங்கள் பெயர் புகழ் மனைவி மக்கள் உடைமை இவையனைத்தையும் உங்கள் உடலையும் கூட மறந்து விட்டீர்களா?

young_vivekananda_2உங்கள் உள்ளத்தில் பரிவு உணர்ச்சி நிறைந்திருக்கிறதா? அப்படியானால் அது முதற்படி மட்டுமேயாகும்.

அடுத்தபடியாக ஏதாவது பரிகாரமாக நோய் தீர்க்கும் மருந்து ஒன்றைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். பழையக் கால கருத்துக்கள் எல்லாம் மூடநம்பிக்கைகளாகவே இருக்கலாம். ஆனால் அந்த மூடநம்பிக்கையின் உள்ளேயும் மேலேயும் தங்கப்பாளங்களும் சத்தியமும் உள்ளன. அந்தத் தங்கத்தின் மீது பாசியோ மாசோ படியாமல் காப்பாற்றி வைக்க நீங்கள் ஏதாவது வழி கண்டு பிடித்திருக்கிறீர்களா? உங்கள் சக்தியையெல்லாம் வெட்டிப் பேச்சில் செலவழிக்காமல் நடைமுறையில் கையாளக் கூடிய உபாயம் கண்டு பிடித்திருக்கிறீர்களா? குறை கூறி கண்டிப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கும் அவர்களது துயர்களுக்குப் பதிலாக ஆறுதலாக இதமான மொழிகளைக் கூறவும் நடைப்பிண வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்கவும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா?

அப்படிச் செய்திருந்தால் அது இரண்டாவது படிதான்.

மற்றொரு விஷயமும் தேவை. உங்கள் தொண்டின் நோக்கம் என்ன? பணத்தாசை பிடித்தோ பெயர் புகழ் ஆசையால் தூண்டப்பட்டோ நீங்கள் வேலை செய்யவில்லை என்பது நிச்சயம்தானா? அதுவும் போதாது. உங்கள் வேலையில் இடையூறுகள் மலை போல திரண்டுவரினும் அவற்றை எதிர்த்துத் தயங்காது செல்ல உங்களுக்கு மனவலிமையிருக்கிறதா? உலகமனைத்தும் சேர்ந்து கொண்டு கையில் வாள் கொண்டு எதிர்த்து நின்றாலும் அந்த நிலையிலும் நீங்கள் சரியென்று நினைக்கும் செயலைச் சிறிதும் பின்வாங்காமல் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்கள் மனைவி மக்களே உங்களுக்கு விரோதமாக இருந்தாலும் உங்கள் செல்வத்தையெல்லாம் இழக்க நேரிட்டாலும் உங்களது புகழ் கெடுவதானாலும் எல்லா சொத்து சுகங்களும் பறி போனாலும் அப்பொழுதும் கூட ஏற்றுக் கொண்ட பணியிலே ஊன்றி நிற்பீர்களா? நீங்கள் கருதுகிற இலட்சியம் கைகூடுகிற வரையில் இடைவிடாது தொடர்ந்து முன்னேறிச் செல்வீர்களா? மாமன்னனான பர்த்ருஹரி கூறியது போல

“நிந்தந்து நீதிநிபுணா யதி வா ஸ்துவந்து
லக்ஷ்மீ: ஸமாவிசது கச்சது வா யதேஷ்டம்
அத்யைவ வா மரணமஸ்து யுகாந்தரே வா
நியாய்யாத்பத: ப்ரவிசலந்தி பதம் ந தீரா: (பர்த்ருஹரி நீதி சதகம்)

“நீதிபண்டிதர்கள் நிந்திப்பதானாலும் நிந்திக்கட்டும் அல்லது புகழட்டும். சகல பாக்கியங்களையும் கொடுக்கும் லக்ஷ்மி தேவியானவள் வந்தாலும் வரட்டும் அல்லது தான் விரும்புகிற இடத்துக்கே போகட்டும். மரணமானது இன்றைக்கே வந்தாலும் வரட்டும் நேர்மைப் பாதையிலிருந்து மயிரிழையேனும் யார் பிறழாதிருப்பார்களோ அவர்களே தீரராவர். இந்த உறுதி உங்களிடம் உள்ளதா?

இந்த மூன்று விஷயங்களும் உங்களிடம் இருக்குமாயின் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதங்களை செய்வீர்கள்.

arjuna_krishna_chariot

இது ஒரு நாள் வேலையல்ல. அத்துடன் பாதையும் பயங்கர விஷமயமான முட்களால் நிறைந்தததாகும். ஆனால் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தவர் நமக்கும் சாரதியாக இருக்க சித்தமாக இருக்கிறார். நமக்கும் அது தெரியும். அவருக்காக அவரிடம் நம்பிக்கை பூண்டு பாரதத்தின் மீது பல சகாப்தங்களாகக் குவிந்து மேடிட்டு மலை போல இருக்கும் துயரங்களைச் சுட்டுப் பொசுக்குங்கள். அவை எரிந்து சாம்பலாகட்டும்.

parthasarathyபார்த்த சாரதியின் கோவிலுக்கு செல்லுங்கள். கோகுலத்து எளிய ஆயர்களின் தோழனான கண்ணனுக்கு முன்னால் சென்று அந்த உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணன் ஏழைகளின் தாழ்த்தப்பட்ட இடையர்களின் நண்பனாக இருந்தான். வேடனான குகனைக் கட்டித்தழுவ தயங்காதவன் அவன். புத்தாவதாரமாக வந்த போது சீமான்களின் அழைப்பை ஏற்காமல் ஒரு வேசியின் அழைப்பை ஏற்று அவளைக் கடைத்தேற்றினான். அந்த பார்த்த சாரதியின் சன்னதியில் சென்று தலை தாழ்த்திக்கொள்ளுங்கள். மகத்தானதொரு தியாகத்தை அங்கே சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். யாருக்காக அவர் யுகங்கள் தோறும் அவதரிக்கிறாரோ அந்த ஏழைகள் அந்த தாழ்த்தப்பட்டவர்கள் அந்த ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிக்க சபதம் எடுங்கள். அதன்படி நாளுக்கு நாள் தாழ்வுற்று வரும் மக்களை மீட்பதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துவிடுங்கள்.

தலித் விடுதலைக்கு வேண்டிய ஆற்றல்

dalit1-1சக்தி சக்தியைத்தான் உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறுகிறது. நினைவிற் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம் இது. எனது வாழ்க்கையில் நான் கற்ற ஒரு பெரிய பாடம் இது. “மனிதனே சக்தியுடனிருப்பாயாக: பலவீனனாக இராதே” என்ற பாடத்தையே நான் கற்றிருக்கிறேன்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம்மைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்துவிட்டோம் …யார் வேண்டுமானாலும் கேவலமாக நம்மை நினைத்து ஊர்ந்து வரும் நம்மை காலால் மிதிக்கும் அளவுக்குப் பலவீனர்களாகிவிட்டோ ம். ஆனால் சகோதரர்களே உங்களில் ஒருவன் என்ற நிலையில் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து மடிகிற நான் கூறுகிறேன். நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்கு பெரும் சுரங்கமாகும். உலகமுழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக் கொண்டு உலகமனைத்தையும் புத்துயிர் செய்ய முடியும். பலம் பெறச்செய்ய முடியும். சக்தித்துடிப்பு பெறச்செய்ய முடியும்.

எல்லா இனத்தவரிடையேயும் எல்லா மதத்தினரிடையேயும் எல்லா பிரிவினரிடையேயும் உள்ள பலவீனப்படுத்தப்பட்ட துன்பத்தால் நலிந்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இது போர் முரசு கொட்டி அழைத்து உங்களையே நம்பி எழுந்து நின்று விடுதலை பெறுங்கள் என்று முழங்கும். விடுதலை – உடலுக்கு விடுதலை, மனதுக்கு விடுதலை – ஆன்மாவுக்கு விடுதலை : இவையே உபநிடதங்களின் மூல மந்திரமாகும்

சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்

[இன்று, ஜூலை-4ம் தேதி சுவாமி விவேகானந்தரின் சமாதி தினம்.]

vivekananda5சுவாமி விவேகானந்தர் (1863-1902) பாரதத் துறவி. சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலகட்டத்தில் பாரத தேசம் பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்தது. அதற்கு முன்னரும் அன்னிய ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாட்சி பாரதத்தின் மீது கடுமையான பொருளாதாரச் சுரண்டலை ஏற்படுத்தியிருந்தது. பாரதத்தின் சமுதாய வாழ்க்கை தேக்க நிலை அடைந்திருந்தது. அத்துடன் அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் பாரதத்தின் பண்பாட்டு, ஆன்மிகப் பாரம்பரியங்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். பாரதம் ஒரு இருண்ட பிரதேசமாகவும், பாரத சமுதாயம் பண்பாடற்ற சமுதாயமாகவும், ஐரோப்பியரைக் காட்டிலும் இழிந்த சமுதாயமாகவும் உலகத்துக்கும், பாரத மக்களுக்குமே காட்டப்பட்டன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955) அறிவியலாளர். பிறப்பால் யூதர். அவர் வாழ்ந்த ஜெர்மனியில் யூத வெறுப்பு சுவாசித்த காற்றோடு கலந்திருந்தது. ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு அகதியாக வர நேரிட்டது. இயற்பியலின் முக்கிய புரட்சியின் மைய நாயகனாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விளங்கினாலும் அவரது அறிவியலும் அவரது தத்துவ சிந்தனையும் அவருக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்கின. ஜெர்மனியில் யூதர் என்பதால் ஐன்ஸ்டைன் வெறுக்கப்பட்டார் என்றால் அவர் தஞ்சம் புகுந்த அமெரிக்காவிலும் அவரது தத்துவ-சமுதாய சிந்தனைகளுக்காக மதவாதிகளால் அவர் எதிர்க்கப்பட்டார்; தாக்கப்பட்டார்.

einsteinஆக இரு மனிதர்கள். காலத்தால் சற்று முற்பட்டவராக விவேகானந்தர். பிற்பட்டவராக ஐன்ஸ்டைன். ஒருவர் ஆன்மிகத் துறவி, இந்து சாது. மற்றொருவர் பிறப்பால் யூதர், அறிவியலாளர். முழுக்க முழுக்க வேறுபட்ட பண்பாட்டு சமுதாயச் சூழ்நிலைகள். ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில், மானுடம் குறித்த முக்கியமான விஷயங்களில் இருவரது பார்வையும் ஒன்றுபட்டதுதான். ஆனால் இதை மற்றொரு விதத்திலும் பார்க்கலாம். இயற்பியலில் ஒரு மகத்தான புரட்சியின் மையத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், ஆன்மிகத்தில் ஒரு பெரும் புரட்சியின் மையத்தில் சுவாமி விவேகானந்தரும் இருந்தனர். இருவருமே நிறுவனங்களுக்கு வெளியில் உண்மைகளைக் கண்டடைந்தனர். அதே நேரத்தில் இருவரது சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் கொடுமைகளுக்கும் பொய் பிரச்சாரங்களுக்கும் ஆட்படுத்தப்பட்டனர்.

தாம் வாழ்ந்த சமுதாயங்களின் குறை நிறைகளை அவர்கள் வெளிப்படையாகக் கூறினர். பாரதத்தின் சாதியக் கொடுமைகளை, சமுதாய தேக்க நிலைகளை சுவாமி விவேகானந்தர் சாடினார். அதே நேரத்தில் பாரதத்தின் பாரம்பரியத்திலிருந்தே அதன் எதிர்காலத்தை சிறப்பானதாக்க வழிகாட்டுதலைப் பெற்றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் யூத மறைஞான மரபுகளை நவீன சமுதாயத்தில் மீட்டெடுத்தார். மேற்கின் ஆயுதக் கலாச்சாரத்தையும், ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மீது அது செலுத்தும் பேராதிக்க மனோபாவத்தையும் அவர் எதிர்த்தார். எனவே இருவரது கருத்துகளும் ஒன்றுபட்ட தன்மை கொண்டதில் அதிசயமில்லை என்றும் சொல்லலாம்.

இறை தரிசனங்கள்

ஐன்ஸ்டைனின் கடவுள் கோட்பாடு “ஆளுமை கொண்ட கடவுள்” (Personal God) என்பதை நிராகரித்தது. அச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடவுள் – அந்தக் கடவுளின் தீர்ப்புக்கள், பரிசுகள், தண்டனைகள் – இவற்றின் அடிப்படையில் எழுந்த ஒழுக்கவிதிகள் ஆகியவற்றை ஐன்ஸ்டைன் நிராகரித்தார். அவரது மரணத்துக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேட்டியில் அவரது கடவுள் நம்பிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அவர்கூறினார்:

கடவுளைப் பொறுத்தவரையில், நான் மதச்சபையின் (Church) அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்த எந்த நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து பொதுஜனங்களுக்கு கோட்பாட்டு நம்பிக்கைகள் கொடுக்கப்படுவதை நான் விரும்பியதில்லை. இம்மை குறித்த அச்சம், மறுமை குறித்த அச்சம், கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை நான் ஏற்றுக்கொண்டதேயில்லை. ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் (“கடவுள்” எனும் போது) அத்தகைய இறைவனைக் குறித்து பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்லவேண்டும். இறையியல் கற்பிக்கும், “நன்மைகளுக்கு பரிசும், தீமைகளுக்கு தண்டனையும் வழங்கும் இறைவன்” மீது எனக்கு நம்பிக்கை இல்லை. [1]

ஐன்ஸ்டைனின் ஆளுமைத்துவ கடவுள் கோட்பாட்டு மீதான எதிர்ப்பு சுவாமி விவேகானந்தரில் மேலும் விரிவாக்கம் பெறுகிறது:

நிர்குணக் கடவுள் வாழும் கடவுள் ஆவார். ஆளுமைத்துவமுடைய கடவுளுக்கும் நிர்குணக் கடவுளுக்குமான வேறுபாடு என்னவென்றால், ஆளுமைத்துவமுடைய கடவுள் ஒரு மனிதன் தான். ஆனால் நிர்குண க் கடவுள் மனிதர்கள், தேவதைகள், விலங்குகள் மற்றும் நம்மால் காணமுடியாதவையாகவும் இருக்கிறார். ஏனென்றால் நிர்குணக் கடவுள் அனைத்து ஆளுமைகளையும் உள்ளடக்கியவராக இருக்கிறார். பிரபஞ்சமனைத்துமாக இருக்கிறார். அதற்கும் மேலானதான முடிவிலியாகவும் இருக்கிறார். [2]

ஒழுக்கவிதிகளும் மதங்களும்

சுவாமி விவேகானந்தரைப் பொறுத்தவரை மானுட ஒழுக்கத்துக்கும் சமயத்துக்குமான தொடர்பு ஏற்புடையதல்ல. “சமுதாயச் சட்டதிட்டங்களை உருவாக்குவது மதத்தின் வேலை அல்ல” என்று அவர் கூறினார். [3]

ஐன்ஸ்டைன் ஒழுக்க விதிகள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை சமயத்துடன் தொடர்புபடுத்துவது மானுட வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத படிக்கல் என்றும், ஆனால் மானுடம் அதிலிருந்து முன்னகர்ந்து செல்லவேண்டும் என்றும் கருதினார். அவர் கூறினார் –

ஆளுமைத்தன்மை கொண்ட கடவுள் என்ற கருத்து மனிதத்தன்மையுடன் உருவாக்கப்பட்ட ஒன்று என்றே கருதுகிறேன். அதனை முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை…. ஒழுக்கம் மற்றும் மதிப்பீடுகள் முழுக்க முழுக்க மானுடம் மட்டுமே சார்ந்த பிரச்சனையாகவே கருதப்படவேண்டும். மானுடத்தின் முதன்மையான பிரச்சனையாகவும் கூட. [4]

அறிவியலும் சமயமும்

சுவாமி விவேகானந்தரைப் பொறுத்தவரையில், மதத்துக்கும் அறிவியலுக்குமான தொடர்பில் மதம் அறிவியல் எனும் நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்படவேண்டியது என கருதினார்.

”மற்றெந்த அறிவுப்புலங்களையும் போல அறிவின் கண்டடைதல்களால் மதம் தன் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளவேண்டுமா கூடாதா? அறிவியலுக்கும் புற அறிதலுக்கும் நாம் பயன்படுத்தும் அதே வழி முறைகள் சமயம் என்னும் அறிவுத்துறைக்கும் பொருந்துமா? என் கருத்து அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே. எவ்வளவு விரைவாக அறிவியல் கண்ணோட்டத்தில் மதம் மதிப்பிடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அது நல்லது என்பதே என் எண்ணம். அத்தகைய சோதித்தலால் ஒரு மதம் அழிந்துவிடும் எனில் அது எப்போதுமே உபயோகமற்ற, மதிக்கப்படக்கூடாத மூடநம்பிக்கையாகத்தான் விளங்கியிருக்கிறது. அத்தகைய மதம் எவ்வளவு விரைவாக அழிய முடியுமோ அத்தனை விரைவாக அழிய வேண்டும். அத்தகைய மதம் அழிவதே மானுட குலத்துக்கு நடக்கக்கூடிய மிகச்சிறந்த விஷயமென நான் கருதுவேன். அத்தகைய விதத்தில் மதம் பரிசோதிக்கப்பட்டால் மதத்தின் அனைத்து தேவையற்ற மோசமான விஷயங்களும் அழிந்து சமயத்தின் சாராம்சமான கரு வெற்றிகரமாக அந்த பரிசோதனையிலிருந்து வெளிவரும் என்றே நான் கருதுகிறேன்.”[5]

வியக்கதக்க விதத்தில் இதே கருத்தை மென்மையாக ஐன்ஸ்டைன் தெரிவித்தார். ”அறிவியலுடன் மதத்துக்கான பிரச்சனை, மதம் குறியீட்டுத்தன்மையின்றி தொன்மங்களை அணுகுவதன் மூலம் அறிவியலுக்கான இடத்துக்குள் அத்துமீறி நுழைவதுதான்” என்று அறிவியலுக்கும் சமய நம்பிக்கைக்குமான மோதலைக் குறித்து ஐன்ஸ்டைன் கருதினார். எனவே உண்மையான சமயத் தன்மைக்கு உகந்ததல்லாத இந்த விஷயங்களை மதம் கைவிட வேண்டுமென அவர் கருதினார்:

”குறியீட்டுத்தன்மையைக் கைவிட்ட தொன்மங்களை கொண்ட மத சம்பிரதாயங்களினாலேயே மதம் அறிவியலுடனான மோதலுக்கு வருகிறது. எனவே உண்மையான சமயத்தினை நிலைநிறுத்த இத்தகைய மோதல்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இத்தகைய மோதல்கள் எழுவதற்கான காரணங்கள் சமயத்தின் தேடலுக்கு அத்யாவசியமானவை அல்ல….பொய், துவேஷம், மோசடி மற்றும் படுகொலைகளை நியாயப்படுத்தும் ஒரு சமுதாயம் நீண்டகாலத்துக்கு ஜீவித்திருக்க முடியாது. [6]

சமுதாயத்தின் அடிப்படையாக சத்தியமே அமைய வேண்டும் என்பதை சுவாமி விவேகானந்தரும் சுட்டிக் காட்டுகிறார். அவரைப் பொறுத்தவரையில் சத்தியமே ஒரு சமுதாயத்தின் அடிப்படையாக அமையவேண்டும். அப்படி இல்லாத சமுதாயம், சத்தியத்தை சந்திக்கச் சக்தியற்ற சமுதாயம் வாழ நியாயங்கள் எதுவுமில்லை. அவர் சொல்கிறார்:

சத்தியம் எந்த சமுதாயத்துக்கும் தலை வணங்க முடியாது. அந்த சமுதாயம் மிகப் பழமையானதோ அல்லது மிக நவீனமானதோ சத்தியம் சமுதாயத்துக்கு தலை வணங்காது.சமுதாயமே சத்தியத்துக்கு தலை வணங்க வேண்டும். சமுதாயமே சத்தியத்துக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டுமே அல்லாது சத்தியம் சமுதாயத்துக்கு ஏற்ப வளைக்கப்பட முடியாது.[7]

சத்தியம், சிவம், சுந்தரம்

இத்துடன் ஐன்ஸ்டைன் நிற்கவில்லை. அறிவியலிலிருந்து எவ்வாறு மானுடத்தின் ஆன்மிக சமய வேட்கை தன்னை ஆக்கப் பூர்வமாக மீள் அமைத்துக்கொள்ள முடியும் என்பதை குறித்தும் அவர் சிந்தித்தார்:

மானுட குலத்துக்கு நல்லொழுக்கம் வேண்டுமென விழையும் சமய ஆச்சாரியர்கள், இந்த ஆளுமைத்துவம் கொண்ட இறைவனை கை விட வேண்டும் – அதாவது எந்தக் கோட்பாடு அளவு கடந்த அச்சத்துக்கும் நம்பிக்கைக்கும் மூல ஊற்றாக அமைந்து சமயவாதிகளின் கையில் அளவு கடந்த அதிகாரத்தை கொடுத்ததோ அந்த இறைவன் எனும் கோட்பாட்டை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக சுபம் (Good), உண்மை (Truth) மற்றும் அழகு (Beautiful) எனும் தன்மைகளை வெளிக்கொணர செய்யப்படும் முயற்சிகளிலிருந்து சமயவாதிகள் இந்த பிரயத்தனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.[8]

சுவாமி விவேகானந்தரும் இதையே வலியுறுத்தினார். பிரபஞ்ச ஒழுங்கின் அடிப்படையாக சத்தியம் (Truth), சிவம் (Good), சுந்தரம் (Beauty) என்பதை அவர் கூறுகிறார். சத்தியம் சிவம் சுந்தரம் என்பதை ஒரு பேரண்டங்களெல்லாம் நிறைந்திருக்கும் பெண்மையாக தரிசிக்கும் விவேகானந்தர் அதனை உணருதல் என்பதன் அடிப்படையில் இருப்பது விடுதலை உணர்வே என்கிறார். அனைத்து பௌதீக விதிகளும் அவற்றை கண்டடையும் மானுட முயற்சிகளும் அந்த விடுதலை வேட்கையே என்கிறார் விவேகானந்தர். [9] ஐன்ஸ்டைனும் இந்த சத்திய வேட்கையையே அறிவியல் தேடலின் ஊற்றுக்கண்ணாக அறிகிறார். இதனையே அவர் பிரபஞ்ச சமய உணர்வு என கூறுகிறார். இப்பிரபஞ்சமளாவிய பேருணர்வின் முன்னர் மனிதனின் தனிப்பட்ட ஆசாபாசங்கள் எத்தனை சிறுமையாகிவிடுகின்றன. இப்பேருணர்வே அவனை விரிவடைய செய்கிறது. ஐன்ஸ்டைன் கூறுகிறார்:

ஸ்பினோசா
ஸ்பினோசா

தனிமனிதன் தன் ஆசாபாசங்களின் வெறுமையை, பொருளற்ற தன்மையை உணர்கிறான். புற இயற்கையிலும் அவன் அகப்புலத்திலும் இருக்கும் ஆழ்ந்த அழகையும் பெரும் ஒழுங்கையும் உணர்கிறான். அவனது தனிமனித வாழ்க்கையானது ஒரு கூண்டுச்சிறையாக அவனுக்குக் காட்சி அளிக்கிறது. அவன் முழுப் பிரபஞ்சத்தையும் ஒரு உன்னத ஒருமையாக உணரத் தலைப்படுகிறான். இதுவே பிரபஞ்ச சமய உணர்வு. …இவ்வுணர்வின் அழுத்தமான தன்மையை ஷோஃபனர் (Arthur Schopenhauer) மூலம் நாம் அறியும் புத்த சமயம் கொண்டிருக்கிறது. அனைத்துக் காலங்களிலும் சமய மேதைகளால் இது உணரப்பட்டிருக்கிறது. இதற்கு இறையியலோ மதச்சபையோ இறைவனது உருவகமோ தேவை இல்லை. …இதனை உணர்ந்தவர்கள் அவர்களது சமகாலத்தவர்களால் பலசமயங்களில் நாஸ்திகர்கள் என்றும் சில சமயங்களில் பேரருளாளர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமாக காணும் போது டெமாக்ரிட்டஸும், அஸிஸியின் பிரான்ஸிஸும் ஸ்பினோசாவும் ஒரே தன்மை கொண்டவர்கள்தாம்….அறிவியலுடையவும் கலையுடையவும் முக்கிய பணியே இப்பிரபஞ்ச சமய உணர்வைப் பேணி, அதன் வெளிப்பாடாக அமைந்து, அதனைப் பெறத்துடிப்போருக்கு அளிப்பது ஆகும். [10]

[டெமாக்ரிட்டஸ் (Democritus) கிறிஸ்தவத்துக்கு முந்தைய கிரேக்க ஞானி. அசிசியின் பிரான்ஸிஸ் (St. Francis of Assisi) ரோமன் கத்தோலிக்க துறவி, ஆனால் விலங்குகளுக்கு ஆன்மா உண்டு என கிறிஸ்தவ இறையியலுக்கு எதிராக சொல்லியவர். இது கத்தோலிக்கத்துக்கு எதிரான கத்தாரிய பேதகம் என்பதிலிருந்து பெறப்பட்டது என்றும் கத்தாரிய பேதகம் என்பது இந்திய சமய தாக்கத்தால் உருவானது எனவும் லின் வைட் எனும் வரலாற்றறிஞர் கூறுகிறார். ஸ்பினோஸா (Baruch Spinoza) யூத சமுதாயத்தில் பிறந்த தத்துவ மேதை, அத்வைத கோட்பாடு கொண்டவர்; எனவே சமுதாய விலக்கம் செய்யப்பட்டவர்.]

அறிவியல் தன்மையை சமயம் அடையவேண்டுமெனவும், சமய அனுபவமே அதன் அடிப்படையாக அமையவேண்டுமெனவும் சுவாமி விவேகானந்தரும் கருதுகிறார்:

சமயம் மட்டுமே நிச்சயமற்ற அறிவுப்புலமாக இருக்கிறது ஏனெனில் அது அனுபவத்தின் அறிவியலாகக் கருதப்படவில்லை. அவ்வாறு இருக்கக் கூடாது. எல்லாக் காலங்களிலும் அனுபவத்திலிருந்து சமயத்தைப் பெற்றவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்கள் பேரனுபூதியாளர்கள் – மறைஞானிகள். இவர்கள் எந்த மதச்சூழலில் தோன்றியிருந்தாலும் இவர்கள் வெளிப்படுத்தும் சத்தியம் ஒன்றேயாகத்தான் இருக்கிறது. இதுவே உண்மையான அறிவியலின் மதம். எப்படி உலகின் எந்தப் பகுதியில் தோன்றிய கணிதவியலாளனும் ஒரு சத்தியத்தில் மாறுபடுவதில்லையோ அது போல இவர்களும் மாறுபடுவதில்லை. [11]

பிராணன் – பிரபஞ்ச சக்தி

சுவாமி விவேகானந்தர் பிராணனை பிரபஞ்ச சக்தியாகக் காண்கிறார். இங்கு ஐன்ஸ்டைனின் பல அறிவியல் தேற்றங்களைக் கவித்துவமாக விவேகானந்தர் முன்னறிவிப்பதாகவே கொள்ளலாம். பொருள் என்பது ஆகாசமே என்கிறார் விவேகானந்தர். ஆகாசத்தை பொருண்மைப் பிரபஞ்சமாக்குவது (material world) சக்தி என்கிறார்.

பிராணன் எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக இருக்கிறது. …இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கிற, நாம் சக்தி என்று அழைக்கிற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது அனைத்தும் பிராணனே. உடல் இயக்கங்களாக, எண்ண சக்தியாக, நாடி ஓட்டங்களாக வெளிப்படுவதெல்லாம் பிராணனே. எண்ணம் முதல் மிகச்சாதாரண சக்தியாக இருப்பவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே.”[12]

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கும் இந்தச் சித்தாந்தத்தில் நம்பிக்கை இருந்தது:

“சக்தியே சிருஷ்டியின் அடிப்படை விசை என நான் கருதுகிறேன். என் நண்பர் பெர்குஸன் அதனை எலன் வைட்டால் (elan vital) என அழைக்கிறார். ஹிந்துக்கள் அதனை பிராணன் என்கிறார்கள்.” [13]

கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக

கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:

anti_hindu_propaganda_1
தன் குழந்தையை முதலையிடம் வீசும் இந்துப் பெண் (1800களின் பிரசாரப் படம்)

கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்? கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

anti_hindu_propaganda_2
”இந்துக்கள் குழந்தைகளைக் கழுகுக்கு உண்ணத் தரும் கொடூரர்கள்”

அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? …. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது … இது போன்ற ஆக்கிரமிப்பான பொய்ப் பிரச்சாரங்களையெல்லாம் கிறிஸ்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். … கிறிஸ்துவின் இலட்சியத்துடன் இன்றைக்கு மேற்கத்திய நாடுகள் அடைந்துள்ள அபரிமிதமான வளக்கொழிப்பை இணைக்க முடிந்தால் நல்லதுதான். உங்களால் முடியாது என்றால் இந்த போகங்களைக் கைவிட்டு அவரிடம் திரும்புவதே நல்லது.[14]

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது யூத இனத்துக்கு மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் செய்த கொடுமைகளையும் அது அடைந்த உச்சத்தையும் நேரில் பார்த்தவர். அனுபவித்தவர். அறுபது இலட்சம் யூதர்கள் கொலை செய்யப்படுகையில் கத்தோலிக்க சர்ச் நாசிகளுடன் கை குலுக்கியதை கண்டு அதிர்ந்தவர். எனவே கிறிஸ்தவத்தை அவர் மிகக்கடுமையாக விமர்சித்தார்.

சில நேரங்களில் ஏசு என்று ஒரு மனிதர் வாழாமலே இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை. … மனித இனம் ஏசுவின் பெயரால் தனக்குத்தானே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் யூதர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் பாருங்கள்.

யூதர்களைக் கொரூரர்களாக சித்தரிக்கும் சர்ச் ஓவியம்
யூதர்களைக் கொடூரர்களாக சித்தரிக்கும் சர்ச் ஓவியம்

நாஸி ஜெர்மனியில் யூதர்களுக்கு என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் தீர்க்க தரிசியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவ சபை யூதர்களுக்கு எதிராகச் செய்து வந்துள்ள சொல்லக்கூட முடியாத கொடுங்குற்றங்களுக்கெல்லாம் வத்திக்கானின் ஆசிர்வாதம் இருந்தது என நான் சொல்லவில்லை. ஆனால் கிறிஸ்தவ சபை தனது நம்பிக்கையாளர்களின் கொடுஞ்செயல்களின் கொடுரத்தை அவர்கள் மனம் உணராத படி “நம்மிடம் உண்மையான தேவன் இருந்தார். யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” என்னும் நம்பிக்கையால் இறுக வைத்திருந்தது. [15]

முடிவுரை: இவ்வாறாக இரு வேறு சமுதாயங்கள், இரு வேறு காலகட்டங்கள், இரு வேறு புலங்களில் இயங்கிய மகாத்மாக்கள் இருவரின் ஆன்மிகத்துடிப்பின் வெளிப்பாடு மானுடம், இறை அனுபவம், சமுதாய ஒழுக்கம், தமது சமுதாயத்தின் மீதான அன்னிய ஆக்கிரமிப்பு ஆகிய விஷயங்களில் ஒன்றாகவே இணைந்து இணை குரலாக வெளிப்பட்டது.

சுட்டிகள்:

[1] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 1954 இல் அளித்த பேட்டியில் கூறியது.
[2] சுவாமி விவேகானந்தர், செயல்முறை வேதாந்தம்- இரண்டாம் பேருரை இலண்டனில், நவம்பர்-12 1896 இல் ஆற்றியது.
[3] சுவாமி விவேகானந்தர், Complete Works Vol.4: p.358
[4] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், 26-ஏப்ரல்-1947 தேதியிட்ட கடிதம்
[5] சுவாமி விவேகானந்தர், Complete Works Vol.1: p.367
[6] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Religion and Science: Irreconcilable? என்ற தலைப்பில் நியூயார்க்கில் ஆற்றிய உரை: ஜூன் 1948
[7] சுவாமி விவேகானந்தர், Royal Institute of Painters in Watercolors, இலண்டனில் அன்று ஆற்றிய உரை, ஜூன் 21, 1896
[8] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Science and Religion எனும் தலைப்பில் 1941 இல் நியூயார்க்கில் ஒரு கருத்தரங்கில் பேசியது, மூலத்தில் ஆங்கில வார்த்தைகளுக்கு ஐன்ஸ்டைனே பெரிய எழுத்துக்களாக -capitalization- மாற்றியிருந்தார்.
[9] சுவாமி விவேகானந்தர், Complete Works Vol:V pp.336-7

[10] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Religion and Science என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 1930 இல் எழுதியது.

[11] சுவாமி விவேகானந்தர், Complete Works -Vol:VI p.81
[12] சுவாமி விவேகானந்தர், இராஜயோகம், பிராணன்: பக்.40
[13] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சமூகவியலாளர் வில்லியம் ஹெர்மான்ஸுடனான உரையாடல், ஆகஸ்ட் 1943, பக்.61
[14] சுவாமி விவேகானந்தர், Complete Works -Vol:VIII p.212
[15] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சமூகவியலாளர் வில்லியம் ஹெர்மான்ஸுடனான உரையாடல், ஆகஸ்ட் 1943. பக்.62-63

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

 • சுவாமி விவேகானந்தர், The complete works of Swami Vivekananda, Advaita Ashrama, 1970
 • சுவாமி விவேகானந்தர், ராஜயோகம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை 2005
 • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், Ideas and Opinions, [Edited by Carl Seeling], Rupa 1998
 • மாக்ஸ் ஜாம்மர் (Max Jammer), Einstein and Religion: Physics and Theology, Princeton University Press, 2002
 • வில்லியம் ஹெர்மான்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
 • Einstein and the Poet: In Search of the Cosmic Man, Branden Books, 1983

இவரை மறக்கலாமா?

Swami Vivekanandaஇந்திய அரசு ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக அறிவித்திருப்பது யாருக்காவது நினைவிலிருக்கிறதா என்று தெரியவில்லை, இந்திய அரசு உட்பட. 1863ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாக விளங்கிய வீரத்துறவி விவேகானந்தர் பிறந்தார். அவருடைய சொல்லும் சிந்தனைகளும் ஒரு சூறாவளித் தாக்கத்தை மானுட குலத்தில் ஏற்படுத்தின. ஆனால் இப்போதிருக்கும் ‘மதச்சார்பற்ற அரசியல்’ விவேகானந்தரை மறப்பதில் லாபம் காண்கிறது. என் கண்ணில் பட்ட நாட்காட்டிகளில்கூட விவேகானந்தர் பிறந்த தினம், அல்லது தேசிய இளைஞர் தினம் என்ற குறிப்பு இல்லை. இளைஞர் தினம் என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் வாட்டிகன் கத்தோலிக்க இளைஞர்களுக்காக அறிவித்த பன்னாட்டு இளைஞர் தினம் கிடைக்கலாம். ஐ.நா. சபை ஆகஸ்டு 12ஐப் பன்னாட்டு இளைஞர் தினமாக அறிவித்தது கிடைக்கலாம். ஆனால், பாரத தேசத்தை உலக அரங்கில் தலைநிமிர்ந்து பீடுநடை போடச் செய்த விவேகானந்தரைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை.

எந்தச் சினிமா நடிகரோ நடிகையோ வந்து விவேகானந்தரைப் பற்றித் தமது மேலான கருத்துக்களை வாரி வழங்க இயலாதென்பதால் டி.வி. நிகழ்ச்சிகளும் கண்ணில் படவில்லை.

நாம் மறந்துவிட்டோம். நமக்கு நல்லது செய்பவர்களைச் சுத்தமாக மறந்து விடுகிறோம். நமக்குத் தீமைசெய்வதையே தமது முழுநேரப் பணியாகக் கொண்டு, அதன்மூலம் சம்பாதிக்கிறவர்களை நாம் விழுந்து விழுந்து கொண்டாடுகிறோம்.

தமிழ் இந்துவால் எப்படி மறக்க முடியும்? இந்த தேசத்தின் வரலாறு, கலாசாரம், வேதாந்தம், சித்தாந்தம், இலக்கியம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவரும், இசையிலும் கவிதையிலும் தேர்ந்தவரும், இந்த தேசத்து மக்கள் தாழ்ந்து அடிமைத்தனத்தில் கிடக்கும்வரை தனக்கு மோட்சம் கிடைத்தாலும் வேண்டாம் என்று கூறியவருமான அந்த இணையற்ற மகானை எப்படி மறக்க முடியும்!

விவேகானந்தர் 1891ல் ஆல்வார் நகர இளைஞர்களுடன் பேசும்போது கூறினார்:

“நுண்மையாகக் கற்றுக்கொள்ளுங்கள். படியுங்கள், உழையுங்கள் – சரியான நேரம் வரும்போது நமது வரலாற்றை அறிவியல் பூர்வமாக எழுதலாம். பாரதத்தின் வரலாறு இன்று குழம்பிக் கிடக்கிறது. காலவரிசைப்படிச் சரியாகச் சொல்லப்படவில்லை. நமது வீழ்ச்சியைப் பற்றியே பேசும் ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாறு நம் மனதை வலுவிழக்கச் செய்வதாகத்தான் இருக்கும். நமது பழக்கவழக்கங்களையும், சமயத்தையும், தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாத அந்நியர்கள் எப்படி மெய்யான, நடுவுநிலைமையான வரலாற்றை எழுதமுடியும்?”

ஆனால், இந்தியர்களே கற்றுத் தேர்ந்து இந்திய வரலாற்றை எழுதுகிற நிலைமை வந்தபோது முழுவதுமாக மேனாட்டுக் கல்வியால் மூளை மழுங்கிப் போய்விட்டனர் என்று தோன்றுகிறது. இந்தியம், இந்துமதம் எல்லாவற்றையும் கீழே போட்டுத் தரையில் மிதிப்பதுதான் சரித்திர மறுவாசிப்பு என்கிற முற்றடிமை நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படி எழுதுகிறவர்களுக்குத்தான் பன்னாட்டு விருதுகள் தேடி வருகின்றன. உண்மை பேசுகிறவர்கள் அவமதிக்கப் படுகிறார்கள்.

விவேகானந்தர் எப்படிப்பட்டவர் என்பதைச் சில சம்பவங்கள் வழியே இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம்:

சொல்லும் செயலும் மாறுபடாத சன்னியாசி

ஆகஸ்ட் 1888. சுவாமி ஆக்ராவிலிருந்து நடந்தே பிருந்தாவனத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பிருந்தாவனம் வரப்போகிறது. ஒரு மனிதர் புகையிலையை ‘சில்லம்’ எனப்படும் மண்ணாற் செய்த புகைபிடிப்பானில் அடைத்துப் பிடிப்பதைப் பார்க்கிறார். (அந்தச் சமயத்தில் புகைபிடிப்பதைப் பற்றிய இத்தனை விழிப்புணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எல்லா வட இந்தியக் குடும்பங்களும் ஹூக்கா, சில்லம் அல்லது பைப் இவற்றிலே புகையிலையை அடைத்துப் புகைப்பது மிகச் சாதாரணமாக இருந்தது புத்தகங்களில் தெரியவருகிறது. ஆங்கிலேயர்கள் விருந்துக்குப் பின் பெண்களானால் காப்பி குடிக்கவும், ஆண்களானால் ‘புகைக்கும் அறை’க்கும் செல்வார்கள் என்று அக்காலத்தியப் புதினங்கள் பேசுகின்றன.)

நடந்து களைத்த தனக்கு ஒரு இழுப்பு நல்லது செய்யும் என நினைக்கிறார். “அதைக் கொடுப்பீர்களானால், ஒரு முறை புகையை இழுத்துவிட்டுத் தருகிறேன்” என்றார் துறவி. சில்லம் வைத்திருந்தவர் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார். “நான் மாட்டேன். இதைக் கொடுப்பதன்மூலம் உங்களை நான் அசுத்தப் படுத்திவிடுவேன். நான் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளி” என்றார். சுவாமி அங்கிருந்து நகர்ந்தார்.

“என்ன! நான் ஒரு சன்னியாசி. சாதி, குடும்பம், கவுரவம் என்னும் எண்ணங்களைத் துறந்தவன். இருந்தாலும் நான் ‘தோட்டி’ என்றதும் தயங்கினேன். என்னால் அந்தக் குழாயில் புகைபிடிக்க முடியவில்லை. நெடுங்காலப் பழக்கத்தின் அடிமைத்தனம்தான் என்ன!” இந்த எண்ணம் அவரைத் துன்புறுத்தியது.

திரும்பி வந்து அவரருகிலேயே அமர்ந்துகொண்டார். “சகோதரா! ஒரு குழாய் புகையிலை எனக்குக் கொடு” என்றார். “ஐயா, நீங்களோ துறவி. நானோ தீண்டத்தகாதவன்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அந்தத் துப்புரவுத் தொழிலாளி. சுவாமியா அதைக் கேட்பவர், விடவேயில்லை.

நெடுநாட்களுக்குப் பின் இதை கிரிஷ்சந்திர கோஷ் என்ற நண்பருக்குச் சொன்னபோது அவர் சொன்னார் “நீ புகையிலைக்கு அடிமை. ஆகவே ஒரு தோட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடிப் புகைபிடித்தாய்”. “இல்லை கிரீஷ், என்னை நான் சோதித்துக்கொள்ள விரும்பினேன். சன்னியாசத்துக்குப் பின் ஒருவன் தன்னைத் தானே ‘நான் நிறத்துக்கும் சாதிக்கும் அப்பால் தாண்டிப் போய்விட்டேனா?’ என்று சோதித்துக்கொள்வது அவசியம். சன்னியாசத்தின் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது கடினம்: சொற்களுக்கும் செயலுக்கும் நடுவே மாறுபாடு இருக்கக் கூடாது” என்றார்.

பின்னொருமுறை ஒரு சீடரிடம் பேசிக்கொண்டிருந்த போது சுவாமி சொன்னார்: “சன்னியாசத்தின் லட்சியங்களைக் கடைப்பிடிப்பது எளிதென்று நினைக்கிறாயா மகனே? வாழ்வில் இதைவிடக் கடினப் பாதை வேறெதுவும் இல்லை. சிறிது வழுக்கினாலும் அதல பாதாளத்தில் விழுவாய். அந்தச் (தோட்டியிடம் புகைபிடித்த) சம்பவம் ‘யாரையும் வெறுக்காதே, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தாம்’ என்ற பெரிய பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது”

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்பது உண்மையிலேயே துறவுநெறி பூண்டு, அதில் நிலைபெற்றோருக்கே இயல்வதாக இருக்கிறது. மற்ற எல்லாரும் ஏதோ ஒரு வகையில் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம் அல்லவா?

இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து வாரி வழங்கிய அந்த வள்ளலுக்குத் தோட்டியும் ஒன்றே, கோடீஸ்வரனும் ஒன்றே.

ராக்ஃபெல்லரின் முதல் நன்கொடை

1894ன் ஆரம்பப் பகுதி. சிகாகோவில் விவேகானந்தர் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இல்லத்தரசர் ஏதோ வகையில் ஜான் டி. ராக்ஃபெல்லருடன் தொழில்வகைத் தொடர்பு கொண்டவர். அவரும் பிற நண்பர்களும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அற்புத சன்யாசி பற்றிப் பலமுறை கூறி அவரை அழைத்தும், ராக்ஃபெல்லர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார்.

ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்.

சுவாமியைச் சந்திக்க விரும்பாவிட்டாலும் ஒரு நாள் ஏதோ ஒரு உந்துதலில், திடீரென நண்பரின் வீட்டுக்குள் நுழைந்து, “ஹிந்து சாமியாரைப் பார்க்கணும்” என்று பட்லரிடம் சொன்னார். பட்லர் வரவேற்பறையில் அழைத்துக்கொண்டு போனார். அதற்குள் மளமளவென்று இவர் விவேகானந்தர் இருந்த படிப்பறைக்குள் சென்றார். அங்கே மேசையருகில் அமர்ந்திருந்த சுவாமி நிமிர்ந்துகூடப் பார்க்காதது இவருக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

சற்று நேரத்துக்குப் பின் சுவாமி ராக்ஃபெல்லரின் வாழ்வில் நடந்த, வேறு யாரும் அறிந்திருக்க முடியாத சில விஷயங்களைச் சொன்னார். “உன் செல்வம் உனக்கே உரியது என்று நினைத்துவிடாதே. நீ ஒரு வழங்கு குழாய்தான். உனது கடமை உலகுக்கு நன்மை செய்தல். கடவுள் அதற்கு ஒரு வாய்ப்பை இந்தச் செல்வத்தின் மூலம் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள். மக்களுக்கு நன்மை செய்”.

(சுவாமி தனக்கு நன்கொடை கொடு என்று யாரையும் கேட்டது கிடையாது. தான் பேச்சுக்கள் மூலம் ஈட்டியதை அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததும் உண்டு. ஒருமுறை பால்டிமோரில் வ்ரூமன் சகோதரர்கள் துவங்கத் திட்டமிட்டிருந்த ஒரு பன்னாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அவ்வூரில் பேசியதில் வந்த பணத்தை வழங்கினார்.)

ராக்ஃபெல்லருக்கு எரிச்சல் வந்தது. இந்தப் பாணியில் யாரும் இதுவரை அவரிடம் பேசமுனைந்ததோ, இன்னது செய் அன்று உபதேசித்ததோ கிடையாது. ‘போய்வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் வெளியே நடந்தார் ராக்ஃபெல்லர்.

ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து சுவாமியை அதே அறையில் பார்த்தார். ஒரு அமெரிக்கப் பொது நிறுவனத்துக்குப் பெரிய தொகையை வழங்குவதற்கான திட்டம் குறித்த ஒரு ஆவணத்தை சுவாமியின் மேசைமேல் வைத்தார். “இப்போது உங்களுக்குத் திருப்தியாக இருக்கவேண்டுமே, எனக்கு நன்றி சொல்லவேண்டும் நீங்கள்” என்றார் ராக்ஃபெல்லர்.

சுவாமி அசையவோ, கண்களை உயர்த்தவோ இல்லை. அந்தத் தாளை எடுத்துப் பார்த்துவிட்டு “நீயல்லவா எனக்கு நன்றி செலுத்தவேண்டும்” என்றார். பொதுநலப் பணிக்கு ராக்ஃபெல்லர் கொடுத்த முதல் நன்கொடை அதுதான்.

மரம்பழுத்தால் வௌவாலை வாஎன்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை – சுரந்துஅமுதம்
கற்றா தரல் போல கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

(நல்வழி, ஔவையார், பாடல்: 29)

உலகத்தவர் தம்மவர் ஆகவேண்டும் என்று எண்ணுகிறவர் எப்படிப் பசு தன் கன்றுக்கு மறைத்துவைக்காமல் பால் தருகிறதோ அதே அன்போடு தம் செல்வத்தைத் தரவேண்டுமாம். செல்வமுடையவருக்கு அவ்வெண்ணம் வராத போது நினைவூட்டுதல் தன்னலமற்ற துறவியரின் பணியாக இருந்திருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்த கல்விக் கூடங்களில், அலுவலகங்களில், சேவை அமைப்புகளில், குடியிருப்புச் சங்கங்களில், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஜனவரி 12ஐ இளைஞர் தினமாகக் கொண்டாட வற்புறுத்துங்களில். விவேகானந்தரை உலகுக்கு நினைவுபடுத்துங்கள். மீண்டும் ஆன்மீக, கலாச்சார, தேசீயத் தன்மான விழிப்புணர்வுக்கு வழி செய்யுங்கள்.

விவேகானந்தரை மறந்தால் பாரதத்துக்கு உய்வு கிடையாது.

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

தத்துவ ஞானி, கலைஞர் அவனீந்திரநாத் தாகூரின் ‘பாரதமாதா’ ஓவியம். இவர் கவியரசர் ரவீந்திரநாத தாகூரின் சகோதரர்

மூலம்: சுவாமி விவேகானந்தர் To the awakened India
மொழியாக்கம்: ஜடாயு

மீண்டும் எழுவாய்
இது உறக்கம்தான் மரணமல்ல
புது வாழ்வில் விழித்தெழும்
துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன்
கமல மலர் விழிகளின் சிறு அயரல்
ஓ சத்தியமே, உன்னை
வேண்டி நிற்கும் உலகம்
உனக்கென்றும் அழிவில்லை

உன் வீறுநடையைத் தொடர்வாய்
வீதியோரத்தில் கீழுறங்கும் சிறு துரும்பின்
அமைதியையும் குலைக்காத உன்
அன்புப் பாதங்கள்
வலிமையும், உறுதியும் , துணிவும், விடுதலையும் சுடர்விடும் உன்
திருப்பாதங்கள்
எழுச்சியில் முன்செல்க
சிலிர்ப்பூட்டும் உன் தெய்வ வாசகங்களை மொழிந்திடுக

உன் வீடு பறிபோயிற்று
அன்பு நெஞ்சங்கள் உன்னை வளர்த்தெடுத்து
உன் உயர்வைக் கண்டு களித்த உன்னத வீடு
விதி வலியது, ஆனால்
அனைத்தும் அவற்றின் மூலத்திற்கே திரும்பியாக வேண்டும்
அந்த மூலத்தில் மீண்டும் சக்தி முளைத்தெழும்

புதிதாய்ப் பிறப்பாய்
உன் பிறப்பிடத்தின் முகில் தவழும் பனிச்சிகரங்கள்
தங்கள் ஆசியையும், ஆற்றலையும் உன் மீது பொழியட்டும்
தெய்வ நதிகளின் திருக்குரல் உன் அமர கீதங்களுடன்
சேர்ந்தொலிக்கட்டும்
தேவதாருவின் நிழல்கள் உனக்குச்
சாந்தியளிக்கட்டும்

இமயத்தின் திருமகள் உமை
அனைத்தின் உயிராம், அனைத்தின் சக்தியாம்
அப்பழுக்கற்ற அன்னை
செய்கைகள் அனைத்தையும் செய்விக்கும் உலக நாயகி
அனைத்திலும் உள் ஒளிரும் ஓர் உயிரை உணரும்
மெய்யறிவின் தாழ் திறக்கும் அவள் அருளில்
அளவற்ற அன்பென்னும்
அழிவில்லா ஆற்றல்
அவள் உனக்களிப்பாள்

(1940களின் ஒரு ஜவுளி மில்லின் முத்திரை)

உன் இனத்தின் தந்தையர்
உன்னை ஆசிர்வதிக்கின்றனர்
கால தேச வரம்புகள் கடந்த மாமுனிவர்
உண்மையின் உட்பொருள் உள்ளத்தில் உணர்ந்து
இழிந்தோர்க்கும் உயர்ந்தோர்க்கும்
ஒருங்கே உரைத்தனர்
அவர் தொண்டக்குலம் நீ
அத்வைதம் எனும் அனைத்தின் ஒருமையே
அவர் அளித்த மறைபொருள்
அறிவாய் இதனை

உன் அன்பு மொழிகள்
உலகிற்கு வழிகாட்டும்
தோற்றங்கள் விலகி
கனவுகளின் இழைகள் ஒவ்வொன்றாய்ப் பிரிந்து
சூனியத்தில் இணைந்து
சத்தியம் ஒன்றே
சர்வசக்திமயமாய் ஜ்வலிப்பதை
உணர்ந்து தெளிவதற்காக

உலகிற்கு உரைப்பாய்
எழுமின்! விழுமின்! கனவுகள் வேண்டாம்.
இது கனவுலகம்.
செயல்களும், சிந்தனைகளும் இணைந்து
இனியதும், கொடியதுமாய்ப் பூத்த மலர்களால்
நூலிழையின்றித் தொடுத்த மாலை.
சூனியத்தில் பிறந்த வேரும், தண்டுமற்ற மலர்கள்
சத்தியத்தின் சிறு உயிர்ப்பு மீண்டும்
ஆதிசூனியத்திலேயே அவற்றைக் கொண்டு சேர்க்கும்.
உறுதி கொள்
சத்தியத்தை நேர்கொள், அதனுடன் ஒன்று கூடு
கனவுத் தோற்றங்கள் தொலையட்டும்
அது இயலாதெனின்
முடிவற்ற அன்பும்
தளையற்ற செயலும் ஆன
சத்தியமே கனவாகட்டும்.

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

“சத்தியம் என்பது, மேதகு மன்னரே, தன்னொப்பில்லாத தனி ஒன்றாகும். மனிதன் ஒரு சத்தியத்திலிருந்து மற்றொன்றுக்குப் பயணம் செய்தபடி இருக்கிறான், ஒரு பிழையிலிருந்து சத்தியத்தை நோக்கி அல்ல”

–விவேகானந்தர், கேத்திரி மகாராஜா அஜீத்சிங் ‘சத்தியம் என்றால் என்ன?’ என்று கேட்டபோது.

நரேனின் சமயோசிதம்

இருந்தபோதே நரேன் விடுமுறை நாட்களில் மற்ற தோழர்களை எங்காவது அழைத்துச் செல்வது வழக்கம். இப்படித்தான் ஒரு நாள் ‘நவாப் மிருகக் காட்சி சாலை’க்குப் புறப்பட்டது வாண்டுகள் பட்டாளம். கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் இருந்த அதற்குப் போக ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது.

மாலையில் திரும்பி வரும்போது படகின் ஆட்டமோ, மதிய உணவின் வேலையோ தெரியவில்லை ஒரு பையனுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது. படகோட்டி கோபமடைந்தார். “வாந்தி எடுத்ததை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்” என்று வற்புறுத்தினார். “இல்லையென்றால் இரண்டு பங்கு கூலி கொடு” என்று மிரட்டினார்.

செய்ய மறுத்தனர் சிறுவர். கரை வந்தது. பிள்ளைகளை இறங்கவிடாமல் தடுத்ததோடு மிரட்டவும் செய்தார் படகோட்டி. இது நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று தண்ணீரில் குதித்துக் கரைக்கு நீந்தினான் நரேன்.

கரையில் இரண்டு வெள்ளைக்காரச் சிப்பாய்கள் இருந்தனர். தன்னுடைய ஓட்டை ஆங்கிலத்தில் அவர்களுக்கு நடந்ததை விவரிக்க அவர்கள் புரிந்துகொண்டனர். தனது சிறிய கையால் அவர்களது கையைப் பிடித்து இழுத்து வந்தான் நரேன். படகோட்டியைப் பார்த்துச் சிறுவர்களை உடனடியாக விடுவிக்கச் சொல்லினர் சிப்பாய்கள்.

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் – ஊர்ச்
சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் – வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டில் ஒளிப்பார்

என்று பாரதி வர்ணித்தது நினைவிருக்கலாம். ஆகவே சிப்பாய்களைக் கண்டதும் நடுங்கினார் படகோட்டி. பறந்தனர் சிறுவர்கள். நரேனைப் பிடித்துவிட்டது சிப்பாய்களுக்கு. தாம் ஒரு நாடக அரங்குக்குச் செல்வதாகவும் உடன் வரலாம் என்று சொல்லி அழைத்தனர். அவர்களது உதவிக்கும் அழைப்புக்கும் நன்றி கூறி நண்பர்களோடு சென்றான் நரேன்.

நரேனின் சமயோசித புத்தி, அஞ்சாமை இவற்றோடு அவனுடைய நீச்சல் திறமையும் அவனுக்குக் கைகொடுத்தது இந்த நேரத்தில். ஒரு கண்காட்சியில் மல்யுத்தம் செய்து முதல்பரிசு வாங்கியதுண்டு. அவனுக்குச் சிலம்பம், கத்திச் சண்டை, படகு விடுதல், இசை, சமையல், கவிதை எழுதுதல் என்ற பலவற்றிலும் தேர்ச்சி இருந்தது.

நரேன் ஒரு சாதாரணப் பிறவியல்ல என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார். சந்தேகமுண்டா?

முந்தைய பகுதி…

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 5

5. அனைத்தும் வல்லவனே நல்ல துறவியாக முடியும்

இஸ்லாமியர், கிறிஸ்தவர், சமணர், பவுத்தர் ஆகியோர் தம் வீட்டு மக்கள் இறைப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவர். அதைத் தம் பேறெனக் கருதுவர். சாதாரணமாக வேலையற்ற வீணர்கள், சோம்பேறிகள், எத்தர்கள், குடும்ப பாரத்தைச் சுமக்க அஞ்சுகிறவர்கள், குறுக்கு வழியில் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் ஆகியோரே சன்னியாசம் வாங்கிக்கொள்வதாக இக்கால இந்துக்களிடையே ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. காரணம், ஆன்மீகத் தேடல் குறித்த சரியான அறிவின்மை. ஆனால், பொய்வேடமிட்டோர்எந்நாட்டிலும் எம்மதத்திலும் எக்காலத்திலும் இருந்திருக்கின்றனர். பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் அத்தினபுரத்தில் யார்யார் இருந்தனர் எனச் சொல்லும்போது:

மெய்த்தவர் பலருண்டாம் – வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம்
உய்த்திடு சிவஞானம் – கனிந்
தோர்ந்திடும் மேலவர் பலருண்டாம்
பொய்த்த இந்திர சாலம் – நிகர்
பூசையும் கிரியையும் புலைநடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் – கொண்டு
கண்மயக்காற் பிழைப்போர் பலராம்.

என்று சொல்லவில்லையா?

நரேந்திரன் எப்படிப்பட்டவன்? அப்படி எதற்கும் உதவாத சாவியா (தானிய உள்ளீடற்ற நெல், பதர்)? அவன் மரத்திலே ஏறியபோது பிரம்மராட்சசன் இருப்பதாக அச்சுறுத்திய பெரியவரைப் பார்த்தோமே. அங்கே இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

அவருக்கு நரேனின் மேல் மிகுந்த அன்பு இருந்தது. மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த நரேனிடம் அவர் மீண்டும் பேசினார். அவர் கேட்டார்

“இப்படியே வீடு வீடாக மரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருப்பாயா? இல்லை, படிக்கவும் செய்வாயா?”

“ஐயா, நான் படிக்கவும் செய்வேன், விளையாடவும் விளையாடுவேன்” என்றான் நரேன்.

உடனே அவனைச் சோதித்தார் கிழவர். புவியியல், கணிதம் இவற்றில் கேள்வி கேட்டார். கவிதைகள் ஒப்பிக்கச் சொன்னார். இந்தக் கடினமான தேர்வில் சிறப்பாகத் தேறினான் நரேன். கிழவர் அவனை ஆசீர்வதித்து “உன்னை நெறிப்படுத்த யார் இருக்கிறார்கள் என் மகனே? உன் தந்தை லாஹோரில் அல்லவா இருக்கிறார்?” என்றார். நரேனின் தந்தை விஸ்வநாத தத்தா பிரபல வழக்குரைஞர். பல ஊர்களில் அவருக்கு அலுவலகங்கள் இருந்தன.

“தினமும் காலையில் நான் படிக்கும்போது என் தாயார் உதவுகிறார்கள்” என்று சொன்னான். மிகவும் மகிழ்ந்த பெரியவர் “நீ மனிதர்களுக்குள்ளே மகா மனிதன் ஆவாய். நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்” என்று முன்னுணர்ந்து சொன்னார்.

ஆங்கிலம், வரலாறு, வடமொழி ஆகியவற்றில் சிறப்பாகத் தேறிய நரேனுக்கு கணிதத்தில் ஆர்வம் குறைவு. அதை “மளிகைக் கடைக்காரன் கலை” என்று கேலி செய்வாராம். இசையில் மிகுந்த பாண்டித்தியமும், அனைவரையும் கட்டிப்போடும் குரலும் நரேனுக்கு இருந்தன. மற்றவரைப் போல அப்படியே பேசிக்காட்டுவான். நடிப்பான், பாடுவான். இவ்வளவு திறமைகளைப் பெற்றிருந்த நரேன் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும்.

நரேனின் கல்லூரி நாளில் முதல்வர் வில்லியம் ஹேஸ்டி சொன்னார்: “நரேந்திரன் ஒரு மேதை. நான் உலகத்தின் குறுக்கும் நெடுக்கும் எவ்வளவோ பயணம் செய்திருக்கிறேன். ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களிலாகட்டும், தத்துவவியல் மாணவர்களிடையே ஆகட்டும், இதுவரை அவனைப் போலத் திறமையும் எதிர்காலமும் உள்ள ஒரு இளைஞனைப் பார்க்கவில்லை. வாழ்வில் ஒரு பெருநிலையை அவன் அடைவான்!”

இவன் கையாலாகாததால் உலகைத் துறந்தவனல்ல.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு

(திருக்குறள், நீத்தார் பெருமை, 27)

இதில் முந்தைய இடுகை…

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

நான் கூறுவதைக் கவனத்திற் கொள்க,

இந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் இந்து ஆவீர்கள்.

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் இந்து ஆவீர்கள்.

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.

மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள். இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! – யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட – அவர், அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.

மூலம்: Complete-Works / Volume 3 / Lectures from Colombo to Almora / << THE COMMON BASES OF HINDUISM

நன்றி: எழுமின் விழுமின்! விவேகானந்த கேந்திர வெளியீடு, பக்கம் 15.

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4

4. செண்பக மரத்து பிரம்மராட்சதன்

விவேகானந்தா“நான் இன்ன மடத்தைச் சேர்ந்த துறவி’ என்பதை நினைத்துப் பெருமைப்படுவது பாபச் செயலாகும். தொடக்க காலத்தில் வேண்டுமானால் அதில் பயன் இருக்கலாம். அவர் முழு வளர்ச்சி அடைந்தபின் அது தேவையில்லை. இவன் சன்யாசி, இவன் குடும்பஸ்தன் என்கிற பேதம் பார்க்காதவனே உண்மையான சன்யாசி.”

— சுவாமி விவேகானந்தர்

நரேன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். சில சமயம் எல்லாமே பிடிக்காமல் போய்விட்டால் ஒரு நண்பன் வீட்டுக்குப் போவது வழக்கம். அந்த வீட்டில் ஒரு சண்பக மரம் இருந்தது. “தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை ஊரர்” என்று அபிராமி அந்தாதி சொன்னாற்போல அது சிவனுக்குப் பிடித்த மலரைத் தரும் மரமல்லவா? அதில் ஏறித் தலைகீழாகத் தொங்குவது நரேனுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று.

அந்த வீட்டிலிருந்த கண்தெரியாத பெரியவருக்கு நரேனின் குரல் கேட்டது. சிறுவன் விழுந்துவிடப் போகிறான் என்றோ அல்லது தனது சண்பகப் பூக்கள் கொள்ளை போய்விடப் போகின்றன என்றோ நினைத்த பெரியவர் நரேனைக் கூப்பிட்டார். “இன்னோரு தடவை சண்பக மரத்தில் ஏறாதே” என்றார். நரேன் ஏனென்று கேட்டான்.

“இந்த மரத்தில் ஒரு பிரம்மராட்சசன் வசிக்கிறான். இரவு நேரத்தில் காலோடு தலை வெள்ளைவெளேரென்று உடையணிந்து வருவான். பார்க்கவே பயங்கரமாய் இருக்கும்” என்றார். பெரியவர். நரேந்திரனுக்கு இது புதுச் செய்தி. பிரம்ம ராட்சதன் இரவில் உலாவருவதைத் தவிர வேறென்ன செய்வான் என்று கேட்டான்.

“இந்த மரத்தில் ஏறுகிறவர்களின் கழுத்தை முறிப்பான்.” நரேன் ஒன்றும் சொல்லவில்லை. பெரியவர் ஒரு வெற்றிப் புன்னகையோடு அகன்றார். அவர் சற்றுத் தூரம் போனதுமே மீண்டும் நரேந்திரன் மரத்திலேறினான். “டேய், உன் கழுத்தை முறிக்கத்தான் போகிறான் பிரம்மராட்சசன்” என்று எச்சரித்தான் நண்பன்.

“யாரோ ஒருவர் சொல்கிறார் என்று எல்லாவற்றையும் நம்பாதே. பிரம்மராட்சசன் இதில் இருப்பது உண்மையானால் என் கழுத்து எப்போதோ முறிந்துபோயிருக்கும்” என்றான் சிரித்துக் கொண்டே நரேன்.

சுவாமி விவேகானந்தர் பின்னாளில் தன் சீடர்களுக்குச் சொல்லுவார், “நான் சிறுவயது முதலே துணிச்சல்காரன்தான். இல்லாவிட்டால் கையில் காலணா இல்லாமல் உலகை சுற்றிவரப் புறப்பட்டிருப்பேனா?”

அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு
(திருக்குறள்: 534)